அனைத்துக் கட்சிகளும் நமக்குத் துரோகம் செய்திருக்க அவர்களை ஆதரிப்பது சரியா?

தேர்தல் நிலைபாட்டைப் பொருத்தவரை கடந்த காலத்தின் செயல்பாடுகளைக் கருத்தில் கொண்டால் ஒருவரையும் ஆதரிக்க முடியாது. அப்போதைய சூழ்நிலையில் எந்த முடிவு சமுதாயத்துக்கு நன்மை தரும் என்ற அடிப்படையில் தான் முடிவு செய்ய முடியும்.

ஜெயலலிதா செய்த துரோகம் கொஞ்சம் அல்ல. இட ஒதுக்கீட்டுக்கு ஆணையம் அமைத்த போது அதற்காக அதிமுகவை ஆதரித்தோம்.

கோவை கலவரம் முதல் கருணாநிதி செய்த துரோகமும் சாதாரணமானது அல்ல. ஆனாலும் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கியதால் திமுகவை ஆதரித்தோம்.

இப்போது ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் அடிப்படையில் முஸ்லிம்களுக்கு பத்து சதவிகித இடஒதுக்கீட்டை காங்கிரஸ் அளித்தால் வரும் தேர்தலில் காங்கிரஸை ஆதரிக்கும் அவசியம் சமுதாயத்துக்கு ஏற்படும்.

எந்தத் தேர்தலையும் சமுதாயத்துக்கு நன்மையைப் பெற்றுத் தரும் கருவியாகப் பயன்படுத்துவதே அறிவுடமை. கடந்த காலத் தவறுகளுக்காக தண்டிப்பதற்கு தேர்தலைக் கருவியாக்கினால் சமுதாயத்துக்கு அதனால் நன்மை ஏற்படாது.

அது போல் இப்போது காங்கிரஸ் ஆட்சியிலோ, திமுக ஆட்சியிலோ பயங்கரமான கொடுமை நடந்து அதற்கு நியாயம் கிடைக்கவில்லை என்றால் அதற்காகப் பாடம் கற்பிக்கும் வகையில் எதிர்த்து வாக்களிக்கலாம்.

உதாரணமாக கோவை கலவரத்தில் சமுதாயத்துக்கு அநீதி இழைக்கப்பட்டது என்பதற்காக ஒட்டு மொத்த சமுதாயமும் திமுகவைப் புறக்கணித்தது.

ஆனால் அதே காரணத்துக்காக இனி வரும் தேர்தல்களில் அதைப் பிரச்சனையாக்கக் கூடாது.

அந்தச் சம்பவம் நடந்து அதை ஓட்டி வரும் தேர்தலில் மட்டுமே இவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்.

இப்படி நடந்து கொண்டால் சமுதாயத்துக்கு அதிக நன்மைகளைப் பெற முடியும். நாம் முஸ்லிம்களுக்கு நன்மை செய்தால் பழையதை மறந்து நமக்கு வாக்களிப்பார்கள் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தினால் அதிக நன்மை கிடைக்கும்.

என்ன தான் நன்மை செய்தாலும் இவர்கள் ஐம்பது வருடத்துக்கும் முன் நடந்தததற்காக நமக்கு ஓட்டுப் போட மாட்டார்கள் என்ற எண்ணம் அரசியல் கட்சிகளுக்கு ஏற்படும் வகையில் நடந்து கொண்டால் அவர்கள் நமக்கு எந்த நன்மையும் செய்ய மாட்டார்கள்.

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed