குர்பானிக்குரிய நாட்கள் எவை?
கடமையாக்கப்பட்ட ஹஜ் மற்றும் கொண்டாட்டத்திற்குரிய தினமான ஹஜ் பெருநாள் ஆகியவற்றில் செய்யப்படும் வணக்க வழிபாடுகளில் குர்பானி கொடுப்பது முக்கியமான ஒன்றாகும்.
முஸ்லிம்கள் காலம் காலமாக துல்ஹஜ் மாதம் பிறை 10 அன்றும், அதைத் தொடர்ந்து பிறை 11, 12, 13 ஆகிய தினங்களிலும் குர்பானி கொடுத்து வருகின்றனர்.
குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் இதுவே சரியானது என்பது தவ்ஹீத் ஜமாஅத்தின் நிலைப்பாடாகும்.
துல்ஹஜ் மாதத்தின் பிறை 11, 12, 13 ஆகிய தினங்கள் ‘அய்யாமுத் தஷ்ரீக்’ என்று அழைக்கப்படும்.
இந்நிலையில் சிலர், ஹஜ் பெருநாள் தினத்தில் மட்டும் தான் குர்பானி கொடுக்க வேண்டும்; பிறை 11, 12, 13 ஆகிய (தஷ்ரீக்) தினங்களில் குர்பானி கொடுக்கக் கூடாது என்று கூறுகின்றனர். தஷ்ரீக்குடைய நாட்களில் குர்பானி கொடுக்கலாம் என்ற கருத்தைத் தரும் ஹதீஸ்கள் அனைத்தும் பலவீனமானவையாக உள்ளன என்பது அவர்களின் வாதமாகும்.
அரபி இணைய தளங்களில் உள்ள செய்திகளைப் படித்து விட்டு இவ்வாறு கூறுகின்றனர்.
துல்ஹஜ் பிறை 10 அன்று குர்பானி கொடுப்பதைப் பற்றி யாரும் கருத்து வேறுபாடு கொள்ளவில்லை.
அய்யாமுத் தஷ்ரீக் நாட்களில் குர்பானி கொடுப்பதைப் பற்றியே இவர்கள் சர்ச்சை செய்வதால் அதை ஆய்வு செய்வோம்.
தஷ்ரீக்குடைய நாட்களில் குர்பானி கொடுக்கலாம் என்ற கருத்தைத் தரும் ஹதீஸ்கள் அனைத்தும் பலவீனமானவையே. எனினும் தஷ்ரீக்குடைய நாட்களில் குர்பானி கொடுக்கலாம் என்பதற்கு வேறு ஆதாரங்கள் உள்ளன.
தஷ்ரீக்குடைய நாட்களில் குர்பானி கொடுப்பது தொடர்பாக வந்துள்ள செய்திகளையும் அவை எவ்வாறு பலவீனமாக உள்ளன என்பதையும் முதலில் விரிவாகக் காண்போம்.
அதன் பின்னர் தஷ்ரீக்குடைய நாட்களில் குர்பானி கொடுக்கலாம் என்பதைத் தக்க சான்றுகளுடன் நிறுவுவோம்.
தஷ்ரீக்குடைய நாட்களில் குர்பானி கொடுப்பது பற்றிய ஹதீஸ்களின் நிலை
தஷ்ரீக்குடைய நாட்களில் குர்பானி கொடுப்பது தொடர்பாக வந்துள்ள செய்திகள் அனைத்தும் மூன்று / நான்கு நபித்தோழர்கள் வழியாகவே அறிவிக்கப்பட்டுள்ளன.
1.ஜுபைர் பின் முத்இம் (ரலி)
2.அபூஸயீத்
3.அபூஹுரைரா (ரலி)
4.பெயர் குறிப்பிடப்படாத நபித்தோழர்
ஜுபைர் பின் முத்இம் (ரலி) அறிவிப்பு
“தஷ்ரீக்குடைய நாட்கள் (துல்ஹஜ் 11, 12, 13) அனைத்தும் அறுப்பதற்குரியதாகும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
مسند أحمد بن حنبل (4/ 82)
16797 – حدثنا عبد الله حدثني أبي ثنا أبو المغيرة قال ثنا سعيد بن عبد العزيز قال حدثني سليمان بن موسى عن جبير بن مطعم عن النبي صلى الله عليه و سلم قال : كل عرفات موقف وارفعوا عن بطن عرنة وكل مزدلفة موقف وارفعوا عن محسر وكل فجاج منى منحر وكل أيام التشريق ذبح
நபி ஸல் அவர்கள் கூறியதாக ஜுபைர் பின் முத்இம் (ரலி) அறிவிக்கக் கூடிய அறிவிப்பு இப்னு ஹிப்பான் 3854, அஹ்மத் 16798, தாரகுத்னீ 4756 – 4758, முஸ்னதுல் பஸ்ஸார் 3444, அல்முஃஜமுல் கபீர் 1562, மஃரிபதுஸ் ஸுனன் வல்ஆஸார் 19114, பைஹகீயின் ஸுனனுஸ் ஸகீர் 1832, பைஹகீயின் அஸ்ஸுனனுல் குப்ரா 10227 உள்ளிட்ட நூல்களில் இடம்பெற்றுள்ளது.
இதன் அனைத்து அறிவிப்புகளிலும் சுலைமான் பின் மூஸா என்பவர் இடம் பெறுகிறார். இவர் ஜுபைர் (ரலி) அவர்களிடமிருந்து நேரடியாகவும் வேறு சில அறிவிப்பாளர்கள் வழியாகவும் அறிவிக்கின்றார்.
சுலைமான் பின் மூஸா, ஜுபைர் (ரலி)இடமிருந்து அறிவிக்கும் நேரடி அறிவிப்புகள்
சுலைமான் பின் மூஸா, ஜுபைர் பின் முத்இம் (ரலி) யிடமிருந்து அறிவிக்கும் நேரடி அறிவிப்புகள் யாவும் தொடர்பு அறுந்த செய்திகளாகும்.
இதை இமாம் இப்னு ஹஜர் அவர்கள் சுட்டிக் காட்டியுள்ளார்கள்.
(பத்ஹுல் பாரி, பாகம் 10, பக்கம் 8)
فتح الباري – ابن حجر (10/ 8(
وفي كل أيام التشريق ذبح أخرجه أحمد لكن في سنده انقطاع
இந்த சுலைமான் பின் மூஸா என்பவர் ஜுபைர் பின் முத்இம் (ரலி) அவர்களின் காலத்தில் வாழ்ந்தவரில்லை. இதைப் பல அறிஞர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
சுலைமான் பின் மூஸாவின் அறிவிப்பை குறிப்பிட்டு இது தொடர்பு அறுந்த செய்தியாகும். அவர் ஜுபைர் பின் முத்இம் (ரலி) காலத்தில் வாழ்ந்தவரில்லை என்று இமாம் இப்னு கஸீர் கூறுகிறார்.
(பார்க்க: இப்னு கஸீர், பாகம் 1, பக்கம் 555)
تفسير ابن كثير (1/ 555(
وهذا أيضا منقطع، فإن سليمان بن موسى هذا -وهو الأشدق -لم يدرك جُبَير بن مطعم.
பைஹகீயின் அஸ்ஸுனனுல் குப்ரா 10227, அஹ்மத் 16798 உள்ளிட்ட நூல்களில் இடம்பெற்றுள்ள செய்திகள் யாவும் சுலைமான் பின் மூஸா என்பவர் ஜுபைர் பின் முத்இம் (ரலி) இடமிருந்து அறிவிப்பதாகவே உள்ளது.
ஜுபைர் பின் முத்இம் (ரலி) காலத்தில் வாழ்ந்திராத ஒருவர் அவரிடமிருந்து செய்திகளை அறிவிப்பது அறவே சாத்தியமற்றதாகும்.
தொடர்பு அறுந்த செய்திகளை ஆதாரமாகக் கொள்ள இயலாது.
சுலைமான் பின் மூஸா, பிறர் மூலமாக அறிவிக்கும் அறிவிப்புகள்
சுலைமான் பின் மூஸா என்பவர் ஜுபைரிடமிருந்து நேரடியாக அறிவிக்காமல் வேறு சிலர் வழியாக அறிவிக்கும் செய்திகளும் உள்ளன. அவைகளும் வெவ்வேறு காரணங்களால் பலவீனமானவை ஆகும்.
அவற்றை விரிவாகக் காண்போம்.
அப்துர் ரஹ்மான் பின் அபீஹுஸைன்
இப்னு ஹிப்பான் 3854, பைஹகீயின் ஸுனனுஸ் ஸகீர் 1832, மஃரிபதுஸ் ஸுனன் வல்ஆஸார் 19114, பைஹகீயின் அஸ்ஸுனனுல் குப்ரா 19241, முஸ்னதுல் பஸ்ஸார் 3444 உள்ளிட்ட நூல்களில் இடம்பெறும் அறிவிப்புகளில் சுலைமான் பின் மூஸாவுக்கும் ஜுபைருக்கும் இடையில் அப்துர் ரஹ்மான் பின் அபீஹுஸைன் என்பவர் இடம்பெறுகிறார்.
صحيح ابن حبان مع حواشي الأرناؤوط كاملة (9/ 166(
3854 أخبرنا أحمد بن الحسن بن عبد الجبار الصوفي ببغداد، حدثنا أبو نصر التمار عبد الملك بن عبد العزيز القشيري في شوال سنة سبع وعشرين ومئتين، حدثنا سعيد بن عبد العزيز، عن سليمان بن موسى، عن عبد الرحمن بن أبي حسين، عن جبير بن مطعم قال: قال رسول الله صلى الله عليه وسلم: “كل عرفات موقف، وارفعوا عن عرنة، وكل مزدلفة موقف، وارفعوا عن محسر، فكل فجاج منى منحر، وفي كل أيام التشريق ذبح”
இந்த அறிவிப்புகளை பொறுத்தளவில் ஜுபைர் பின் முத்இம் (ரலி) அவர்களிடமிருந்து அறிவிக்கின்ற அப்துர் ரஹ்மான் பின் அபீ ஹுஸைன் என்பவரது நம்பகத்தன்மை ஹதீஸ் கலை வல்லுனர்களால் உறுதி செய்யப்படவில்லை.
இமாம் இப்னு ஹிப்பான் மட்டுமே அவரை நம்பகமானவர் பட்டியலில் சேர்த்துள்ளார்.
இப்னு ஹிப்பான் அவர்கள் யாரென்று அறியப்படாதவர்களையும் நம்பகமானவர் பட்டியலில் சேர்க்கும் வழக்கமுடையவர் ஆவார்.
எனவே பிற அறிஞர்கள் அவரது நம்பகத்தன்மை குறித்து எதுவும் கூறாத காரணத்தால் அப்துர் ரஹ்மானின் நம்பகத்தன்மை உறுதி செய்யப்படவில்லை என்றாகிறது.
நம்பகத்தன்மை உறுதி செய்யப்படாதவரின் அறிவிப்புகள் ஆதாரப்பூர்வமானவை என்ற தரத்தை அடையாது. அத்தகையவர்களின் அறிவிப்புகள் ஏற்கப்படாது.
எனவே அப்துர் ரஹ்மான் பின் அபீ ஹுஸைன் என்பவர் இடம்பெற்றுள்ள இந்த அறிவிப்புகள் யாவும் ஏற்க முடியாத, பலவீனமான செய்திகளாகி விடுகிறது.
நாபிஉ பின் ஜுபைர்
இன்னும் சில நூல்களில் சுலைமான் பின் மூஸா அவர்களுக்கும் ஜுபைர் பின் முத்இம் (ரலி) அவர்களுக்கும் இடையில் நாபிஉ என்பார் இடம்பெறுகிறார். இவர் ஜுபைர் பின் முத்இம் (ரலி) என்பாரின் மகன் ஆவார்.
நாபிஉவின் அறிவிப்பு தாரகுத்னீ 4756, அஸ்ஸுனனுஸ் ஸகீர் 1833, பைஹகீயின் அஸ்ஸுனனுல் குப்ரா 10227, அல்முஃஜமுல் கபீர் 1562 உள்ளிட்ட நூல்களில் இடம் பெறுகிறது.
سنن الدارقطني ـ تدقيق مكتب التحقيق (5/ 511(
4756- حَدَّثَنَا يَحْيَى بْنُ مُحَمَّدِ بْنِ صَاعِدٍ ، حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنْصُورِ بْنِ سَيَّارٍ ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بُكَيْرٍ الْحَضْرَمِيُّ ، حَدَّثَنَا سُوَيْدُ بْنُ عَبْدِ الْعَزِيزِ عَنْ سَعِيدِ بْنِ عَبْدِ الْعَزِيزِ التَّنُوخِيِّ عَنْ سُلَيْمَانَ بْنِ مُوسَى عَنْ نَافِعِ بْنِ جُبَيْرِ بْنِ مُطْعِمٍ عَنْ أَبِيهِ أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم قَالَ أَيَّامُ التَّشْرِيقِ كُلُّهَا ذَبْحٌ
இந்த நாபிஉ அவர்களிடம் எந்தக் குறையும் பிரச்சனையும் இல்லை என்றிருந்தாலும் இவர் மூலமாக அறிவிக்கப்படும் அனைத்து அறிவிப்புகளிலும் சுவைத் பின் அப்துல் அஸீஸ் என்பவர் இடம்பெறுகிறார். இவர் ஹதீஸ்கலை அறிஞர்களிடத்தில் பலவீனமானவர் ஆவார்.
இமாம் அஹ்மத், அபூஹாத்திம், நஸாயீ உள்ளிட்ட பல அறிஞர்கள் இவரை பலவீனமானவர் என்று விமர்சித்துள்ளனர்.
பார்க்க: மீஸானுல் இஃதிதால், பாகம் 2, பக்கம் 251
எனவே இக்காரணத்தால் இந்த அறிவிப்புகளும் பலவீனமடைகிறது.
அம்ர் பின் தீனார்
பைஹகீயின் அஸ்ஸுனனுல் குப்ரா 19243, தாரகுத்னீ 4758 ஆகிய அறிவிப்புகளில் ஜுபைர் பின் முத்இம் (ரலி) யிடமிருந்து அம்ர் பின் தீனார் என்பவர் அறிவிக்கும் வகையில் உள்ளது.
السنن الكبرى للبيهقي (9/ 498(
19243وَرُوِيَ مِنْ وَجْهٍ آخَرَ عَنْ سُلَيْمَانَ، كَمَا أَخْبَرَنَا أَبُو بَكْرِ بْنُ الْحَارِثِ، أنبأ عَلِيُّ بْنُ عُمَرَ الْحَافِظُ، ثنا أَبُو بَكْرٍ النَّيْسَابُورِيُّ، ثنا أَحْمَدُ بْنُ عِيسَى الْخَشَّابُ، ثنا عَمْرُو بْنُ أَبِي سَلَمَةَ، ثنا أَبُو مُعَيْدٍ، عَنْ سُلَيْمَانَ بْنِ مُوسَى، أَنَّ عَمْرَو بْنَ دِينَارٍ حَدَّثَهُ، عَنْ جُبَيْرِ بْنِ مُطْعِمٍ رَضِيَ اللهُ عَنْهُ , أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: “ كُلُّ أَيَّامِ التَّشْرِيقِ ذَبْحٌ “
இந்த அறிவிப்புகளும் பலவீனமானவையாகும். ஏனெனில் இதில் அஹ்மத் பின் ஈஸா என்பவர் இடம் பெறுகிறார்.
இவர் ஹதீஸ்துறை அறிஞர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டவர் ஆவார்.
ميزان الاعتدال (1/ 126(
508 أحمد بن عيسى التنيسى الخشاب.
قال ابن عدى: له مناكيرஞ்وقال الدارقطني: ليس بالقوى وقال ابن طاهر: كذاب، يضع الحديث
இவரிடத்தில் மறுக்கப்பட வேண்டிய செய்திகள் உள்ளன என்று இமாம் இப்னு அதீ அவர்களும் இவர் வலுவானர் அல்ல என்று தாரகுத்னீ அவர்களும் இவர் பொய்யர், செய்திகளை இட்டுக்கட்டுபவர் என்று இப்னு தாஹிர் அவர்களும் குறைகூறியுள்ளனர்.
நூல்: மீஸானுல் இஃதிதால்,
பாகம்: 1, பக்கம்: 126.
எனவே இந்தச் செய்தியும் ஏற்புடையதல்ல என்று தெளிவாகிறது.
இதுவரை நாம் பார்த்தவற்றின் சுருக்கம்:
சுலைமான் பின் மூஸா என்பவர் ஜுபைர் பின் முத்இம் (ரலி) அவர்களிடமிருந்து நேரடியாக அறிவிப்பது தொடர்பு அறுந்த செய்தி. ஏனெனில் அவர் ஜுபைர் பின் முத்இம் (ரலி) அவர்களின் காலத்தில் இருந்தவரல்ல.
சுலைமான் பின் மூஸாவிற்கும் ஜுபைர் பின் முத்இம் (ரலி) க்கும் இடையில் சில அறிவிப்புகளில் அப்துர் ரஹ்மான் வருகிறார். அப்துர் ரஹ்மானின் நம்பகத்தன்மை உறுதி செய்யப்படவில்லை
சில அறிவிப்புகளில் நாஃபிஉ வருகிறார். நாபிஉவின் அறிவிப்பில் பலவீனமான சுவைத் இடம்பெறுகிறார்
சில அறிப்புகளில் அம்ர் பின் தீனார் வருகிறார். அம்ர் பின் தீனாரின் அறிவிப்பில் பலவீனமான அஹ்மத் பின் ஈஸா இடம்பெறுகிறார்.
ஆக, ஜுபைர் பின் முத்இம் (ரலி) மூலம் அறிவிக்கப்படும் அறிவிப்புகள் அனைத்தும் ஏதேனும் விதத்தில் பலவீனமானவையாகவே உள்ளன.
அடுத்து அபூஸயீத், அபூஹுரைரா (ரலி) ஆகியோரின் அறிவிப்புகளைப் பார்ப்போம்.
அபூஸயீத் (ரலி), அபூஹுரைரா (ரலி) அவர்கள் வழியாக வரும் செய்திகள்
தஷ்ரீக்குடைய நாட்கள் அனைத்திலும் குர்பானி கொடுக்கலாம் என்ற கருத்தில் நபியவர்கள் கூறியதாக அபூஸயீத் (ரலி) – அபூஹுரைரா (ரலி) அறிவிக்கும் செய்தி பைஹகீயின் ஸுனனுல் குப்ராவில் பதிவாகியுள்ளது.
و السنن الكبرى للبيهقي (9/ 499(
19245 وَرَوَاهُ مُعَاوِيَةُ بْنُ يَحْيَى الصَّدَفِيُّ عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيِّبِ، مَرَّةً عَنْ أَبِي سَعِيدٍ وَمَرَّةً عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُمَا عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: “ أَيَّامُ التَّشْرِيقِ كُلُّهَا ذَبْحٌ “. أَخْبَرَنَاهُ أَبُو سَعْدٍ الْمَالِينِيُّ , أنبأ أَبُو أَحْمَدَ بْنُ عَدِيٍّ الْحَافِظُ , أنبأ عَبْدُ اللهِ بْنُ مُحَمَّدِ بْنِ مُسْلِمٍ , ثنا دُحَيْمٌ , ثنا مُحَمَّدُ بْنُ شُعَيْبٍ , ثنا مُعَاوِيَةُ بْنُ يَحْيَى , فَذَكَرَهُ وَقَالَ: عَنْ أَبِي سَعِيدٍ.
தஷ்ரீக்குடைய நாட்கள் (துல்ஹஜ் 11, 12, 13) அனைத்தும் அறுப்பதற்குரியதாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல்: ஸுனனுல் குப்ரா 19245
இந்த செய்தியை அறிவிக்கும் ஸயீத் பின் அல்முஸய்யப் அவர்கள் அபூஹுரைரா (ரலி) யிடமிருந்தும் இதை கேட்டுள்ளார். அபூஸயீத் (ரலி) அவர்களிடமிருந்தும் கேட்டுள்ளார். எனவே தான் இரண்டு நபித்தோழர்களின் பெயர்களும் இதில் இடம்பெற்றுள்ளது.
ஆனால் இந்த அறிவிப்பில் முஆவியா பின் யஹ்யா அஸ்ஸதபீ என்பார் இடம்பெறுகிறார். இவர் பலவீமானவர் ஆவார். எனவே இவரது செய்தியை ஏற்க முடியாது.
இந்தச் செய்தியைப் பதிவு செய்த இமாம் பைஹகீ அவர்களே அச்செய்தியின் தொடர்ச்சியில் இவர் பலவீனமானவர், இவர் ஆதாரமாகக் கொள்ளப்பட மாட்டார் என்பதையும் சேர்த்தே குறிப்பிடுகிறார்.
السنن الكبرى للبيهقي (9/ 499(
19246 وَأَخْبَرَنَا أَبُو سَعْدٍ، أنبأ أَبُو أَحْمَدَ، ثنا جَعْفَرُ بْنُ أَحْمَدَ بْنِ عَاصِمٍ، ثنا دُحَيْمٌ، ثنا مُحَمَّدُ بْنُ شُعَيْبٍ، عَنِ الصَّدَفِيِّ، فَذَكَرَهُ وَقَالَ: عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ. قَالَ أَبُو أَحْمَدَ: وَهَذَا سَوَاءٌ قَالَ: عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَعِيدٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ وَسَوَاءٌ قَالَ: عَنِ الزُّهْرِيِّ، عَنِ ابْنِ الْمُسَيِّبِ، عَنْ أَبِي سَعِيدٍ، جَمِيعًا غَيْرُ مَحْفُوظَيْنِ لَا يَرْوِيهُمَا غَيْرُ الصَّدَفِيِّ. قَالَ الشَّيْخُ رَحِمَهُ اللهُ: وَالصَّدَفِيُّ ضَعِيفٌ لَا يُحْتَجُّ بِهِ
முஆவியா பின் யஹ்யா அஸ்ஸதபீ என்பவர் இடம் பெறும் இந்த அறிவிப்பை ஏற்கலாம் என்று சிலர் வாதிடுகின்றனர்.
அதற்கு அவர்கள் கூறும் காரணம், இவர் ஷாம் பிரதேசத்தில் அறிவித்தவற்றை ஏற்கலாம். ரய்யி எனும் பகுதியில் அறிவித்தவையே குளறுபடியானவை என்று பிரித்துக் கூறுகின்றனர்.
இந்தச் செய்தி ஷாம் பிரதேசத்தில் அறிவித்தாகும். எனவே இதை ஏற்கலாம் என்கின்றனர். இது சரியான கருத்தல்ல.
இவரைப் பற்றி வந்துள்ள அனைத்து விமர்சனத்தையும் ஆராய்ந்தால் இவர் மொத்தமாகவே பலவீனமானவர் என்ற முடிவே சரி என்பதை அறியலாம்.
இவரைப் பற்றிய அறிஞர்களின் விமர்சனங்களைக் காண்போம்.
அறிஞர்களின் விமர்சனங்கள்
الجرح والتعديل (8/ 384(
نا عبد الرحمن قال سألت ابا زرعة عن معاوية بن يحيى الصدفى فقال: ليس بقوى. احاديثه كلها مقلوبة، ما حدث (1) بالرى، والذى حدث بالشام احسن حالا.
முஆவியா பின் யஹ்யா வலுவானவர் அல்ல. ரய்யி பகுதியில் இவரிடமிருந்து அறிவிக்கப்பட்ட செய்திகள் அனைத்தும் புரட்டப்பட்டவையாகும். ஷாமில் அறிவிக்கப்பட்டவை நல்ல நிலையில் உள்ளவையாகும் என அபூஸுர்ஆ அவர்கள் கூறியுள்ளார்.
நூல்: அல்ஜரஹ் வத்தஃதீல், பாகம் 8, பக்கம் 384
ميزان الاعتدال (4/ 138(
8635معاوية بن يحيى [ ت، ق ]، أبو روح الصدفى الدمشقي.
ولى نظر (2) الرى للمهدى. وحدث عن مكحول، والزهرى، وطائفة. وعنه محمد بن شعيب، والهقل، وإسحاق بن سليمان الرازي، وآخرون. قال البخاري: روى عن الزهري أحاديث مستقيمة (3)، كأنها من كتاب، فروى عنه عيسى بن يونس، وإسحاق الرازي أحاديث مناكير، كأنها من حفظه. وقال ابن معين: ليس بشئ [ وقال أبو زرعة ] (4): أحاديثه كلها مقلوبة. وقال الدارقطني وغيره: ضعيف. وقال ابن حبان: كان يسرق الكتب ويحدث بها، ثم تغير حفظه.
இவர் ஸுஹ்ரியிடமிருந்து சரியான செய்திகளை அறிவித்துள்ளார். அவை புத்தகத்திலிருந்து அறிவிக்கப்பட்டவை போன்றுள்ளது. ஈஸா பின் யூனுஸ், இஸ்ஹாகுர் ராஸி ஆகியோர் இவரிடமிருந்து மறுக்கப்பட வேண்டிய செய்திகளை அறிவித்துள்ளார்கள். அவை அவரது மனனத்திலிருந்து அறிவிக்கப்பட்டவை போன்றாகும்.
இவ்வாறு இமாம் புகாரி அவர்கள் விமர்சித்துள்ளதாக தஹபீ கூறுகிறார்.
இவர் ஒரு பொருட்டாகக் கருதப்படமாட்டார் என்று இப்னு மயீன் அவர்களும், இவரது மொத்த ஹதீஸ்களும் புரட்டப்பட்டவையாகும் என்று அபூஹாத்திம் அவர்களும், இமாம் தாரகுத்னீ மற்றும் ஏனையோர் இவரை பலவீனமானவர் என்றும், இவர் புத்தகங்களைத் திருடி அதிலிருந்து அறிவிப்பவராக இருந்தார். மேலும் இவரது நினைவாற்றல் குழம்பி விட்டது என்று இமாம் இப்னு ஹிப்பான் அவர்களும் விமர்சித்துள்ளார்கள்.
இந்தச் செய்திகளை இமாம் தஹபீ கூறுகிறார்.
நூல்: மீஸானுல் இஃதிதால்,
பாகம்: 4, பக்கம்: 138
الضعفاء للبخاري – مكتبة ابن عباس (ص: 127(
366 معاوية بن يحيى الصدفي: دمشقي، وكان على بيت المال بالري، عن الزهري، وروى عنه عيسى بن يونس، وإسحاق بن سليمان أحاديث مناكير، كأنها من حفظه، اشترى كتابا من السوق للزهري، فجعل يرويه عن الزهري.
இமாம் புகாரி அவர்கள் தனது அல்லுஅபாஉ – பலவீனமானவர்கள் – எனும் புத்தகத்தில் இவரைப் பட்டியலிட்டுள்ளார். கடைவீதியில் (விற்கப்படும்) ஸுஹ்ரியின் புத்தகத்தை விலைக்கு வாங்கி ஸுஹ்ரியிடமிருந்து அறிவிப்பவராக ஆக்கிக் கொண்டார் என்ற விமர்சனத்தையும் இவர் மீது வைத்துள்ளார்கள்.
நூல்: அல்லுஅபாஉ பாகம்: 1, பக்கம்: 127
الضعفاء والمتروكين لابن الجوزي (3/ 128(
3364 معاوية بن يحيى أبو يحيى الصدفي كان على بيت المال يروي عن الزهري وسعيد بن أبي أيوب وخالد الحذاء وروى عنه الهقل بن زياد قال يحيى ليس بشيء وقال مرة هالك ليس بشيء وقال ابن المديني والنسائي والدراقطني ضعيف وقال السعدي ذاهب الحديث
இமாம் இப்னுல் ஜவ்சீ அவர்கள், பலவீனமானவர்கள் மற்றும் புறக்கணிக்கப்பட வேண்டியவர்கள் என்ற நூலில் இவரைப் பற்றி கீழ்க்கண்ட தகவல்களைத் தருகிறார்.
இப்னு மயீன் அவர்கள் இவரை நாசக்காரர், இவர் பொருட்டாகக் கருதப்பட மாட்டார் என்று விமர்சித்துள்ளார்.
ஸஃதீ என்பவர் இவரை ஹதீஸ் துறையில் தகுதியற்றவர் என்றும்
அலீ இப்னுல் மதீனீ, நஸாயீ, தாரகுத்னீ ஆகியோர் இவரை பலவீனமானவர் என்று குறை கூறியுள்ளனர்.
நூல்: அல்லுஅபாஉ வல்மத்ரூகீன்
பாகம்: 3, பக்கம்: 128
இதுவல்லாத இன்னும் பல அறிஞர்களும் இவரை பலவீனமானவர் என்ற பட்டியலிலே கொண்டு வந்துள்ளார்கள்.
இந்த விமர்சனங்களிலிருந்து பெறப்படும் கருத்து:
முஆவியா பின் யஹ்யா மீது இரண்டு விதமான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
அவரது நினைவாற்றல் குழம்பி விட்டது
புத்தகங்களை விலைக்கு வாங்கியும் திருடியும் அதிலிருந்து அறிவிப்பவர்.
இதில் இறுதிக்காலத்தில் நினைவாற்றல் குழம்பி விட்டார் என்பது மட்டுமே இவர் மீதான விமர்சனம் என்றிருந்தால் அவரது செய்திகளைப் பிரித்து வகைப்படுத்தலாம்.
ஆனால் இமாம் இப்னு ஹிப்பான் மற்றும் இமாம் புகாரி ஆகியோரின் விமர்சனம் அதிக கவனத்திற்குரியதாகும்.
பிறரது புத்தகங்களைத் திருடி அதிலிருந்து அறிவிக்கும் வழக்கமுடையவராக இவர் இருந்திருக்கிறார் என்பது இவர் மீதான பாரதூரமான குற்றச்சாட்டாகும்.
பொதுவாக ஒருவரது புத்தகத்திலிருந்து அறிவிப்பதாக இருந்தால் அதற்கென்று ஒரு விதி உண்டு.
அப்புத்தகத்தில் உள்ளவை தமது அறிவிப்புகள் தாம் என்பதைக் குறிப்பிட்ட ஆசிரியரின் ஒப்புதல் பெற்ற பிறகே அதிலிருந்து அறிவிக்கும் உரிமையை ஒருவர் பெறுவார்.
ஆனால் இந்த முஆவியா என்பவர் இவ்வாறான ஒப்புதல் பெறாமல் மற்றவரின் புத்தகங்களில் உள்ளதைத் தாம் நேரடியாக கேட்டது போல அறிவிப்பார் என்பது தான் இவர் மீதான குற்றச்சாட்டு.
நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட இந்தச் செய்தியை முஆவியா பின் யஹ்யா ஸுஹ்ரியிடமிருந்து அறிவிக்கின்றார்.
ஸுஹ்ரியின் ஹதீஸ்கள் என்று கடைவீதியில் விற்கப்படும் செய்தித் தொகுப்புகளை விலைக்கு வாங்கி அதிலுள்ளவற்றை ஸுஹ்ரியிடமிருந்து நேரடியாகக் கேட்டது போன்று அறிவிப்பார் என்று புகாரி இமாம் கூறியுள்ளது கவனித்தக்கது.
இவ்வாறான விமர்சனம் வைக்கப்பட்ட ஒருவரின் எந்த அறிவிப்பையும் ஒரு போதும் ஏற்க இயலாது.
