எங்கள் (அரசு) அலுவலகத்தில் மாதந்தோறும் ஆளுக்குப் பத்து ரூபாய் வசூலித்து, ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை சாமி போட்டோ வைத்து, பூஜை என்ற பெயரில் பொரி கடலை தருவார்கள். இதைச் சாப்பிடலாமா? வேண்டாம் என்று கூறினால், “நீங்கள் தான் இந்தச் சாமிகளை நம்பவில்லையே! அப்படியானால் வெறும் பொரி கடலை என்று நினைத்துச் சாப்பிட வேண்டியது தானே!’ என்று கேட்கிறார்கள். நம்மைப் பொறுத்த வரை வெறும் சடங்கு தானே! இதைச் சாப்பிடுவதில் என்ன தவறு?

மேலும் இதற்காகப் பத்து ரூபாய் வழங்குவதில் தவறுண்டா?

சாப்பிடக்கூடாது

தாமாகச் செத்தவை, இரத்தம், பன்றியின் இறைச்சி, அல்லாஹ் அல்லாதோருக்காக அறுக்கப் பட்டவை ஆகியவற்றையே அவன் உங்களுக்குத் தடை செய்துள்ளான். வரம்பு மீறாமலும், வலியச் செல்லாமலும் நிர்பந்திக்கப் படுவோர் மீது எந்தக் குற்றமும் இல்லை. அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.
அல்குர்ஆன் 2:173

இந்த வசனத்தில் “அறுக்கப் பட்டவை’ என்று நாம் மொழி பெயர்த்துள்ள இடத்தில் அரபு மூலத்தில் “உஹில்ல’ என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. சப்தமிடப்பட்டவை என்பது இதன் பொருள். அதாவது அல்லாஹ் அல்லாதவர்களின் பெயர் கூறப்பட்ட பொருட்களை உண்ணக் கூடாது என்பதையும் சேர்த்தே இந்த வசனம் கூறுகின்றது.

இந்த அடிப்படையில் தான் சாமிக்குப் படைக்கப்பட்ட உணவுகள் மட்டுமின்றி, முஸ்லிம்கள் என்ற பெயரில் அவ்லியாக்களுக்காகப் படைக்கப்பட்ட உணவுகளையும் உண்ணக் கூடாது என்று கூறி வருகிறோம்.

சாமியை நம்பவில்லை என்பதால் அந்த உணவுகளைச் சாப்பிடலாம் என்று கூற முடியாது. நாம் நம்பா விட்டாலும் அதை வணங்குபவர்கள் அந்த உணவில் புனிதம் இருக்கிறது என்று நம்புகிறார்கள்.

இந்த உணவை இஸ்லாம் தடுத்துள்ளது என்ற அடிப்படையில் தான் உண்ணக் கூடாது என்று கூறுகிறோமே தவிர, அதில் புனிதம் இருப்பதால் சாப்பிடக் கூடாது என்று நாம் கூறவில்லை.

இஸ்லாத்தின் பார்வையில் இது போன்ற பூஜைகள் இறைவனுக்கு இணை கற்பித்தல் என்ற மிகப் பெரும் பாவச் செயலாகும். எனவே இதற்காகப் பணம் கொடுப்பதும் கூடாது. அரசு அலுவலகம் என்பதால் அதில் ஒரு குறிப்பிட்ட மதம் சார்ந்த நிகழ்ச்சியை நடத்துவது அரசியல் சட்ட அடிப்படையிலும் கூடாது என்பதைக் கவனத்தில் கொள்ளவும்.

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *