அல்லாஹுவின் திருப்பெயரால்
•••••••••••••••••••••••••••••
அன்னை ஹாஜர் அலைஹிலாம் அவர்கள்…
••••••••••••••••••••••••••••••
இப்ராஹீம் (அலை) அவர்கள் இராக்கிலிருந்து எகிப்துவிற்கு பயணமான போது, ஸாராவின் அழகைப் பார்த்து எகிப்து மன்னன் சாராவை அடைய விரைந்தான். அல்லாஹ் அவர்களைப் பாதுகாத்து அங்கிருந்து வெளியேற்றி வேறொரு பகுதியில் வாழச் செய்து இப்ராஹீமுக்கு ஹாஜர் என்ற பெண்ணையும் அன்பளிப்பாகக் கிடைக்கச் செய்தான் என்ற விபரங்களைக் கண்டோம்.

அந்த ஹாஜர் (அலை) அவர்களோடு இணைந்து வாழ்ந்த வாழ்வில் தான் நபி இஸ்மாயீல் பிறக்கப் போவதாக இறைவன் நற்செய்தி சொன்னான். இனிதே குழந்தையும் பிறந்தது. மகிழ்ச்சியும் பிறந்தது; ஆனால் நீடிக்கவில்லை.

காரணம், அங்கிருந்து தன் மனைவி ஹாஜர் அவர்களையும் மகன் இஸ்மாயீலையும் அழைத்துக் கொண்டு பாரஹான் பெருவெளியில் (தற்பொழுது கஃபா இருக்கும் இடத்தில்) கொண்டு விடச் சொல்லிக் கட்டளையிட்டான் அல்லாஹ்!

அவ்வாறு பாலைவனத்தில் விட்டு விட்டு, மீண்டும் ஃபலஸ்தீன் திரும்பிவிடும் படி கட்டளை வந்தது.

தன் உணர்வுகளை வென்றிட நபி இப்ராஹீம் (அலை) கொஞ்சமும் தயங்கவில்லை. இருவரையும் அழைத்துக் கொண்டு செடி, கொடியில்லாத வறண்ட பாலைப் பகுதியை நோக்கிப் பயணமானார்கள்.

யார் பார்வையும் படாத ஓரிடத்தில் அவர்களை விட்டு விட்டு உறுதிப்பாட்டுடனும் உள்ளச்சத்துடனும் இறைவனிடத்தில் பிரார்த்தித்தார்கள்.

இறைவா! இவ்வூரை அபயமளிக்கக் கூடியதாக ஆக்குவாயாக! என்னையும், என் பிள்ளைகளையும் சிலைகளை வணங்குவதை விட்டும் காப்பாயாக!”

இறைவா! இவை மனிதர்களில் அதிகமானோரை வழி கெடுத்து விட்டன. என்னைப் பின்பற்றுபவர் என்னைச் சேர்ந்தவர். எனக்கு யாரேனும் மாறு செய்தால் நீ மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.

எங்கள் இறைவா! எனது சந்ததிகளை உனது புனித ஆலயத்திற்கருகில், விவசாயத்துக்குத் தகுதி இல்லாத பள்ளத்தாக்கில், இவர்கள் தொழுகையை நிறைவேற்றுவதற்காக குடியமர்த்தி விட்டேன். எனவே எங்கள் இறைவா! மனிதர்களில் சிலரது உள்ளங்களை இவர்களை நோக்கி விருப்பம் கொள்ள வைப்பாயாக! இவர்கள் நன்றி செலுத்திட இவர்களுக்குக் கனிகளை உணவாக வழங்குவாயாக

எங்கள் இறைவா! நாங்கள் மறைப்பவற்றையும், வெளிப்படுத்திய வற்றையும் நீ அறிவாய். பூமியிலோ, வானத்திலோ அல்லாஹ்வுக்கு எதுவுமே மறையாது.

(அல்குர்ஆன் 14:35-38)

இவ்வாறு இப்ராஹீம் (அலை) அவர்கள் பிரார்த்தனை செய்தார்கள்.