அதனால் தான் இமாம் இப்னு ஹஜர் அவர்கள் இவர் மீதான விமர்சனங்கள் அனைத்தையும் அறிந்து கொண்டு, பலவீனமானவர் என்று கூறுகிறார்.
تقريب التهذيب : ابن حجر (2/ 538)
6772- معاوية ابن يحيى الصدفي أبو روح الدمشقي سكن الري ضعيف وما حدث بالشام أحسن مما حدث بالري من السابعة ت ق
பலவீனமானவர் என்று கூறிய பிறகே ரய்யி பகுதியில் அறிவிக்கப்பட்டதை விட ஷாம் பகுதியில் அறிவிக்கப்பட்டவை (சற்று சிறந்ததாக இருப்பதால்) நல்லவை என்று ஒப்பீடு செய்து கருத்துக் கூறுகிறார்.
பார்க்க: தக்ரீபுத் தஹ்தீப், பாகம்: 2, பக்கம்: 538
கடைவீதியில் வாங்கிய புத்தகங்களிலிருந்து அறிவிப்பவர் என்றாகி விட்ட போது அது ஷாமில் அறிவித்தாலும் ரய்யி பகுதியில் அறிவித்தாலும் மறுக்கப்பட வேண்டியதே என்பதில் சந்தேகமில்லை.
எனவே இதன் படி தஷ்ரீக்குடைய நாட்கள் அனைத்திலும் குர்பானி கொடுக்கலாம் என்ற கருத்தில் நபியவர்கள் கூறியதாக அபூஸயீத் (ரலி) மற்றும் அபூஹுரைரா (ரலி) அறிவிக்கும் செய்தியும் பலவீனமான செய்தியாகும்.
பெயர் குறிப்பிடப்படாத நபித்தோழரின் அறிவிப்பு
தஷ்ரீக்குடைய நாட்களில் குர்பானி கொடுக்கலாம் என்ற கருத்தைத் தெரிவிப்பதாகப் பின்வரும் செய்தியும் குறிப்பிடப்படுகிறது.
سنن البيهقي الكبرى (9/ 296(
19026 – وأخبرنا علي بن أحمد بن عبدان أنبأ أحمد بن عبيد ثنا الحارث بن أبي أسامة ثنا روح بن عبادة عن بن جريج أخبرني عمرو بن دينار أن نافع بن جبير بن مطعم رضي الله عنه أخبره عن رجل من أصحاب النبي صلى الله عليه و سلم قد سماه نافع فنسيته أن النبي صلى الله عليه و سلم قال لرجل من غفار : قم فأذن إنه لا يدخل الجنة إلا مؤمن وأنها أيام أكل وشرب أيام منى زاد سليمان بن موسى وذبح يقول أيام ذبح بن جريج يقوله
“இறைநம்பிக்கையாளரைத் தவிர வேறு யாரும் சொர்க்கத்தில் நுழைய முடியாது. மினாவுடைய நாட்கள் (பிறை 11, 12, 13) உண்ணுவது மற்றும் பருகுவதற்குரிய நாட்களாகும். இதனை எழுந்து அறிவிப்பு செய்வீராக” என்று நபி (ஸல்) அவர்கள் கிபார் குலத்தைச் சார்ந்த மனிதரிடம் கூறினார்கள்.
சுலைமான் என்ற அறிவிப்பாளர் மினாவுடைய நாட்கள் அறுப்பதற்குரிய நாட்களுமாகும் என்ற வார்த்தையைக் கூடுதலாக அறிவித்துள்ளார். இதை இப்னு ஜுரைஜ் கூறியுள்ளார்.
நூல்: பைஹகீ 19026
இச்செய்தில் மினாவுடைய நாட்கள் உண்பதற்கும் பருகுவதற்கும் உரியவை என்பது தான் நபி கூறியதாக உள்ளது.
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான இப்னு ஜுரைஜ் என்பவர் மினாவுடைய நாட்கள் குர்பானிக்குரியவை என்று சுலைமான் கூடுதலாக கூறியதாக அறிவிக்கின்றார். அதற்குரிய முழுமையான அறிவிப்பாளர் வரிசையை இப்னு ஜுரைஜ் குறிப்பிடவில்லை.
எனவே மினாவுடைய நாட்கள் அறுப்பதற்குரியதாகும் என்ற வார்த்தை நபியின் வார்த்தையாகக் கருதப்பட மாட்டாது.
துல்ஹஜ் பிறை 11, 12, 13 ஆகிய நாட்கள் குர்பானி கொடுப்பதற்குரிய நாட்களாகும் என்று நபி (ஸல்) அவர்கள் நேரடியாகக் கூறிய செய்திகள் அனைத்தும் பலவீனமானவையாகவே உள்ளன என்பது இதன் மூலம் தெளிவாகிறது.
எத்தனை நாட்கள் குர்பானி கொடுக்கலாம்?
அப்படியானால் தஷ்ரீக்குடைய நாட்களில் குர்பானி கொடுக்கக் கூடாதா? பெருநாளில் மட்டும் தான் குர்பானி கொடுக்க வேண்டுமா? என்ற கேள்வி எழலாம்.
தஷ்ரீக்குடைய நாட்களில் குர்பானி கொடுப்பது தொடர்பான செய்திகள் அனைத்தும் பலவீனம் தான் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால் அதை மட்டும் வைத்துக் கொண்டு பெருநாள் தினத்தில் மட்டும் தான் குர்பானி கொடுக்க வேண்டும். மற்ற (தஷ்ரீக்) நாட்களில் குர்பானி கொடுக்க கூடாது என்று கூறுவது ஏற்க முடியாத ஒன்றாகும்.
இன்னும் சொல்வதாக இருந்தால் ஹஜ் பெருநாள் ஒரு நாளில் மட்டும் தான் குர்பானி கொடுக்க வேண்டும் என்று கூறுவது திருக்குர்ஆனுக்கே எதிரான கருத்தாகும்.
இந்தக் கருத்து எப்படி திருக்குர்ஆனுக்கு எதிரானது என்பதைப் பார்ப்போம்.
குர்ஆன் வசனம் கூறுவதென்ன?
وَأَذِّنْ فِي النَّاسِ بِالْحَجِّ يَأْتُوكَ رِجَالًا وَعَلَى كُلِّ ضَامِرٍ يَأْتِينَ مِنْ كُلِّ فَجٍّ عَمِيقٍ (27) لِيَشْهَدُوا مَنَافِعَ لَهُمْ وَيَذْكُرُوا اسْمَ اللَّهِ فِي أَيَّامٍ مَعْلُومَاتٍ عَلَى مَا رَزَقَهُمْ مِنْ بَهِيمَةِ الْأَنْعَامِ فَكُلُوا مِنْهَا وَأَطْعِمُوا الْبَائِسَ الْفَقِيرَ (28) )الحج: 27، 28(
மக்களுக்கு ஹஜ்ஜைப் பற்றி அறிவிப்பீராக! அவர்கள் உம்மிடம் நடந்தும், ஒவ்வொரு மெலிந்த ஒட்டகத்தின் மீதும் வருவார்கள். அவை அவர்களைத் தொலைவிலுள்ள ஒவ்வொரு பாதையிலிருந்தும் கொண்டு வந்து சேர்க்கும். அவர்கள் தங்களுடைய பயன்களை அடைவதற்காகவும், அறியப்பட்ட நாட்களில் அவர்களுக்கு அவன் அளித்த கால்நடைகளின் மீது அல்லாஹ்வின் பெயரைக் கூறுவதற்காகவும் (வருவார்கள்.) அதை நீங்களும் உண்ணுங்கள்! கஷ்டப்படும் ஏழைகளுக்கும் கொடுங்கள்!
அல்குர்ஆன் 22:27, 28
மேற்கண்ட வசனம் ஹஜ்ஜைப் பற்றிப் பேசுகிறது. ஹஜ்ஜின் போது, ‘அறியப்பட்ட நாட்களில் அவர்கள் குர்பானி கொடுப்பார்கள்’ என்று அல்லாஹ் கூறுகிறான்.
‘கால்நடைகளின் மீது அல்லாஹ்வின் பெயரைக் கூறுதல்’ என்பது கால்நடைகளை அறுப்பதைப் பற்றி குறிக்கும் சொல்லாடலாகும்.
குர்பானிக்குரியவை அறியப்பட்ட நாட்கள் என்று இறைவன் பன்மையாகக் கூறிய பின் ஒரு நாள் மட்டும் தான் குர்பானி கொடுக்கப்பட வேண்டும் என்று சொல்பவர்கள் குர்ஆனுக்கு எதிராகச் சொல்கிறார்கள்.
தஷ்ரீக்குடைய நாட்களில் குர்பானி கொடுப்பது தொடர்பாக, நேரடியாக வந்துள்ள செய்திகள் அனைத்தும் பலவீனமானவையாக உள்ளன என்றாலும் அதன் மூலம் குர்பானிக்குரிய நாட்கள் ஒரு நாள் மட்டும் தான் என்று வாதிட முடியாது என்பதை இவ்வசனம் உறுதிப்படுத்தி விடுகிறது.
ஏனெனில் அறியப்பட்ட நாட்கள் என்ற சொல்லின் மூலம் அறுப்பதற்குப் பல நாட்கள் உள்ளன என்பதைத் தெளிவுபட இவ்வசனம் எடுத்துரைத்து விட்டது.
அப்படியானால் அந்த அறியப்பட்ட நாட்கள் எவை என்ற கேள்வி நமக்கு முன்னே உள்ளது.
குர்பானியின் நாட்கள் எவை?
அவர்கள் தங்களுடைய பயன்களை அடைவதற்காகவும், அறியப்பட்ட நாட்களில் அவர்களுக்கு அவன் அளித்த கால்நடைகளின் மீது அல்லாஹ்வின் பெயரைக் கூறுவதற்காகவும் (வருவார்கள்.) அதை நீங்களும் உண்ணுங்கள்! கஷ்டப்படும் ஏழைகளுக்கும் கொடுங்கள்!
அல்குர்ஆன் 22:28
அல்லாஹ், ஹஜ்ஜுக்கு அறிவிப்பு செய்யும் போது ஹஜ்ஜின் ஒரு பகுதியாகக் குர்பானி கொடுப்பதையும் கூறுகிறான். குர்பானி என்பது ஹஜ்ஜின் ஒரு அம்சமாகும்.
ஹஜ்ஜுடைய நாட்களில் குர்பானியின் துவக்க நேரத்தை நபியவர்கள் கூறிவிட்டார்கள்.
துல்ஹஜ் பிறை 10ஆம் நாள் தொழுகைக்குப் பிறகிலிருந்து தான் குர்பானி கொடுக்க வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் வழிகாட்டி விட்டார்கள்.
صحيح البخاري ـ حسب ترقيم فتح الباري (2/ 21(
955- حَدَّثَنَا عُثْمَانُ قَالَ : حَدَّثَنَا جَرِيرٌ ، عَنْ مَنْصُورٍ ، عَنِ الشَّعْبِيِّ ، عَنِ الْبَرَاءِ بْنِ عَازِبٍ ، رَضِيَ اللَّهُ عَنْهُمَا ، قَالَ : خَطَبَنَا النَّبِيُّ صلى الله عليه وسلم يَوْمَ الأَضْحَى بَعْدَ الصَّلاَةِ فَقَالَ مَنْ صَلَّى صَلاَتَنَا وَنَسَكَ نُسُكَنَا فَقَدْ أَصَابَ النُّسُكَ ، وَمَنْ نَسَكَ قَبْلَ الصَّلاَةِ ، فَإِنَّهُ قَبْلَ الصَّلاَةِ ، وَلاَ نُسُكَ لَهُ فَقَالَ أَبُو بُرْدَةَ بْنُ نِيَارٍ خَالُ الْبَرَاءِ يَا رَسُولَ اللهِ فَإِنِّي نَسَكْتُ شَاتِي قَبْلَ الصَّلاَةِ وَعَرَفْتُ أَنَّ الْيَوْمَ يَوْمُ أَكْلٍ وَشُرْبٍ وَأَحْبَبْتُ أَنْ تَكُونَ شَاتِي أَوَّلَ مَا يُذْبَحُ فِي بَيْتِي فَذَبَحْتُ شَاتِي وَتَغَدَّيْتُ قَبْلَ أَنْ آتِيَ الصَّلاَةَ قَالَ شَاتُكَ شَاةُ لَحْمٍ قَالَ يَا رَسُولَ اللهِ فَإِنَّ عِنْدَنَا عَنَاقًا لَنَا جَذَعَةً هِيَ أَحَبُّ إِلَيَّ مِنْ شَاتَيْنِ أَفَتَجْزِي عَنِّي قَالَ نَعَمْ وَلَنْ تَجْزِيَ عَنْ أَحَدٍ بَعْدَكَ
நபி (ஸல்) அவர்கள் ஹஜ்ஜுப் பெருநாள் தினத்தில் தொழுகைக்குப் பின் எங்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். (அவ்வுரையில்) “யார் நமது தொழுகையைத் தொழுது (அதன் பிறகு) நாம் குர்பானி கொடுப்பது போன்று கொடுக்கிறாரோ அவரே உண்மையில் குர்பானி கொடுத்தவர் ஆவார். யார் தொழுகைக்கு முன்பே அறுத்து விடுகிறாரோ அவர் தொழுகைக்கு முன் (தமக்காக) அறுத்தவராவார். குர்பானி கொடுத்தவரல்லர்” என்று குறிப்பிட்டார்கள்.
அப்போது அபூ புர்தா பின் நியார் (ரலி), “அல்லாஹ்வின் தூதரே! இன்றைய தினம் உண்ணுவதற்கும் பருகுவதற்கும் உரிய தினமாகும் என்று விளங்கி நான் தொழுகைக்கு முன்பே என் ஆட்டை அறுத்து விட்டேன். எனவே நான் தொழுகைக்கு வருவதற்கு முன்பே என் ஆட்டை அறுத்து (அதையே) காலை உணவாக உட்கொண்டு விட்டேன்” என்றார். அப்போது நபி (ஸல்) அவர்கள், “உன் ஆடு மாமிசத்திற்காக அறுக்கப்பட்ட ஆடாகத் தான் கருதப்படும்” என்று கூறினார்கள். அப்போது அவர், “அல்லாஹ்வின் தூதரே! என்னிடம் ஓராண்டு நிறையாத ஆட்டுக்குட்டிகள் உள்ளன. எங்களிடம் இரண்டு ஆடுகளை விட விருப்பமான ஆறு மாதம் நிரம்பிய ஆட்டுக்குட்டி ஒன்று உள்ளது. அதை அறுப்பது போதுமா?” என்று கேட்டார். “ஆம்! இனிமேல் உன்னைத் தவிர வேறு யாருக்கும் அது பொருந்தாது” என்று நபி (ஸல்) அவர்கள் விடையளித்தார்கள்.
அறிவிப்பாளர்: பராஃ (ரலி), நூல்: புகாரி (955)
صحيح البخاري ـ حسب ترقيم فتح الباري (2/ 20(
951حَدَّثَنَا حَجَّاجٌ قَالَ : حَدَّثَنَا شُعْبَةُ قَالَ : أَخْبَرَنِي زُبَيْدٌ قَالَ : سَمِعْتُ الشَّعْبِيَّ ، عَنِ الْبَرَاءِ قَالَ : سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَخْطُبُ فَقَالَ إِنَّ أَوَّلَ مَا نَبْدَأُ مِنْ يَوْمِنَا هَذَا أَنْ نُصَلِّيَ ثُمَّ نَرْجِعَ فَنَنْحَرَ فَمَنْ فَعَلَ فَقَدْ أَصَابَ سُنَّتَنَا
“நாம் முதலில் தொழுகையை ஆரம்பிப்போம். அதன் பின் (இல்லம்) திரும்பி அறுத்துப் பலியிடுவோம். யார் இவ்வாறு செய்கிறாரோ அவர் நமது வழிமுறையைப் பேணியவராவார்” என்று நபி (ஸல்) அவர்கள் சொற்பொழிவில் குறிப்பிட்டார்கள்.
அறவிப்பவர்: பராஃ (ரலி), நூல்: புகாரி (951)
صحيح البخاري ـ حسب ترقيم فتح الباري (7/ 118(
5500- حَدَّثَنَا قُتَيْبَةُ ، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ ، عَنِ الأَسْوَدِ بْنِ قَيْسٍ ، عَنْ جُنْدَبِ بْنِ سُفْيَانَ الْبَجَلِيِّ قَالَ ضَحَّيْنَا مَعَ رَسُولِ اللهِ صلى الله عليه وسلم أُضْحِيَّةً ذَاتَ يَوْمٍ فَإِذَا أُنَاسٌ قَدْ ذَبَحُوا ضَحَايَاهُمْ قَبْلَ الصَّلاَةِ فَلَمَّا انْصَرَفَ رَآهُمُ النَّبِيُّ صلى الله عليه وسلم أَنَّهُمْ قَدْ ذَبَحُوا قَبْلَ الصَّلاَةِ فَقَالَ مَنْ ذَبَحَ قَبْلَ الصَّلاَةِ فَلْيَذْبَحْ مَكَانَهَا أُخْرَى ، وَمَنْ كَانَ لَمْ يَذْبَحْ حَتَّى صَلَّيْنَا فَلْيَذْبَحْ عَلَى اسْمِ اللهِ
ஒரு (ஹஜ்ஜுப் பெருநா)ளின் போது (தொழுகை முடிந்த பிறகு) நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் பிராணிகளை அறுத்து குர்பானி கொடுத்தோம். (அன்று) சிலர் தங்களுடைய பிராணியை தொழுகைக்கு முன்பாகவே அறுத்து விட்டனர். (தொழுகையிலிருந்து திரும்பிய) நபி (ஸல்) அவர்கள், தொழுகைக்கு முன்னதாகவே அவர்கள் குர்பானி கொடுத்துவிட்டிருப்பதைக் கண்ட போது, “யார் தொழுகைக்கு முன் அறுத்து விட்டாரோ அவர் அதற்குப் பதிலாக வேறொன்றை அறுக்கட்டும். யார் தொழும்வரை அறுத்திருக்கவில்லையோ அவர் அல்லாஹ் பெயர் சொல்லி அறுக்கட்டும்” என்று கூறினார்கள்.
அறிவிப்பாளர்: ஜுன்தப் பின் சுஃப்யான் (ரலி)
நூல்: புகாரி (5500)
எனவே இந்த நபிமொழிகளின் அடிப்படையில் துல்ஹஜ் பிறை 10ஆம் நாளுக்கு முன்போ அல்லது 10ஆம் நாளில் தொழுகைக்கு முன்போ குர்பானி கொடுக்கக்கூடாது என்பது தெளிவாகிறது.
அவர்கள் தங்களுடைய பயன்களை அடைவதற்காகவும், அறியப்பட்ட நாட்களில் அவர்களுக்கு அவன் அளித்த கால்நடைகளின் மீது அல்லாஹ்வின் பெயரைக் கூறுவதற்காகவும் (வருவார்கள்.) அதை நீங்களும் உண்ணுங்கள்! கஷ்டப்படும் ஏழைகளுக்கும் கொடுங்கள்!
அல்குர்ஆன் 22:28
இந்த வசனத்தில் ஹஜ்ஜின் ஒரு அம்சமாக குர்பானி குறிப்பிடப்படுகிறது.
மேற்கண்ட வசனம், ‘நாட்கள்’ என்று பன்மையாகச் சொல்வதால் குர்பானி கொடுப்பதற்கு ஒன்றுக்கு மேற்பட்ட நாட்கள் உள்ளன என்பது தெளிவாகிறது.
பிறை 13 வரை ஹஜ்ஜின் கிரியைகள் உள்ளன. பிறை 13க்குப் பிறகு ஹஜ்ஜின் கிரியைகள் எதுவும் இல்லை. எனவே 13க்குப் பிறகு வரும் நாட்களில் குர்பானி கொடுப்பது ஹஜ்ஜுக்குரியதாகாது.
எனவே இந்த வசனத்திலிருந்து குர்பானிக்குரிய நாட்கள் என்பது பெருநாள் தொழுகை முடிந்ததிலிருந்து பிறை 13 அன்று ஹஜ் கிரியைகள் முடியும் வரை உள்ள நாட்களாகும் என்பதை அறிந்து கொள்ளலாம்.
கால்நடைகள் மீது அல்லாஹ்வின் பெயரைக் கூறுதல் என்றால் என்ன?
தஷ்ரீக்குடைய நாட்களில் குர்பானி கூடாது என்று வாதிடுவோர் குர்பானி தொடர்புடைய இந்தக் குர்ஆன் வசனத்தை (22:28) பற்றி அறவே பேசவில்லை.
இந்த வசனத்தை கருத்தில் கொள்ளாமலேயே தங்களது ஆய்வை முடித்துக் கொண்டு விட்டார்கள்.
சில சகோதரர்கள் அவர்களுக்கு இந்த வசனம் குறித்து சுட்டிக்காட்டினார்கள். அதற்குப் பிறகும் தவறை ஒப்புக் கொள்ள மனமின்றி, இவ்வசனம் குர்பானியை பற்றி பேசவில்லை என்று அவர்கள் வாதிடுகின்றார்கள்.
இந்த வசனத்திற்கு ‘கால்நடைகளை அறுப்பது’ என்று பொருள் கொண்டு விட்டால் இது குர்பானியைப் பற்றிப் பேசுகிறது என்றாகி விடும்.
குர்பானியைப் பற்றிப் பேசுகிறது என்றாகும் போது ‘அறியப்பட்ட நாட்கள்’ என்று பன்மையாக வந்துள்ளதால் குர்பானிக்குரிய நாள் ஒரே ஒரு நாள் அல்ல, பல நாட்கள் என்று கருத்து தானாகவே உறுதியாகிவிடும்.
எனவே இந்த விளக்கத்தை மறுப்பதற்காக மனமுரண்டாக வேறு வியாக்கியானத்தை அளிக்கின்றார்கள்.
எனவே, அல்குர்ஆனின் 22:28 வசனத்திற்குப் பின்வருமாறு பொருள் செய்கிறார்கள்.
அவர்கள் தங்களுடைய பயன்களை அடைவதற்காகவும், சாதுவான கால்நடைகளை அவர்களுக்கு அளித்ததற்காகவும் அறியப்பட்ட நாட்களில் அல்லாஹ்வின் பெயரைக் கூறுவதற்காகவும் (வருவார்கள்.) அதை நீங்களும் உண்ணுங்கள்! கஷ்டப்படும் ஏழைகளுக்கும் கொடுங்கள்!
‘கால்நடைகளை அளித்ததற்காக அறியப்பட்ட நாட்களில் அல்லாஹ்வின் பெயரைக் கூறுவதற்காகவும்’ என்று இந்த வசனத்திற்கு பொருள் செய்கிறார்கள்.
இப்படிப் பொருள் செய்யும் போது அறுத்தல் என்ற கருத்து வராது.
அறுத்தல் என்ற கருத்து வரவில்லை என்றால் பல நாட்கள் குர்பானி கொடுக்கலாம் என்ற கருத்தும் அதில் இல்லை என்றாகி விடும் என்பதே அவர்களின் எண்ணம்.
தவறாகத் தாங்கள் எடுத்து விட்ட முடிவிற்கு ஏற்ப இவ்வசனத்தை வளைக்கின்றார்கள்.
இந்த வசனத்திற்கு இவர்கள் செய்யும் பொருள் சரியா என்று ஆதாரங்களுடன் அலசுவோம்.
கால்நடைகளின் மீது அல்லாஹ்வின் பெயரைக் கூறுதல் என்றால் என்ன?
மேற்கண்ட வசனத்திற்கான பொருளை அறிந்து கொள்ள திருக்குர்ஆன் மற்றும் நபிமொழிகளின் மொழிநடையைப் புரிந்து கொள்ள வேண்டும்.
وَيَذْكُرُوا اسْمَ اللَّهِ فِي أَيَّامٍ مَعْلُومَاتٍ عَلَى مَا رَزَقَهُمْ مِنْ بَهِيمَةِ الْأَنْعَام
وَيَذْكُرُوا اسْمَ اللَّهِ
வயத்குருஸ்மல்லாஹி – அல்லாஹ்வின் பெயரை கூறுவதற்காக
فِي أَيَّامٍ مَعْلُومَاتٍ
பீ அய்யாமின் மஃலூமாதின் – அறியப்பட்ட நாட்களில்
عَلَى مَا
அலா மா – ஒன்றின் மீது
رَزَقَهُمْ
ரஜகஹும் – அவன் அவர்களுக்கு அளித்த
مِنْ بَهِيمَةِ الْأَنْعَام
மின் பஹீமதில் அன்ஆம் – சாதுவான கால்நடைகளிலிருந்து
சாதுவான கால்நடைகளிலிருந்து அவன் அவர்களுக்கு அளித்த ஒன்றின் மீது அறியப்பட்ட நாட்களில் அல்லாஹ்வின் பெயரைக் கூறுவதற்காக (வருவார்கள்)
இதுதான் மேற்கண்ட சொற்களின் தனித்தனியான நேரடிப் பொருளாகும். இது தான் நேரடிப் பொருள் என்பதை அரபு மொழி அறிந்த யாரும் மறுக்க மாட்டார்கள்.
அல்லாஹ்வின் பெயரை கூறுதல் என்பது உண்ணத்தகுந்த பிராணிகளுடன் தொடர்பு படுத்தி பேசும் போது அங்கு அறுப்பது என்பது தான் அதன் கருத்தாகும்.
இதற்கு திருக்குர்ஆனிலும் நபிமொழிகளிலும் ஏராளமான உதாரணங்கள் உள்ளன.
{وَالْبُدْنَ جَعَلْنَاهَا لَكُمْ مِنْ شَعَائِرِ اللَّهِ لَكُمْ فِيهَا خَيْرٌ فَاذْكُرُوا اسْمَ اللَّهِ عَلَيْهَا صَوَافَّ فَإِذَا وَجَبَتْ جُنُوبُهَا فَكُلُوا مِنْهَا وَأَطْعِمُوا الْقَانِعَ وَالْمُعْتَرَّ كَذَلِكَ سَخَّرْنَاهَا لَكُمْ لَعَلَّكُمْ تَشْكُرُونَ (36)} [الحج: 36]
(பலியிடப்படும்) ஒட்டகங்களை உங்களுக்காக அல்லாஹ்வின் (மார்க்கச்) சின்னங்களில் ஒன்றாக ஆக்கியுள்ளோம். அவற்றில் உங்களுக்கு நன்மையுள்ளது. நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் அதன் மீது அல்லாஹ்வின் பெயரைக் கூறுங்கள்! அது விலாப்புறமாக விழுந்ததும் அதை உண்ணுங்கள்! யாசிப்பவருக்கும், யாசிக்காதவருக்கும் உண்ணக் கொடுங்கள்! நீங்கள் நன்றி செலுத்திட இவ்வாறே அதை உங்களுக்குப் பயன்படச் செய்தான்.
அல்குர்ஆன் 22 36
இந்த வசனத்தில் ‘அல்லாஹ்வின் பெயரை கூறுதல்’ என்பது அறுத்தல் எனும் கருத்தில் தான் பயன்படுத்தப்படுகிறது என்பதை யாரும் அறியலாம்.
{فَكُلُوا مِمَّا ذُكِرَ اسْمُ اللَّهِ عَلَيْهِ إِنْ كُنْتُمْ بِآيَاتِهِ مُؤْمِنِينَ (118) } [الأنعام: 118]
நீங்கள் அல்லாஹ்வின் வசனங்களை நம்பியவர்களாக இருந்தால் அவன் பெயர் கூறப்பட்(டு அறுக்கப்பட்)டதை உண்ணுங்கள்!
அல்குர்ஆன் 6:118
{وَمَا لَكُمْ أَلَّا تَأْكُلُوا مِمَّا ذُكِرَ اسْمُ اللَّهِ عَلَيْهِ وَقَدْ فَصَّلَ لَكُمْ مَا حَرَّمَ عَلَيْكُمْ إِلَّا مَا اضْطُرِرْتُمْ إِلَيْهِ وَإِنَّ كَثِيرًا لَيُضِلُّونَ بِأَهْوَائِهِمْ بِغَيْرِ عِلْمٍ إِنَّ رَبَّكَ هُوَ أَعْلَمُ بِالْمُعْتَدِينَ (119)} [الأنعام: 119]
அல்லாஹ்வின் பெயர் கூறப்பட்டதை நீங்கள் உண்ணாமல் இருக்க உங்களுக்கு என்ன நேர்ந்தது? நீங்கள் நிர்பந்திக்கப்படும்போது தவிர (மற்ற நேரங்களில்) உங்களுக்கு அவன் தடை செய்ததைத் தெளிவுபடுத்தி விட்டான். அதிகமானோர் அறிவில்லாமல் தமது மனோ இச்சைகள் மூலம் வழிகெடுக்கின்றனர். வரம்பு மீறியோரை உமது இறைவன் மிக அறிந்தவன்.
அல்குர்ஆன் 6 :119
{وَلِكُلِّ أُمَّةٍ جَعَلْنَا مَنْسَكًا لِيَذْكُرُوا اسْمَ اللَّهِ عَلَى مَا رَزَقَهُمْ مِنْ بَهِيمَةِ الْأَنْعَامِ} [الحج: 34]
அவர்களுக்கு வழங்கிய சாதுவான கால்நடைகளின் மீது அல்லாஹ்வின் பெயரை கூறுவதற்காக ஒவ்வொரு சமுதாயத்திற்கும் வழிபாட்டு முறையை ஏற்படுத்தியுள்ளோம்.
அல்குர்ஆன் 22: 34
{وَلَا تَأْكُلُوا مِمَّا لَمْ يُذْكَرِ اسْمُ اللَّهِ عَلَيْهِ وَإِنَّهُ لَفِسْقٌ وَإِنَّ الشَّيَاطِينَ لَيُوحُونَ إِلَى أَوْلِيَائِهِمْ لِيُجَادِلُوكُمْ وَإِنْ أَطَعْتُمُوهُمْ إِنَّكُمْ لَمُشْرِكُونَ (121)} [الأنعام: 121]
அல்லாஹ்வின் பெயர் கூறப்படாததை உண்ணாதீர்கள்! அது குற்றமாகும். உங்களுடன் தர்க்கம் செய்யுமாறு ஷைத்தான்கள் தமது தோழர்களுக்குக் கூறுகின்றனர். நீங்கள் அவர்களுக்குக் கட்டுப்பட்டால் நீங்கள் இணை கற்பிப்பவர்களே.
அல்குர்ஆன் 6:121
{وَقَالُوا هَذِهِ أَنْعَامٌ وَحَرْثٌ حِجْرٌ لَا يَطْعَمُهَا إِلَّا مَنْ نَشَاءُ بِزَعْمِهِمْ وَأَنْعَامٌ حُرِّمَتْ ظُهُورُهَا وَأَنْعَامٌ لَا يَذْكُرُونَ اسْمَ اللَّهِ عَلَيْهَا افْتِرَاءً عَلَيْهِ سَيَجْزِيهِمْ بِمَا كَانُوا يَفْتَرُونَ (138)} [الأنعام: 138]
“இவை தடை செய்யப்பட்ட கால்நடைகளும், பயிர்களுமாகும். நாங்கள் நாடியோரைத் தவிர (மற்றவர்கள்) இதை உண்ண முடியாது’’ என்று அவர்களாகக் கற்பனை செய்து கூறுகின்றனர். சில கால்நடைகளில் சவாரி செய்வது தடுக்கப்பட்டுள்ளது எனவும், சில கால்நடைகள் மீது அல்லாஹ்வின் பெயரைக் கூற மாட்டோம் எனவும் அவன் மீது இட்டுக்கட்டிக் கூறுகின்றனர். அவர்கள் இட்டுக்கட்டிக் கொண்டிருந்ததால் அவர்களை அவன் தண்டிப்பான்.
அல்குர்ஆன் 6: 138
இந்த வசனங்களில் எல்லாம், ‘கால்நடைகளின் மீது அல்லாஹ்வின் பெயர் கூறப்படுதல்’ என்று வருகிறது. இவையனைத்தும் கால்நடைகளை அறுப்பதைப் பற்றியே பேசுகின்றன.
அரபு மொழி வழக்கத்தின் படி இச்சொல்லாடல் அறுத்தலைத் தான் குறிக்கும் என்பதைப் பின்வரும் செய்தியும் தெளிவுபடுத்துகின்றது.
صحيح البخاري رقم فتح الباري (7/ 91)
5499 – حَدَّثَنَا مُعَلَّى بْنُ أَسَدٍ، حَدَّثَنَا عَبْدُ العَزِيزِ يَعْنِي ابْنَ المُخْتَارِ، أَخْبَرَنَا مُوسَى بْنُ عُقْبَةَ، قَالَ: أَخْبَرَنِي سَالِمٌ، أَنَّهُ سَمِعَ عَبْدَ اللَّهِ، يُحَدِّثُ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: أَنَّهُ لَقِيَ زَيْدَ بْنَ عَمْرِو بْنِ نُفَيْلٍ بِأَسْفَلِ بَلْدَحٍ، وَذَاكَ قَبْلَ أَنْ يُنْزَلَ عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الوَحْيُ، فَقَدَّمَ إِلَيْهِ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ سُفْرَةً فِيهَا لَحْمٌக்ஷ் ، فَأَبَى أَنْ يَأْكُلَ مِنْهَا، ثُمَّ قَالَ: «إِنِّي لاَ آكُلُ مِمَّا تَذْبَحُونَ عَلَى أَنْصَابِكُمْ، وَلاَ آكُلُ إِلَّا مِمَّا ذُكِرَ اسْمُ اللَّهِ عَلَيْهِயு
அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) கூறினார்:
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தமக்கு வேத அறிவிப்பு (‘வஹீ’) அருளப்படுவதற்கு முன்பு (மக்கா அருகிலுள்ள) கீழ் ‘பல்தஹில்’ ஸைத் இப்னு அம்ர் இப்னு நுஃபைல் அவர்களைச் சந்தித்தார்கள். அப்போது இறைத்தூதர் (ஸல்) அவர்கள் (தமக்கு முன் வைக்கப்பட்ட குறைஷியரின்) பயண உணவு ஒன்றை ஸைத் இப்னு அம்ர் இப்னு நுஃபைல் அவர்களுக்கு முன் வைத்தார்கள். அதில் (பலிபீடங்களில் அறுக்கப்பட்டவற்றின்) இறைச்சி இருந்தது. எனவே, அதிலிருந்து உண்ண ஸைத் அவர்கள் மறுத்துவிட்டார்கள். பிறகு ஸைத் (உணவைப் பரிமாறிய குறைஷியரிடம்), ‘நீங்கள் உங்கள் (சிலைகளுக்குப் பலியிடும்) பலிபீடக் கற்களில் வைத்து அறுப்பவற்றை உண்ணமாட்டேன். (அறுக்கும்போது) அல்லாஹ்வின் பெயர் எதன் மீது கூறப்பட்டதோ அதைத் தவிர வேறெதையும் உண்ண மாட்டேன்’ என்று கூறினார்கள்.
நூல்: புகாரி 5499
صحيح البخاري رقم فتح الباري (3/ 142)
2507 – حَدَّثَنَا مُحَمَّدٌ، أَخْبَرَنَا وَكِيعٌ، عَنْ سُفْيَانَ، عَنْ أَبِيهِ، عَنْ عَبَايَةَ بْنِ رِفَاعَةَ، عَنْ جَدِّهِ رَافِعِ بْنِ خَدِيجٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: كُنَّا مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِذِي الحُلَيْفَةِ مِنْ تِهَامَةَ، فَأَصَبْنَا غَنَمًا وَإِبِلًا، فَعَجِلَ القَوْمُ، فَأَغْلَوْا بِهَا القُدُورَ، فَجَاءَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَأَمَرَ بِهَا، فَأُكْفِئَتْ ثُمَّ عَدَلَ عَشْرًا مِنَ الغَنَمِ بِجَزُورٍ، ثُمَّ إِنَّ بَعِيرًا نَدَّ وَلَيْسَ فِي القَوْمِ إِلَّا خَيْلٌ يَسِيرَةٌ، فَرَمَاهُ رَجُلٌ، فَحَبَسَهُ بِسَهْمٍ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ لِهَذِهِ البَهَائِمِ أَوَابِدَ كَأَوَابِدِ الوَحْشِ، فَمَا غَلَبَكُمْ مِنْهَا، فَاصْنَعُوا بِهِ هَكَذَاயு قَالَ: قَالَ جَدِّي: يَا رَسُولَ اللَّهِ، إِنَّا نَرْجُو – أَوْ نَخَافُ – أَنْ نَلْقَى العَدُوَّ غَدًا وَلَيْسَ مَعَنَا مُدًى، فَنَذْبَحُ بِالقَصَبِ؟ فَقَالَ: “ اعْجَلْ – أَوْ أَرْنِي – مَا أَنْهَرَ الدَّمَ، وَذُكِرَ اسْمُ اللَّهِ عَلَيْهِ، فَكُلُوا لَيْسَ السِّنَّ، وَالظُّفُرَ، وَسَأُحَدِّثُكُمْ عَنْ ذَلِكَ، أَمَّا السِّنُّ: فَعَظْمٌ، وَأَمَّا الظُّفُرُ: فَمُدَى الحَبَشَةِ “
ராஃபிஉ இப்னு கதீஜ் (ரலி) அறிவித்தார்.
நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் திஹாமாவிலுள்ள துல் ஹுலைஃபாவில் இருந்தோம். அப்போது நாங்கள் (கனீமத்தாக) ஆடுகளை அல்லது ஒட்டகங்களைப் பெற்றோம். மக்கள் அவசரப்பட்டு (உணவு சமைப்பதற்காகப்) பாத்திரங்களைக் கொதிக்க வைத்தனர். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் வந்தார்கள். அந்தப் பாத்திங்களைத் தலைகீழாகக் கவிழ்க்கும்படி உத்தரவிட்டார்கள். அவை அவ்வாறே தலைகீழாகக் கவிழ்க்கப்பட்டன. பிறகு, ஓர் ஒட்டகத்திற்குப் பத்து ஆடுகளைச் சமமாக்கினார்கள். பிறகு, அவற்றிலிருந்து ஓர் ஒட்டகம் மிரண்டோடியது. மக்களிடம் சில குதிரைகளே இருந்தன. (அதை விரட்டிச் சென்று பிடிக்கப் போதுமான குதிரைகள் இல்லை. எனவே,) ஒருவர் அம்பெய்து அதை ஓடவிடாமல் தடுத்து நிறுத்தினார். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘கட்டுங்கடங்காத காட்டு மிருகங்களைப் போன்று இந்தக் கால்நடைகளிலும் கட்டுக் கடங்காதவை சில உண்டு. எனவே, இவற்றில் எது உங்களை மீறிச் செல்லுகிறதோ அதை இவ்வாறே (அம்பெய்து தடுத்து நிறுத்தச்) செய்யுங்கள்’ என்று கூறினார்கள். நான், ‘இறைத்தூதர் அவர்களே! ‘(இப்போது பிராணிகளை அறுக்க எங்கள் வாட்களைப் பயன்படுத்திவிட்டால்), எங்களிடம் வாட்கள் இல்லாத நிலையில் நாளை (போர்க்களத்தில்) பகைவர்களைச் சந்திக்க வேண்டியிருக்குமே’ என்று நாங்கள் அஞ்சுகிறோம். (கூரான) மூங்கில்களால் நாங்கள் (அவற்றை) அறுக்கலாமா?’ என்று கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘சீக்கிரம்! இரத்தத்தை ஓடச்செய்கிற எந்த ஆயுதத்தால் அறுக்கப்பட்டிருந்தாலும் (பிராணி அறுக்கப்படும் போது) அதன் மீது அல்லாஹ்வின் பெயர் கூறப்படும் பட்சத்தில் அதை உண்ணுங்கள்; பற்களாலும் நகங்களாலும் அறுக்கப்பட்டதைத் தவிர அதைப் பற்றி (‘அது ஏன் கூடாது’ என்று) உங்களுக்கு நான் சொல்கிறேன்: பல்லோ எலும்பாகும். நகங்களோ அபிசீனியர்களின் (எத்தியோப்பியர்களின்) கத்திகளாகும்‘ என்று பதிலளித்தார்கள்.
நூல்: புகாரி 2507
இவ்வாறு ஏராளமான சான்றுகள் நபிமொழியில் உள்ளன.
இதே போன்று தான் அல்குர்ஆன் 22:28 வது வசனத்திலும் வருகின்றது.
மீண்டும் ஒரு முறை அந்த வசனத்தைப் படித்துப் பாருங்கள்.
لِيَشْهَدُوا مَنَافِعَ لَهُمْ وَيَذْكُرُوا اسْمَ اللَّهِ فِي أَيَّامٍ مَعْلُومَاتٍ عَلَى مَا رَزَقَهُمْ مِنْ بَهِيمَةِ الْأَنْعَامِ فَكُلُوا مِنْهَا وَأَطْعِمُوا الْبَائِسَ الْفَقِيرَ
அவர்கள் தங்களுடைய பயன்களை அடைவதற்காகவும், அறியப்பட்ட நாட்களில் அவர்களுக்கு அவன் அளித்த கால்நடைகளின் மீது அல்லாஹ்வின் பெயரைக் கூறுவதற்காகவும் (வருவார்கள்.) அதை நீங்களும் உண்ணுங்கள்! கஷ்டப்படும் ஏழைகளுக்கும் கொடுங்கள்!
