தொழுகையில் அத்தஹிய்யாத் அமர்வில் எவ்வாறு அமர வேண்டும்? முதல் அமர்வுக்கும் இரண்டாவது அமர்வுக்கும் இருக்கும் விதத்தில் வித்தியாசம் உள்ளதா?
தொழுகையில் அத்தஹிய்யாத் அமர்வில் அமரும் விதம் பற்றி இருவிதமாக ஹதீஸ்கள் உள்ளது.
நபி (ஸல்) அவர்கள் அத்தஹிய்யாத்தில் அமர்ந்தால் இடது காலின் மீது அமர்வார்கள் என்று பொதுவாகவும் தன் இருப்பிடத்தை தரையில் வைப்பார்கள் என்று பொதுவாகவும் ஹதீஸ்கள் இருவிதமாக வந்துள்ளது.
பின்வரும் செய்திகள் அத்தஹிய்யாத்தில் இடது காலின் மீது அமர வேண்டும் என்ற கருத்தைத் தருகின்றது.
அப்துல்லாஹ் பின் அப்தில்லாஹ் பின் உமர் கூறுகிறார்:
என் தந்தை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் தொழுகையில் (அத்தஹிய்யாத் இருப்பில்) அமரும்போது சம்மணமிட்டு உட்கார்வதை நான் பார்ப்பேன். ஆகவே நானும் அவ்வாறே செய்வேன். அப்போது நான் சிறு வயதுடையவனாக இருந்தேன். இதைக் கண்ட (என் தந்தை) அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அவ்வாறு செய்யக் கூடாதென என்தைத் தடுத்துவிட்டு, “தொழுகையில் உட்காரும் (சுன்னத்தான) முறை என்னவென்றால் உன் வலக் காலை நட்டு வைத்து, இடக் காலை மடித்து வைப்பதாகும்” என்று கூறினார்கள். “அப்படியானால் நீங்கள் மட்டும் ஏன் இவ்வாறு செய்கிறீர்கள்?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “என் கால்கள் என்னைத் தாங்காது” என்று பதிலளித்தார்கள். (நூல்: புகாரி 827)
நபி (ஸல்) அவர்களுடைய துணைவியார் மைமூனா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சஜ்தாச் செய்யும்போது பின்னாலிருந்து (பார்த்தால்) அவர்களுடைய இரு அக்குள்களின் வெண்மை தென்படும் அளவுக்குத் தம் கைகளை விரித்து (இடைவெளி விட்டு) வைப்பார்கள். அவர்கள் அமர்ந்தால் தமது இடது தொடையின் (காலின்) மீது நிதானமாக அமர்ந்துகொள்வார்கள்.
நூல்: முஸ்லிம் (855)
பின்வரும் ஹதீஸ்கள் இடது காலை விரித்து வைக்க வேண்டும். அதாவது இருப்பிடத்தை தரையில் படுமாறு அமர வேண்டும் என்ற கருத்தைக் கூறுகின்றன.
அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுகையில் (அத்தஹிய்யாத்) அமர்வில் உட்காரும்போது தமது இடது பாதத்தை (வலது) தொடைக்கும் கணைக்காலுக்கும் இடையே (அவற்றுக்குக் கீழே) வைத்து, வலது பாதத்தை விரித்து வைப்பார்கள். தமது இடக் கையை இடது கால் மூட்டின் மீதும், வலக் கையை வலது தொடையின் மீதும் வைத்துத் தமது (சுட்டு) விரலால் சைகை செய்வார்கள்.
நூல்: முஸ்லிம் (1014)
(நபி (ஸல்) அவர்களுடைய துணைவியார்) ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒவ்வோர் இரண்டு ரக்அத்திலும் “அத்தஹிய்யாத்‘ ஓதுவார்கள். (அந்த அமர்வில்) இடது காலை விரித்துவைத்து, வலது காலை நட்டுவைப்பார்கள்.
