அதாவது ஒருவரிடம் டாலர் உள்ளது. இந்திய ரூபாயாக மாற்றி தருவதற்கு குறிப்பிட்ட சதவிகிதம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதை நாம் செய்யலாமா?

ஒரே வகையான நாணயத்திற்குள் நடக்கும் நாணய மாற்றுதல். வெவ்வேறு வகையான நாணயங்களுக்குள் நடக்கும் நாணய மாற்றுதல் என இது இரு வகைகளில் அமைந்துள்ளன.

ஒரே வகையான நாணயங்களுக்குள் நடக்கும் நாணய மாற்றுதலில் கூடுதல் குறைவு இல்லாமல் சமமான மதிப்பில் மாற்றிக் கொள்ள வேண்டும்.

பத்து கிராம் தங்கக் காசைக் கொடுத்து பத்து ஒரு கிராம் தங்கக் காசுகள் வாங்கலாம்; விற்கலாம். பதினொரு அல்லது ஒன்பது காசுகள் என்ற வகையில் மாற்றினால் அது ஹராமாகும்.

அது போல் ஒரு நாட்டின் ரூபாய்க்கு சில்லரை மாற்றும் போது கூடுதல் குறைவு இருக்கக் கூடாது. நூறு ரூபாயை பத்து ரூபாயாக மாற்றும் போது பத்து நோட்டுகள் வாங்கலாம்; கொடுக்கலாம். பதினொன்று அல்லது ஒன்பது நோட்டுக்கள் வாங்கக் கூடாது. அது போல் நோட்டுக்கு பதிலாக காயன்ஸ் வாங்கும் போது அதற்குச் சமமான மதிப்பில் தான் வாங்கவோ கொடுக்கவோ வேண்டும்.

நாணய வகை மாறுபட்டால் சந்தை நிலவரப்படி அல்லது நம் விருப்பப்படி விலை நிர்ணயிக்கலாம். மார்க்கத்தில் இது குற்றமாகாது.

டாலருக்கு ரியாலை அல்லது ரூபாய்க்கு திர்ஹமை மாற்றும் போது அல்லது தங்கத்துக்கு வெள்ளியை மாற்றும் போது எப்படி வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ளலாம். ஆனால் இது உடனுக்குடன் நடக்க வேண்டும். கடனாக இருக்கக் கூடாது.

இன்று ஒரு நூறு டாலர் கொடு! நாளை ஐந்தாயிரம் ரூபாய்கள் தருகிறேன் என்று வியாபாரம் நடந்தால் கடனுக்காக நாம் அதிகம் பெற்றதாக ஆகி வட்டியில் சேர்ந்து விடும்.

ஒரே வகையான நாணயத்தை மாற்றும் போது நாம் அதிகமாகப் பெறுவதில்லை. இன்று ஆயிரம் ரூபாய் கொடுத்து நாளை அதற்கான சில்லறையைப் பெறலாம்.

இவை அனைத்துக்கும் ஆதாரங்கள் புகாரியில் இடம்பெற்ற கீழ்க்காணும் ஹதீஸ்களில் உள்ளன.

2060 & 2061 அபுல் மின்ஹால் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் நாணயமாற்று வியாபாரம் செய்து வந்தேன்; அது பற்றி ஸைத் பின் அர்கம் (ரலி),  பராஉ பின் ஆஸிப் (ரலி) ஆகியோரிடம் கேட்டேன். அதற்கவர்கள், நாங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களது காலத்தில் வியாபாரிகளாக இருந்தோம். அவர்களிடம் நாணயமாற்று வியாபாரம் பற்றிக் கேட்டோம்; அதற்கு அவர்கள் உடனுக்குடன் மாற்றிக் கொண்டால் அதில் தவறில்லை; தவணையுடன் இருந்தால் அது கூடாது என அவர்கள் பதிலளித்தார்கள் என்றார்கள்.

2175 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

சரிக்குச் சரியாகவே தவிர, தங்கத்திற்குத் தங்கத்தை விற்காதீர்கள்! சரிக்குச் சரியாகவே தவிர, வெள்ளிக்கு வெள்ளியை விற்காதீர்கள்! தங்கத்திற்கு வெள்ளியையும், வெள்ளிக்குத் தங்கத்தையும் விரும்பியவாறு விற்றுக் கொள்ளுங்கள்.

இதை அபூபக்ரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

2176 சாலிம் பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

உமர் (ரலி) சம்பந்தப்பட்ட முந்தைய ஹதீஸ் போன்று அபூசயீத் (ரலி) அவர்கள், இப்னு உமர் (ரலி) அவர்களுக்கு ஒரு ஹதீஸை அறிவித்தார்கள். மற்றொரு சந்தர்ப்பத்தில் அபூசயீத் (ரலி) அவர்களை இப்னு உமர் (ரலி) அவர்கள் சந்தித்து, நீங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வழியாக என்ன அறிவித்தீர்கள்? என்று கேட்டார்கள். அதற்கு அபூசயீத் (ரலி) அவர்கள், நாணயம் மாற்றும் போது தங்கத்திற்குத் தங்கத்தையோ வெள்ளிக்கு வெள்ளியையோ மாற்றினால் சரிக்குச் சரியாக இருக்க வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதை நான் செவியுற்றுள்ளேன் என்றார்கள்.

2177 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

சரிக்குச் சரியாகவே தவிர, தங்கத்திற்குத் தங்கத்தை விற்காதீர்கள்! ஒன்றைவிட மற்றொன்றை அதிகமாக்கி விடாதீர்கள்! சரிக்குச் சரியாகவே தவிர, வெள்ளிக்கு வெள்ளியை விற்காதீர்கள்! ஒன்றைவிட மற்றொன்றை அதிகமாக்காதீர்கள்! ஒன்று ரொக்கமாகவும் மற்றொன்று தவணையாகவும் இருக்கும் நிலையில் விற்காதீர்கள்!

இதை அபூசயீத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

2180 & 2181 அபுல் மின்ஹால் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

பராஉ பின் ஆஸிப் (ரலி), ஸைத் பின் அர்கம் (ரலி) ஆகியோரிடம் நாணயம் மாற்றுவது பற்றிக் கேட்டேன். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கடனாக வெள்ளிக்குத் தங்கத்தை விற்பதைத் தடை செய்தார்கள் என அவ்விருவரும் பதிலளித்தனர். பிறகு இருவரும் மற்றவரைச் சுட்டிக்காட்டி, இவர் என்னைவிடச் சிறந்தவர் என்றனர்.

2497 & 2498 சுலைமான் பின் அபீ முஸ்லிம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் அபுல் மின்ஹால் (ரஹ்) அவர்களுடன் உடனுக்குடன் செய்யும் நாணய மாற்று வியாபாரம் குறித்துக் கேட்டேன். அப்போது அவர்கள் பின்வருமாறு பதிலளித்தார்கள்: நானும் என் வியாபாரக் கூட்டாளி ஒருவரும் ஒரு பொருளை (சிறிது) உடனுக்குடனும் (சிறிது) தவணை முறையிலும் வாங்கினோம். அப்போது பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் எங்களிடம் வந்தார்கள்.

நாங்கள் அவர்களிடம் (இது குறித்துக்) கேட்டோம். அதற்கு அவர்கள், நானும் எனது கூட்டாளியான ஸைத் பின் அர்கம் (ரலி) அவர்களும் இந்த வியாபாரத்தைச் செய்து வந்தோம். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் இது குறித்துக் கேட்டோம். அதற்கு அவர்கள், உடனுக்குடன் மாற்றிக் கொண்டதை எடுத்துக் கொள்ளுங்கள்; ஆனால், தவணை முறையில் மாற்றிக் கொண்டிருப்பீர்களாயின் அதை ரத்துச் செய்து விடுங்கள் என்று பதிலளித்தார்கள் எனக் கூறினார்கள்.

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *