இஹ்வான் எனப்படுபவர்கள் இசையைக் கேட்பது இஸ்லாத்தில் தடை செய்யப்படவில்லை என்று கூறுகின்றார்கள். இதுபற்றி விளக்கவும்.
இஸ்லாம் இசை தடைசெய்துள்ளது. இதற்கான ஆதாரங்களையும் இசை கேட்பது கூடும் என்று சொல்பவர்கள் வைக்கும் வாதங்களுக்குச் சரியான பதிலையும் பலமுறை தெளிவுபடுத்தியுள்ளோம்.
இசை கேட்பது கூடும் என்று இஹ்வான்கள் என்போரும் நமது நாட்டில் அவர்களைப் பின்பற்றுவோரும் கூறுகிறார்கள். இவர்களைப் பற்றி ஒரு விஷயத்தை மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டியுள்ளது.
இஸ்லாமிய ஆட்சியை உருவாக்க வேண்டும் என்பதே எங்களின் கொள்கை எனக் கூறும் இவர்கள் இதற்கேற்ப நடப்பதில்லை. இஸ்லாத்தை மற்ற மக்களிடம் போதனை செய்வதையோ தங்கள் வாழ்வில் முழுமையான இஸ்லாத்தைக் கடைபிடிப்பதையோ இவர்களிடம் பார்க்க முடியாது.
இஸ்லாமிய மார்க்கத்தின் பெயரைப் பயன்படுத்தி எப்படியாவது ஆட்சியைப் பிடிக்க வேண்டும். ஆட்சி கிடைக்காவிட்டாலும் ஆட்சி செய்பவன் காபிராக இருந்தாலும் இணை வைப்பாளனாக இருந்தாலும் அந்த ஆட்சியில் ஒரு எம்.பி.யாகவாவது வர வேண்டும். அல்லது ஒரு எம்.எல்.ஏ. சீட்டாவது வாங்க வேண்டும். இதை விடவும் கீழ் நிலையில் உள்ள பதவி கிடைத்தாலும் சரி. இதுவே இவர்களின் நோக்கம்.
அரசியல் பதவி ஒன்றே இவர்களின் இலக்கு. இதற்காக இவர்கள் எப்படிப்பட்ட கேவலமான காரியத்தையும் செய்வார்கள். வணக்கம் சொல்வார்கள். விநாயகர் சதூர்த்தி, பொங்கல், தீபாவளி ஆகிய மாற்றுமதப் பண்டிகைகளுக்கு வாழ்த்துக் கூறி பேனர்கள் வைப்பார்கள். தேசிய கொடியை வணங்குவார்கள்.
இந்த அடிப்படையில் தான் இவர்கள் இசை கூடும் என்று கூறிவருகிறார்கள். இசை பற்றி அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் என்ன சொன்னார்கள் என்று இவர்கள் பார்க்கவில்லை. இதுவெல்லாம் இவர்களுக்குத் தேவையுமில்லை. இதுபற்றிப் பேச அழைத்தால் விவாதிக்க முன்வரமாட்டார்கள்.
இவர்களின் தேர்தல் பிரச்சாரத்துக்கு இசை பயன்படுகின்றது என்ற ஒரு காரணத்துக்காகவே இசை கூடும் என்று கூறுகின்றனர். சுய நலனுக்காக மார்க்கத்தில் விளையாடும் இவர்களை சமுதாயம் அடையாளம் காண வேண்டும்.