நல்ல நேரம், கேட்ட நேரம் பார்க்காத முஸ்லிம்கள் சூரியன் உதிக்கும் போதும் உச்சியில் இருக்கும் போதும் மறையும் போதும் தொழக் கூடாது என்று கூறுவது ஏன்

சூரியன் உதிக்கும் போதும் உச்சிக்கு வரும் போதும் மறையும் போதும் ஆகிய மூன்று நேரங்களில் தொழக்கூடாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். இதற்கான காரணத்தையும் தெளிவுபடுத்தியுள்ளார்கள்.

நான் நபி (ஸல்) அவர்களிடம் தொழுகையைப் பற்றி எனக்குச் சொல்லுங்கள்!” என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், சுப்ஹுத் தொழுகையைத் தொழுங்கள். பிறகு சூரியன் உதயமாகி உயரும்வரை தொழுவதை நிறுத்திக் கொள்ளுங்கள்.

ஏனெனில், அது உதயமாகும்போது ஷைத்தானின் இரு கொம்புகளுக்கிடையே உதயமாகிறது. அப்போது தான் அதற்கு இறை மறுப்பாளர்கள் சிரவணக்கம் செய்கின்றனர்.

பிறகு தொழுங்கள்! அந்த நேரத்தில் தொழும் தொழுகை (வானவர்களால்) சாட்சியமளிக்கப்படக்கூடியதும் (வானவர்கள்) வருகை தரக்கூடியதுமாகும்.

ஈட்டியின் நிழல் கிழக்கிலோ மேற்கிலோ சாயாமல் அதன்மீதே விழும் (நண்பகல் நேரம்)வரைத் தொழுங்கள்!

பிறகு தொழுவதை நிறுத்திக் கொள்ளுங்கள். ஏனெனில், அப்போது நரகம் எரிக்கப்படுகிறது. பிறகு நிழல் (கிழக்கே) சாய்ந்துவிட்டால் தொழுது கொள்ளுங்கள். அந்நேரத் தொழுகைக்கு (வானவர்களால்) சாட்சியமளிக்கப்படுகிறது.

அவர்கள் அதில் பங்கேற்கின்றனர். பிறகு அஸ்ர் வரைத் தொழுதுகொள்க. பிறகு சூரியன் மறையும் வரை தொழுவதை நிறுத்திவிடுக! ஏனெனில், அது ஷைத்தானின் இரு கொம்புகளுக்கிடையே தான் மறைகிறது. இந்த நேரத்தில் அதற்கு இறைமறுப்பாளர்கள் சிரவணக்கம் செய்கின்றனர்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அம்ர் பின் அபசா (ரலி)
நூல்: முஸ்லிம்-1512

இறை மறுப்பாளர்கள் இந்த நேரங்களில் சூரியனுக்கு சஜ்தா செய்யும் நடைமுறை உள்ளது. இந்த நேரத்தில் நாம் தொழுதால் நாமும் சூரியனுக்கு சஜ்தா செய்வதைப் போன்ற தோற்றம் ஏற்படும். இறை மறுப்பாளர்களுக்கு மாறு செய்ய வேண்டும் என்ற காரணத்துக்காகவே இவ்வாறு நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

குறிப்பிட்ட இந்த மூன்று நேரங்களில் தொழுவதை மட்டுமே நபி (ஸல்) அவர்கள் தடை செய்துள்ளார்கள். இதே நேரங்களில் திருமணம் போன்ற நல்ல காரியங்களைச் செய்ய எந்தத் தடையுமில்லை. எனவே இந்த செய்தியில் நல்ல நேரம், கெட்ட நேரம் பார்க்கலாம் என்ற கருத்து நேரடியாகவோ மறைமுகமாகவோ கூறப்படவில்லை.
——————
ஏகத்துவம்

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *