ஷிர்க் வைக்கும் இமாமைப் பின்பற்றக் கூடாது என்பது சரி.

ஆனால் ஷிர்க்கான காரியங்கள் நடக்கும் பள்ளியில் ஏன் தொழக்கூடாது?

 

பாவமான நான்கு காரியங்கள் நடக்கின்ற பள்ளிக்குச் செல்லக் கூடாது என அல்லாஹ் கூறுகிறான்.

தீங்கிழைப்பதற்காகவும், (ஏக இறைவனை) மறுப்பதற்காகவும், நம்பிக்கை கொண்டோரிடையே பிரிவை ஏற்படுத்திடவும், இதற்கு முன் அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் எதிராகப் போரிட்டோருக்குப் புகலிடமாகவும் ஒரு பள்ளிவாசலை ஏற்படுத்திக் கொண்டோர் “நாங்கள் நல்லதைத் தவிர வேறெதனையும் நாடவில்லை” என்று சத்தியம் செய்கின்றனர். “அவர்கள் பொய்யர்களே” என்று அல்லாஹ் சாட்சி கூறுகிறான்.

(முஹம்மதே!) அதில் நீர் ஒரு போதும் வணங்காதீர்! ஆரம்ப நாள் முதல் இறையச்சத்தின் அடிப்படையில் நிர்மாணிக்கப்பட்ட பள்ளிவாசலே நீர் வணங்குவதற்குத் தகுதியானது. அதில் தூய்மையை விரும்பும் ஆண்கள் உள்ளனர். அல்லாஹ் தூய்மையானவர்களை விரும்புகிறான்.

திருக்குர்ஆன் 9:107

இறைவனை மறுத்தல், பிறருக்குத் தீங்கிழைத்தல், பிரிவை ஏற்படுத்துதல், அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் எதிராக நடப்பவர்களுக்கு புகலிடம் அளித்தல் ஆகிய நான்கு தன்மைகள் உள்ள பள்ளிக்குச் செல்லக் கூடாது என்று அல்லாஹ் கூறுகிறான்.

இந்த வசனத்தில் நான்கு தன்மைகள் சேர்த்துக் கூறப்பட்டிருந்தாலும் வேறு ஆதாரங்களைப் பார்க்கும் போது பெரும்பாவமான இணைவைப்பு என்ற ஒரு பாவம் மட்டும் ஒரு பள்ளியில் நடந்தால் அந்தப் பள்ளிக்கும் போகக் கூடாது என்ற முடிவுக்கு நம்மால் வரமுடியும்.

பள்ளிவாசல்கள் அல்லாஹ்வுக்கே உரியன. எனவே அல்லாஹ்வுடன் வேறு எவரையும் அழைக்காதீர்கள்!

திருக்குர்ஆன் 72:18

அல்லாஹ்வை மட்டும் வணங்கும் இடமே பள்ளிவாசல்கள் என்று அல்லாஹ் கூறுகிறான். ஒரு இடத்தில் அல்லாஹ்வும் வணங்கப்படுகிறான். மவ்லூத் என்ற பெயரால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும், அப்துல் காதர் ஜைலானி, ஹாகுல் ஹமீது ஆகியோரும் வணங்கப்படுகிறார்கள் என்றால் நிச்சயம் அந்த இடம் பள்ளிவாசல் என்ற தகுதியை இழந்து விடுகின்றது. பள்ளிவாசலுக்குக் கிடைக்கும் சிறப்புகள் அந்த இடத்துக்குக் கிடைக்காது.

அல்லாஹ்வின் பெயர் மட்டும் துதிக்கப்படுவதையே பள்ளிகளுக்குரிய தன்மையாக அல்லாஹ் கூறுகிறான்.

அல்லாஹ்வின் பள்ளிவாசல்களில் அவனது பெயர் கூறப்படுவதைத் தடுத்து, அவற்றைப் பாழாக்க முயல்பவனை விடபெரும் அநீதி இழைத்தவன் யார்? பயந்து கொண்டே தவிர அவற்றில் நுழையும் உரிமை அவர்களுக்கு இல்லை. அவர்களுக்கு இவ்வுலகில் இழிவும், மறுமையில் கடுமையான வேதனையுமுண்டு.

திருக்குர்ஆன் 2:114

“எங்கள் இறைவன் அல்லாஹ்வே” என்று அவர்கள் கூறியதற்காகவே நியாயமின்றி அவர்களின் இல்லங்களிலிருந்து வெளியேற்றப்பட்டனர். மனிதர்களில் ஒருவர் மூலம் மற்றவரை அல்லாஹ் தடுத்திருக்காவிட்டால் மடங்களும், ஆலயங்களும், வழிபாட்டுத் தலங்களும், அல்லாஹ்வின் பெயர் அதிகமாகத் துதிக்கப்படும் பள்ளிவாசல்களும் இடிக்கப்பட்டிருக்கும். தனக்கு உதவி செய்வோருக்கு அல்லாஹ்வும் உதவுகிறான். அல்லாஹ் வலிமையுள்ளவன்; மிகைத்தவன்.

திருக்குர்ஆன் 22:40

(இறை) இல்லங்கள் உயர்த்தப்படவும், அதில் அவனது பெயர் நினைக்கப்படவும் அல்லாஹ் கட்டளையிடுகிறான். அதில் காலையிலும், மாலையிலும் அவனை சில ஆண்கள் துதிக்கின்றனர்.

திருக்குர்ஆன் 24:36

எனவே ஓரிடத்தில் அல்லாஹ் அல்லாதவர்களுக்கு வணக்கம் செலுத்தப்பட்டால் அந்த இடத்தில் நாம் அல்லாஹ்வை வணங்குவது தடுக்கப்பட்டிருக்கின்றது. அல்லாஹ் மட்டும் வணங்கப்படும் இடத்திலேயே அல்லாஹ்வை நாம் வணங்க வேண்டும்.

 

Onlinetntj

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]