அலி (ரலி) அவர்களை மற்றொரு திருமணம் செய்ய நபிகளார் தடை விதித்தது ஏன்?

ஆண்கள் நான்கு மனைவியர் வரை திருமணம் செய்வதற்கு இஸ்லாம் அனுமதி வழங்குகிறது.

எனினும் இரண்டாம் திருமணம் செய்வதின் மூலம் முதல் மனைவி பாதிக்கப்படுகிறாள் என்பதால் இரண்டாம் திருமண விஷயத்தை முதல் மனைவிக்கு தெரிவிக்க வேண்டும் என்பது இஸ்லாத்தின் நிலைப்பாடு.

ஒரு மனைவியுடன் ஒருவன் வாழும்போது, அவனது எல்லா நாட்களையும் அவளுக்கே கொடுக்கிறான். அவளுக்கே தனது பொருளாதாரத்தையும் செலவு செய்கிறான். இந்த நிலையில் அவன் மற்றொரு திருமணம் செய்தால் முதல் மனைவிக்குக் கிடைத்து வந்த நாட்களில் பாதி நாட்கள் குறைந்து விடுகின்றன. பொருளாதாரத்திலும் பாதி பறிபோகிறது.

இரண்டாம் திருமணத்தின் மூலம் முதல் மனைவி பாதிக்கப்படும் போது, அவளுக்குத் தெரிவிக்க வேண்டிய அவசியம் தானாகவே ஏற்பட்டு விடுகின்றது.

அவ்வாறு இரண்டாம் திருமணம் பற்றி முதல் மனைவியிடம் தெரிவிக்கும் போது, அவள் ஏற்றுக் கொண்டால் பிரச்சனை இல்லை. இரண்டாம் திருமணம் செய்தால் உன்னோடு வாழ மாட்டேன் என்ற முடிவை அவள் எடுத்தால் அதற்கான உரிமை அவளுக்கு உண்டு.

தனது கணவன் தன்னைத் தவிர யாரையும் திருமணம் செய்யக் கூடாது. மீறி திருமணம் செய்வதாக இருந்தால் தன்னை விவாகரத்து செய்துவிடுமாறு ஒரு பெண் கூறினால் அதில் தவறேதுமில்லை. இவ்வாறு சொல்வதினால் ஆண்களுக்கு இஸ்லாம் வழங்கியுள்ள உரிமையை அவள் மறுத்தவளாக மாட்டாள்.

இந்த அடிப்படையில் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அலி (ரலி) அவர்கள் சம்பந்தமாக கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.

ஹிஷாம் பின் முஃகீரா கோத்திரத்தார் தங்கள் (உறவினரான அபூஜஹ்லுடைய) மகளை அலீ பின் அபீதாலிப் அவர்களுக்கு மணமுடித்து வைக்க (என்னிடம்) அனுமதி கோரினர். அதற்கு நான் அனுமதிக்க மாட்டேன். மீண்டும் நான் அனுமதிக்க மாட்டேன். மீண்டும் நான் அனுமதிக்க மாட்டேன். அலீ பின் அபீதாலிப் அவர்கள் என் மகளை (ஃபாத்திமாவை) விவாகவிலக்குச் செய்துவிட்டு, அவர்களுடைய மகளை மணமுடித்துக் கொள்ள விரும்பினாலே தவிர (அவர்களுக்கு நான் அனுமதி வழங்க மாட்டேன்). ஃபாத்திமா என்னில் ஒரு பகுதியாவார். ஃபாத்திமாவை வெறுப்படையச் செய்வது என்னை வெறுப்படையச் செய்வதாகும்; அவரை மன வேதனைப்படுத்துவது என்னை மன வேதனைப்படுத்துவதாகும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொற்பொழிவு மேடை (மிம்பர்) மீதிருந்த படி, சொன்னார்கள்.

அறிவிப்பவர் : மிஸ்வர் பின் மக்ரமா (ரலி)

நூல் : புகாரி 5230

அலி (ரலி) அவர்கள் இரண்டாவது திருமணம் அறவே செய்யக் கூடாது என நபிகளார் தடை விதிக்கவில்லை. அலி (ரலி) அவர்கள் இன்னொரு திருமணம் செய்வதை தனது மகள் பாத்திமா ஏற்றுக் கொள்ளாததாலும், அதனால் வேதனைப்படுவதாலும் தனது மகளை விவாகரத்து செய்து விட்டு வேண்டுமானால் அலி இரண்டாவது திருமணம் செய்து கொள்ளட்டும் என்றே நபியவர்கள் கூறியுள்ளார்கள். இஸ்லாம் எல்லா பெண்களுக்கும் வழங்கியுள்ள உரிமை அடிப்படையிலேயே இவ்வாறு கூறியுள்ளார்கள்.

இதில் அலி (ரலி) அவர்களுடைய உரிமை பறிப்போ தனது மகளுக்கென்று தனிச்சட்டமோ எதுவுமில்லை.

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed