அல்லாஹுவின் நினைவும்..! #ஈமானின்உறுதியும்…!

——————————————————
நம்பிக்கை கொண்டோரின் உள்ளங்கள் அல்லாஹ்வின் நினைவால் அமைதியுறுகின்றன.
கவனத்தில் கொள்க! அல்லாஹ்வின் நினைவால் தான் உள்ளங்கள் அமைதியுறுகின்றன. (13:28)

முக்கியமான செய்தி என நாம் கருதுபவற்றை மீண்டும் மீண்டும் குறிப்பிடும் வழக்கம் மனிதர்களிடம் இருப்பது போல் இந்த வசனத்தில் அல்லாஹ்வும் தான் எதை முக்கிய செய்தியாக கருதுகிறானோ அதை இரண்டு முறை இங்கே தெளிவாக்குகிறான்.

ஒரு கட்டம் வரை ஈமான் என்றும், அல்லாஹ்வின் நினைவால் இருக்கிறேன் என்றும் சொல்லும் மனிதன், நிலைமை அவன் கட்டுப்பாட்டையும் மீறி செல்கையில் நிலை குலைந்து போகிறான்.

மருத்துவரிடம் செல்கிறோம், கேன்சர் என்கிறார்கள், அதற்கு சிகிட்சை செய்யலாம் என்று மருத்துவர் உறுதி தருகிறார் என்றால், அந்த உறுதியின் பெயரில் ஆறுதலைடைந்து, அதன் பிறகு அல்லாஹ்வை சார்ந்திருக்கும் நிலை தான் மனித இயல்பாய் இருக்கிறது.

அதுவே, எந்த மருத்துவத்தாலும் இதை குணமாக்க முடியாது, இவரது நாட்கள் எண்ணப்படுகின்றன என்று மருத்துவம் கை விரித்து விட்ட நம் குடும்பத்தார் விஷயமாக, மனிதன் அதே இறை சார்பு நிலையை கொள்வானா என்றால் பெரும்பான்மை மனிதர்கள் இந்த இடத்தில் வீழ்ந்து விடுவார்கள்.

ஆனால், அல்லாஹ் எதிர்பார்ப்பது இத்தகைய பலகீனமான ஈமானை அல்ல!

ஒட்டு மொத்த உலகமும் நம்மை கை விடும் விடும் போது, அல்லாஹ் தான் கதி என்கிற நிலையை ஒருவன் அடைவானே, அந்த நிலையிலும், என் இறைவன் என்னை கைவிட மாட்டான்என்கிற நம்பிக்கையை உள்ளத்தில் உறுதியாக மனிதனிடம் இருக்க வேண்டுமென எதிர்பார்க்கிறான்.

மனித அறிவின் படி பார்க்கையில், தப்பிக்க எந்த வழியுமே இல்லை என்கிற இறுதி கட்டத்தை அடைந்த பிறகும் கூட, இந்த இடத்திலும் அல்லாஹ் நம்மை காப்பற்றுவான் என்று ஹிஜ்ரத் பயணத்தின் போது எதிரிகள் கண்ணில் படாமல் ஸவ்ர் குகையில் ஒளிந்திருந்த மாமனிதர் கொண்டிருந்தார்களே, அந்த ஈமான்!

அயர்ந்து தூங்கிய நேரம் பார்த்து அருகில் வைத்திருந்த வாளை எதிரி ஒருவன் கையில் எடுத்து தம் கழுத்தருகே கொண்டு வந்து, இப்போது உன்னை யார் காப்பாற்றுவார்? என்று கேட்கையில், அந்த இறுதி கட்டத்திலும் கூட, சிறு சஞ்சலமும் இல்லாமல், என் இறைவன் என்னை காப்பாற்றுவான் என்று உரைத்தார்களே, நபி (ஸல்) அவர்களது அத்தகைய ஈமானில் நமக்கு படிப்பினை இருக்கிறது.

முன்னே கடல், பின்னே எதிரிக் கூட்டம் என்றால், மனித மூளை நாம் சாகப் போவது உறுதி என்று தான் சொல்லும். ஆனால், மனித கற்பனைக்கே அடங்காத நிலையிலும் கூட, இந்த சூழலிலும் என் இறைவன் எனக்கு வழி காட்டுவான் என்று ஈமானில் உறுதியாக இருந்தார்களே மூஸா நபி, அந்த ஈமானை தான் அல்லாஹ் நம்மிடம் எதிர்பார்க்கிறான்.

இந்த உறுதியான இறைநம்பிக்கை நாம் கொண்டிருந்தால் நம்மை விட இவ்வுலகில் மகிழ்ச்சியானவர்கள் வேறு எவரும் இருக்க முடியாது,

*நம்பிக்கை கொண்டோரின் உள்ளங்கள் அல்லாஹ்வின் நினைவால் அமைதியுறுகின்றன.
*கவனத்தில் கொள்க! அல்லாஹ்வின் நினைவால் தான் உள்ளங்கள் அமைதியுறுகின்றன!!*

ஏகத்துவம்

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed