அனுபவமிக்க ஆலோசகர்
முதிர்ந்த வயதும் சிறந்த அனுபவமும் பெற்றிருந்த அபூபக்ர் (ரலி) அவர்களிடம் நபி (ஸல்) அவர்கள் குடிமக்களின் நலன் தொடர்பாக இரவில் ஆலோசனை செய்யும் அளவிற்கு பெருமானாருடன் அபூபக்ர் (ரலி) அவர்கள் நெருக்கத்தைப் பெற்றிருந்தார்கள்.
உமர் (ரலி) அவர்கள் கூறுவதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இரவில் அபூபக்ர் (ரலி) அவர்களிடம் முஸ்லிம்களின் காரியம் குறித்துத் பேசுவார்கள். அப்போது அவர்களுடன் நானும் இருப்பேன்.
நூல் : அஹ்மத் (173)
பிரச்சனைகள் ஏற்படும் போது அபூபக்ர் (ரலி) அவர்கள் குறிக்கிட்டு நபி (ஸல்) அவர்களுக்கு நல்ல ஆலோசனை கூறுவார். நபி (ஸல்) அவர்களும் அபூபக்ர் (ரலி) அவர்கள் கூறியதை மெய்ப்பிக்கும் வகையில் தீர்ப்புக் கூறுவார்கள்.
அபூ கத்தாதா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் அமர்ந்து கொண்டு போரில் ஒருவரைக் கொன்றதற்கான ஆதாரம் எவரிடத்தில் இருக்கின்றதோ அவருக்கே அந்த எதிரியின் உடலிலிருந்து எடுத்த பொருட்கள் உரியவை என்று கூறினார்கள். அப்போது நான் எழுந்து நின்று எனக்கு எவர் சாட்சி சொல்வார் என்று கேட்டேன்.
மீண்டும் நபி (ஸல்) அவர்கள் போரில் ஒருவரைக் கொன்றதற்கான ஆதாரம் எவரிடத்தில் இருக்கின்றதோ அவருக்கே அந்த எதிரியின் உடலிலிருந்து எடுத்த பொருட்கள் உரியவை என்று கூறினார்கள். உடனே நான் எழுந்தேன். உடனே நான் எழுந்து நின்று எனக்கு எவர் சாட்சி சொல்வார் என்று கேட்டேன். பிறகு உட்கார்ந்து விட்டேன். பிறகு மூன்றாவது தடவையாக அதே போன்று நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.
உடனே நான் எழுந்தேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அபூகதாதாவே உங்களுக்கு என்ன நேர்ந்தது? என்று கேட்டார்கள். நடந்த நிகழ்ச்சியை நான் அவர்களிடம் எடுத்துரைத்தேன். ஒரு மனிதர் இவர் உண்மையே சொன்னார். அல்லாஹ்வின் தூதரே இவரால் கொல்லப்பட்டவரிடமிருந்து எடுக்கப்பட்ட பொருட்கள் என்னிடம் உள்ளன. எனக்காக (அவருக்கு ஏதாவது கொடுத்து அவரை) திருப்திப்படுத்தி விடுங்கள் என்று சொன்னார்,
அப்போது அபூபக்ர் (ரலி) அவர்கள் இல்லை அல்லாஹ்வின் மீதாணையாக அல்லாஹ்வின் சிங்கங்களில் ஒரு சிங்கம் அல்லாஹ்வின் சார்பாகவும் அவனுடைய தூதரின் சார்பாகவும் போரிட்டு (தன்னால்) கொல்லப்பட்டவரின் உடலிலிருந்து எடுத்த பொருளை உனக்குக் கொடுக்க ஒரு போதும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் விரும்ப மாட்டார்கள் என்று கூறினார்கள்.
உடனே நபி (ஸல்) அவர்கள் (அபூபக்ர்) உண்மை சொன்னார் என்று கூறிவிட்டு அதை எனக்கே கொடுத்து விட்டார்கள்.
நூல் : புகாரி (3142)