உளூவின்றி குர்ஆனைத் தொடலாமா

உளூவின்றி குர்ஆனைத் தொடக் கூடாது என்பதற்கு ஆதாரம் என்ன

பெண்கள் மாதவிடாய்க் காலத்தில் குர்ஆனைத் தொடலாமா

உளூ இல்லாதவர்களும், குளிப்பு கடமையானவர்களும் குர்ஆனைத் தொடலாமா என்பதில் அறிஞர்கள் மத்தியில் கருத்து வேறுபாடு உள்ளது. தொடலாம் என்பதே சரியான கருத்தாகும். தொடக் கூடாது என்ற கருத்து உடையவர்கள் எடுத்து வைக்கும் ஆதாரங்களை ஒவ்வொன்றாக அலசினால் இதைத் தெளிவாக அறிந்து கொள்ள முடியும்.

தூய்மையானவர்களைத் தவிர (மற்றவர்கள்) அதைத் தொடமாட்டார்கள்.

திருக்குர்ஆன் 56:79

குளிப்பு கடமையானவர்களும், உளூ இல்லாதவர்களும் திருக்குர்ஆனைத் தொடக் கூடாது. ஓதக் கூடாது என்பதற்கு வலுவான ஆதாரமாக இந்த வசனத்தை அவர்கள் எடுத்து வைக்கின்றனர். இந்த வசனத்தை மேலோட்டமாகப் பார்ப்பவர்கள் திருக்குர்ஆனை தூய்மையற்ற நிலையில் உள்ளவர்கள் தொடக் கூடாது. ஓதக் கூடாது என்று முடிவு செய்ய இடம் தருவது போல் தோன்றுகிறது.

ஆனால் இந்த வசனத்தின் முந்தைய வசனங்களையும், இது போன்று அமைந்த மற்ற வசனங்களையும்  நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு திருக்குர்ஆன் எவ்வாறு இறக்கப்பட்டது என்பதையும் விளங்கினால் இவர்களின் கருத்து முற்றிலும் தவறானது என்பதை விளங்கலாம்.

இவ்வசனத்தில் கூறப்பட்டுள்ள தூய்மையானவர்களைத் தவிர  யாரும் அதைத் தொட மாட்டார்கள் என்பதில் தூய்மையானவர்கள் என்றால் யார் என்பதையும், இதைத் தொட மாட்டார்கள் என்பது எதைக் குறிக்கிறது என்பதையும் முதலில் பார்ப்போம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு இறக்கியருளப்பட்ட திருக்குர்ஆன் எழுத்து வடிவில் அருளப்படவில்லை. ஒலி வடிவில் தான் அருளப்பட்டது. அதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மனதில் பதிவு செய்து கொள்வார்கள் என்பதை முதலில் மனதில் கொள்ள வேண்டும்.

திருக்குர்ஆன் எழுத்து வடிவில் இறக்கப்படவில்லை எனும்போது தொடுதல் என்ற கேள்வியே எழாது. தொடும் விதத்தில் திருக்குர்ஆன் இறக்கப்பட்டிருந்தால் மட்டுமே இந்தக் குர்ஆனை தூய்மையானவர்களைத் தவிர யாரும் தொட மாட்டார்கள் என்று கூற முடியும்.

இந்த அடிப்படையில் 56:79 வசனத்தில் கூறப்பட்ட தொடுதல் என்பது நமது கையில் உள்ள குர்ஆனைக் குறிக்காது என்பதை விளங்கலாம். மேலும் இக்கருத்தை வலுவூட்டும் வகையில் இதன் முந்தைய வசனங்கள் அமைந்துள்ளன.

இது பாதுகாக்கப்பட்ட பதிவேட்டில் இருக்கும் மகத்துவமிக்க குர்ஆனாகும். தூய்மையானவர்களைத் தவிர (மற்றவர்கள்) அதைத் தொடமாட்டார்கள். அகிலத்தின் இறைவனிடமிருந்து (இது) அருளப்பட்டது.

திருக்குர்ஆன் 56:77-79

56:79  வசனத்திற்கு முன்னுள்ள இரண்டு வசனங்களையும் படிக்கும் போது ஒரு பேருண்மை நமக்கு விளங்கும்.  இது பாதுகாக்கப்பட்ட பதிவேட்டில் இருக்கும் மகத்துவமிக்க குர்ஆன் என்று அல்லாஹ் கூறுகிறான். அடுத்த வசனத்தில் தூய்மையானவர்களைத் தவிர (மற்றவர்கள்) அதைத் தொட மாட்டார்கள் என்று கூறுகிறான்.

இப்போது அதை என்ற சொல் நம் கையில் இருக்கும் திருக்குர்ஆனைப் பற்றிப் பேசவில்லை. பாதுகாக்கப்பட்ட ஏட்டில் (லவ்ஹுல் மஹ்ஃபூலில்) உள்ள திருக்குர்ஆனைப் பற்றித் தான் பேசுகின்றது என்ற உண்மை தெளிவாகிறது.

இந்தக் கருத்தை மேலும் வலுவூட்டும் வண்ணம் திருக்குர்ஆனின் பின்வரும் வசனங்கள் அமைந்துள்ளன.

அவ்வாறில்லை! இது ஓர் அறிவுரை. விரும்பியவர் படிப்பினை பெற்றுக் கொள்வார். இது தூய்மைப்படுத்தப்பட்டு உயர்வாக்கப்பட்ட மதிப்புமிக்க ஏடுகளில் உள்ளது. மரியாதைக்குரிய நல்லோர்களான எழுத்தர்களின் கைகளில் உள்ளது.

திருகுர்ஆன் 80:11-16

இவ்வசனமும் திருக்குர்ஆனின் மூலப்பிரதி எங்குள்ளது என்பதைப் பற்றி பேசுகின்றது. இவ்வசனங்களிலும் 56:79 வசனத்தில் கூறப்பட்டதைப் போன்றே கூறப்பட்டிருந்தாலும் 56:79 வசனத்தை விட கூடுதல் தெளிவுடனும், விளக்கத்துடனும் காணப்படுகின்றது.

தூய்மையானவர்கள் என்று 56:79 வசனத்தில் கூறப்பட்டவர்கள் யார்? என்பதை இவ்வசனம் தெளிவுபடுத்துகிறது. அவர்கள் வானவர்கள் தாம் என்று இவ்வசனத்திலிருந்து அறிந்துகொள்ள முடிகிறது.

குரைஷிக் குல இறை நிராகரிப்பாளர்கள் இந்தக் குர்ஆனை ஷைத்தான்கள் கொண்டு வருகின்றனர் என எண்ணினார்கள். அவர்களுக்கு அல்லாஹ் பின்வருமாறு பதில் கூறினான்.

இதை ஷைத்தான்கள் இறக்கிடவில்லை. அது அவர்களுக்குத் தகுதியானதும் அல்ல. அதற்கு அவர்களால் இயலாது. அவர்கள் செவியேற்பதை விட்டும் தடுக்கப்பட்டவராவர்.

திருக்குர்ஆன் 26:210-212

இந்த வசனத்தில் சொல்லப்பட்டதைப் போன்று திருக்குர்ஆன்  தூய்மையானவர்களான வானவர்களின் கைகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. ஷைத்தான்களால் இதைத் தொடமுடியாது என்ற பொருளில் தான் 56:79 வது வசனமும் அமைந்துள்ளது.

தொட மாட்டார்கள் என்பதற்கும் தொடக் கூடாது என்பதற்கும் உள்ள வேறுபாட்டை நாம் அறிவோம். தொடக் கூடாது என்றால் அது கட்டளையிடுகிறது என்பது பொருள். தொட மாட்டார்கள் என்றால் அது ஒரு செய்தியை நமக்கு எடுத்துக் கூறுகிறது என்று பொருள்.

மேற்கண்ட வசனத்தில் தொடக் கூடாது எனக் கூறப்படவில்லை. மாறாக தொட மாட்டார்கள் எனக் கூறப்படுகிறது. குளிப்பு கடமையானவர்களும், உளூ இல்லாதவர்களும் குர்ஆனைத் தொடக் கூடாது என்ற அர்த்தம் தான் இந்த வசனத்தின் பொருள் என்றால் தூய்மையானவர்களைத் தவிர வேறு யாரும் இக்குர்ஆனைத் தொடக் கூடாது என்று தொடுவதற்கு தடைபோடும் விதத்தில் அல்லாஹ் கூறியிருப்பான்.

ஆனால் மற்றவர்கள் இதைத் தொட மாட்டார்கள் என்று அல்லாஹ் கூறியிருப்பது பாதுகாக்கப்பட்ட ஏட்டில் உள்ள குர்ஆனை வானவ்ர்களைத் தவிர மற்றவர்களால் தொட முடியாது என்ற பொருளையே தருகிறது.

மேலுள்ள வசனங்கள் அனைத்தையும் ஒன்று சேர்த்துப் பார்க்கும் போது 56:79 வது வசனத்தில் சொல்லப்பட்ட தூய்மையானவர்கள் என்பது வானவர்கள் என்பதும்,

அதை என்று கூறப்பட்டுள்ளது வானத்தில் பாதுகாக்கப்பட்ட ஏட்டில் உள்ள குர்ஆன் என்பதும்

ஐயத்திற்கு இடமின்றி தெளிவாகின்றது.

எனவே இந்த வசனத்தை வைத்துக் கொண்டு தூய்மையான நிலையில் தான் குர்ஆனைத் தொட வேண்டும் என்று வாதிட முடியாது.

தூய்மையில்லாதவர்கள் திருக்குர்ஆனைத் தொடக் கூடாது. ஓதக் கூடாது என்ற கருத்தில் சில ஹதீஸ்கள் வருகின்றன. அவையனைத்தும் ஆதாரமற்றவையாகும்.

உமர் (ரலி) அவர்கள் இஸ்லாத்தை ஏற்பதற்கு முன்னால் அவர்களின் சகோதரி அவர்களை நோக்கி, “நீங்கள் அசுத்தமாக இருக்கின்றீர்கள்தூய்மையானவர்களைத் தவிர இதை எவரும் தொடக் கூடாது” என்று கூறினார்கள்…… சுருக்கம்

நூல் : முஸ்னத் பஸ்ஸார்

இதன் அறிவிப்பாளர் வரிசையில் இடம் பெற்றுள்ள உஸாமா பின் ஸைத் என்பார் பலவீனமானவர் என்று மஜ்மவுஸ் ஸவாயித் என்ற நூலில் ஹைஸமீ குறிப்பிடுகின்றார்.

பைஹகீயிலும் இது குறித்த ஹதீஸ் இடம் பெற்றுள்ளது.

இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான காஸிம் பின் உஸ்மான் அல்பஸரீ என்பவர் பலவீனமானவர் வார்.  இவரது ஹதீஸ் ஏற்கத்தக்கதல்ல என்று இப்னு ஹஜர் அவர்கள் ஸிஸானுல் மீஸானில் குறிப்பிடுகின்றார்கள்.

ஒரு வாதத்திற்கு இந்தச் செய்தி ஆதாரப்பூர்வமானது என்று வைத்துக் கொண்டாலும் இதன் அடிப்படையில் தூய்மையற்றவர்கள் குர்ஆனைத் தொடக் கூடாது என்று வாதிட முடியாது.  ஏனெனில் இந்தச் செய்தியில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாகவோ, அல்லது அவர்கள் இதை அங்கீகரித்ததாகவோ குறிப்பிடப்படவில்லை.  உமர் (ரலி) அவர்களது சகோதரியின் சொந்தக் கருத்தாகவே இடம் பெற்றுள்ளது.  எனவே இதை ஆதாரமாகக் கொள்ள முடியாது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ரோமாபுரியின் அரசர் ஹெர்குலிஸுக்கு எழுதிய கடிதத்தில் பின்வருமாறு கூறப்பட்டிருந்தது:

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

அல்லாஹ்வின் அடியாரும், அவனது தூதருமான முஹம்மது என்பார், ரோமாபுரிச் சக்கரவர்த்தி ஹெர்குலிஸுக்கு எழுதிக் கொள்வது: நேர்வழியைப் பின்பற்றுவோர் மீது சாந்தி நிலவட்டுமாகநிற்கஇஸ்லாத்தைத் தழுவுமாறு உமக்கு நான் அழைப்பு விடுக்கின்றேன்நீர் இஸ்லாத்தை ஏற்பீராக! நீர் ஈடேற்றம் பெற்றிடுவீர்! அல்லாஹ் உமக்கு இரு மடங்கு சன்மானம் வழங்குவான்.  நீர் புறக்கணித்தால் (உமது) குடிமக்களின் பாவமும் உம்மைச் சாரும்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)

நூல் : புகாரி 7, 2941

என்று கடிதம் எழுதி பின்வரும் குர்ஆன் வசனத்தையும் அதில் குறிப்பிட்டார்கள்.

வேதமுடையோரே! நாம் அல்லாஹ்வைத் தவிர (யாரையும்) வணங்கக் கூடாது; அவனுக்கு இணையாக எதையும் கருதக் கூடாது; அல்லாஹ்வையன்றி நம்மில் ஒருவர் மற்றவரைக் கடவுள்களாக ஆக்கக் கூடாது என்ற எங்களுக்கும், உங்களுக்கும் பொதுவான கொள்கைக்கு வாருங்கள்!” என்று கூறுவீராக! அவர்கள் புறக்கணித்தால்நாங்கள் முஸ்லிம்கள் என்பதற்கு நீங்களே சாட்சிகளாக இருங்கள்!” எனக் கூறி விடுங்கள்!

(திருக்குர்ஆன் 3:64)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முஸ்லிமல்லாத மன்னருக்கு “பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்‘ என்ற வசனத்தையும்,

3:64 வசனத்தையும் எழுதி அனுப்பியுள்ளார்கள்.  தூய்மையற்றவர்கள் குர்ஆனைத் தொடக் கூடாது என்றிருந்தால் முஸ்லிமல்லாதவருக்கு அவர்கள் இவ்வாறு எழுதிக் கொடுத்திருக்க மாட்டார்கள்.

எனவே குர்ஆனை எந்த நிலையில் வேண்டுமானாலும் தொடலாம். ஓதலாம்.

__________

ஏகத்துவம்

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]