அதிகம் உண்மைப்படுத்திய நபித்தோழர்

ஆரம்ப நேரத்தில் நபி (ஸல்) அவர்கள் மக்களுக்கு இஸ்லாத்தை எடுத்துச் சொன்ன போது எல்லோரும் நபியவர்களை உண்மையாளர் என்று ஏற்றுக் கொள்ளவில்லை. அந்நேரத்தில் அவர்கள் கூறுவதையெல்லாம் உண்மை என்று நம்புவதற்கு அபூபக்ர் (ரலி) அவர்கள் மாத்திரமே இருந்தார்கள். இதை நபி (ஸல்) அவர்களே சுட்டிக் காட்டியுள்ளார்கள்.

அபுத் தர்தா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் நபி (ஸல்) அவர்களுடன் அமர்ந்திருந்தேன். அப்போது அபூபக்ர் (ரலி) அவர்கள் தமது முழங்கால் வெளியே தெரியுமளவிற்கு ஆடையின் ஒரு பக்கத்தை (தூக்கிப்) பிடித்த படி (எங்களை நோக்கி) வந்தார்கள். உடனே நபி (ஸல்) அவர்கள் உங்கள் தோழர் வழக்காட வந்து விட்டார் என்று சொன்னார்கள்.

அபூபக்ர் (ரலி) அவர்கள் சலாம் கூறிவிட்டு அல்லாஹ்வின் தூதரே எனக்கும் கத்தாபின் மகனா(ர் உம)ருக்கும் இடையே சிறிது வாக்குவாதம் ஏற்பட்டது. நான் (கோபமாக) அவரை நோக்கி விரைந்தேன். பிறகு (என் செய்கைக்காக) வருந்தி அவரிடம் மன்னிப்புக் கேட்டேன். அவர் என்னை மன்னிக்க மறுத்து விட்டார். ஆகவே உங்களிடம் வந்தேன் என்று சொன்னார்கள்.

உடனே நபி (ஸல்) அவர்கள் அபூபக்ரே அல்லாஹ் உங்களை மன்னிப்பானாக என்று மும்முறை கூறினார்கள். பிறகு உமர் (ரலி) அவர்கள் (மன்னிக்க மறுத்து விட்டதற்காக) மனம் வருந்தி அபூபக்ர் (ரலி) அவர்களின் வீட்டிற்குச் சென்று அங்கே அபூபக்ர் இருக்கிறாரா? என்று கேட்க வீட்டார் இல்லை என்று பதிலளித்தார்கள். ஆகவே அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் சென்றார்கள்.

அப்போது நபி (ஸல்) அவர்களின் முகம் (கோபத்தால்) நிறம் மாறலாயிற்று. எனவே அபூபக்ர் (ரலி) அவர்கள் பயந்து போய் தம் முழங்கால்களின் மீது மண்டியிட்டு அமர்ந்து அல்லாஹ்வின் தூதரே அல்லாஹ்வின் மீதாணையாக நான் தான் (வாக்கு வாதத்தைத் தொடங்கியதால் உமரை விட) அதிகம் அநீதியிழைத்தவனாகி விட்டேன் என்று இரு முறை கூறினார்கள்.

அப்போது நபி (ஸல்) அவர்கள் (மக்களே) அல்லாஹ் என்னை உங்களிடம் அனுப்பினான். பொய் சொல்கிறீர் என்று நீங்கள் கூறினீர்கள். அபூபக்ர் (ரலி) அவர்களோ நீங்கள் உண்மையே சொன்னீர்கள் என்று சொன்னார். மேலும் தம்மையும் தம் செல்வத்தையும் அர்ப்பணித்து என்னிடம் பரிவுடன் நடந்து கொண்டார்.

அத்தகைய என் தோழரை எனக்காக நீங்கள் (மன்னித்து) விட்டு விடுவீர்களா? என்று இரு முறை சொன்னார்கள். அதன் பிறகு அபூபக்ர் (ரலி) அவர்கள் மன வேதனைக்குள்ளாக்கப்படவில்லை.

நூல் : புகாரி (3661)

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *