அபூலஹப் குறித்த முன்னறிவிப்பு

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறைத்தூதராக நியமிக்கப்பட்ட பின் மக்களுக்குப் பிரச்சாரம் செய்யும் எந்தக் கட்டளையும் அவர்களுக்கு வரவில்லை.

உமது நெருங்கிய உறவினர்களுக்கு எச்சரிக்கை செய்வீராக (26.214) என்பது தான் பிரச்சாரம் செய்வது பற்றிய முதல் கட்டளையாக இருந்தது. இந்தக் கட்டளையை ஏற்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது குடும்பத்தினரையும், உறவினரையும் அழைத்து அவர்களிடம் பிரச்சாரத்தைத் துவக்கினார்கள்.

உமது நெருங்கிய உறவினரை எச்சரிப்பீராக (26.214) என்ற வசனம் அருளப்பட்ட பின் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஸஃபா எனும் குன்றின் மேல் ஏறினார்கள். குறைஷ்களின் உட்கிளைகளான பனூ ஃபஹ்ர், பனூ அதீ ஆகியோரை அழைத்தார்கள். அனைவரும் அங்கே குழுமினார்கள். வர முடியாதவர், என்ன நடக்கிறது என்பதைக் கவனிக்க தன் பிரதிநிதி ஒருவரை அனுப்பினார். (நபிகள் நாயகத்தின் பெரிய தந்தை) அபூலஹபும், குறைஷ்களும் வந்தனர். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ‘இந்தப் பள்ளத்தாக்கிலிருந்து குதிரைப் படை ஒன்று உங்களைத் தாக்க வந்து கொண்டிருக்கிறது என்று நான் கூறினால் என்னை நம்புவீர்களா?’ என்று கேட்டார்கள். அதற்கவர்கள் ‘ஆம் நீங்கள் உண்மையைத் தவிர வேறு எதையும் பேசியதாக நாங்கள் கண்டதில்லை’ என்று கூறினார்கள். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ‘கடுமையான வேதனை பற்றி நான் உங்களை எச்சரிக்கிறேன்’ என்று கூறினார்கள். இதைக் கேட்டதும் அபூலஹப் ‘என்றென்றும் உனக்கு நாசம் உண்டாகட்டும்; இதற்காகத்தானா எங்களை ஒன்று கூட்டினாய்?’ என்று கேட்டான். அப்போது ‘அபூலஹபின் இரு கைகளும் அழிந்தன. அவனும் அழிந்தான். அவனது செல்வமும், அவன் சம்பாதித்தவையும் அவனைக் காப்பாற்றவில்லை’ என்ற வசனம் இறங்கியது.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)

நூல் : புகாரி 4770

இந்த நிகழ்ச்சி 1394, 4801, 4971, 4972, 4973 ஆகிய எண்களைக் கொண்ட ஹதீஸாகவும் புகாரியில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் சுட்டிக்காட்டப்படும் முழு அத்தியாயம் வருமாறு

அபூலஹபுடைய இரு கைகளும் அழிந்தன. அவனும் அழிந்தான். அவனது செல்வமும், அவன் செய்தவையும் அவனைக் காக்கவில்லை. கொளுந்து விட்டெரியும் நெருப்பில் அவனும் விறகு சுமக்கும் அவனது மனைவியும் கருகுவார்கள். அவள் கழுத்தில் முறுக்கேறிய ஈச்சமரக் கயிறு உள்ளது. திருக்குர்ஆன் 111 வது அத்தியாயம்

நபிகள் நாயகத்தின் பெரிய தந்தையான அபூலஹப் நபிகள் நாயகத்தின் மீது அதிக அன்பு வைத்திருந்தான். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பாட்டனார் இறந்த பின் நபிகள் நாயகத்தைத் தன் பொறுப்பில் வளர்க்க ஆசைப்பட்டான். ஒரே இறைவனைத் தான் வணங்க வேண்டும்; சிலைகளையோ, வேறு எதனையுமோ வணங்கக் கூடாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிரச்சாரம் செய்த போது அதை அவனால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இரத்தத்தில் ஊறிப் போன கொள்கையை தன் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரே குழி தோண்டிப் புதைக்க புறப்பட்டு வந்து விட்டாரே என்று எண்ணியதால் அவனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

இதன் காரணமாகவே தனது தம்பி மகன் என்று பாராமல் நபிகள் நாயகத்தைச் சபித்தான். இதற்குப் பதிலடியாகத் தான் மேற்கண்ட அத்தியாயம் அருளப்பட்டது.

இது ஒரு வரலாற்று நிகழ்ச்சியானாலும் இதில் முக்கியமான முன்னறிவிப்பும் அடங்கியுள்ளது. இஸ்லாம் உண்மையான மார்க்கம் என்பதற்கு அசைக்க முடியாத சான்றுகளில் ஒன்றாகவும் இது அமைந்துள்ளது.

