அய்யூப் நபி வரலாற்றில் கட்டுக்கதை

இந்த வசனத்திற்கு (38:44) விளக்கம் என்ற பெயரில் பல்வேறு கதைகளை விரிவுரையாளர்கள் எழுதி வைத்துள்ளனர்.

அவர்கள் இட்டுக்கட்டிக் கூறியுள்ள கதையின் கருத்து இதுதான்.

அய்யூப் நபி அவர்கள் தமது மனைவியை நூறு கசையடி அடிப்பதாகச் சத்தியம் செய்தார்களாம். அந்தச் சத்தியத்தை நிறைவேற்றும் முகமாக நூறு கிளைகளுடைய புல்லை எடுத்து அதனால் மனைவியை ஒருமுறை அடித்தார்களாம். நூறு கிளைகளுடைய புல்லைக் கொண்டு அடித்ததால் இது நூறு தடவை அடித்ததற்குச் சமமாகி விட்டதாம்! அவர் செய்த சத்தியத்தை அவர் நிறைவேற்றியவராக ஆனாராம். இப்படி கதை அளந்துள்ளனர்.

அய்யூப் நபியவர்கள் மனைவியை நூறு தடவை அடிப்பதாக சத்தியம் செய்தார்கள் என்று அல்லாஹ்வோ, அவனது தூதரோ கூறவில்லை. இந்த வசனத்தில் இவ்வாறு கருதுவதற்கு இடமிருக்கிறதா என்றால் அதுவும் இல்லை.

இவ்வசனத்தில் “மனைவியை அடிப்பீராக” என்று சொல்லப்படவில்லை. அடிப்பீராக என்று மட்டுமே கூறப்பட்டுள்ளது. மனைவியை என்பது இவர்களாகச் சேர்த்துக் கொண்டதாகும்.

ஒரு கைப்பிடிப் புல்லை எடுப்பீராக என்று தான் இதில் சொல்லப்பட்டுள்ளது. அதில் நூறு கிளைகள் இருக்குமாறு எடுப்பீராக என்றும் கூறப்படவில்லை.

மனைவியை நூறுமுறை அடிப்பதாகச் சத்தியம் செய்தால் அது போன்ற சத்தியங்களை நிறைவேற்றத் தேவையில்லை என்ற சாதாரண அறிவு கூட இல்லாமல் கற்பனைக் கதைகளின் அடிப்படையில் இதற்கு விளக்கமும் கூறியுள்ளனர்.

இந்த வசனத்தையும், இதற்கு முன்னுள்ள வசனங்களையும் சேர்த்துக் கவனிக்கும்போது அய்யூப் நபி அவர்கள் நோய்வாய்ப்பட்ட பின் அவர்களுக்கு குணம் அளிப்பதற்காகச் சில ஏற்பாடுகளை அல்லாஹ் செய்கிறான்.

“உமது காலால் மிதிப்பீராக! இதோ குளிர்ந்த குளிக்குமிடம்! பானம்!” என்ற வாசகம் சொல்வது என்ன? அய்யூப் நபியவர்களை காலால் தரையில் உதைக்கச் சொல்லி அவ்வாறு உதைத்தன் மூலம் குளிப்பதற்கும், குடிப்பதற்கும், தண்ணீர் உற்பத்தியானது என்பதுதான் இதன் கருத்தாக இருக்க முடியும்.

அந்தத் தண்ணீரைக் குடித்து, அதில் குளித்ததன் மூலம் அவர்கள் குணமடைந்தார்கள் என்று கூறி விட்டு அந்தத் தொடரில் தான் “ஒரு கைப்பிடி புல்லை எடுத்து அடிப்பீராக” என்று கூறுகிறான்.

எனவே அவருடைய நோய் தீர்ப்பதற்காக இறைவன் உற்பத்தி செய்த புல்லில் இருந்து ஒரு பிடியை எடுத்து அவர் தன் மீது அடித்துக் கொள்ள வேண்டும் என்று கூறப்படுகிறதே தவிர மனைவியை அடிக்க வேண்டும் என்று கூறவில்லை.

சத்தியத்தை முறிக்காதீர் என்று ஏன் கூற வேண்டும் என்ற கேள்வி எழலாம். அவர் ஏதோவொரு நேர்ச்சை அல்லது சத்தியம் செய்திருக்கிறார். நோயாளியாக இருந்ததால் செய்த நேர்ச்சையை நிறைவேற்ற முடியாமல் இருந்திருக்கிறார். இப்போது குணமடைந்திருப்பதால் அதனை நிறைவேற்றுமாறு அல்லாஹ் கூறுகிறான். இரண்டும் தனித்தனிச் செய்திகள்.

ஒன்று அவர் குணமடைவதற்காகக் கூறப்படுகின்ற பரிகாரம்.

இன்னொன்று அவர் நோய்வாய்ப்பட்ட நேரத்தில் செய்த சத்தியத்தை நிறைவேற்ற வேண்டும் என நினைவுபடுத்துதல்.

இதுதான் இந்த வார்த்தையிலிருந்து விளங்குகின்ற கருத்தாகும்.

இவ்வசனத்தில் அவரைப் பொறுமையாளராகக் கண்டோம் என்று அல்லாஹ் புகழ்ந்துரைக்கிறான். மனைவியை அடிப்பதாகச் சத்தியம் செய்த கட்டுக்கதையோ அவரைப் பொறுமையற்றவராகச் சித்தரிக்கிறது

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed