அமீருக்கு கட்டுப்படுவதன் அவசியம்

நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பி இருந்தால் அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுங்கள்! இத்தூதருக்கும், (முஹம்மதுக்கும்) உங்களில் அதிகாரம் உடையோருக்கும் கட்டுப்படுங்கள்! ஏதேனும் ஒரு விஷயத்தில் நீங்கள் முரண்பட்டால் அதை அல்லாஹ்விடமும், இத்தூதரிடமும் கொண்டு செல்லுங்கள்! இதுவே சிறந்ததும், மிக அழகிய விளக்கமுமாகும். (திருக்குர்ஆன் 4:59)

காய்ந்த திராட்சை போன்ற தலையைக் கொண்ட அபீசினிய நாட்டுக்காரர் உங்களுக்கு அமீராக நியமிக்கப்பட்டாலும் நீங்கள் அவருக்குச் செவிசாயுங்கள், கட்டுப்படுங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். 

அறிவிப்பவர் : அனஸ் (ரலி). நூல் : புகாரி 693 மற்றும் 696, 7142

உயர்வான அல்லாஹ்வின் வேதத்தின் படி உங்களை வழி நடத்திச் செல்லும் கருத்த, உடல் ஊனமுற்ற ஓர் அடிமை உங்களுக்கு அமீராக நியமிக்கப்பட்டாலும் அவருக்கு நீங்கள் செவிசாயுங்கள்! கட்டுப்படுங்கள் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். 

அறிவிப்பவர் : உம்முல் ஹூஸைன் (ரலி). நூல் : முஸ்லிம். 545

பாவமான காரியத்தை ஏவாத வரை தான் விரும்பியவற்றிலும், விரும்பாதவற்றிலும் அமீருக்குச் செவி சாய்த்துக் கட்டுப்படுவது முஸ்லிமான ஒருவர் மீது கடமையாகும். அவர் பாவத்தை ஏவினால் செவிசாய்ப்பதோ, கட்டுப்படுவதோ கூடாது.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி). நூல் : புகாரி 7144, மற்றும் 2955

எங்களது விருப்பிலும், வெறுப்பிலும் எங்களது கஷ்டமான சூழ்நிலையிலும், இலகுவான சூழ்நிலையிலும் எங்கள் மீது பாரபட்சம் காட்டும் நிலையிலும் நாங்கள் (அமீருக்கு) செவிசாய்ப்போம், கட்டுப்படுவோம் என்றும் அல்லாஹ்விடமிருந்து அமைந்திருக்கும் ஆதாரத்தின் அடிப்படையில் தெளிவாகத் தெரியும் இறை நிராகரிப்பைக் காணாத வரை அதிகாரம் உடையவர்களிடம் போட்டி போட மாட்டோம் எனவும் நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் உடன்படிக்கை செய்தோம். 

அறிவிப்பவர் : உப்பாதா பின் ஸாமித் (ரலி). நூல் : புகாரி 7056,

அமீராக இருப்பவர், பாவமான காரியங்களைச் செய்யுமாறு கூறினால் அதில் தவிர மற்ற அனைத்திலும் அமீருக்குக் கட்டுப்பட வேண்டும் என்று மேற்கண்ட குர்ஆன் வசனமும், ஹதீஸ்களும் கூறுகின்றன. அமீர் என்பவர் எந்தக் குலமாக இருந்தாலும், உடல் ஊனமுற்ற அடிமையாக இருந்தாலும், அவர் நம்மை அடித்து நமது பொருளைப் பறித்தாலும் அவருக்குக் கட்டுப்பட்டே ஆக வேண்டும் என்பதையும் வலியுறுத்துகின்றன.

மேலும் அவரிடம் இறை நிராகரிப்பைக் காணாத வரை அவருக்குப் போட்டியாக இன்னொருவர் கிளம்பி விடக் கூடாது எனவும் கூறுகின்றன. பாவமான காரியங்களைச் செய்யுமாறு அமீர் நம்மை ஏவினால் அதைச் செய்யக் கூடாது எனவும் பாவமான காரியங்களை அமீர் செய்தால் அதற்காக அவர் ஏவக்கூடிய நல்ல காரியங்களில் அவருக்குக் கட்டுப்படாமல் இருக்கக் கூடாது எனவும் மேற்கண்ட ஹதீஸ்கள் குறிப்பிடுகின்றன.

அமீரின் கட்டளைக்குக் கட்டுப்படுவதை வலியுறுத்திக் கூறுவதுடன் அமீரின் கட்டளையை மீறினால் கடுமையான விளைவுகள் ஏற்படும் எனவும் நபிமொழிகளில் கடுமையான எச்சரிக்கையும் காணப்படுகிறது.

ஒருவர் தனது அமீரிடம் எதையேனும் கண்டு வெறுப்படைவாரானால் அவர் சகித்துக் கொள்வாராக! ஏனெனில் ஒருவர் அமீரை விட்டு ஒரு ஜான் அளவு வெளியேறி விட்டாலும் அவர் அறியாமைக் கால மரணத்தைத் தழுவுவார் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி). நூல் : புகாரி 7053

அமீரை விட்டு ஓர் இஸ்லாமியக் குடிமகன் விலகி அவருக்குக் கட்டுப்பட மறுத்தால் அவன் மறுமையில் நரகம் புகுவான் என்பதை இந்த ஹதீஸ் அறிவிக்கின்றது. எனவே அமீருக்குக் கட்டுப்பட்டே ஆக வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

மேலும் அமீருக்குக் கட்டுப்படுவது வணக்க வழிபாடுகள் போல் வலியுறுத்தப்பட்டுள்ளதை மேற்கண்ட சான்றுகள் சந்தேகத்திற்கிடமின்றி தெளிவுபடுத்துகின்றன.

அமீருக்குக் கட்டுப்படுதல் என்பது தலைவன், தொண்டனிடையே ஏற்படும் சதாரண உறவு முறையல்ல. விரும்பினால் கட்டுப்பட்டு விட்டு விரும்பாத போது வெளியேறி விடும் கட்சித் தலைமை போன்றதும் அல்ல. மாறாக அமீரிடம் எத்தகைய குறைபாடுகளைக் கண்டாலும் அவரை விட்டு விலகக் கூடாது, விலகுவது பாவம் என்ற அளவுக்கு வலியுறுத்தப்பட்ட மார்க்கக் கடமையாகும். எனவே இது விஷயத்தில் கூடுதலான ஆய்வையும் கவனத்தையும் நாம் செலுத்த வேண்டும்.

அமீர் என்பவர் யார்

அமீருக்குக் கட்டுப்படுதலின் அவசியத்தை அறிந்து கொண்ட நாம் நமது அமீர் யார் என்பதை முதலில் அறிந்து கொள்ள வேண்டும்.

உலக முஸ்லிம்கள் அனைவருக்கும் ஒரேயொரு அமீரா? அல்லது நாடுகள் தோறும், ஊர்கள் தோறும் பல அமீர்கள் இருக்க முடியுமா? நாடுகள் தோறும் அமீர்கள் இருக்கலாம் என்றால் நாம் வாழும் இந்திய நாட்டில் முஸ்லிம்களின் அமீர் யார்?

அல்லது ஒவ்வொரு இயக்கத்துக்கும் ஒரு அமீர் இருக்கலாமா? அப்படியானால் அவர்களில் யாருக்குக் கட்டுப்படுவது? அல்லது அகில உலகுக்கும் ஒரே ஒரு அமீர் தான் இருக்க முடியுமா? அப்படியானால் அந்த ஒருவர் யார்? அதை எப்படித் தீர்மானிப்பது?

ஒரு மாநிலத்தில் நூற்றுக் கணக்கான இயக்கங்கள் இஸ்லாமிய அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறிக் கொண்டு அமீர்களையும் ஏற்படுத்தியுள்ளன. ஒவ்வொரு இயக்கமும் தத்தமது அமீருக்குக் கட்டுப்படுவது தான் மார்க்கக் கடமை எனக் கருதுகின்றன, பிரச்சாரமும் செய்கின்றன.

இன்னும் சொல்வதென்றால் ஒரே கொள்கை கோட்பாடுடையவர்கள் பல பிரிவுகளாகி ஒவ்வொரு பிரிவுக்கும் தனித்தனி அமீர்கள் உள்ளனர். இவர்களில் யாருக்குக் கட்டுப்படுவது?

அமீருக்குக் கட்டுப்பட்டு நடக்க ஆசைப்படுபவன் இந்தக் கேள்விகளால் குழம்பிப் போகின்றான்?

முஸ்லிம்களை ஓர் அணியில் ஒன்று திரட்டிக் கட்டுக் கோப்பைக் காப்பதற்காகத் தான் அமீருக்குக் கட்டுப்படுமாறு இஸ்லாம் கூறுகிறது. இதை ஒவ்வொரு முஸ்லிமுடைய மனசாட்சியும் ஒப்புக் கொள்கிறது. ஆனால் அமீர்கள் என்ற பெயரில் மக்கள் பிரிக்கப்பட்டு ஒற்றுமை குலைக்கப்படுவதைக் கண்டு அவன் தடுமாறுகிறான்.

ஏராளமான அமீர்கள் உருவாகும் போது சமுதாயம் பல பிரிவுகளாகச் சிதறுகிறது. அமீருக்குக் கட்டுப்படுதல் என்ற சித்தாந்தம் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டதால் ஒற்றுமைக்குப் பதிலாக வேற்றுமை ஏற்படுவதைக் காணும் ஒரு உண்மை முஸ்லிம் மேலும் குழம்பிப் போகிறான்.

ஒற்றுமை ஏற்படுத்துவதற்காக இஸ்லாம் ஏற்படுத்திய ஒரு சித்தாந்தம் ஒரு போதும் வேற்றுமை ஏற்படுத்தாது என்ற உணர்வோடு அமீருக்குக் கட்டுப்படுதலை நாம் ஆய்வு செய்தால் குழப்பங்கள் விலகும். தெளிவும் பிறக்கும். இன்ஷா அல்லாஹ்.

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed