கருணைக் கடல்
அல்லாஹ் தன்னை ரப்புல் ஆலமீன் என்று கூறியது மட்டும் போதாதா? அத்துடன் ஏன் இந்த இரண்டு பண்புகளையும் தொடர்ந்து கூற வேண்டும்? என்பதை இப்போது ஆராய்வோம்.
ரப்புல் ஆலமீன் அகில உலகுக்கும் அதிபதி என்று அல்லாஹ் தன்னை அறிமுகம் செய்யும் போது, மனித உள்ளங்களில் அல்லாஹ்வைப் பற்றி சில தப்பான அபிப்பிராயங்கள் தோன்றுவது இயல்பு.
அகில உலகுக்கும் அதிபதி (ரப்புல் ஆலமீன்) என்ற அறிமுகத்தைச் செவியுறும் மனிதன் சாதாரண அதிகாரம் படைத்த தலைவர்களே கொடூரமானவர்களாக இருக்கும் போது, அகில உலகுக்கும் அதிபதியாகிய அல்லாஹ் எல்லா அதிகாரத்தையும் தன்னகத்தே வைத்திருக்கும் அல்லாஹ் இவர்களை விடவும் கொடூரமானவனாக இருப்பானோ? என்று எண்ணலாம்.
இப்படிப்பட்ட எண்ணம் மனித உள்ளங்களில் தோன்றாமலிருக்கவும், ஏற்கனவே தோன்றி இருந்தால் அதை நீக்கவும் ரப்புல் ஆலமீன் என்ற பண்பைத் தொடர்ந்து அர்ரஹ்மான், அர்ரஹீம் என்ற அழகிய திருப்பெயர்களை அல்லாஹ் கூறுகிறான்.
நான் ரப்புல் ஆலமீன் அகில உலகுக்கும் அதிபதி. எனக்கு மேல் எந்த சக்தியும் கிடையாது. நான் எது செய்தாலும் எவரும் என்னிடம் கேள்வி கேட்க முடியாது. உங்களின் சின்னஞ்சிறு தவறுகளையும் கூட நான் விசாரித்துத் தண்டனை வழங்க முடியும். ஆனாலும் நான் அப்படிச் செய்ய மாட்டேன். ஏனெனில் நான் அளவற்ற அருளாளன் (அர்ரஹ்மான்) நிகரற்ற அன்புடையவன் (அர்ரஹீம்)
நீங்கள் பார்த்து பழகிய உங்கள் தலைவர்களை விட என்னிடம் அதிகாரமும், ஆற்றலும், வல்லமையும் இருந்தாலும் நான் அர்ரஹ்மானாகவும், அர்ரஹீமாகவும் இருக்கிறேன் என்று பொருத்தமான இடத்தில் இந்தப் பண்புகளையும் அமைத்து விடுகிறான் அல்லாஹ். இவ்வாறு அளவற்ற அருளாளனாக இருப்பது எவரது வற்புறுத்தலுக்காகவோ, அல்லது வேண்டுகோளுக்காகவோ அல்ல. மாறாக தன் மீது தானே இதை விதியாக்கிக் கொண்டதாக இன்னொரு இடத்தில் குறிப்பிடுகிறான்.
உங்கள் இறைவன் தன் மீது ரஹ்மத்தை (அருளை அன்பை) விதியாக்கிக் கொண்டான். (அல்குர்ஆன் 6:54, 6:12)
முஆதே! அல்லாஹ்வுக்கு மனிதர்கள் செய்ய வேண்டிய கடமை எது என்று உமக்குத் தெரியுமா? என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் என்னிடம் கேட்டார்கள்? அல்லாஹ்வும் அவனது தூதருமே நன்கறிந்தவர்கள் என்றேன். அல்லாஹ்வுடன் எவரையும் இணையாக்காது அவனை வணங்குவதே அந்தக் கடமை என்று கூறிவிட்டு அல்லாஹ்வுக்கு மனிதர்கள் இணைவைக்காது இருந்தால் அவர்களுக்கு அல்லாஹ் செய்ய வேண்டிய கடமை எது என்று உமக்குத் தெரியுமா? என்று கேட்டார்கள். அல்லாஹ்வும் அவனது தூதருமே நன்கறிந்தவர்கள் என்றேன். இணைவைக்காத எவரையும் நரகில் நுழையச் செய்யாதிருப்பது தான் அல்லாஹ் செய்ய வேண்டிய கடமை என்றார்கள்.
