யாசிக்கக் கூடாது
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் (உதவி) கேட்டேன். அவர்கள் எனக்கு வழங்கினார்கள்; மீண்டும் கேட்டேன்; வழங்கினார்கள். மீண்டும் கேட்டேன்; வழங்கிவிட்டு, ஹகீமே! நிச்சயமாக இந்தச் செல்வம் பசுமையானதும், இனிமையானதுமாகும். யார் இதைப் போதுமென்ற உள்ளத்துடன் எடுத்துக் கொள்கிறாரோ அவருக்கு இதில் பரகத் எனும் அருள் ஏற்படுத்தப்படும்; யார் இதைப் பேராசையுடன் எடுத்துக் கொள்கின்றாரோ அவருக்கு அதில் பரகத் ஏற்படுத்தப்படாது. அவர் உண்ட பின்பும் வயிறு நிரம்பாதவர் போலாவார். உயர்ந்த கை தாழ்ந்த கையை விடச் சிறந்தது என்று கூறினார்கள். அப்போது நான், அல்லாஹ்வின் தூதரே! உங்களைச் சத்தியத்துடன் அனுப்பி வைத்தவன் மீது ஆணையாக! உங்களுக்குப் பின் உலகைப் பிரியும் வரை வேறு யாரிடமும் நான் எதையும் கேட்க மாட்டேன் எனக் கூறினேன்.
ஆபூபக்ர் (ரலி) அவர்கள் (தமது ஆட்சிக் காலத்தில்) ஜகாத் பெறுமாறு ஹகீமை அழைத்தார்கள். அவர் அதை ஏற்றுக் கொள்ள மறுத்து விட்டார். பிறகு உமர் (ரலி) அவர்கள் (தமது ஆட்சியில்) ஜகாத் பெறுமாறு அவரை அழைத்தார்கள். அவர் அதையும் ஏற்க மறுத்தார். அப்போது உமர் (ரலி) அவர்கள் முஸ்லிம் சமுதாயமே! உரிமையைப் பெற்றுக் கொள்ளுமாறு நான் ஹகீமை அழைக்கிறேன். அவரோ அதைப் பெற்றுக் கொள்ள மறுக்கிறார். இதற்கு நீங்களே சாட்சி!எனக் கூறினார்கள். ஹகீம் (ரலி) அவர்கள் மரணிக்கும் வரை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குப் பின் வேறு யாரிடமும் எதையும் கேட்கவேயில்லை என சயீத் பின் அல்முஸய்யப் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.
அறிவிப்பவர் : ஹகீம் பின் ஹிஸாம் (ரலி); நூல் : புகாரி 1472
யாருக்கு வறுமை ஏற்பட்டு மக்களிடம் அதை முறையிடுகிறாரோ அவருடைய வறுமை அடைக்கப்படாது. யாருக்கு வறுமை ஏற்பட்டு அதை அல்லாஹ்விடம் முறையிடுகிறாரோ அவருக்கு அல்லாஹ் விரைவான வாழ்வாதாரத்தையோ, அல்லது குறிப்பிட்ட தவணை வரையுள்ள வாழ்வாதாரத்தையோ விரைவில் வழங்குவான்.
நூல் : திர்மிதி 2248
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
என் உயிர் எவன் கைவசத்தில் உள்ளதோ அவன் மீது சத்தியமாக! உங்களில் ஒருவர் கயிற்றை எடுத்துக் கொண்டு காலைப் பொழுதில் மலைக்குச் சென்று விறகு வெட்டி விற்று, தாமும் சாப்பிட்டுப் பிறருக்கும் தர்மம் செய்வது, மக்களிடத்தில் யாசிப்பதை விடச் சிறந்ததாகும்.
நூல் : புகாரி 1480, 1471
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
(மார்க்கம் அனுமதித்துள்ள காரணம் இன்றி) மக்களிடம் யாசிப்பவன் தன் முகத்தில் சிறிதளவுகூடச் சதை இல்லாதவனாக மறுமை நாளன்று வருவான்.
நூல் : புகாரி 1474
அவ்ஃப் பின் மாலிக் அல்அஷ்ஜஈ (ரலி) அவர்கள் கூறியதாவது :
நாங்கள் ஒன்பது பேர், அல்லது எட்டுப் பேர், அல்லது ஏழு பேர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் இருந்தோம். அப்போது அவர்கள் நீங்கள் அல்லாஹ்வின் தூதரிடம் உறுதிமொழி அளிக்கக் கூடாதா? என்று கேட்டார்கள். அது நாங்கள் உறுதி மொழி அளித்திருந்த புதிதாகும். எனவே, அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் முன்பே உறுதிமொழி அளித்து விட்டோம் என்று கூறினோம். பின்னர் அவர்கள் நீங்கள் அல்லாஹ்வின் தூதரிடம் உறுதிமொழி அளிக்கக் கூடாதா? என்று (மீண்டும்) கேட்டார்கள்.
அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் (ஏற்கெனவே) உறுதிமொழி அளித்து விட்டோம் என்று நாங்கள் (திரும்பவும்) கூறினோம். பின்னர் (மூன்றாவது முறையாக) நீங்கள் அல்லாஹ்வின் தூதரிடம் உறுதிமொழி அளிக்கக் கூடாதா? என்று கேட்டபோது, நாங்கள் எங்கள் கைகளை நீட்டி அல்லாஹ்வின் தூதரே! தங்களிடம் நாங்கள் உறுதிமொழி அளிக்கிறோம். எதற்காக நாங்கள் தங்களிடம் உறுதிமொழி அளிக்க வேண்டும்? என்று கேட்டோம். அதற்கு அவர்கள், அல்லாஹ் ஒருவனையே நீங்கள் வணங்க வேண்டும்; அவனுக்கு எதையும் இணையாக்கக் கூடாது; ஐவேளைத் தொழ வேண்டும்;
எனக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டும் (என்று உறுதிமொழி அளியுங்கள்) என்று கூறிவிட்டு, (அடுத்த) ஒரு வார்த்தையை மெதுவாகச் சொன்னார்கள் : மக்களிடம் எதையும் யாசிக்கக் கூடாது என்றும் உறுதிமொழி கேட்டார்கள். (அவ்வாறே நாங்களும் உறுதிமொழி அளித்தோம்.) பிறகு அ(வ்வாறு உறுதியளித்த)வர்களில் சிலரை நான் பார்த்திருக்கிறேன். அவர்களில் ஒருவரது சாட்டை (வாகனத்தின் மேலிருந்து) விழுந்தால்கூட அதை யாரிடமும் எடுத்துத் தருமாறு அவர்கள் கேட்டதில்லை.
நூல் : முஸ்லிம் 2450
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
அதிகம் பொருள் சேர்ப்பதற்காக மக்களிடம் யாசிப்பவன், (நரகின்) நெருப்புக் கங்கையே யாசிக்கிறான்; அவன் குறைவாக யாசிக்கட்டும். அல்லது அதிகமாக யாசிக்கட்டும்.
நூல் : முஸ்லிம் 2446
சுயமரியாதையை நாம் விட்டுக் கொடுக்காமல் இருக்கும் போது நம்முடைய மரியாதைக்குப் பங்கம் ஏற்படாத வகையில் நமக்கு யாரேனும் உதவினால் அதைப் பெற்றுக் கொள்வது தவறில்லை.
உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது :
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எனக்கு அன்பளிப்புச் செய்யும் வழக்கமுடையவர்களாக இருந்தார்கள். நான் என்னை விட ஏழைக்கு இதைக் கொடுங்களேன் என்பேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், இதை வாங்கிக் கொள்ளும்; நீர் பிறரிடம் கேட்காமலும் பேராசை கொள்ளாமலும் இருக்கும்போது இவ்வாறு வரும் பொருட்களைப் பெற்றுக் கொள்ளும். ஏதும் கிடைக்கவில்லை என்றாலும் அப்பொருட்களுக்குப் பின்னால் உமது மனதைத் தொடரச் செய்யாதீர்! என்றார்கள்.
நூல் : புகாரி 1473
யாசிப்பதற்கு யாருக்கு அனுமதி?
கபீஸா பின் முகாரிக் அல்ஹிலாலீ (ரலி) கூறியதாவது :
நான் (மற்றொருவர் செலுத்த வேண்டிய) ஓர் இழப்பீட்டுத் தொகைக்குப் பொறுப்பேற்றுக் கொண்டு, நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் ஏதேனும் கேட்பதற்காகச் சென்றேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், தர்மப் பொருட்கள் நம்மிடம் வரும் வரை இங்கேயே இருங்கள். அதில் ஏதேனும் உங்களுக்குத் தரச் சொல்கிறோம் என்று கூறினார்கள். பிறகு (பின்வருமாறு) கூறினார்கள் :
கபீஸா! மூன்று பேருக்கு மட்டுமே யாசிக்க அனுமதி உண்டு. ஒருவர் மற்றவரது ஈட்டுத் தொகைக்குப் பொறுப்பேற்றுக் கொண்டவர். அவர் அத்தொகையை (உரியவரிடம் ஒப்படைப்பதற்காக அதைப்) பெறுகின்ற வரை யாசிக்கலாம். பிறகு (யாசிப்பதை) நிறுத்திக் கொள்ள வேண்டும். மற்றொருவர் (இயற்கைச்) சேதம் ஏற்பட்டு செல்வங்களை இழந்தவர். அவர் வாழ்க்கையின் அடிப்படையை அல்லது வாழ்க்கையின் அவசியத் தேவையை அடைந்து கொள்ளும் வரை யாசிக்கலாம்.
இன்னொருவர் வறுமைக்கு ஆட்பட்டவர். அவருடைய கூட்டத்தாரில் (அவரைப் பற்றி) விவரம் தெரிந்த மூவர் முன்வந்து, இன்ன மனிதர் வறுமைக்கு ஆட்பட்டுள்ளார் என்று (சாட்சியம்) கூறுகின்றனர் என்றால், அவர் வாழ்க்கையின் அடிப்படையை அல்லது வாழ்க்கையின் அவசியத் தேவையை அடைகின்ற வரை யாசிப்பது அவருக்குச் செல்லும். கபீஸா! இவையன்றி மற்ற யாசகங்கள் யாவும் தடை செய்யப்பட்டவையே (ஹராம்) ஆகும். (இம்மூன்று காரணங்களின்றி ஒருவர் யாசித்துச் சாப்பிட்டால்) அவர் தடை செய்யப்பட்டதையே (ஹராம்) சாப்பிடுகிறார்.
நூல் : முஸ்லிம் 2451
உழைத்து உண்ணுதல்
யாசகம் கேட்டு மானத்தை இழப்பதை விட உழைத்து வாழ்வது தான் மேலானது. தன் உழைப்பில் வாழ்வதை விட சிறந்த வருவாய் ஏதுமில்லை. இது குறித்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் அறிவுரையை அறிந்து கொள்பவர்கள் ஒருக்காலும் யாசிக்க மாட்டார்கள்.
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது :
நபித்தோழர்கள் பலர் உழைத்து உண்பவர்களாக இருந்தனர். இதனால் அவர்களிடம் (வியர்வை) வாடை வீசும். இதன் காரணமாகவே நீங்கள் குளிக்கக் கூடாதா? என்று அவர்களிடம் கூறப்பட்டது.
நூல் : புகாரி 2071
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்
ஒருவர் தமது கையால் உழைத்து உண்பதைவிடச் சிறந்த உணவை ஒருபோதும் உண்ண முடியாது. தாவூத் நபி அவர்கள் தமது கையால் உழைத்து உண்பவர்களாகவே இருந்தார்கள்.
நூல் : புகாரி 2072
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
தாவூத் நபி தமது கையால் உழைத்தே தவிர உண்ண மாட்டார்கள்.
நூல் : புகாரி 2073
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
பிறரிடம் யாசகம் கேட்பதைவிட ஒருவர் தமது முதுகில் விறகுக் கட்டைச் சுமந்து (விற்கச்) செல்வது சிறந்ததாகும். அவர் யாசிக்கும்போது யாரும் கொடுக்கவும் செய்யலாம்; மறுக்கவும் செய்யலாம்.
நூல் : புகாரி 2074, 2075