நூல்: முஸ்லிம் (857)
இந்தச் செய்திகளை மட்டும் படித்தால் அமர்வின் போது இடது காலின் மீது அமர வேண்டுமா? அல்லது இடது காலை விரித்து வைத்து இருப்பிடம் தரையில் இருக்குமாறு அமர வேண்டுமா? என்று குழப்பம் ஏற்படும்.
நபித்தோழர் அபூ ஹுமைத் சாயிதீ அவர்கள் அறிவிக்கும் ஆதாரப்பூர்வமான நபிமொழி இந்தக் குழப்பத்தை நீக்கி தெளிவான முடிவைத் தருகின்றது.
நான்கு ரக்அத் தொழுகையில் இரண்டாவது ரக்அத்தில் அத்தஹிய்யாத் அமர்வின் போது இடது காலின் மீது அமர வேண்டும். நான்காவது ரக்அத்தில் அத்தஹிய்யாத் அமர்வின் போது இருப்பிடம் தரையில் இருக்குமாறு அமர வேண்டும். இவ்வாறு பின்வரும் நபிமொழி கூறுகின்றது.
முஹம்மது பின் அம்ர் பின் அதாஉ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
நான் நபித்தோழர்கள் சிலருடன் அமர்ந்துகொண்டிருந்தேன். அப்போது நபி (ஸல்) அவர்களின் தொழுகையைப் பற்றி பேசிக்கொண்டோம். அங்கிருந்த அபூஹுமைத் அஸ்ஸாஇதீ (ரலி) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தொழுகை பற்றி உங்களில் நானே நன்கு மனனமிட்டுள்ளேன். நபி (ஸல்) அவர்களை நான் பார்த்திருக்கிறேன்; அவர்கள் இரண்டாவது ரக்அத்தில் (அத்தஹிய்யாத் இருப்பில்) அமரும்போது தமது இடக் கால்மீது அமர்ந்து வலக்காலை நட்டு வைப்பார்கள். கடைசி ரக்அத்தில் (அத்தஹிய்யாத் இருப்பில்) அமரும்போது இடது காலை (குறுக்கு வெட்டில் வலப்புறம்) கொண்டு வந்து, வலக் காலை நட்டு வைத்து தமது இருப்பிடம் தரையில் படியுமாறு உட்காருவார்கள்.
நூல்: புகாரி (828)
கடைசி ரக்அத்தில் இருப்பிடம் தரையில் படுமாறு அமர வேண்டும் என மேற்கண்ட செய்தியில் கூறப்பட்டுள்ளது. இதனடிப்படையில் கடமையான தொழுகை இரண்டாக இருந்தாலும் மூன்றாக இருந்தாலும் நான்காக இருந்தாலும் கடைசி ரக்அத்தில் அத்தஹிய்யாத் அமர்வில் இருப்பிடம் தரையில் படுமாறு அமர வேண்டும் என்பதை அறிந்து கொள்ளலாம்.
மேலும் இதே செய்தி வேறு வழிகளிலும் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிவிப்புகளில் இடம்பெற்றுள்ள வாசகங்கள் இறுதி ரக்அத்தில் இவ்வாறு தான் அமர வேண்டும் என்பதைத் தெளிவுபடுத்துகின்றது.
தாரமியில் இடம்பெற்றுள்ள அறிவிப்பில் எந்த ரக்அத்தில் ஸலாம் சொல்லப்படுமோ அந்த ரக்அத்தில் இருப்பிடம் தரையில் படுமாறு அமர வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இப்னு ஹிப்பானில் இடம்பெற்றுள்ள அறிவிப்பில், தொழுகையின் முடிவாக அமையும் ரக்அத்தில் இருப்பிடம் தரையில் படுமாறு அமர வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.
எனவே இரண்டு ரக்அத் கொண்ட ஃபஜர் தொழுகையானாலும் மூன்று ரக்அத் கொண்ட மஃக்ரிப் தொழுகையானாலும் இறுதி ரக்அத்தில் இருப்பிடம் தரையில் இருக்குமாறு அமர வேண்டும்.