ஸஹீஹான ஹதீஸை மறுக்கும் விதிகள் ஹதீஸ் கலையில் உண்டா ? (04)
மக்லூப்
நம்பகமான அறிவிப்பாளர்கள்கூட சில இடங்களில் மாற்றமாக அறிவிப்பார்கள் என்பதை நிரூபிக்கும் மற்றுமொறு ஹதீஸ்கலை விதிதான் “மக்லூப்” என்பதாகும்.
அதாவது, ஒரு ஹதீஸின் அறிவிப்பாளர் வரிசையில் ஒருவருடைய பெயரை மாற்றி அறிவிப்பதோ அல்லது அதனுடைய மத்தனின் (கருத்தின்) வார்த்தைகளை முற்படுத்தியோ அல்லது பிற்படுத்தியோ அறிவித்துவிடுவது.
மக்லூபிற்கு உதாரணம்
“தன்னுடைய நிழலைத் தவிர வேறு எந்த நிழலும் இல்லாத நாளில் அல்லாஹ் ஏழு நபர்களுக்கு தனது நிழலைத் தருவான். அதில் ஒருவர், “தனது இடது கை செலவு செய்ததை வலது கை அறியாத அளவுக்கு மறைத்து தர்மம் செய்தவர்” என்று நபியவர்கள் கூறியதாக முஸ்லிமில் (1712)
வரக்கூடிய செய்தியில் சில அறிவிப்பாளர்கள் வலது கை என்று வரக்கூடிய இடத்தில் இடது கை என்று மேற்கூறப்பட்டவாறு மாற்றமாக அறிவிக்கிறார்கள் என்று ஹதீஸ்துறை அறிஞர்கள் “இடது கை செய்கின்ற தர்மம்” என்ற செய்தியை “மக்லுப்” என்று மறுக்கிறார்கள்.
(தைஸீருல் முஸ்தலஹில் ஹதீஸ் – பக்கம் 135)
இந்த இடத்தில் தவறு செய்திருப்பவர் நம்பகமான அறிவிப்பாளர்தான். அவர் பல நம்பகமானவர்கள் “வலது கரம் செய்யும் தர்மம்” என்று அறிவித்திருக்க அதற்கு மாற்றமாக இவர் மாத்திரம் “இடது கை” என்று அறிவிப்பதினால், அவர் தவறாக அறிவித்துவிட்டார் என்று ஹதீஸ் துறையில் அனைத்து இமாம்களும் முடிவெடுத்து விட்டனர்.
அப்படியென்றால், திரும்பவும் நாம் ஆரம்பத்தில் கேட்ட அதே கேள்வியை இங்கே கேட்பது பொருத்தமாக இருக்கும்.
நம்பகமான மனிதர்களுக்கு மாற்றமாக இங்கு ஒருவர் அறிவித்திருப்பதினால் இது மறுக்கப்படுகிறது என்றால் அனைத்து இமாம்களும் ஏன் நம்மை எதிர்ப்பவர்களும் இந்த விதியை ஏற்றுக் கொள்வதின் மூலம் ஹதீஸ் மறுப்பு கொள்கையை தங்களுக்குத் தாங்களே கூறிக் கொள்கிறார்கள். அல்லது நம்பகமான அறிவிப்பாளர் தவறுவிட்டிருக்கிறார் என்று புரிந்துகொண்டு குர்ஆனுக்கு முரணாகவும் இது போன்று அவர் அறிவிக்க வாய்ப்புள்ளது என்று தங்களையும் அறியாமல் ஒப்புக் கொள்கிறார்கள்.