அறிவிப்பவர்: முஆத் (ரலி); நூல்: புகாரி – 2856, 6267, 7373
தன் மீது எதுவும் கடமை இல்லாதிருந்தும், எவரும் தன் மீது எதையும் திணிக்க முடியாது என்று இருந்தும் அருளையும் அன்பையும் தன் மீது கடமையாக அல்லாஹ் ஆக்கிக் கொள்கிறான் என்றால் அவனது அளவற்ற அருளையும் நிகரற்ற அன்பையும் என்னவென்பது? திருக்குர்ஆனின் பலநூறு வசனங்களும் நபிகள் நாயகம் (ஸல்) மவர்களின் ஏராளமான பொன்மொழிகளும் ரஹ்மான் ரஹீம் ஆகிய இரு பண்புகளுக்கு விளக்கவுரைகளாகவே அமைந்துள்ளன.
யாரேனும் நல்ல காரியம் ஒன்றைச் செய்ய எண்ணி அதைச் செய்ய இயலாது போனால் (அவன் எண்ணியதற்காக) ஒரு முழுமையான நன்மையை அல்லாஹ் அவனுக்காகப் பதிவு செய்கிறான். நல்ல காரியம் ஒன்றைச் செய்திட எண்ணி, அதைச் செய்து விட்டாலோ (அவரின் எண்ணத் தூய்மைக்கேற்ப) பத்து முதல் எழுநூறு மடங்குகள் வரை அல்லாஹ் நன்மைகளைப் பதிவு செய்கிறான்.
யாரேனும் தீய காரியம் ஒன்றைச் செய்ய எண்ணி (அல்லாஹ்வை அஞ்சி) அதைச் செய்யாது விட்டு விட்டால் அதற்கும் ஒரு நன்மையைப் பதிவு செய்கிறான். தீய காரியத்தைச் செய்ய எண்ணி அதைச் செய்து விட்டால் அதற்காக ஒரு தீமையைத் தான் அல்லாஹ் பதிவு செய்கிறான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி); நூல்: புகாரி – 6491, 7501
இந்த நபிமொழியை மீண்டுமொருமுறை படித்துப் பாருங்கள்! அவனது அளவற்ற அருளையும், அன்பையும் இதை விட வேறு வார்த்தைகளில் விளக்க முடியாது. நல்ல காரியம் ஒன்றைச் செய்தால் ஒரு கூலி தருவேன்; செய்ய நினைத்ததற்காக கூலி எதுவும் தர மாட்டேன் என்று அல்லாஹ் கூறினாலும் அருளாளன் என்ற பண்புக்குப் பாதகம் எதுவும் வந்து விடாது.
அவன் அளவற்ற அருளாளன் அல்லவா? அதனால் தான், நன்மையைச் செய்ய எண்ணியதற்கும் கூலி தருகிறான். செய்துவிட்டால் பத்து முதல் எழுநூறு வரை கூலி தருவேன் என்கிறான். தீமையைச் செய்ய எண்ணினால் ஒரு தண்டனை உண்டு என்று அவன் கூறினாலும் அருளாளன் என்ற பண்புக்குப் பங்கம் எதுவும் ஏற்படப் போவதில்லை. இந்த அளவற்ற அருளாளனோ தீமைகளைச் செய்ய எண்ணி அதைச் செய்யாது விட்டால், அதற்காகத் தண்டிக்க மாட்டான் என்பதையும் கடந்து அதற்கும் கூலி தருவேன் என்கிறான்.