இப்ராஹீம் (அலை) அவர்கள், ஹாஜரா அம்மையார் இஸ்மாயீலுக்குப் பாலூட்டிக் கொண்டிருக்கும் போது இருவரையும் கொண்டு வந்து அவர்களை கஅபாவின் மேற்பகுதியில் (இப்போதுள்ள) ஸம்ஸம் கிணற்றிற்கு மேல் பெரிய மரம் ஒன்றின் அருகே வைத்து விட்டார்கள். அந்த நாளில் மக்காவில் எவரும் இருக்கவில்லை. அங்கு தண்ணீர் கூட கிடையாது. இருந்தும் அவ்விருவரையும் அங்கே இருக்கச் செய்தார்கள். அவர்களுக்கு அருகே பேரிச்சம் பழம் கொண்ட தோல்பை ஒன்றையும் தண்ணீருடன் கூடிய தண்ணீர் பை ஒன்றையும் வைத்தார்கள்.

பிறகு இப்ராஹீம் (அலை) அவர்கள் திரும்பிச் சென்றார்கள். அப்போது அவர்களை இஸ்மாயீலின் அன்னை ஹாஜரா (அலை) அவர்கள் பின் தொடர்ந்து வந்து, இப்ராஹீமே! மனிதரோ வேறெந்த பொருளுமோ இல்லாத இந்தப் பள்ளத்தாக்கில் எங்களை விட்டுவிட்டு நீங்கள் எங்கே போகிறீர்கள்?” என்று கேட்டார்கள். இப்படிப் பலமுறை அவர்களிடம் கேட்டார்கள்.

இப்ராஹீம் (அலை) அவர்கள் அவரைத் திரும்பிப் பார்க்காமல் நடக்கலானார்கள். ஆகவே, அவர்களிடம் ஹாஜரா (அலை) அவர்கள், அல்லாஹ் தான் உங்களுக்கு இப்படிக் கட்டளையிட்டானா?” என்று கேட்க, அவர்கள் ஆம் என்று சொன்னார்கள். அதற்கு ஹாஜர் (அலை) அவர்கள், அப்படியென்றால் அவன் எங்களைக் கைவிடமாட்டான்” என்று சொல்லி விட்டு திரும்பிச் சென்று விட்டார்கள்.

இப்ராஹீம் (அலை) அவர்கள் (சிறிது) நடந்து சென்று மலைக்குன்றின் அருகே, அவர்களை எவரும் பார்க்காத இடத்திற்கு வந்த போது தம் இரு கரங்களையும் உயர்த்தி, இந்தச் சொற்களால் பிரார்த்தித்தார்கள்.

இப்ராஹீம் (அலை) அவர்கள் அவரைத் திரும்பிப் பார்க்காமல் நடக்கலானார்கள். ஆகவே, அவர்களிடம் ஹாஜரா (அலை) அவர்கள், “அல்லாஹ் தான் உங்களுக்கு இப்படிக் கட்டளையிட்டானா?” என்று கேட்க, அவர்கள் ஆம் என்று சொன்னார்கள். அதற்கு ஹாஜர் (அலை) அவர்கள், “அப்படியென்றால் அவன் எங்களைக் கைவிடமாட்டான்” என்று சொல்லி விட்டு திரும்பிச் சென்று விட்டார்கள்.

இப்ராஹீம் (அலை) அவர்கள் (சிறிது) நடந்து சென்று மலைக்குன்றின் அருகே, அவர்களை எவரும் பார்க்காத இடத்திற்கு வந்த போது தம் இரு கரங்களையும் உயர்த்தி, இந்தச் சொற்களால் பிரார்த்தித்தார்கள்

எங்கள் இறைவா! எனது சந்ததிகளை உனது புனித ஆலயத்திற்கருகில், விவசாயத்துக்குத் தகுதி இல்லாத பள்ளத்தாக்கில், இவர்கள் தொழுகையை நிறைவேற்றுவதற்காக குடியமர்த்தி விட்டேன். எனவே எங்கள் இறைவா! மனிதர்களில் சிலரது உள்ளங்களை இவர்களை நோக்கி விருப்பம் கொள்ள வைப்பாயாக! இவர்கள் நன்றி செலுத்திட இவர்களுக்குக் கனிகளை உணவாக வழங்குவாயாக” என்று இறைஞ்சினார்கள். (அல்குர்ஆன் 14:37)

இஸ்மாயீலின் அன்னை, இஸ்மாயீலுக்குப் பாலூட்டவும் அந்தத் தண்ணீரிலிருந்து (தாகத்திற்கு நீர்) அருந்தவும் தொடங்கினார்கள். தண்ணீர்ப் பையிலிருந்த தண்ணீர் தீர்ந்து விட்ட போது அவரும் தாகத்திற்குள்ளானார். அவருடைய மகனும் தாகத்திற்குள்ளானார். தம் மகன் (தாகத்தால்) புரண்டு புரண்டு அழுவதை… அல்லது தரையில் காலை அடித்துக் கொண்டு அழுவதை… அவர்கள் பார்க்கலானார்கள். அதைப் பார்க்கப் பிடிக்காமல் (சிறிது தூரம்) நடந்தார்கள்.

பூமியில் தமக்கு மிக அண்மையில் உள்ள மலையாக ஸஃபாவைக் கண்டார்கள். அதன் மீது (ஏறி) நின்று கொண்டு (மனிதர்கள்) யாராவது கண்ணுக்குத் தென்படுகிறார்களா? என்று நோட்டமிட்டபடி பள்ளத்தாக்கை நோக்கிப் பார்வையைச் செலுத்தினார்கள். எவரையும் அவர்கள் காணவில்லை. ஆகவே, ஸஃபாவிலிருந்து இறங்கி விட்டார்கள்.

இறுதியில் பள்ளத்தாக்கை அவர்கள் அடைந்த போது தன் மேலங்கியை உயர்த்திக் கொண்டு ஓடும் ஒரு மனிதனைப்போன்று ஓடிச் சென்று பள்ளத்தாக்கைக் கடந்தார்கள். பிறகு மர்வா மலைக்குன்றுக்கு வந்து அதன் மீது (ஏறி) யாராவது தென்படுகிறார்களா என்று நோட்டமிட்டர்கள். எவரையும் காணவில்லை. இவ்வாறு ஏழு முறை செய்தார்கள்.

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: “இதுதான் (இன்று ஹஜ்ஜில்) மக்கள் ஸஃபாவுக்கும் மர்வாவுக்குமிடையே செய்கின்ற ஸஃயு (தொங்கோட்டம்) ஆகும்” என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.

பிறகு அவர்கள் மர்வாவின் மீது ஏறி நின்று கொண்ட போது ஒரு குரலைக் கேட்டார்கள். உடனே, சும்மாயிரு என்று தமக்கே கூறிக் கொண்டார்கள். பிறகு, காதைத் தீட்டிக் கொண்டு கேட்டார்கள். அப்போதும் (அதே போன்ற குரலைச்) செவியுற்றார்கள். உடனே, “நீங்கள் சொன்னதை நான் செவியுற்றேன். உங்களிடம் உதவியாளர் எவரேனும் இருந்தால் (என்னிடம் அனுப்பி என்னைக் காப்பாற்றுங்கள்)” என்று சொன்னார்கள்.

அப்போது அங்கே தம் முன் வானவர் ஒருவரை (இப்போதுள்ள) ஸம்ஸம் (கிணற்றின்) அருகே கண்டார்கள். அந்த வானவர் தம் குதிகாலால் (மண்ணில்) தோண்டினார். (அல்லது தமது இறக்கையினால் தோண்டினார்கள் என்று அறிவிப்பாளர் சொல்லி இருக்கலாம்) அதன் விளைவாக தண்ணீர் வெளிப்பட்டது.

உடனே, ஹாஜரா (அலை) அவர்கள் அதை ஒரு தடாகம் போல் (கையில்) அமைக்கலானார்கள். அதை தம் கையால் இப்படி (“ஓடி விடாதே, நில்’ என்று சைகை செய்து) சொன்னார்கள். அந்தத் தண்ணீரிலிருந்து அள்ளித் தம் தண்ணீர்ப் பையில் போட்டுக் கொள்ளத் தொடங்கினார்கள். அவர்கள் அள்ளியெடுக்க எடுக்க அது பொங்கியபடி இருந்தது.

“அல்லாஹ், இஸ்மாயீல் (அலை) அவர்களின் அன்னைக்குக் கருணை புரிவானாக! ஸம்ஸம் நீரை அவர் அப்படியே விட்டு விட்டிருந்தால் அல்லது அந்தத் தண்ணீரிலிருந்து அள்ளியிருக்காவிட்டால் ஸம்ஸம் நீர் பூமியில் ஓடும் ஊற்றாக மாறி விட்டிருக்கும்” என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள் என இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்.

பிறகு அன்னை ஹாஜரா (அலை) அவர்கள் தாமும் அருந்தி, தம் குழந்தைக்கும் ஊட்டினார்கள். அப்போது அந்த வானவர் அவர்களிடம், “நீங்கள் (கேட்பாரற்று) வீணாக அழிந்து போய் விடுவீர்கள் என்று அஞ்ச வேண்டாம். ஏனெனில், இங்கு இந்தக் குழந்தையும் இவருடைய தந்தையும் சேர்ந்து (புதுப்பித்துக்) கட்டவிருக்கின்ற அல்லாஹ்வின் ஆலயம் உள்ளது. அல்லாஹ் தன்னைச் சார்ந்தோரைக் கைவிட மாட்டான்” என்று சொன்னார். இறையில்லமான கஅபா, மேட்டைப் போன்று பூமியிலிருந்து உயர்ந்திருந்தது. வெள்ளங்கள் வந்து அதன் வலப்பக்கமாகவும் இடப்பக்கமாகவும் (வழந்து) சென்று விடும். இவ்வாறே அன்னை ஹாஜிரா (அலை) அவர்கள் இருந்தார்கள்.

இந்நிலையில் ஜுர்ஹும் குலத்தாரின் ஒரு குழுவினர் அவர்களைக் கடந்து சென்றனர். அவர்கள் கதா எனும் கணவாயின் வழியாக முன்னோக்கி வந்து மக்காவின் கீழ்ப்பகுதியில் தங்கினர். அப்போது தண்ணீரின் மீதே வட்டமடித்துப் பறக்கும் ஒரு வகைப் பறவையைக் கண்டு, “இந்தப் பறவை தண்ணீரின் மீது தான் வட்டமடித்துக் கொண்டிருக்க வேண்டும். நாம் இந்தப் பள்ளத்தாக்கை முன்பே அறிந்திருக்கிறோம். அப்போது இதில் தண்ணீர் இருந்ததில்லையே” என்று பேசிக் கொண்டார்கள்.

பிறகு அவர்கள் ஒரு தூதரை அல்லது இரு தூதர்களை செய்தி சேகரித்து வர அனுப்பினார்கள். அவர்கள் அங்கே தண்ணீர் இருப்பதைக் கண்டார்கள். உடனே அவர்கள் திரும்பிச் சென்று (தம் குலத்தாரிடம்) தண்ணீர் இருப்பதைத் தெரிவித்தார்கள்.

உடனே அக்குலத்தார், இஸ்மாயீலின் அன்னை தண்ணீருக்கு அருகே இருக்க, முன்னே சென்று, “நாங்கள் உங்கள் இடத்தில் தங்கிக் கொள்ள எங்களுக்கு நீங்கள் அனுமதி அளிப்பீர்களா?” என்று கேட்டார்கள். (ஹாஜரா) அவர்கள், “ஆம்! ஆனால் தண்ணீரில் உங்களுக்கு உரிமை ஏதும் இருக்காது” என்று சம்மதித்தார்.

அந்தச் சந்தர்ப்பம் இஸ்மாயீலின் தாயார் மக்களுடன் கலந்து வாழ்வதை விரும்பிக் கொண்டிருந்த வேளையில் வாய்த்தது.

ஆகவே அவர்கள் அங்கே தங்கினார்கள். தங்கள் நெருங்கிய உறவினர்களுக்கும் சொல்லியனுப்ப அவர்களும் (வந்து) அவர்களுடன் தங்கினார்கள். அதன் விளைவாக அக்குலத்தைச் சேர்ந்த பல வீடுகள் மக்காவில் தோன்றி விட்டன. குழந்தை இஸ்மாயீல் வாலிபரானார். ஜுர்ஹும் குலத்தாரிடமிருந்து அவர் அரபு மொழியைக் கற்றுக் கொண்டார்.

அவர் வாலிபரான போது அவர்களுக்குப் பிரியமானவராகவும், மிக விருப்பமானவராகவும் ஆகி விட்டார். பருவ வயதை அடைந்த போது அவருக்கு அவர்கள் தம்மிலிருந்தே ஒரு பெண்ணை மணமுடித்து வைத்தனர். இஸ்மாயீலின் தாயார் (ஹாஜர்) இறந்து விட்டார். இஸ்மாயீல் (அலை) அவர்கள் மணம் புரிந்து கொண்ட பின்பு இப்ராஹீம் (அலை) அவர்கள் தாம் விட்டுச் சென்ற (மனைவி, மகன் ஆகிய)வர்களின் நிலையை அறிந்து கொள்வதற்காக வந்தார்கள்…

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்: புகாரி 3364

இது தான் அன்னை ஹாஜரா (அலை) அவர்கள் குறித்து புகாரியில் இடம் பெறும் செய்தியாகும். அவர்களின் இந்தச் சோதனையான வாழ்க்கையை நினைவு கூரும் விதமாக இன்று ஹஜ்ஜின் வணக்கங்கள் அமைந்துள்ளன.

அவர்களின் தாகம் தீர்ப்பதற்காகப் பொங்கிய நீரூற்றான ஸம்ஸம் நீர் இன்றளவும் அல்லாஹ்வின் அற்புதத்தைப் பறைசாற்றும் அத்தாட்சியாகத் திகழ்கின்றது.

பால்குடி மறவாத பாலகனுடன், தன்னந்தனியாகப் பாலைவனத்தில் அன்னை ஹாஜரா அவர்களை இப்ராஹீம் (அலை) அவர்கள் விட்டுச் சென்ற போது, அவர்கள் கேட்ட வார்த்தைகளை நாம் இங்கு கவனிக்க வேண்டும். “அல்லாஹ் தான் இவ்வாறு செய்யுமாறு கட்டளையிட்டானா?” என்பது தான் அந்தக் கேள்வி.

அதற்கு இப்ராஹீம் நபியவர்கள் ஆம் என்றதும் “அப்படியென்றால் அவன் எங்களை கைவிடமாட்டான்” என்று அன்னை ஹாஜரா அம்மையார் கூறுகின்றார்கள்.

இறைவன் நம்மைக் காப்பாற்றுவான் என்பதில் அவர்களுக்கு இருந்த உறுதியான நம்பிக்கை நம்மை மெய் சிலிர்க்க வைக்கின்றது. இந்தச் சோதனையில் வெற்றி பெற்றதற்குப் பரிசாகத் தான், இன்றளவும் உலகம் உள்ள வரையிலும் அவர்களது தியாகத்தை மக்கள் நினைவு கூருமாறு இறைவன் ஆக்கி வைத்துள்ளான்.

ஏகத்துவ ஏந்தல் இப்ராஹீம் (அலை) அவர்களைப் போன்றே அவர்களுக்கு வாய்த்த இரு துணைவியரும் ஈமானிய உறுதி கொண்டவர்களாய் திகழ்ந்துள்ளனர் என்பதை இந்தச் சம்பவங்கள் நமக்கு எடுத்துக் காட்டுகின்றன.

எந்தச் சோதனை வந்தாலும், இறைவனிடமே உதவி தேட வேண்டும் என்ற உறுதியையும், அவ்வாறு உறுதியாக இருக்கும் போது இறைவன் நமக்கு நிச்சயம் உதவுவான் என்ற படிப்பினையையும் இந்த இரு பெண்மணிகளின் வாழ்க்கையிலிருந்து நாம் பெற முடிகின்றது.

அல்லாஹ் அது போன்ற ஈமானிய உறுதி கொண்டவர்களாக நம்மை ஆக்கி வைப்பானாக!

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

One thought on “அன்னை ஹாஜர் அலைஹிலாம் அவர்கள்…”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *