தஜ்ஜால்வருகையின்போதுமட்டும்கணிக்கலாமா❓
அல்லாஹ்வின் தூதரே! தஜ்ஜால் இவ்வுலகில் வாழும் காலம் எவ்வளவு❓
என்று நாங்கள் கேட்டோம்.
அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், நாற்பது நாட்களாகும். (அதில்) ஒரு நாள் ஒரு வருடம் போன்றும், மற்றொரு நாள் ஒரு மாதம் போன்றும்,அடுத்த நாள் ஒரு வாரம் போன்றும், ஏனைய நாட்கள் இன்றைய நாட்களைப் போன்றும் இருக்கும்” என்றார்கள்.
அல்லாஹ்வின் தூதரே! ஒரு வருடத்தைப் போன்ற அந்த நாளில் ஒரு நாள் தொழுகை எங்களுக்குப் போதுமா? என்று நாங்கள் கேட்டோம். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், போதாது; அதற்குரிய அளவை அதற்காக (தொழுகைக்காக) கணித்துக் கொள்ளுங்கள் என்று விடையளித்தார்கள்.
அறிவிப்பவர்: நவ்வாஸ் பின் ஸம்ஆன் (ரலி)
நூல்: முஸ்லிம் 2854
நாட்களைக் கணித்துக் கொள்ளலாம் என்று இந்த ஹதீஸிலிருந்து தெரிகிறது.
மேலும் சந்திர மண்டலத்தில் வசிக்கும் நிலை ஏற்பட்டால் அப்போது சந்திரனைப் பார்த்து மாதம் மற்றும் நாட்களைத் தீர்மானிப்பது சாத்தியமற்றதாகி விடும்.
எனவே கணிப்புகள் அடிப்படையில் முடிவு செய்வது தான். நவீன யுகத்திற்கு ஏற்றதாகும் என்ற அடிப்படையில் பிறையை நாம் கணித்துக் கொள்வதில் என்ன தவறு என்று சிலர் வாதிடுகின்றனர்.
இந்த ஹதீஸில் கணித்துக் கொள்ளுங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியது உண்மை தான்.
எப்போது கணிக்கச் சொன்னார்கள்? ஒரு நாள் ஒரு வருடம் போன்று நீண்டதாக (அதாவது ஆறு மாத அளவு பகலாகவும் ஆறு மாத அளவு இரவாகவும்) இருக்கும் போது தான் கணிக்கச் சொன்னார்கள்.
இந்த இடத்தில் கணிப்பதைத் தவிர வேறு வழி இருக்காது. இதே அடிப்படையில் துருவப் பிரதேசத்தில் ஆறு மாதம் பகலாகவும் ஆறு மாதம் இரவாகவும் இருக்கும். அங்கே மக்கள் வாழ்ந்தால் அவர்களும் கூட ஒரு வருடம் முழுவதற்கும் ஐந்து வேளை மட்டுமே தொழ வேண்டும் என்று கூற முடியாது. அவர்கள் கணித்துக் தான் தொழுகை, நோன்பு போன்ற வணக்க வழிபாடுகளை நிறைவேற்ற முடியும்.
இவர்கள் குறிப்பிடுவது போல சந்திரனில் வாழ்கின்ற சூழ்நிலை இல்லை. ஒருவேளை அப்படி ஒரு நிலை ஏற்பட்டாலும் அவர்களுக்கு இருக்கும் ஒரே வழி கணிப்பது தான். தினந்தோறும் சூரியன் உதித்து மறையக் கூடிய பகுதிகளில் வாழக் கூடிய நமக்கு இந்தச் சலுகை உண்டா? என்று கேட்கக் கூடாது.
முடவர், நொண்டி, குருடர் ஆகியோருக்கு வழங்கப்பட்ட சலுகைகளை கை, கால்கள் சுகமாக உள்ளவர், நல்ல கண் பார்வையுள்ளவர் கேட்பது போல் தான் இது ஆகும்.
சந்திர மண்டலத்தில் வசிக்கும் நிலை ஏற்பட்டால் அங்கிருந்து கொண்டு கஃபாவை நோக்கித் தொழும் வாய்ப்பில்லை. அதனால் அங்கே வசிப்பவர் எந்தத் திசையை நோக்கியும் தொழலாம் என்று தான் கூறியாக வேண்டும். நானும் அது போல் தொழுவேன் என்று பூமியில் இருந்து கொண்டு கஃபாவை நோக்கும் வாய்ப்புள்ளவர் கூறக் கூடாது. நிர்பந்தத்தில் மாட்டிக் கொண்டவருக்கு வழங்கப்பட்ட சலுகைகளை சாதாரண நிலையில் உள்ளவர் சட்டமாக எடுத்துக் கொள்வது அறிவீனமாகும்.
துருவப் பிரதேசத்தில் வாழ்பவன் ஒரு நிர்பந்தத்திற்கு உள்ளாகியிருக்கின்றான். அவன் கை, கால் ஊனமுற்ற முடவனைப் போன்றவன். பிறை பார்க்கக் கூடிய வாய்ப்பு அவனுக்கு அறவே கிடையாது என்பதால் அவனுக்கு இந்த ஹதீஸ் கணித்தல் என்ற சலுகையை வழங்கியிருக்கின்றது. பிறை பார்க்கும் வசதியுள்ள நமக்கு இந்த கணிப்பு என்ற சலுகை ஒரு போதும் பொருந்தாது.
ஏகத்துவம்