நாங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் ஒரு போரில் ஈடுபட்டிருந்தோம். அப்போது நோயின் காரணமாக போருக்கு வராமல் மதீனாவிலேயே சிலர் தங்கி விட்டனர். இந்த அறப்போருக்காக நீங்கள் மேற்கொண்ட சிரமமான பயணம் மற்றும் போரில் நீங்கள் சந்திக்கும் துன்பம் ஆகியவற்றுக்கு நீங்கள் அடையும் கூலியைப் போல் அவர்களும் பெறுவார்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி); நூல்: புகாரி – 4423, 2839
ஒரு மூமினான அடியானுக்கு மிகவும் விருப்பமான ஒருவரை நான் கைப்பற்றிக் கொள்ளும் போது, பொறுமையுடன் என்னிடம் நன்மையை எதிர்பார்த்தால் அவனுக்கு சொர்க்கத்தைக் கூலியாக வழங்கியே தீருவேன் என்று அல்லாஹ் கூறுவதாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி); நூல்: புகாரி – 6424
ஒரு அடியான் காலரா நோயினால் தாக்கப்பட்டு, தனது ஊரிலேயே பொறுமையுடனும், நன்மையை எதிர்பார்த்தும், அல்லாஹ் விதித்ததைத் தவிர வேறு எதுவும் தனக்கு ஏற்பட முடியாது என்ற உறுதியான நம்பிக்கையுடனுமிருந்தால் அவனுக்கு ஷஹீத் உடைய கூலி கிடைப்பது நிச்சயம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி); நூல்: புகாரி – 3474, 6619
எனது அடியானின் இரு கண்களையும் நான் (சோதிக்கும் முகமாக) பழுதாக்கி விடும் போது அவன் பொறுமையை மேற்கொண்டால் அவ்விரு கண்களுக்கும் பகரமாக அவனுக்கு சொர்க்கத்தை நான் வழங்குவேன் என்று அல்லாஹ் கூறுவதாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி); நூல்: புகாரி – 5653
ஒரு முஸ்லிமுக்கு நோய், கவலை, தொல்லை மற்றும் முள் குத்துதல் போன்ற துன்பங்கள் ஏற்பட்டால் அவற்றை அவன் செய்த தவறுகளுக்காக பிராயச்சித்தமாக அல்லாஹ் ஆக்கி விடுகிறான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), அபூஸயீத் (ரலி); நூல்: புகாரி – 5642
இந்த நபிமொழிகளும், இந்தக் கருத்தில் அமைந்துள்ள ஏனைய நபிமொழிகளும் அர்ரஹ்மான், அர்ரஹீம் ஆகிய பண்புகளின் தெளிவுரைகளாகும். மனிதன் விரும்பிச் செய்கின்ற காரியங்களுக்குக் கூலி கொடுப்பது தான் தர்மம். மனிதன் விரும்பாமல், அவனுக்குச் சம்பவிக்கும் துன்பங்களுக்கும் கூட கூலி உண்டென்றால் அவனது அருளையும், அன்பையும் எவ்வாறு வர்ணிக்க முடியும்?
மனிதன் தன்னுடைய மகிழ்ச்சிக்காக செய்கின்ற காரியங்களையும் நல்லறமாக அந்த ரஹ்மான் கருதுகிறான். மனைவியுடன் ஒருவன் கூடும் போது தன்னுடைய இச்சையைத் தணித்துக் கொள்ள வேண்டும்; தனக்கென சந்ததியை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்ற சுயநலத்தின் அடிப்படையிலேயே கூடுகிறான்.
இவன் இன்பம் அடைவதற்காக செய்யும் இது போன்ற காரியங்களுக்காக எவரும் கூலி எதுவும் கொடுக்க வேண்டியதில்லை. இதற்கும் கூட கூலி தருவேன் என்று சொன்னால் அவனை விட அருளாளன், அன்புடையவன் எவனிருக்க முடியும்?
உங்களில் ஒருவர் தம் மனைவியுடன் கூடுவதும் நல்லறமே என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறிய போது அல்லாஹ்வின் தூதரே! தன் இச்சையைத் தணித்துக் கொள்ளும் (இது போன்ற) காரியங்களுக்கும் கூலி கிடைக்குமா என்ன? என்று நபித்தோழர்கள் கேட்டனர்.
அல்லாஹ் தடை செய்துள்ள வழிகளில் இந்த இச்சையைத் தணித்துக் கொண்டால் அதற்காக அவனுக்குத் தண்டனை உண்டல்லவா? அது போலவே அனுமதிக்கப்பட்ட முறையில் அவன் தன் இச்சையைத் தணித்துக் கொள்வதற்கும் கூலி உண்டு என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூதர் (ரலி); நூல்: முஸ்லிம் – 1674
உன் மனைவியின் வாயில் நீ ஊட்டுகின்ற கவள உணவும் நல்லறமாகும் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூதர் (ரலி); நூல்: புகாரி – 56, 1296, 5668, 5373
மனிதன் தனது சுய நலனுக்காக மனைவியுடன் நடந்து கொள்கின்ற முறைக்கும் அல்லாஹ் கூலி தருகிறான் என்பது அவனது அளவற்ற அருளை விளக்கிடப் போதுமானதாகும். மனிதன் மிகவும் அற்பமாகக் கருதுகின்ற, செய்வதற்கு எவருக்கும் எளிதில் சாத்தியமாகின்ற காரியங்களுக்குக் கூட அந்த ரஹ்மான் கூலி வழங்குவதாகக் கூறுவதும், அளவற்ற அருளாளன் என்ற பண்பின் வெளிப்பாடேயாகும்.
இரண்டு நபர்களுக்கிடையே நீதி வழங்குவதும் நல்லறமே! ஒரு மனிதன் அவனது வாகனத்தில் ஏற உதவுவதும் ஏற்றி வைப்பதும் நல்லறமே! அவனது பொருட்களை அவனுடைய வாகனத்தில் ஏற்றி வைப்பதும் நல்லறமே! நல்ல சொற்களைப் பேசுவதும் நல்லறமே.
தொழுவதற்காக நடந்து செல்லும் போது நீ எடுத்து வைக்கும் ஒவ்வொரு காலடியும் நல்லறமே! பாதையில் கிடக்கும் தொல்லை தரும் பொருட்களை அகற்றுவதும் நல்லறமே! என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி); நூல்: புகாரி – 2989
உன் சகோதரனை மலர்ந்த முகத்துடன் சந்திப்பது உட்பட எந்த நல்லறத்தையும் இலேசாக நீ எண்ணி விடாதே என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர்.
அறிவிப்பவர்: அபூதர் (ரலி); நூல்: முஸ்லிம் – 4760
அல்லாஹ்வின் தூதரே! சில நல்லறங்களை நான் செய்ய இயலாது போனால் என்ன செய்வது? என்று கேட்டேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உன்னால் மற்றவர்களுக்குத் தீங்கு ஏற்பட்டு விடாமல் பார்த்துக் கொள்! அது உனக்கு நீயே செய்து கொள்ளும் நல்லறமாகும் என்றார்கள்.
அறிவிப்பவர்: அபூதர் (ரலி); நூல்கள்: புகாரி – 2518, முஸ்லிம் – 119
இந்த நபிமொழிகள் யாவும் இந்த ரஹ்மான் ரஹீம் ஆகிய இரு பண்புகளையும் தெளிவாகப் புரிந்து கொள்ள உதவும் சான்றுகளாகும். ரப்புல் ஆலமீன் என்றவுடன் என்னைக் கொடூரமானவனாக எண்ணி விடாதீர்கள்! என்னால் எதுவும் செய்ய முடியும் என்றாலும் நான் அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையவன் என்பதைச் சொல்கிறான்.
அர்ரஹ்மான் அர்ரஹீம் ஆகிய அழகுத் திருப்பெயர்கள் மனித உள்ளங்களில் தோன்றுகின்ற மற்றொரு ஐயத்தையும் அகற்றி, இறைவனின் பால் மனிதனை நெருங்கி வருவதற்குத் தூண்டுகின்றன.