கேரிமில்லர் என்ற கிறித்தவப் பாதிரியார் இந்த அத்தியாயத்தை ஆய்வு செய்து விட்டு இஸ்லாத்தை ஏற்றார். அத்தகைய அற்புதமான முன்னறிவிப்பு இது.

அபூலஹபும், அவனது மனைவியும் நாசமாவார்கள் என்றும் இருவரும் நரகத்தில் நுழைவார்கள் என்றும் இதில் கூறப்பட்டுள்ளது. இஸ்லாமிய நம்பிக்கையின் படி இதன் கருத்து என்னவென்றால் அவ்விருவரும் இஸ்லாத்தை ஏற்க மாட்டார்கள். இஸ்லாத்தை ஏற்க மறுத்து அதன் காரணமாக நரகத்தை அடைவார்கள் என்பதாகும்.

அவ்விருவரும் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டால் அவர்கள் நரகில் நுழைய மாட்டார்கள்.

இஸ்லாத்தை எப்படியாவது ஒழித்துக்கட்ட வேண்டும் என்று ஆரம்பம் முதல் அயராது பாடுபட்டவன். அபூலஹப்.

நானும், என் மனைவியும் இஸ்லாத்தை ஏற்கிறோம்’ என்று அபூலஹப் நடித்திருந்தால் அன்றோடு இஸ்லாத்தை ஒழித்திருக்க முடியும்.

அபூலஹபும், அவன் மனைவியும் இஸ்லாத்தை ஏற்க மாட்டார்கள் என்று இறைவன் கூறியது பொய்யாகி விட்டது; எனவே இது இறைவனின் கூற்று அல்ல; முஹம்மதின் கற்பனை தான்; எனவே முஹம்மது இறைத்தூதர் அல்லர்’ என்று மறைமுகமாகப் பிரச்சாரம் செய்து இஸ்லாத்தை இல்லாது ஒழித்திருக்க முடியும்.

அவ்வாறு செய்ய வேண்டும் என்று அவனுக்குத் தோன்றக் கூட இல்லை. இது இறைவனின் கூற்றாக இருந்ததால் தான் இவ்வாறு அவனுக்கும் தோன்றவில்லை. அவனுக்குப் பக்க பலமாக இருந்த நபிகள் நாயகத்தின் எதிரிகளுக்கும் இப்படிச் செய்து இஸ்லாத்தை ஒழிக்கலாமே என்று தோன்றவில்லை.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் அவர்களை நம்பி ஏற்றுக் கொண்டவர்களில் ஓரிருவரைத் தவிர மற்ற அனைவரும் ஆரம்பத்தில் நபிகள் நாயகத்தைக் கடுமையாக எதிர்த்தவர்கள் தான். இவ்வாறு எதிர்த்தவர்கள் எல்லாம் தன்னுடன் வந்து இணைந்து கொண்டிருக்கும் வேளையில் குறிப்பிட்ட இருவரைப் பற்றி ‘இவ்விருவரும் ஒருக்காலும் இஸ்லாத்தை ஏற்க மாட்டார்கள்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சுயமாக அறிவித்திருக்க முடியாது.

மற்றவர்களைப் போலவே இவர்களும் இஸ்லாத்தில் இணைவார்கள் என்று கருதுவதற்குத் தான் அதிக வாய்ப்புகள் இருந்தன.

அவ்விருவரும் இஸ்லாத்தை ஏற்க மாட்டார்கள் என்று நபிகள் நாயகம் மனதால் நினைத்தாலும் அதைச் சொல்லியிருக்க மாட்டார்கள். ஏனெனில் இவ்வாறு சொல்விட்டால் இதைப் பொய்யென்று நிரூபிக்கும் திட்டத்துடன் அவ்விருவரும் இஸ்லாத்தில் சேருவதாக அறிவித்து மற்றவர்களை இஸ்லாத்தை விட்டும் விரட்டினால் என்ன ஆகும் என்று எண்ணி இதை வெளிப்படுத்தாமல் இருந்திருப்பார்கள்.

இறைவாக்கு நிச்சயம் நிறைவேறும். அதை எந்த மனிதனாலும் மீற முடியாது என்ற அசைக்க முடியாத நம்பிக்கையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இதை வெளிப்படையாக மக்கள் முன்னே வைத்தார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவர்கள் அறிவித்தவாறு அபூலஹபும், அவனது மனைவியும் இஸ்லாத்தின் எதிரிகளாகவே இருந்து மரணித்தார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறைத்தூதர் தான் என்பதற்கு இதுவும் வலுவான சான்றாக அமைந்துள்ளது

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *