அத்தாட்சிகளை மறுக்கலாமா?

தங்களின் பார்வைக்கு மரம் ருகூவு செய்வது போன்ற புகைப்படத்தின் காப்பியை அனுப்பி உள்ளேன். இது போன்ற வேறு சில புகைப்படங்களும் கை வசம் உள்ளன. மீன் வயிற்றில் அல்லாஹ் என்றும் முஹம்மது என்றும் எழுதப்பட்டுள்ளது.

மேலும் ஜெர்மன் நாட்டில் ஒரு மரத்தில் (லாயிலாஹ இல்லல்லாஹ்) என்ற அரபி பதம் தெளிவாக தெரியும் வகையில் அமைந்த புகைப் படங்களும் உள்ளன. இது போன்ற விஷயங்களை எல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ளத் தேவையில்லை என்ற கருத்தோடு நானும் இணைகிறேன். என்றாலும் மாற்றுக்கருத்துடைய சகோதரர்கள் இந்த விஷயத்தை நம்பி பெரிதாக எடுத்துக்கொண்டு மற்றவர்களிடமும் இதைப் பெரிய அளவில் பிரச்சாரம் செய்கிறார்கள்.

அவர்களுக்கு உண்மை தெளிவாக வேண்டும் என்பதற்காக பல பாகங்களிலும், அவர்களுக்கு உள்ளேயும் நமது சான்றுகளை அவர்களுக்குக் காட்டுவோம். உமது இறைவன் ஒவ்வொரு பொருளையும் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்பது போதுமானதாக இல்லையா?

(திருக்குர்ஆன் 41:53)

என்ற வசனத்தை எடுத்துக்காட்டி இது அல்லாஹ்வின் அற்புதம் தான் என்றும் இதை மறுத்தால் இந்த வசனத்தையே மறுத்தது போல் ஆகும் என்றும் கூறுகிறார்கள். மேலும் இதை எல்லாம் அற்புதமாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்பதற்கு உங்களிடம் என்ன ஆதாரம் உள்ளது என்றும் கேட்கிறார்கள்?

 இறைவன் தனது அத்தாட்சிகளைக் காட்டுவான் என்பதிலோ, அவற்றை நம்ப வேண்டும் என்பதிலோ மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

மாயையையும், மாயத் தோற்றங்களையும் அத்தாட்சிகள் என்று கூறுவோர் தான் இவை அத்தாட்சி என்பதற்கான ஆதாரத்தைக் காட்ட வேண்டும்.

தற்செயலாக அமைந்த இது போன்றவற்றை எல்லாம் அத்தாட்சிகள் என வாதிட்டால் எல்லா மதத்தவர்களிடமும் இதுபோன்ற அத்தாட்சிகள் அதிகமதிகம் உள்ளன.

சிலுவை, மேரி வடிவத்தில் பல்லாயிரம் பொருட்கள் உள்ளன. எல்லா மதத்தினரும் தற்செயலாக அமைந்து விட்ட இது போன்ற காட்சிகளைக் காட்டுகின்றனர். உங்கள் நண்பர்கள் வாதப்படி இவையும் அத்தாட்சிகள் தாமா?

இதோ வணக்கம் செய்யும் மரம் என்று நீங்கள் கூறினால் கும்பிடுவது போல தோற்றமளிக்கும் மரங்களை அவர்கள் காட்டுவார்கள். அல்லாஹ் என்ற அரபு எழுத்து எழுதப்பட்டுள்ளது என்று நீங்கள் காட்டினால் இல்லை சூலம் தான் இவ்வாறு எழுதப்பட்டுள்ளது என்று அவர்கள் கூறுவார்கள். இறைவனின் அத்தாட்சிகள் இவ்வளவு பலவீனமாக, வமையற்றதாக ஒருக்காலும் இருக்க முடியாது.

அத்தாட்சிகள் என்பன, ஒரே இறைவன் இருக்கிறான் என்பதைத் தெளிவாக அறிவிக்கும். நீங்கள் கூறுபவற்றை எல்லாம் அத்தாட்சிகள் என்று எடுத்துக் கொண்டால் பல கடவுள் உள்ளனர் என்பதற்கும் இது போன்ற அத்தாட்சிகளை (?) மற்றவர்கள் காட்டுவார்கள்.

அல்லாஹ்வைப் பற்றிய அறிவும் அவனது அத்தாட்சிகள் பற்றிய அறிவும் இல்லாதவர்கள் தான் மாயைகளை அத்தாட்சிகள் என்பர்.

மூஸா நபி இலேசாக பாறையில் தட்டியவுடன் தண்ணீர் பீறிட்டு அடித்தது. இது போல் எவரும் செய்ய முடியாது என்பதால் இதை அத்தாட்சி எனலாம்.

வானங்கள், பூமி, சூரியன், கோள்கள், மழை மேகங்கள், விண்மீன்கள், காற்று, பயிர்கள் முளைப்பது, கருவில் மனிதன் வளர்வது, மனிதனுக்குள்ளே அமைக்கப்பட்டுள்ள வியக்க வைக்கும் அற்புதங்கள் என கோடானு கோடி அத்தாட்சிகளை அல்லாஹ் காட்டிக் கொண்டே தான் இருக்கிறான்.

இத்தகைய பிரம்மாண்டமான மலைக்கச் செய்யும் அத்தாட்சிகளை விட்டு விட்டு அற்பமானவைகளை அத்தாட்சி என்று கூறுவது முற்றிலும் தவறாகும். கோடி கோடியாக செல்வம் வைத்திருப்பவன் செல்லாத காலணாவைப் பெரிதாக நினைப்பது போலவே இவர்களின் நிலைமை அமைந்துள்ளது.

இத்தகைய அற்பமான தற்செயலானவற்றை அத்தாட்சி என்று கூற ஆரம்பித்தால் நிச்சயம் நீங்கள் தோற்று விடுவீர்கள்! இது போன்ற செல்லாக்காசுகள் உங்களை விட மற்றவர்களிடம் மூட்டை மூட்டையாகக் குவிந்துள்ளன.

அல்லாஹ்வுடைய வசனத்தைத் தவறான இடத்தில் பயன்படுத்தாதீர்கள்!
இவை அத்தாட்சி இல்லை என்று நம்மிடம் ஆதாரம் கேட்கக் கூடாது. யார் அத்தாட்சி என்று வாதிடுகிறார்களோ அவர்கள் தான் இது போன்றவைகளை அத்தாட்சிகளாக இறைவன் கூறியிருக்கிறான் என்ற ஆதாரத்தைக் காட்ட வேண்டும்.

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed