104 *சூரா அல்-ஹுமஸா (புறம் பேசுதல்) தஃப்ஸீர்:*
—————————————

*அறிமுகம்:*

திருக்குர்ஆனின் 104வது அத்தியாயமாகிய சூரா அல்-ஹுமஸா, *மனிதர்களிடையே காணப்படும் தீய குணங்களான புறங்கூறுதல், கோள் சொல்லுதல், இழிவாகப் பேசுதல் மற்றும் செல்வத்தின் மீது அதீத மோகம் கொண்டு அதனால் கர்வம் கொள்ளுதல்* ஆகியவற்றைக் கடுமையாகக் கண்டிக்கிறது. இத்தகைய தீய செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு மறுமையில் காத்திருக்கும் கடுமையான தண்டனையை பற்றியும் விவரிக்கிறது.
——————————————

*சூராவின் தமிழ் மொழிபெயர்ப்பு:*

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் (தொடங்குகின்றேன்).

1. குறை கூறிப் புறம் பேசும் ஒவ்வொருவனுக்கும் கேடு தான்.
2. அவன் செல்வத்தைத் திரட்டி அதைக் கணக்கிடுகிறான்.
3. தனது செல்வம் தன்னை நிலைத்திருக்கச் செய்யும் என்று எண்ணுகிறான்.
4. அவ்வாறில்லை! ஹுதமாவில் அவன் எறியப்படுவான்.
5. ஹுதமா என்பது என்னவென உமக்கு எப்படித் தெரியும்?
6. மூட்டப்பட்ட அல்லாஹ்வின் நெருப்பு
7. அது உள்ளங்களைச் சென்றடையும்.
8, 9. நீண்ட கம்பங்களில் அது அவர்களைச் சூழ்ந்திருக்கும்
——————————————

*விரிவான விளக்கம் (தஃப்ஸீர்)*

*வசனம் 1: குறை கூறிப் புறம் பேசித் திரியும் ஒவ்வொருவனுக்கும் கேடுதான்.*

இந்த சூராவின் முதல் வசனத்தில் *மிகக் கடுமையான எச்சரிக்கையோடு* அல்லாஹ் ஆரம்பம் செய்கிறான். *இந்த எச்சரிக்கை யாருக்கு விடுக்கப்படுகிறது?* இரு வகை குணாதிசயங்களைக் கொண்டவர்களுக்கு. அதாவது,

* *ஒருவருக்குப் பின்னால் அவரைப் பற்றி இழிவாகப் பேசுவது, புறங்கூறுவது, அவதூறு பேசுவது.* இது ஒருவர் இல்லாத நேரத்தில் அவரது குறைகளை மற்றவர்களிடம் கூறுவதைக் குறிக்கும்.
* ஒருவருக்கு நேராகவே அவரைக் குறை கூறுவது, சைகைகள் மூலமாகவோ, கண் ஜாடைகள் மூலமாகவோ அல்லது இழிவான பட்டப்பெயர்கள் கொண்டோ கேலி கிண்டல்* செய்து இழிவுபடுத்துவது.

இந்த இரண்டு வார்த்தைகளும் *மனிதனின் கண்ணியத்தையும், கௌரவத்தையும் சிதைக்கும்* பாவமான செயல்களைக் குறிக்கின்றன. இத்தகைய செயல்களில் ஈடுபடும் ஒவ்வொருவருக்கும் கடுமையான வேதனை உண்டு என அல்லாஹ் எச்சரிக்கிறான்.
——————————————

*வசனங்கள் 2-3: செல்வத்தின் மீதான மோகமும், தவறான எண்ணமும்:*

* அவன் செல்வத்தைச் சேகரித்து அதனைக் கணக்கிட்டுக் கொண்டே இருக்கின்றான்.
* நிச்சயமாகத், தன் செல்வம் தன்னை (உலகில்) நிரந்தரமாக வாழ வைக்கும் என்று அவன் எண்ணுகிறான்.

புறங்கூறுபவனின் மற்றொரு முக்கிய குணத்தை இங்கு அல்லாஹ் விவரிக்கிறான். அவன் *செல்வத்தை நேர்வழியில் சம்பாதிப்பதைப் பற்றியோ அல்லது அதை நல்ல வழியில் செலவு செய்வதைப்* பற்றியோ கவலைப்படாமல், அதைச் *சேகரிப்பதிலேயே குறியாக* இருக்கிறான்.

அவன் மீண்டும் மீண்டும் தான் சாம்பாதித்தை எண்ணிப் பார்த்து, *எதிர்காலத்தில் இப்படி இப்படியெல்லாம் ஆக வேண்டும் என்ற கனவுகலோடு அதன் பெருக்கத்தில் இன்பம் காண்கிறான்.*

இதன் விளைவாக அவனது மனநிலை எவ்வளவு தூரம் சென்றுவிட்டது என்றால், *இந்தச் செல்வத்தை அதிகப்படுத்துவது தான் தனது வாழ்வின் லட்சியம், இதுவே தன்னை எல்லாத் துன்பங்களிலிருந்தும் காப்பாற்றும்* என்றும் எண்ணிக்கொள்கிறான்.

இது *அல்லாஹ்வின் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை விட, அவனது செல்வத்தின் மீது அவன் வைத்துள்ள நம்பிக்கையைக்* காட்டுகிறது. இந்த உலக வாழ்க்கை தற்காலிகமானது என்பதை அவன் முற்றிலும் மறந்து விடுகிறான்.
——————————————

*வசனங்கள் 4-9: மறுமையின் கடுமையான தண்டனை:*

* அவ்வாறில்லை! நிச்சயமாக அவன் ‘ஹுதமா’வில் எறியப்படுவான்.

அல்லாஹ் அவர்களுடைய எண்ணத்தை “அவ்வாறில்லை” என்று கூறி மறுக்கிறான். *செல்வம் ஒருபோதும் நிரந்தர வாழ்வைத் தராது.* மாறாக, இத்தகைய தீய குணங்கள் கொண்ட அவன், மறுமையில் “அல்-ஹுதமா” என்ற இடத்தில் எறியப்படுவான். மேலும் அவன் *எந்த மதிப்பும் மரியாதையுமின்றி இழிவாகத் தூக்கி எறியப்படுவான்* என்பதைக் குறிக்கிறது.

* ‘ஹுதமா’ என்னவென்று உமக்கு அறிவித்தது எது?

“அல்-ஹுதமா”வின் பயங்கரத்தை உணர்த்துவதற்காக, *அல்லாஹ் அதன் தன்மையைக் கேள்வியாக கேட்கிறான். இதன் பொருள், அதன் கடுமையை உங்களால் கற்பனை கூட செய்து பார்க்க முடியாது* என்பதாகும்.

* அது அல்லாஹ்வின் (கட்டளையால்) மூட்டப்பட்ட நெருப்பாகும்.

“ஹுதமா” என்பது சாதாரண நெருப்பு அல்ல. *அது அல்லாஹ்வின் நெருப்பு. அது அல்லாஹ்வின் கோபத்தாலும், அவனது கட்டளையாலும் மூட்டப்பட்டது.* அதன் சக்தி மனித கற்பனைக்கு அப்பாற்பட்டது.

* அது (உடல்களை ஊடுருவிச் சென்று) இதயங்களின் மீது பாயும்.

இந்த நெருப்பின் ஒரு விசித்திரமான தன்மை என்னவென்றால், *அது வெளி உறுப்புகளை எரிப்பதோடு நின்றுவிடாமல், உள்ளே ஊடுருவிச் சென்று இதயங்களைத் தாக்கும். இதயம் என்பது மனிதனின் எண்ணங்கள், கர்வம், பொறாமை ஆகியவற்றின் மையமாகும்.* அவன் எந்த உள்ளத்தைக் கொண்டு பாவம் செய்தானோ, அந்த உள்ளமே நேரடியாக வேதனையை அனுபவிக்கும்.

* நிச்சயமாக அது அவர்களைச் சூழ்ந்து மூடப்பட்டிருக்கும்.
* நீண்ட கம்பங்களில் (அவர்கள் கட்டப்பட்ட நிலையில்).

அந்த நரக நெருப்பிலிருந்து *தப்பித்து வெளியேற எந்த வழியும் இருக்காது. அது அவர்களை முழுமையாகச் சூழ்ந்து,* அதன் வாசல்கள் மூடப்பட்டிருக்கும். மேலும் அவர்கள் நீண்ட நெடிய இரும்புக் கம்பங்களில் கட்டப்பட்டிருப்பார்கள். இது *அவர்கள் தப்பிக்கவே முடியாத, நிரந்தரமான, முழுமையான தண்டனை* என்பதை உறுதிப்படுத்துகிறது.
——————————————

*சூரா ஹுமஸாவிலிருந்து நாம் பெறும் படிப்பினைகள்:*

*நாவைப் பேணுதல்:*

புறங்கூறுவதும், கோள் சொல்வதும், கேலி செய்வதும் மிகக் கடுமையான பாவங்கள். இது மனித உறவுகளைச் சிதைத்து, சமூகத்தில் வெறுப்பை வளர்க்கும். எனவே, நாவை மிகக் கவனமாக கையாள வேண்டும்.
——————————————

*செல்வத்தின் யதார்த்தம்:*

செல்வம் என்பது அல்லாஹ்வின் ஒரு சோதனையே தவிர, அதை வைத்து வாழ்க்கையின் வெற்றியை தீர்மானிப்பதில்லை. அது ஒருபோதும் நிரந்தரப் பாதுகாப்பைத் தராது. செல்வத்தைச் சேர்ப்பதில் மட்டும் கவனம் செலுத்தாமல், அதை நேர்வழியில் சம்பாதித்து, நல்ல வழிகளில் செலவு செய்ய வேண்டும்.
——————————————

*மறுமையைப் பற்றிய அச்சம்:*

இந்த சூரா மூலம் அல்லாஹ் தண்டனையை பற்றி மிகத் தெளிவாக எச்சரிக்கின்றான். இது நம் உள்ளத்தில் மறுமையைப் பற்றிய அச்சத்தை ஏற்படுத்தி, பாவமான காரியங்களிலிருந்து விலகி இருக்கத் தூண்ட வேண்டும்.
——————————————

*கர்வம் மற்றும் பெருமையைத் தவிர்த்தல்:*

பிறரை இழிவாகப் பார்ப்பதும், செல்வத்தைக் கொண்டு பெருமையடிப்பதும் ஷைத்தானின் குணங்களாகும். அல்லாஹ்வுக்குப் பணிந்து, சக மனிதர்களை மதித்து வாழ வேண்டும்.
——————————————

இந்த சூரா, மனிதனின் தீய குணங்களையும், அதன் விளைவுகளையும் மிக ஆழமாக எடுத்துரைத்து, நேர்வழியின்பால் மனிதனை அழைக்கிறது.

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *