உண்மையானத் தோழர்
அபூபக்ர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களைக் கடுமையாக நேசித்தார்கள். ஒரு உண்மை நண்பன் எப்படியெல்லாம் நடந்து கொள்வாரோ அத்தனை தகுதிகளையும் அவர்கள் பெற்றிருந்தார்கள். அபூபக்ரும் ஏனைய தோழர்களும் நபி (ஸல்) அவர்களை விட்டுவிட்டு ஓடிவிடுவார்கள் என்ற கருத்தை ஒருவர் சொன்ன போது அதை சகித்துக் கொள்ள இயலாமல் கோபப்பட்டு கூறியவரை அபூபக்ர் (ரலி) அவர்கள் திட்டி விடுகிறார்கள்.
மிஸ்வர் பின் மக்ரமா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் மீதாணையாக பல முகங்களை (உங்கள் தோழர்களிடம்) பார்க்கிறேன். மக்களில் பலதரப்பட்டவர்களைப் பார்க்கிறேன். உங்களை விட்டு விட்டு விரண்டோடக் கூடிய (கோழைத்தனமுடைய)வர்களாகவே (இவர்களை) நான் பார்க்கிறேன் என்று உர்வா (நபி (ஸல்) அவர்களிடம்) கூறினார்.
(இதைக் கேட்ட) அபூபக்ர் (ரலி) அவர்கள் அவரை அக்கால வழக்கப்படி (கடவுளாக வணங்கப்பட்ட லாத் என்னும் சிலையின் மர்ம உறுப்பை சுவைத்துப் பார் என்று) கடுமையாக ஏசிவிட்டு நாங்கள் இறைத் தூதரை விட்டு விட்டு ஓடி விடுவோமா? என்று (கோபத்துடன்) கேட்டார்கள். அதற்கு உர்வா இவர் யார்? என்று கேட்டார்.
மக்கள் அபூபக்ர் என்று பதிலளித்தார்கள். அதற்கு உர்வா நீங்கள் எனக்கு முன்பு உதவி செய்திருக்கிறீர்கள். அதற்கான நன்றிக் கடனை நான் உங்களுக்கு இன்னும் தீர்க்கவில்லை. அந்த நன்றிக் கடன் மட்டும் இல்லாவிட்டால் நான் உங்களுக்கு (தகுந்த) பதில் கொடுத்திருப்பேன் என்று கூறினார்.
நூல் : புகாரி (2731)
நபி (ஸல்) அவர்கள் செல்லும் இடமெல்லாம் அவர்களுடன் சேர்ந்து அபூபக்ர் (ரலி) அவர்களும் செல்லும் அளவிற்கு இருவரும் இணை பிரியாத நண்பர்களாகத் திகழ்ந்துள்ளார்கள்.
அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்கள் கூறுவதாவது:
நபி (ஸல்) அவர்கள் நானும் அபூபக்ரும் உமரும் (இங்கே) சென்றோம் என்றும் நானும் அபூபக்ரும் உமரும் (இந்த இடத்திற்கு உள்ளே) புகுந்தோம் என்றும் நானும் அபூபக்ரும் உமரும் புறப்பட்டோம் என்றும் சொல்வதை நான் நிறையச் செவியுற்றிருக்கிறேன்.
நூல் : புகாரி (3685)
நபி (ஸல்) அவர்களின் வருகையை மற்றவர்களை விட எதிர்பார்க்கக் கூடியவராகவும் நபி (ஸல்) அவர்கள் வந்து விட்டால் தனது கவனத்தை அவர்களை நோக்கி ஒருமுகப்படுத்துபவராகவும் பெருமானாரைப் பார்த்தவுடன் புன்னகைப்பவராகவும் அபூபக்ர் (ரலி) அவர்கள் இருந்தார்கள். பெருமானாரின் மீது அவர்கள் வைத்திருந்த அன்பை அவர்களுடைய இச்செயல் வெளிப்படுத்துகிறது.
அனஸ் (ரலி) அவர்கள் கூறுவதாவது:
முஹாஜிர்களும் அன்சாரிகளும் அமர்ந்திருக்கும் போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வருகை தருவார்கள். அவர்களில் அபூபக்ர் (ரலி)யும் உமர் (ரலி) யும் இருப்பார்கள். கூடியிருப்போர்களில் அபூபக்ர் (ரலி) உமர் (ரலி) ஆகிய இருவரைத் தவிர வேறு எவரும் நபி (ஸல்) அவர்களிடத்தில் (முதலில்) தம் பார்வையை உயர்த்த மாட்டார்கள்.
இவ்விருவரும் தான் நபி (ஸல்) அவர்களைப் பார்ததுக் கொண்டே இருப்பார்கள். நபி (ஸல்) அவர்களும் இவர்களைப் பார்த்துக் கொண்டே இருப்பார்கள். இவ்விருவரும் நபி (ஸல்) அவர்களைப் பார்த்து புன்னகைத்துக் கொண்டே இருப்பார்கள். நபி (ஸல்) அவர்களும் இவர்களை நோக்கி புன்னகைப்பார்கள்.
நூல் : திர்மிதி (3601)
நபி (ஸல்) அவர்களை முழுமையாகப் புரிந்த சிறந்த தோழராக அபூபக்ர் (ரலி) அவர்கள் விளங்கினார்கள். ஒரு முறை நபி (ஸல்) அவர்கள் தமது தோழர்களுடன் பயணம் செய்து கொண்டிருந்த போது தண்ணீருக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டது. தண்ணீரைத் தேடி ஒரு கூட்டம் நபி (ஸல்) அவர்களை முந்திச் சென்று விட்டது. அக்கூட்டத்தில் அபூபக்ர் (ரலி) அவர்களும் உமர் (ரலி) அவர்களும் இருந்தார்கள்.
அவர்கள் காலை நேரத்தை அடைந்த போது நபி (ஸல்) அவர்களைக் காணாததால் அவர்களில் சிலர் சிலரிடத்தில் நபி (ஸல்) அவர்கள் தண்ணீரைப் பெற்று விட்டார்கள் என்று கூறலானார்கள். அப்போது அபூபக்ர் (ரலி) மற்றும் உமர் (ரலி) ஆகிய இருவரும் கூறிய வார்த்தை கவனிக்கத்தக்கது.
அபூகதாதா (ரலி) அவர்கள் கூறுவதாவது:
மக்களே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உங்களை விட்டுவிட்டு தண்ணீரின் பால் அவர்கள் முந்திச் செல்ல மாட்டார்கள் என்று அபூபக்ரும் உமரும் கூறினார்கள்.
நூல் : அஹ்மத் (21506)
அவ்விருவரும் கூறியபடியே நபி (ஸல்) அவர்கள் தண்ணீர் கொண்டு வந்து மக்கள் அனைவருக்கும் பருகக் கொடுத்து விட்டு இறுதியாகப் பருகினார்கள்.
இக்கட்டான நேரங்களில் நபி (ஸல்) அவர்கள் கவலையுற்ற போது அவர்களுக்கு ஆறுதல் கூறி பக்க பலமாக அபூபக்ர் (ரலி) அவர்கள் திகழ்ந்தார்கள்.
உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பத்ருப் போர் நாளில் (எதிரிகளான) இணை வைப்பாளர்கள் (எண்ணிக்கை) ஆயிரம் பேராக இருப்பதையும் தம் தோழர்கள் முன்னூற்றுப் பத்தொன்பது பேராக இருப்பதையும் கண்டார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கிப்லாவை முன்னோக்கித் தம் கரங்களை நீட்டித் தம் இறைவனை உரத்த குரலில் பிராத்தித்தார்கள்.
இறைவா எனக்கு நீ அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுவாயாக. இறைவா எனக்கு அளித்த வாக்குறுதியை வழங்குவாயாக. இறைவா இஸ்லாமியரில் இக்குழுவினரை நீ அழித்து விட்டால் இந்தப் பூமியில் உன்னை (மட்டும்) வழிபட யாரும் இருக்க மாட்டார்கள் என்று தம் கரங்களை நீட்டி கிப்லாவை முன்னோக்கி இறைவனிடம் பிரார்த்தித்துக் கொண்டே இருந்தார்கள்.
எந்த அளவிற்கென்றால் அவர்களுடைய தோல்களிலிருந்து மேல்துண்டு நழுவி கீழே விழுந்து விட்டது. அப்போது அவர்களிடம் அபூபக்ர் (ரலி) அவர்கள் வந்து அத்துண்டை எடுத்து அவர்களின் தோள்மீது போட்டுவிட்டு பின்னாலிருந்து அவர்களை கட்டியணைத்துக் கொண்டு அல்லாஹ்வின் தூதரே உங்கள் இறைவனிடம் வேண்டியது போதும். அவன் உங்களுக்கு அளித்த வாக்குறுதியை நிச்சயம் நிறைவேற்றுவான் என்று கூறினார்கள்.
நூல் : முஸ்லிம் (3621)
தம்னைப் பற்றி பிறர் தவறாக நினைத்தாலும் பரவாயில்லை நபி (ஸல்) அவர்களின் இரகசியத்தை ஒரு போதும் வெளியில் சொல்ல மாட்டேன் என்று தம் தோழரின் இரகசியத்தை காக்கக் கூடியவராக அபூபக்ர் (ரலி) அவர்கள் திகழ்ந்தார்கள்.
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள் : நான் அபூபக்ர் (ரலி) அவர்களைச் சந்தித்தேன். (அவர்களிடம்) நீங்கள் விரும்பினால் என் மகள் ஹஃப்ஸாவை தங்களுக்குத் திருமணம் முடித்து வைக்கிறேன் என்று கூறினேன். அபூபக்ர் அமைதியாக இருந்தார். எனக்கு அவர் எந்தப் பதிலையும் கூறவில்லை. எனவே உஸ்மானை விட அபூபக்ர் அவர்கள் மீதே மிகுந்த வருத்தம் கொண்டவனாக நான் இருந்தேன்.
சில நாட்கள் பொறுத்திருந்தேன். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஹஃப்ஸாவைப் பெண் கேட்டார்கள். எனவே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு ஹஃப்ஸாவை திருமணம் செய்து வைத்தேன்.
பிறகு (ஒரு நாள்) அபூபக்ர் என்னைச் சந்தித்த போது நீங்கள் என்னிடம் ஹஃப்ஸாவைக் குறித்துச் சொன்ன போது நான் உங்களுக்குப் பதில் ஏதும் கூறாததால் உங்களுக்கு என் மீது மனவருத்தம் இருக்கக் கூடும் என்று கூறினார்கள். நான் ஆம் என்று கூறினேன்.
அபூபக்ர் (ரலி) அவர்கள் நீங்கள் கூறியதற்கு பதில் எதுவும் நான் கூறாததற்குக் காரணம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஹஃப்ஸா அவர்களை (தாம் மனம் புரிந்து கொள்வது) பற்றிப் பேசியதை நான் அறிந்திருந்தேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் இந்த இரகசியத்தை நான் வெளிப்படுத்தவும் விரும்பவில்லை. (எனவே தான் உங்களுக்குப் பதிலேதும் கூறவில்லை.)
நபி (ஸல்) அவர்கள் ஹஃப்ஸாவை (திருமணம் செய்யாமல்) விட்டிருந்தால் உறுதியாக அவர்களை நான் (மனைவியாக) ஏற்றுக் கொண்டிருந்திருப்பேன் என்று கூறினார்கள்.
நூல் : புகாரி (4005)