பிறர் நலம் நாடுதல்
கடவுளுக்குச் செய்ய வேண்டிய கடமைகளை மட்டும் இஸ்லாம் சொல்லிவிட்டு ஒதுங்கிக் கொள்ளவில்லை. நம்மைச் சுற்றியிருக்கும் சக மனிதர்களுக்குச் செய்ய வேண்டிய செய்திகளையும் குறிப்பிட்டிருக்கின்றது. மறுமையை நம்புகிறவர்கள் வணக்க வழிபாடுகளில் மட்டுமின்றி பின்வரும் வகையில் பொதுநலத்தில் அக்கறை கொண்டிருப்பதும் அவசியம்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் தம் அண்டை வீட்டாருக்குத் தொல்லை தரவேண்டாம். அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் தம் விருந்தாளியைக் கண்ணியப்படுத்தட்டும். அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் (ஒன்று) நல்லதைப் பேசட்டும். அல்லது வாய் மூடி இருக்கட்டும்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி); ஆதாரம்: புஹாரி 6018, 6136, 6138
அபூஷுரைஹ் அல்அதவீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் பேசியபோது என் காதுகளால் கேட்டேன்; என் கண்களால் பார்த்தேன். அப்போது அவர்கள், “அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் தம் அண்டை வீட்டாரைக் கண்ணியப்படுத்தட்டும். அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் தம் விருந்தாளிக்குத் தமது கொடையைக் கண்ணியமாக வழங்கட்டும்’’ என்று கூறினார்கள். அப்போது, “அல்லாஹ்வின் தூதரே! அவருடைய கொடை என்ன?’’ என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், “(அவருடைய கொடை) ஒரு பகல் ஓர் இரவு (உபசரிப்பது) ஆகும். விருந்துபசாரம் மூன்று தினங்களாகும். அதற்கு மேல் (அளிக்கும் உணவும் உபசரிப்பும்) அவருக்குத் தர்மமாக அமையும். மேலும், அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் (ஒன்று) நல்லதைப் பேசட்டும். அல்லது வாய் மூடி இருக்கட்டும்‘’ என்று கூறினார்கள்.
ஆதாரம்: புஹாரி 6019, 6135