இஸ்லாத்தை ஏற்பதற்கு எந்தச் சடங்கும் இல்லை.
அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹு வ அஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வரசூலுஹு அதாவது வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாரும் இல்லை எனவும் முஹம்மது நபி அவர்கள் அல்லாஹ்வின் தூதர் எனவும் நான் உறுதியாக நம்புகிறேன் என்று மனதால் நம்பி வாயால் மொழிந்தால் ஒருவர் முஸ்லிமாகி விடுவார்.
அதன் பின்னர் தனது வாழ்க்கையை திருக்குர்ஆன் போதனைப்படியும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழிகாட்டுதல் படியும் அமைத்துக் கொண்டால் அவர் முழுமையான முஸ்லிமாக ஆவார்.
3861 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அபூதர் (கிஃபாரீ) அவர்களுக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறைத் தூதராக நியமிக்கப்பட்ட செய்தி எட்டிய போது தம் சகோதரரிடம், இந்த (மக்கா) பள்ளத்தாக்கை நோக்கிப் பயணம் செய்து, வானத்திலிருந்து (இறைச்) செய்தி தம்மிடம் வருகின்ற ஓர் இறைத்தூதர்’ என்று தம்மை வாதிடுகின்ற இந்த மனிதரைக் குறித்த விபரத்தை (திரட்டி) எனக்கு அறிவி. அவரது சொல்லைக் கேட்டுத் தெரிந்து கொண்ட பிறகு என்னிடம் வா! என்று சொன்னார்கள்.
உடனே அச்சகோதரர் புறப்பட்டுச் சென்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை அடைந்து அவர்களின் சொல்லைக் கேட்டார். பிறகு அபூ தர்ரிடம் திரும்பிச் சென்று, அவர் நற்குணங்களைக் கைக்கொள்ளும்படி (மக்களுக்குக்) கட்டளையிடுவதை நான் பார்த்தேன். ஒரு வாக்கையும் (செவியுற்றேன்). அது கவிதையாக இல்லை என்று சொன்னார்.
அபூதர், நான் விரும்பியதை நீ திருப்திகரமாகச் செய்யவில்லை என்று கூறிவிட்டு, பயணச் சாதம் எடுத்துக் கொண்டு, நீர் நிரம்பிய தனது தோல்பை ஒன்றைச் சுமந்து கொண்டு (அபூ தர்) புறப்பட்டார். மக்காவை வந்தடைந்து (கஅபா) பள்ளிவாசலுக்குச் சென்றார். நபி (ஸல்) அவர்களை அவர் அறியாதவராயிருந்த காரணத்தால் அவர்களைத் தேடினார். (அங்கிருந்த குறைஷிகள் தமக்கு தொல்லை தரக்கூடும் என்பதால் அவர்களிடம்) நபியவர்களைப் பற்றிக் கேட்க அவர் விரும்பவில்லை. இரவில் சிறிது நேரம் கழிந்து விட்டது.
அப்போது அலீ (ரலி) அவர்கள் அவரைக் கண்டு, அவர் அந்நியர் என்று புரிந்து கொண்டார்கள். அலீயைக் கண்டவுடன் (அலீ -ரலி- அவர்கள் அபூதர்ரிடம், வீட்டுக்கு வாருங்கள் என்று சொல்ல) அபூதர், அவர்களைப் பின்தொடர்ந்து சென்றார். விடியும் வரை அவர்களில் ஒருவரும் (தம்முடனிருந்த) மற்றவரிடம் எதைப் பற்றியும் கேட்டுக் கொள்ளவில்லை. பிறகு அபூதர் தம் தோல் பையையும் தம் பயண உணவையும் சுமந்து கொண்டு பள்ளிவாசலுக்குச் சென்றார்.
அன்று மாலையாகும் வரை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தம்மைப் பார்க்காத நிலையிலேயே அன்றைய பகலைக் கழித்தார். பிறகு (மாலையானதும்) தம் படுக்கைக்குத் திரும்பினார். அப்போது அலீ (ரலி) அவர்கள் அவரைக் கடந்து சென்றார்கள். தம் தங்குமிடத்தை அறிந்து கொள்ள மனிதருக்கு வேளை இன்னும் வரவில்லையா? என்று கேட்டு விட்டு அவரை(ப் படுக்கையிலிருந்து) எழுப்பித் தம்முடன் அழைத்துச் சென்றார்கள். ஒருவர் மற்றவரிடம் எதைப் பற்றியும் கேட்டுக் கொள்ளவில்லை. இறுதியில் மூன்றாம் நாள் வந்த போது அலீ (ரலி) அவர்கள் அதே போன்று திரும்பச் செய்தார்கள்.
தம்முடன் அவரைத் தங்க வைத்துக் கொண்டு பிறகு, (அபூதர்ரிடம்), நீங்கள் எதற்காக (இங்கே) வந்தீர்கள் என்று எனக்குச் சொல்லக் கூடாதா? என்று கேட்டார்கள். அவர், (நான் விரும்பி வந்ததை அடைய) எனக்குச் சரியான வழிகாட்டுவதற்கு நீங்கள் உறுதி மொழியளித்தால் நான் (எதற்காக வந்தேன் என்று சொல்லச்) செய்கிறேன் என்று பதிலளித்தார். அலீ (ரலி) அவர்களும் அவ்வாறே உறுதிமொழியளிக்க, அபூதர் (தாம் வந்த காரணத்தை) அவர்களுக்குத் தெரிவித்தார். அலீ (ரலி) அவர்கள், நபிகளார் அவர்கள் உண்மையானவர்களே! அவர்கள் அல்லாஹ்வின் தூதர் தாம்.
காலையானதும் நீங்கள் என்னைப் பின் தொடர்ந்து வாருங்கள். நான் உங்களுக்குத் தீங்கு நேரும் என்று அஞ்சுகின்ற எதையாவது கண்டால் நான் தண்ணீர் ஊற்றுவதைப் போல நின்று கொள்வேன். நான் போய்க் கொண்டேயிருந்தால் நான் நுழைய வேண்டிய இடத்தில் நுழையும் வரை என்னைப் பின்தொடருங்கள் என்று சொன்னார்கள். அபூதர்ரும் அவ்வாறே செய்தார். அலீ அவர்களைப் பின்தொடர்ந்து நடந்தார். இறுதியில், அலீ (ரலி) அவர்கள், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தங்கியிருந்த வீட்டில் நுழைந்த போது அவர்களுடன்அவரும் நுழைந்தார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடைய சொல்லைக் கேட்டு அதே இடத்தில் இஸ்லாத்தை ஏற்றார்.
அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவரிடம், நீங்கள் உங்கள் (ஃகிஃபார்) சமுதாயத்தாரிடம் திரும்பிச் சென்று என் கட்டளை உங்களிடம் வந்து சேரும் வரை (இஸ்லாத்தின் செய்தியை) அவர்களுக்குத் தெரிவியுங்கள் என்று சொன்னார்கள். அபூதர், என் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீதாணையாக! நான் இந்தச் செய்தியை (இறை மறுப்பாளர்களான) அவர்களிடையே உரக்கக் கூவிச் சொல்வேன் என்று சொல்லிவிட்டு வெளியேறி, (கஅபா) பள்ளிவாசலுக்கு வந்து, உரத்த குரலில், வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை என்றும், முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்றும் உறுதி சொல்கிறேன் என்று சொன்னார்.
உடனே, அங்கிருந்த (இறைமறுப்பாளர்களின்) கூட்டத்தார் எழுந்து அவருக்கு வலி ஏற்படும் அளவிற்கு அவரை அடித்தார்கள். அப்பாஸ் (ரலி) அவர்கள் வந்து, அவர் மீது கவிழ்ந்து படுத்து (அடி விழாமல் தடுத்து)க் கொண்டார்கள். உங்களுக்குக் கேடுண்டாகட்டும். இவர் கிஃபார் குலத்தைச் சேர்ந்தவர் என்பதும், உங்கள் வணிகர்கள் செல்லும் வழி (ஃகிஃபார் குலத்தாரின் ஆதிக்கத்திற்குட்பட்ட) ஷாம் நாட்டுப் பாதையில் தான் உள்ளது என்பதும், உங்களுக்குத் தெரியாதா? என்று சொல்லி அவர்களிடமிருந்து அபூதர்ரைக் காப்பாற்றினார்கள். அடுத்த நாள் மீண்டும் (பள்ளிவாசலுக்குச் சென்று) அபூதர் அதே போன்று செய்ய குறைஷிகளும் அடித்தபடி அவர் மீது பாய்ந்தார்கள். உடனே (முன் போலவே) அப்பாஸ் (ரலி) அவர்கள் அபூதர்ரின் மீது கவிழ்ந்து படுத்துக் கொண்டார்கள்.
நூல் : புகாரி 3861
About Author
Sadhiq
அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை.
[அல்குர்ஆன் 112:1]