எது உண்மையான ஒற்றுமை?
நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.
அல்குர்ஆன் 3:104
உமக்குக் கட்டளையிடப்பட்டதைத் தயவு தாட்சண்யமின்றி எடுத்துரைப்பீராக! இணை கற்பிப்போரைப் புறக்கணிப்பீராக!
அல்குர்ஆன் 15:94
மேற்கண்ட வசனங்களில் ஒரு சமுதாயம் வெற்றி பெற்ற சமுதாயமாக ஆவதற்குரிய வழிமுறைகளை அல்லாஹ் தெளிவுபடுத்துகிறான். மக்களுக்கு நல்ல விஷயங்களை எடுத்துக் கூறவேண்டும். மக்கள் செய்கின்ற பாவமான காரியங்களை விட்டும் நம்முடைய சக்திக்குட்பட்டு அவர்களைத் தடுத்து நல்வழியின் பக்கம் அவர்களை அழைக்க வேண்டும். இத்தகையோர் தான் வெற்றி பெற்றவர்கள் என்று அல்லாஹ் குறிப்பிடுகின்றன்.
மேலும் இறைக் கட்டளைகளை மக்களுக்கு எடுத்துரைப்பதில் எவ்வித தயவு தாட்சண்யமும் காட்டக்கூடாது என்றும் அல்லாஹ் கட்டளையிடுகின்றான். அதாவது சமுதாயத்தில் நிலவும் சில பாவமான காரியங்களைப் பற்றி எச்சரிக்கை செய்யும் போது ஒட்டு மொத்த சமுதாயமே எதிர்த்து நின்றாலும் எத்தகைய துன்ப துயரங்கள் ஏற்பட்டாலும் சத்தியத்தை யாருக்கும் அஞ்சாமல் எடுத்துரைக்க வேண்டும் என்பது தான் சத்தியவாதிகளுக்கு இறைவன் இடும் கட்டளை.
இத்தகைய சத்தியத்தை எடுத்துரைக்கும் போது சமுதாயத்தில் எத்தனை எதிர்ப்புகள் தோன்றினாலும் பிளவுகள் ஏற்பட்டாலும் இறைவனின் கட்டளை நிலைநாட்டப்பட வேண்டும் என்பதே இறைவனின் விருப்பமாகும்
நம்முடைய இஸ்லாத்தின் அடிப்படையே ஓரிறைக் கொள்கை தான். ஆனால் இந்த ஓரிறைக் கொள்கையை குழி தோண்டிப் புதைக்கக் கூடிய தர்ஹா வழிபாடுகள், தாயத்து தகடுகள், மத்ஹபு பிரிவினைகள், மவ்லித் என்ற வரம்பு மீறிய புகழ்மாலைகள், மீலாது விழா, ஸலாத்துன் நாரியா போன்ற பல்வேறு விதமான இணை வைப்புக் காரியங்களில் நம்முடைய இஸ்லாமிய சமுதாயம் வீழ்ந்து கிடந்தது.
வரதட்சணைக் கொடுமை, வட்டி, பெண்களுக்கு சொத்துரிமை மறுப்பு, இத்தா என்ற பெயரில் பெண்களை இருட்டறையில் அடைத்து வைப்பது, பெண்கள் தொழுகைப் பள்ளிக்கு வருவதற்குத் தடை, போன்ற பல்வேறு சமுதாயக் கொடுமைகளும் இஸ்லாமிய மக்களுக்கு மத்தியில் நிறைந்து காணப்பட்டன.
இந்நிலையில் தான் தமிழகத்தில் ஏற்பட்ட தவ்ஹீத் பிரச்சாரம் இலட்சக்கணக்கான மக்களுக்கு அசத்தியத்திலிருந்து சத்தியத்திற்கு வழிகாட்டியது. ஷாஃபி, ஹனபி என்றும் இராவுத்தர், மரைக்காயர், லெப்பை என்றும் காதிரியா, ஷாதுலிய்யா, ஜிஸ்திய்யா, நக்ஷபந்தியா என்றும் கொள்கையின் பெயரால் பிரிந்து கிடந்த சமுதாயம் தவ்ஹீத் என்ற ஓரிறைக் கொள்கையின் பால் ஒன்று திரண்டு வருகிறார்கள்.
அசத்தியத்திற்கு எதிரான இந்த சத்தியத்தின் வளர்ச்சியைப் பொறுக்க முடியாத சிலர் இந்தத் தவ்ஹீத்வாதிகள் தான் சமுதாய ஒற்றுமையைப் பிரித்து விட்டார்கள், அண்ணன் தம்பிகளாய் பழகிய மக்களை எதிரிகளாக்கி விட்டார்கள் என்று குற்றம் சாட்டுகின்றனர்.
அசத்தியத்தில் மூழ்கிக் கிடப்பவர்களுக்கு சத்தியத்தை எடுத்துரைக்கும் போது சில பிளவுகள் ஏற்படத் தான் செய்யும்.
ஒற்றுமையாக வட்டி வாங்கும் ஊரிலே வட்டி கூடாது என்று பிரச்சாரம் செய்தால் அவர்களுக்கு மத்தியிலே இரு பிரிவுகள் ஏற்படத் தான் செய்யும். எனவே ஒற்றுமையை குலைப்பது கூடாது என்று கூறி அனைவரும் ஒற்றுமையாக வட்டி வாங்குவது தான் இஸ்லாமிய நெறிமுறையா?
ஒற்றுமையாக வரதட்சணை வாங்கும் ஊரிலே மஹர் கொடுத்து திருமணம் செய்யுங்கள் என்றால் வரதட்சணை வாங்குபவர்கள் எதிர்க்கத் தான் செய்வார்கள். ஒற்றுமை குலையத் தான் செய்யும். எனவே ஒற்றுமை என்ற பெயரிலே வரதட்சணைக் கொடுமையை அங்கீகரிப்பது தான் இஸ்லாமிய வழிமுறையா?
தவ்ஹீத் பிரச்சாரத்தை சமுதாயப் பிரிவினை என்றுரைப்போர் இதற்குப் பதில் கூறக் கடமைப்பட்டுள்ளனர்.
ஒற்றுமையாக ஓரினச் சேர்க்கையிலே ஈடுபட்டு வந்த சமுதாயத்திலே லூத் (அலை) அவர்கள் அதற்கு எதிராகப் பிரச்சாரம் செய்ததினால் ஊர் மக்களுக்கும் லூத் நபிக்கும் பிரச்சனை ஏற்பட்டது. எனவே லூaத் நபியவர்கள் பிரிவினைவாதியா?
ஒற்றுமையாக இணைவைப்புக் காரியங்களிலே ஈடுபட்டு வந்த ஸமூது சமுதாயத்தவர்களுக்கு ஸாலிஹ் நபி சத்தியத்தை எடுத்துரைத்த காரணத்தினால் இரு பிரிவினரானார்கள். எனவே ஸாலிஹ் நபி பிரிவினைவாதியா?
அல்லாஹ்விற்கு இணை கற்பிப்பதிலும், அளவு நிறுவைகளில் மோசடி செய்வதிலும் ஒற்றுமையாக இருந்த மத்யன் நகரவாசிகளிடம் ஷுஐப் (அலை) அவர்கள் சத்தியத்தை எடுத்துரைத்த காரணத்தினால் இரு பிரிவானார்கள். எனவே ஷுஐப் நபி பிரிவினைவாதியா?
இணைவைப்புக் காரியங்களில் மூழ்கிக் கிடந்த தன்னுடைய சமுதாயத்தை நோக்கி, உங்களை விட்டும் நாங்கள் பிரிந்து விட்டோம் உங்களுக்கும் எங்களுக்கும் என்றென்றும் பகமை தான் என்றுரைத்தார்களே அந்த இப்ராஹீம் (அலை) பிரிவினைவாதியா?
”உங்களை விட்டும் அல்லாஹ்வையன்றி எதனை வணங்குகிறீர்களோ அதை விட்டும் நாங்கள் விலகியவர்கள். உங்களை மறுக்கிறோம். அல்லாஹ்வை மட்டும் நீங்கள் நம்பிக்கை கொள்ளும் வரை எங்களுக்கும் உங்களுக்குமிடையே பகைமையும் வெறுப்பும் என்றென்றும் ஏற்பட்டு விட்டது” என்று கூறிய விஷயத்தில் இப்ராஹீமிடமும் அவருடன் இருந்தோரிடமும் உங்களுக்கு அழகிய முன்மாதிரி இருக்கிறது. ”உங்களுக்காக பாவ மன்னிப்புத் தேடு வேன். அல்லாஹ்விடமிருந்து உங்களுக்கு எதையும் செய்ய நான் அதிகாரம் பெற்றி ருக்கவில்லை” என்று இப்ராஹீம் தம் தந்தையிடம் கூறியதைத் தவிர. (இதில் அவரிடம் முன்மாதிரி இல்லை) எங்கள் இறைவா! உன்னையே சார்ந்திருக்கிறோம். உன்னிடமே திரும்பினோம். மீளுதல் உன்னிடமே உள்ளது. ”எங்கள் இறைவா! (உன்னை) மறுப்போருக்குச் சோதனையாக எங்களை ஆக்கி விடாதே! எங்களை மன்னிப்பாயாக! எங்கள் இறைவா! நீயே மிகைத்தவன்; ஞானமிக்கவன்” (என்றும் பிரார்த்தித்தார்.) அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்புவோருக்கு அவர்களிடம் அழகிய முன்மாதிரி இருக்கிறது. யார் புறக்கணிக்கிறாரோ அல்லாஹ் தேவையற்றவன்; புகழுக்குரியவன்.
அல்குர்ஆன் 60:4-6
இப்ராஹீம் நபி ஓரிறைக் கொள்கைக்காகத் தம்முடைய சமுதாயத்தைப் பகைத்துக் கொண்டு சென்றதைப் போன்று தான் நாம் இருக்க வேண்டும் என்று கட்டளையிடுகின்ற இறைவன் பிரிவினைவாதியா? திருக்குர்ஆன் பிரிவினையைத் தூண்டுகிறதா?
அசத்தியத்தில் ஒற்றுமையாக இருந்த மக்கா இணை வைப்பாளர்களுக்கு மத்தியில் நபியவர்கள் சத்தியத்தை எடுத்துரைத்த போது மக்கா காஃபிர்கள் நபிகள் நாயகத்தை நோக்கி என்ன சொன்னார்கள் தெரியுமா?
இந்த முஹம்மத் நம்முடைய சிந்தனைகளை மழுங்கடித்து விட்டார். நம்முடைய முன்னோர்களைத் திட்டுகிறார், நம்முடைய வழிமுறைகளைக் குறை கூறுகிறார், நம்முடைய ஜமாஅத்துகளைப் பிரித்து விட்டார், நம்முடைய கடவுள்களை ஏசுகிறார் என்று கூறினார்கள். (பார்க்க: அஹ்மத் 6739)
அசத்தியத்தில் ஒற்றுமையாக இருந்த மக்கா காஃபிர்களின் ஜமாஅத்துகளைப் பிரித்த முஹம்மது நபியவர்கள் பிரிவினைவாதியா?
லூத் (அலை), ஸாலிஹ் (அலை), ஷுஐப் (அலை), இப்ராஹீம் (அலை), முஹம்மது (ஸல்) ஆகியோர் பிரிவினைவாதிகள் என்றால் அவர்களின் வழியில் செல்வதில் எவ்விதக் குற்றமுமில்லை. போலி ஒற்றுமை பேசுவோர் இவற்றைச் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளனர்.
பாவமான காரியங்களைச் சகித்துக் கொண்டு ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று இஸ்லாம் எங்கும் குறிப்பிடவே இல்லை. அசத்தியத்தை எதிர்ப்பதினால் பிரிவினை ஏற்படும் என்றால் அந்தப் பிரிவினை அவசியம் என்பதைத் தான் இஸ்லாம் வலியுறுத்துகிறது.
திருக்குர்ஆன் எந்த ஒரு இடத்திலும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று கூறவே கிடையாது.
மாறாக இறைவனுடைய கட்டளைகளை பின்பற்றுவதில் பிரிந்து விடக்கூடாது என்பதையே திருமறைக் குர்ஆன் வலியுறுத்துகிறது.
நூஹுக்கு எதை அவன் வலியுறுத்தினானோ அதையே உங்களுக்கும் மார்க்க மாக்கினான். (முஹம்மதே!) உமக்கு நாம் அறிவித்ததும் இப்ராஹீம், மூஸா மற்றும் ஈஸாவுக்கு நாம் வலியுறுத்தியதும், ”மார்க்கத்தை நிலை நாட்டுங்கள்! அதில் பிரிந்து விடாதீர்கள்!” என்பதே. நீர் எதை நோக்கி அழைக்கிறீரோ அது இணை கற்பிப்போருக்குப் பெரிதாக உள்ளது. அல்லாஹ், தான் நாடியோரைத் தனக்காகத் தேர்வு செய்கிறான். திருந்துவோருக்குத் தன்னை நோக்கி வழி காட்டுகிறான்.
அல்குர்ஆன் 42:13
மேற்கண்ட வசனத்தில் மார்க்கத்தில் பிரிந்து விடக்கூடாது என்றே அல்லாஹ் கூறுகிறான். மாறாக பாவமான காரியங்களைச் செய்யும் போது ஒற்றுமை என்ற பெயரில் அதைக் கண்டு கொள்ளாமல் இருப்பதை அல்ல.
அல்லாஹ்வின் கயிற்றை அனைவரும் சேர்ந்து பிடித்துக் கொள்ளுங்கள்! பிரிந்து விடாதீர்கள்!
அல்குர்ஆன் 3:103
தமிழகத்தில் நீண்ட காலமாக இவ்வசனம் மேடைகளில் தவறாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. சில மார்க்க அறிஞர்களும் கூட தவறாகவே இதைப் பயன்படுத்தி வருகின்றனர். ”ஒற்றுமை எனும் கயிற்றைப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்” என்று திருக்குர்ஆன் கூறுவதாக இவ்வசனத்தைக் குறிப்பிட்டு வருகின்றனர்.
நமக்கிடையே எத்தகைய தீமைகள் நிலவினாலும் அதை எடுத்துச் சொல்வதால் ஒற்றுமை பாதிக்கும் என்றால் ஒற்றுமைக்குத் தான் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்றும் இதனடிப்படையில் வாதிட்டு வருகின்றனர்.
இவர்களின் வாதத்துக்கு இவ்வசனத்தில் எள்ளளவும் இடமில்லை. ஓர் ஊரில் அனைவரும் சினிமா பார்த்தால், வரதட்சணை வாங்கினால் அவர்களுடன் சேர்ந்து ஒற்றுமையாக அந்தத் தீமையைச் செய்யுமாறு அல்லாஹ் கூறுவானா? என்று கூட இவர்கள் சிந்திக்கவில்லை.
”அல்லாஹ்வின் கயிற்றை அனைவரும் சேர்ந்து பிடியுங்கள்” என்று தான் இவ்வசனம் கூறுகிறது. அல்லாஹ்வின் கயிறு என்பது குர்ஆனும் அதன் விளக்கவுரையான நபி மொழிகளும் தான். அனைவரும் சேர்ந்து திருக்குர்ஆன், நபிவழியைப் பற்றிப் பிடியுங்கள் எனக் கூறும் வசனமே இது.
குர்ஆன், ஹதீஸில் உள்ளவற்றை எடுத்துச் சொல்வதால் ஒற்றுமை கெடுகின்றது; எனவே அதைச் சொல்லாதீர்கள் என்று இவர்கள் நேர் மாறான விளக்கத்தைத் தருகின்றனர்.
அல்லாஹ்வின் கயிற்றை நாம் பிடிக்கும் போது மற்றவர்கள் அதைப் பிடிக்க முன் வராவிட்டால் பிடியை நாம் விட்டு விடக்கூடாது. அவர்களையும் பிடிக்குமாறு அழைப்பது தான் நம் மீதுள்ள கடமையாகும்.
எனவே பல கொள்கைகளாகப் பிரிந்து கிடந்து, பாவமான காரியங்களில் மூழ்கிக் கிடந்து, பெயரளவில் ஏற்படுவது ஒற்றுமை அல்ல. மாறாக யார் எதிர்த்தாலும் அசத்தியங்களை அழித்து சத்தியத்தில் ஒன்றுபடுவதே உண்மையான ஒற்றுமையாகும். அத்தகைய உண்மையான ஒற்றுமைக்கு நாம் பாடுபடுவோமாக!
ஆக்கம் : கே.எம். அப்துந் நாசிர்