பித்அத் என்றால் என்ன ? 

அல்லாஹ்வும் அல்லாஹ்வின் தூதர் முஹம்மது(ஸல்) அவர்களும் காட்டித்தராதவைகளை மார்க்கம் என்று சொல்வது, செய்வது "பித்அத்" ஆகும். 

அல்லாஹ், மற்றும் அவனின் தூதரால் காட்டித்தராத செயல்கள் இஸ்லாம் எனும் பெயரில் இன்று முஸ்லிம் சமுதாயத்தில் புகுத்தப்பட்டிருக்கின்றன. இப்படிப்பட்ட எல்லா செயல்களிலிருந்தும் நம்மை நாம்  பாதுகாத்துக் கொள்வது மிக அவசியமாகும். பித்அத்தான செயல்கள் ஏற்றுக்கொள்ளப் படமாட்டாது 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்: 

செய்திகளில் மிகவும் உண்மையானது அல்லாஹ்வுடைய வேதமாகும். 

நடைமுறையில் மிகவும் சிறந்தது முஹம்மது (ஸல்) அவர்களுடைய நடைமுறையாகும்.

 காரியங்களில் தீயது (மார்க்கம் என்ற பெயரில்) புதிதாக உருவானவையாகும். 

புதிதாக உருவாகக் கூடியவைகள் அனைத்தும் பித்அத்துகள் ஆகும். 

ஒவ்வொரு பித்அத்தும் வழிகேடாகும். 

ஒவ்வொரு வழிகேடும் நரகத்தில் கொண்டு சேர்க்கும். 

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி) 
நூல்: நஸயீ (1560)

 2697. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: நம்முடைய இந்த (மார்க்க) விவகாரத்தில் அதில் இல்லாததைப் புதிதாக எவன் உண்டாக்குகிறானோ அவனுடைய அந்தப் புதுமை நிராகரிக்கப்பட்டதாகும்.என ஆயிஷா(ரலி) அறிவித்தார். ஷஹீஹ் புகாரி அத்தியாயம் : 53. சமாதானம் நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்: நம் கட்டளையில்லாத காரியத்தை யார் செய்கிறாரோ, அது (அல்லாஹ்வால்)மறுக்கப்படும். 

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), 
நூல்: முஸ்லிம் (3243)

 உதாரணமாக ஒருவர் குறிப்பிட்ட நேரத்தில் இரண்டு ரக்அத் நஃபில் தொழ விரும்பினால் அவர் தொழலாம். குறிப்பிட்ட நாளில் நோன்பு நோற்க விரும்பினால் நோற்கலாம். பொதுவாக நஃபில் தொழ அனுமதி இருக்கிறது என்பதே இதற்குப் போதுமான ஆதாரமாகும். 

ஆனால் நாம் கவனமாக இல்லாவிட்டால் இது கூட பித்அத்தாக மாறிவிடும். நான் காலை எட்டு மணிக்கு நஃபில் தொழுகிறேன். அதனால் அனைவரும் எட்டு மணிக்கு நஃபில் தொழ வேண்டும் என்று ஒருவர் கூறினால் - அல்லது அவர் கூறுவதை மற்றவர்கள் ஏற்றுச் செயல்படுத்தினால் - அது பித்அத் ஆகிவிடும்.

 நான் முஹர்ரம் மாதம் முதல் நாள் அன்று நோன்பு நோற்பதால் அனைவரும் நோற்க வேண்டும் என்று ஒருவர் கூறினாலோ அதை மற்றவர்கள் ஏற்றுச் செயல் படுத்தினாலலோ அதுவும் பித்அத் ஆகி விடும். 

ஒருவர் தன்னளவில் தானாக விரும்பிச் செய்ய அனுமதி கொடுத்தால் அவரோடு மட்டும் வைத்துக் கொள்ள வேண்டும்அவர் செய்வதையே அனைவரும் செய்ய வேண்டும் என்று கூறினால் அல்லாஹ்வின் தூதருடைய அதிகாரத்தைக் கையில் எடுத்தவராவார். 

அவர் செய்கிறார் என்பதற்காக அதை மற்றவர்கள் ஏற்றுச் செயல்பட்டால் அல்லாஹ்வின் துதருடைய இடத்தை அந்த மனிதருக்கு அளித்து விட்டார்கள் என்பது பொருள்.  

அனைவரும் இதைச் செய்ய வேண்டும் என்று கூறும் அதிகாரம் யாருக்கும் இல்லை. 

ஒருவர் தான் விரும்பும் நாளில் நோன்பு நோற்கலாம் என்பதை ஒப்புக் கொள்ளும் நாம் மிஃராஜ், பராஅத் இரவுகளில் நோன்பு கூடாது என்று கூறுகிறோம். 

இதற்குக் காரணம் என்ன? 

அல்லாஹ்வும் அவனது தூதரும் ஏற்படுத்தாமல் யாரோ ஒருவரால் ஏற்படுத்தப்பட்ட வழக்கம் அனைவரும் செய்ய வேண்டும் என்ற நிலையை அடைந்து விட்டது தான் இதை பித்அத் என்று நாம் கூறுவதற்கான காரணம். 

ஒருவர் தற்செயலாக ரஜப் 27 அன்று நோன்பு நோற்றால் அது பித்அத் ஆகாதுஇது அனைவரும் நோன்பு நோற்க வேண்டிய நாள் என்ற நிலையை ஏற்படுத்தினால் அது பித்அத் ஆகிவிடும். 

onlinetntj

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *