அமெரிக்க நிறுவனத்தில் பணிசெய்யலாமா?

மார்க்கத்தில் ஒன்றை ஹலால் என்றோ ஹராம் என்றோ கூறுவதாக இருந்தால் அல்லாஹ்வும் அவனது தூதரும் கூறியிருக்க வேண்டும்.

எதிரிகளுடனோ எதிரிகளின் நாட்டவருடனோ கொடுக்கல் வாங்கல் வைத்துக் கொள்ளக் கூடாது என்று இஸ்லாம் கூறவில்லை.

நமக்கு எதிராக நடப்பவர்களிடம் வியாபாரம் செய்வதோ கொடுக்கல் வாங்கல் வைத்துக் கொள்வதோ தவறல்ல. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எதிரிகளான யூதர்களுடன் கொடுக்கல் வாங்கல் வைத்துள்ளார்கள். அவர்களுடன் வியாபாரத்தில் கூட்டுச் சேர்ந்துள்ளார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு யூதரிடம் குறிப்பிட்ட தவணையில் திருப்பித் தருவதாக உணவுப் பொருளை வாங்கினார்கள். (அதற்காக) அவரிடம் தமது இரும்புக் கவசத்தை அடைமானமாக வைத்தார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி),

நூல்: புகாரி (2068)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குப் பணிவிடை செய்து கொண்டிருந்த ஒரு யூதச் சிறுவன் திடீரென நோயுற்றான். எனவே அவனை நோய் விசாரிக்க நபி (ஸல்) அவர்கள் அவனிடம் வந்து அவனது தலைமாட்டில் அமர்ந்துகொண்டு “இஸ்லாத்தை ஏற்றுக்ச்கொள்!” என்றார்கள். உடனே அவன் தன்னருகிலிருந்த தந்தையைப் பார்த்தான்.

அப்போது அவர், “அபுல் காசிம் (என்ற) நபி (ஸல்) அவர்களின் கூற்றுக்குக் கட்டுப்படு!” என்றதும் அவன் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டான். உடனே நபி (ஸல்) அவர்கள், “இவனை நரகத்திலிருந்து பாதுகாத்த அல்லாஹ்விற்கே சகல புகழும்” எனக் கூறியவாறு அங்கிருந்து வெளியேறினார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி),

நூல்: புகாரி (1356)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கைபரை வெற்றி கொண்ட போது அங்கிருந்த யூதர்களுடன் வியாபார ஒப்பந்தம் செய்து கொண்டார்கள்.

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள் :

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கைபரில் இருந்த யூதர்களுடன், அங்குள்ள மரங்களில் விளையும் கனிகள், நிலத்தில் விளையும் தானியங்கள் ஆகியவற்றில் பாதியைக் கொடுத்து விட வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் (கைபரின் நிலங்களையும் மரங்களையும் அவர்கள் விவசாயத்திற்காகப் பயன்படுத்திக் கொள்ள அனுமதியளித்து) ஒப்பந்தம் செய்து கொண்டார்கள்.

இந்த நிலங்கள் மற்றும் மரங்களின் விளைச்சலிலிருந்து, நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், தம் மனைவிமார்களுக்கு எண்பது வஸக்குகள் பேரீச்சம் பழமும் இருபது வஸக்குகள் வாற்கோதுமையும் ஆக, நூறு வஸக்குகள் கொடுத்து வந்தனர்.

புகாரி (2328)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் இஸ்லாத்தின் விரோதிகளாக இருந்த இணைவைப்பாளர்களிடம் நபித்தோழர்கள் பணி புரிந்துள்ளார்கள்.

கப்பாப் (ரலி) அவர்கள் கூறினார்கள் :

நான் இரும்பு வேலை தெரிந்த கருமானாக இருந்தேன்; ஆஸ் பின் வாயில் என்பவனிடம் கூலிக்கு வேலை செய்தேன். எனக்குரிய கூலி அவனிடம் தங்கிவிட்டது; அதைக் கேட்பதற்காக அவனிடம் நான் சென்ற போது

அவன், “நீர் முஹம்மதை நிராகரிக்காமல் (ஏற்றுக் கொண்டு) இருக்கும் வரை உமக்குரியதை நான் தர மாட்டேன்” என்றான். நான் நீ செத்து, பிறகு (உயிர் தந்து) எழுப்பப்படும் வரை அது நடக்காது!”என்றேன்.

நான் செத்து, திரும்ப எழுப்பப்படுவேனா?”என்று அவன் கேட்டான். நான், ஆம்!” என்றேன். அதற்கவன், “அப்படியானால் அங்கே எனக்குச் செல்வமும் குழந்தைகளும் கிடைப்பர்! அப்போது உமக்குரியதைத் தந்து விடுகிறேன்!” என்றான்.

அப்போது, நம்முடைய வசனங்களை நிராகரித்துவிட்டு, (“மறுமையிலும்) நான், நிச்சயமாக பொருட்செல்வமும், மக்கள் செல்வமும் கொடுக்கப்படுவேன்!’ என்று கூறியவனை (நபியே) நீர் பார்த்தீரா!” என்ற (19:77ஆவது) இறை வசனம் அருளப்பெற்றது.

புகாரி (2275)

எனவே எதிரி நாட்டவரிடம் பணி புரிவதோ அவர்கள் தயாரிக்கும் பொருட்களைப் பயன்படுத்துவதோ மார்க்க அடிப்படையில் ஹராம் அல்ல.

அமெரிக்கா தனது பொருளாதார பலத்தினால் உலகை மிரட்டுகிறது. அப்பாவி மக்களைக் கொன்றொழிக்கிறது. எனவே அமெரிக்காவின் பொருட்களைப் புறக்கணித்து அவர்களின் பலத்தைக் குறைப்பது மனித குலத்துக்கு நல்லது என்று நம்முடைய பாதுகாப்பு கருதி தவிர்க்க வேண்டும் என்று நாம் கூறுகிறோம். இதில் நாம் உறுதியாகவும் இருக்கிறோம்.

இது மார்க்கக் கட்டளை அல்ல. இதை ஒருவர் மீறி விட்டால் மார்க்கத்தை மீறியவராக மாட்டார். இதனால் ஒரு பயனும் இல்லை என்று ஒருவர் கருதலாம். நம்முடைய புறக்கணிப்பையும் மிஞ்சும் வகையில் அமெரிக்காவுக்கு பணபலம் உள்ளது என்று சிலர் நினைக்கலாம். அல்லது இதை மக்கள் முழுமையாக கடைப்பிடித்தால் தான் ஓரளவு பயன் இருக்கும். ஒருவரும் கடிப்பிடிக்கா விட்டால் பயன் இல்லை என்று ஒருவர் கருதலாம். அப்படிக் கருதுவோர் அதற்கேற்ப நடந்து கொண்டால் அது மார்க்க அடிப்படையில் குற்றமாகாது. அவரது சம்பாத்தியம் ஹராமாக ஆகாது

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed