பிறந்த நாள், இறந்த நினைவு நாள், திருமண நாள் போன்ற நாட்களை சிறப்பித்துக்கொண்டாடுவது என்பது முஸ்லிம்களின் கலாச்சாரத்தில் உள்ளது கிடையாது! மாறாக இவைகள் மாற்று மதக் கலாச்சாரத்தையுடையதாக இருப்பதால் இத்தகைய தினங்களை சிறப்பித்துக் கொண்டாடுவதற்கு தடை செய்யப்பட்டுள்ளது.
ஏனென்றால் மேலும் இவைகள் எல்லாம் யூத மற்றும் கிறிஸ்தவக் கலாச்சாரங்களாகும்.. மாற்றுமத கலாச்சாரங்களைப் பின்பற்றுவதற்கு நமக்கு நபி (ஸல்) அவர்கள் தடை செய்துள்ளார்கள்.
யார் பிற மத கலாச்சாரத்தைப் பின்பற்றுகிறானோ அவரும் அவர்களைச் சார்ந்தவரே! (நூல்: அபூதாவூத்)
அல்லாஹ்வையும் மறுமை நாளையும் உறுதியாக நம்பும் ஒருவர், இத்தகைய கொண்டாட்டங்களைப் புறக்கணிப்பதோடல்லாமல் அத்தகைய நிகழ்ச்சிகளில் பங்குபெறுவதையும் அதன் மூலம் வழங்கப்படும் உணவுகளையும் தவிர்க்கவேண்டும். மேலும் அவ்வாறு
கொண்டாடுபவர்களுக்கு வாழத்துச் செய்திகள் கூறுவதோ அல்லது அவர்களுக்கு அன்பளிப்பு பொருள்கள் வழங்குவதோ கூடாது.
ஏனென்றால் அவ்வாறு செய்வதனால் அவர்களின் தீமையான, பித்அத்தான அச்செயல்களுக்கு நாமும் அங்கீகாரம் அளித்து அவர்களை ஊக்குவிப்பது போலாகும்.
இத்தகைய தினங்களைக் கொண்டாடுவோர் எத்தகைய பெரும்பாண்மையானவர்களாக இருந்தாலும் அவர்கள் நம்மை எவ்வளவு தான் நிர்பந்தித்தாலும் அவர்களின் மனோ இச்சைக்கு வழிபடாமல் அல்லாஹ் மற்றும் அவனது தூதர் (ஸல்) அவர்களின் வழியில் நாம்நடந்திட வேண்டும்.
அல்லாஹ் கூறுகின்றான்:
“அல்லது: அல்லாஹ் அனுமதிக்காததை மார்க்கமாக்கி வைக்கக்கூடிய இணை(த் தெய்வங்)கள் அவர்களுக்கு இருக்கின்றனவா? மேலும், (மறுமையில் விசாரணைக்குப் பிறகு தக்க கூலி கொடுக்கப்படும் என்னும் இறைவனின்) தீர்ப்புப் பற்றிய வாக்கு இல்லாதிருப்பின் (இதுவரை) அவர்களுக்கிடையில் தீர்ப்பளிக்கப்பட்டிருக்கும் – நிச்சயமாக அநியாயக்காரர்களுக்கு நோவினை செய்யும் வேதனை உண்டு” (42:21)
“இதன் பின்னர் உம்மை ஷரீஅத்தில் (மார்க்கத்தில்) ஒரு நேரான வழியில் நாம் ஆக்கியுள்ளோம். ஆகவே நீர் அதனையே பின்பற்றுவீராக; அன்றியும், அறியாமல் இருக்கின்றார்களே அவர்களின் விருப்பங்களைப் பின்பற்றாதீர்” (45:18)
“(மனிதர்களே!) உங்கள் இறைவனிடமிருந்து, உங்களுக்கு இறக்கப்பட்டதைப் பின்பற்றுங்கள்; அவனையன்றி (வேறெவரையும்) பாதுகாவலர்(களாக்கி கொண்டு அவர்)களை பின்பற்றாதீர்கள்; நீங்கள் சொற்பமாகவே நல்லுணர்வு பெறுகிறீர்கள்” (7:3)
அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
“உங்களுக்கு முன்னிருந்தவர்களின் வழிமுறைகளை நீங்கள் சாணுக்குச் சாண், முழத்துக்கு முழம் பின்பற்றுவீர்கள். எந்த அளவுக்கென்றால், அவர்கள் ஓர் உடும்பின் பொந்துக்குள் நுழைந்தால் கூட நீங்கள் அவர்களைப் பின்பற்றி நுழைவீர்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நாங்கள், “அல்லாஹ்வின் தூதரே! (“நாங்கள் பின்பற்றக்கூடியவர்கள்” என்று) யூதர்களையும் கிறித்தவர்களையுமா (நீங்கள் குறிப்பிடுகிறீர்கள்)?” என்று கேட்டோம். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “வேறு யாரை?” என்று (திருப்பிக்) கேட்டார்கள். ஆதாரம்: புகாரி, முஸ்லிம்
அல்லாஹ்வே நன்கறிந்தவன்.