மீகாத்தை அடைந்தும் இஹ்ராம் கட்டாதவர்கள் என்ன செய்வது?
நான் எங்கிருந்து உம்ரா செய்ய வேண்டும்? என்று இப்னு உமர் (ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கு இப்னு உமர் (ரலி) அவர்கள், நஜ்து வாசிகளுக்கு கர்ன்என்ற இடத்தையும், மதீனா வாசிகளுக்கு துல்ஹுலைஃபாஎன்ற இடத்தையும், ஷாம் வாசிகளுக்கு ஜுஹ்ஃபாஎன்ற இடத்தையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நிர்ணயம் செய்தார்கள் என்று விடையளித்தார்கள்.
அறிவிப்பவர்: ஸைத் பின் ஜுபைர்; நூல்: புகாரி 1522
ஹரம் எல்லைக்கு உள்ளே இருப்பவர்கள் அங்கிருந்து ஹரம் எல்லையைத் தாண்டி இஹ்ராம் கட்டி வர வேண்டும் என்பதை ஆயிஷா (ரலி) அவர்கள் தன்யீம் என்ற இடத்தில் இஹ்ராம் கட்டியதிலிருந்து அறியலாம். தன்யீம் என்ற இடத்திலும் இஹ்ராம் கட்டலாம். அதை விட தூரமான இடத்துக்குச் சென்றும் இஹ்ராம் கட்டலாம். எவ்வளவு தொலைவுக்குச் சென்று இஹ்ராம் கட்டி வருகிறாரோ அவ்வளவு அதிக நன்மை கிடைக்கும்.
தன்யீம் என்ற இடத்தில் உம்ராவுக்காக இஹ்ராம் கட்ட ஆயிஷா (ரலி) அவர்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அனுப்பிய போது நீ தன்யீமுக்குச் சென்று அங்கே இஹ்ராம் கட்டு! பிறகு இந்த இடத்துக்கு வந்து சேர்! என்றாலும் உன் செலவு உன் சிரமம் ஆகியவற்றைப் பொருத்து (சிறந்த)தாகும். என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி); நூல்: புகாரி 1787
ஹாகிம், தாரகுத்னியில் உன் சிரமத்திற்கு ஏற்ப உனக்குக் கூலி உண்டு என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியதாகக் காணப்படுகின்றது.
எனினும், ஒருவரால் மீண்டும் இந்த இடத்தில் செல்ல முடியாது, மிகவும் கடினம் என்றால், விட்டுவிட வேண்டியது தான்.
ஏனெனில், ”எந்த ஆத்மாவையும் அதன் சக்திக்கு மீறி இறைவன் சிரமப்படுத்த மாட்டான்” என்று திருக்குர்ஆன் கூறுகிறது. (பார்க்க திருக்குர்ஆன் 2:233, 2:236, 5:6, 6:152, 7:42, 23:62, 65:7)