அல்குர்ஆன் 22:27, 28
முந்தைய வசனங்களைப் போலவே இதிலும் ‘அல்லாஹ்வின் பெயரைக் கூறுதல்’ என்பது கால்நடைகளுடன் இணைத்து கூறப்படுகிறது.
கால்நடைகளின் மீது இறைவனின் பெயரைக் கூறுதல் என்பது அறுப்பதைப் பற்றித்தான் பேசுகிறது என்பதற்கு இறைவனின் இவ்வளவு வசன சான்றுகள் ஆதாரமாக உள்ளன.
எனவே அறுத்தல் என்று கருத்து கொள்வதற்கு மாற்றமாக வேறொரு பொருளை இங்கே நாடுவதென்பது இறைவன் உணர்த்திய நேரடி மொழி நடைக்கு எதிரானதாகும்.
நீங்களும் உண்ணுங்கள்
அது மட்டுமின்றி இந்த வசனம் அறுப்பதைப் பற்றித்தான் பேசுகிறது என்பதை விளங்க மேற்படி வசனத்திலேயே ஆதாரம் உண்டு.
‘கால்நடைகளின் மீது அல்லாஹ்வின் பெயரைக் கூறுவார்கள்’ என்று கூறிய பிறகு ‘அதை நீங்களும் உண்ணுங்கள். கஷ்டப்படும் ஏழைகளுக்கும் கொடுங்கள்’ என்று அல்லாஹ் கூறுகிறான்.
இதன் கருத்து அறுத்தல் என்பது தானே?
அல்லாஹ்வின் பெயரைக் கூறி அறுத்தால் தானே நாமும் உண்டு, பிறருக்கும் கொடுக்க இயலும்?
‘நீங்களும் உண்ணுங்கள்; ஏழைகளுக்கும் கொடுங்கள்’ என்ற வாசகம் அதற்கு முன்பாகச் சொல்லப்பட்ட ‘அல்லாஹ்வின் பெயரை கூறுங்கள்’ என்பதன் கருத்தை மிகத் தெளிவாக, சந்தேகத்திற்கிடமின்றி உணர்த்திவிடுகின்றது.
எனவே இவ்வசனம் அறுப்பதைப் பற்றியே பேசுகின்றது. திக்ர் எனும் நினைவு கூர்வதைப் பற்றியோ, புகழ்வதைப் பற்றியோ அல்ல என்பது தெளிவு.
அலா பஹீமதில் அன்ஆம்?
இவ்வளவையும் தாண்டி ஒரு சிலர், இவ்வசனத்தில் அறுத்தல் என்று கருத்து கொள்வதாக இருந்தால் ‘அலா பஹீமதில் அன்ஆம்’ என்று வரவேண்டும் என்று சிறுபிள்ளைத்தனமாக வாதம் வைக்கிறார்கள்.
அல்லாஹ்வின் பெயரைக் கூறுதல் என்பது அலா பஹீமதில் அன்ஆம் என்ற சொற்றொடருன் இணைத்து வந்தால் தான் அங்கே அறுத்தல் என்று பொருள் கொள்ள இயலும்; அலாவிற்கு பிறகு வேறு வார்த்தைகள் இடையில் வந்து விட்டால் அப்போது அறுத்தல் என்று கருத்துக் கொள்ள முடியாது என்று வாதிடுகின்றனர்.
இந்த வாதத்தை அரபு மொழியறியாத பாமர மக்கள் முன்வைத்தால் கூட ஒரு கணக்கில் எடுத்துக் கொள்ளலாம். அரபு இலக்கணச் சட்ட விதிகளை படித்தவர்கள் இவ்வாறு கேட்பது ஆச்சரியமானது.
இப்போது முன்னர் சொன்ன வசனத்தின் தனித்தனியான அர்த்தங்களை நினைவு கூற மீண்டும் ஒரு அறியத் தருகிறோம்.
வயத்குருஸ்மல்லாஹி – அல்லாஹ்வின் பெயரைக் கூறுவதற்காக
பீ அய்யாமின் மஃலூமாதின் – அறியப்பட்ட நாட்களில்
அலா மா – ஒன்றின் மீது
ரஜகஹும் – அவன் அவர்களுக்கு அளித்த
மிம் பஹீமதில் அன்ஆம் – சாதுவான கால்நடைகளிலிருந்து
‘அலா மா’ என்று கூறிய பிறகு ‘ரஜகஹும் மிம் பஹீமதில் அன்ஆம்’ என்று இறைவன் கூறுகிறான்.
இதில் ‘மின்’ என்றால் ‘இருந்து’ என்று பொருள்.
அதிலிருந்து – இதிலிருந்து என்பதை குறிக்க இவ்வார்த்தை பயன்படும்.
மேலும் முன்னர் சொல்லப்பட்ட வார்த்தையின் கருத்து எது என்பதை விளக்கவும் பயன்படுத்தப்படும்.
இப்போது அவ்வசனத்தில் இடம்பெற்ற வாசகங்களை முன் பின்னாக மாற்றி பாருங்கள்.
மின் பஹீமதில் அன்ஆம் – சாதுவான கால்நடைகளிலிருந்து
ரஜகஹும் – அவன் அவர்களுக்கு அளித்த
அலா மா – ஒன்றின் மீது
பீ அய்யாமின் மஃலூமாதின் – அறியப்பட்ட நாட்களில்
வயத்குருஸ்மல்லாஹி – அல்லாஹ்வின் பெயரைக் கூறுவதற்காக
இப்போது வாசித்து பாருங்கள்.
இங்கே ‘அலா’வும் வருகிறது
‘பஹீமதில் ஆன்ஆம்’ என்பதும் இடம் பெறுகிறது.
‘அல்லாஹ்வின் பெயரைக் கூறுதல்’ என்பதும் இடம்பெறுகிறது.
ஆக, ‘கால்நடைகளின் மீது அல்லாஹ்வின் பெயரை கூறுதல்’ என்ற கருத்து தான் இப்போதும் வருகிறது.
அலா பஹீமதில் அன்ஆம் (சாதுவான கால்நடைகளின் மீது) என்று சொன்னாலும்
அலா மா ரஜகஹும் மின் பஹீமதில் அன்ஆம் (சாதுவான கால்நடைகளிலிருந்து அவன் அவர்களுக்கு அளித்த ஒன்றின் மீது) என்று சொன்னாலும் கருத்து ரீதியாக எந்த வித்தியாசமும் இல்லை. இரண்டும் ‘கால்நடைகளின் மீது அல்லாஹ்வின் பெயரைக் கூறுதல்’ என்பதைத் தான் குறிக்கின்றது என்பது புரிகிறதா?
அது தவிர, ‘அலா பஹீமதில் அன்ஆம்’ என்று வந்தால் தான் அறுத்தலைக் குறிக்கும் என்கிறார்களே!
இங்கே ‘அலா மா’ என்று வருவது அரபு இலக்கண அடிப்படையில் ‘அலா பஹீமதில் அன்ஆம்’ என்று வருவதற்குச் சமமானதேயாகும்.
அரபு இலக்கண விவகாரம் சாமானிய மக்களுக்குப் புரியாது என்று எண்ணிக் கொண்டு, வார்த்தை விளையாட்டு விளையாடித் தங்கள் கருத்தை நிலைநாட்டுவது எந்த நன்மையையும் தராது.
எனவே, அல்குர்ஆன் 22:28வது வசனம் குர்பானியைப் பற்றியே பேசுகிறது என்பது தெளிவு.
பெருநாள் தினத்தன்று மட்டும் தான் குர்பானி கொடுக்க வேண்டும் என்போர் தங்கள் கருத்தை வலுவூட்ட இன்னும் சில வாதங்களை வைக்கின்றார்கள். அவற்றையும் அறிந்து கொள்வோம்.
குர்பானி விமர்சனங்களும் பதில்களும்
ஹஜ் பெருநாள் தினத்தில், அதாவது துல்ஹஜ் பிறை 10ல் மட்டும் தான் குர்பானி கொடுக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உள்ளவர்கள் எழுப்பும் சில கேள்விகளுக்கான பதில்கள் இக்கட்டுரையில் தரப்படுகின்றது.
ஹஜ்ஜுக்கான அழைப்பு முழுமை பெறவில்லையா?
அவர்கள் தங்களுடைய பயன்களை அடைவதற்காகவும், அறியப்பட்ட நாட்களில் அவர்களுக்கு அவன் அளித்த கால்நடைகளின் மீது அல்லாஹ்வின் பெயரைக் கூறுவதற்காகவும் (வருவார்கள்.) அதை நீங்களும் உண்ணுங்கள்! கஷ்டப்படும் ஏழைகளுக்கும் கொடுங்கள்!
அல்குர்ஆன் 22:28
மேற்கண்ட வசனத்தில் குர்பானிக்குரிய நாட்கள் குறித்துப் பேசப்படுகின்றது என்று நாம் விளக்கம் அளிக்கின்ற போது, ‘இந்த அர்த்தம் ஹஜ்ஜுக்கான அழைப்பை அர்த்தமற்றதாக்குகின்றது’ என அர்த்தமற்ற வாதத்தை முன்வைக்கின்றனர்.
இவ்வசனத்திற்கு அறுப்பதற்குரிய நாட்கள் என்று கருத்து கொள்ளும் போது ஹஜ்ஜுக்கான அழைப்பு முழுமை பெறவில்லை. குர்பானி தவிர்த்து பிற வழிபாடுகள் குறித்துப் பேசப்படவில்லை என்றாகி விடும் என வாதிடுகின்றனர்.
குறிப்பிட்ட நாட்களில் அல்லாஹ்வின் பெயரைக் கூறுவதற்காக – அதாவது இறைவனின் பெயரை நினைவு கூர்ந்து அவனுக்கு நன்றி செலுத்துவதற்காக என்று பொருள் கொள்ளும் போது ஹஜ்ஜின் எல்லா நாட்களும் அதில் அடங்கி விடுகிறது என்கிறார்கள்.
ஹஜ்ஜைப் பற்றி இறைவன் அறிவிப்பு செய்வதாக வசனம் துவங்கும் போது, அந்த வசனத்திலேயே ஹஜ் தொடர்புடைய அனைத்தும் இடம் பெற்று விட வேண்டும் என்ற அர்த்தமற்ற ஒன்றைக் கற்பனை செய்து கொண்டு தன் கற்பனைக்கு மாற்றமாக இருக்கின்ற போது அதனை அர்த்தமற்றது என்பது எவ்வளவு அறிவீனம்?
திருக்குர்ஆனில் ஒரு வணக்க வழிபாட்டை, ஒரு அறிவுரையை சொல்லத் துவங்கினால் அந்த இடத்திலேயே அனைத்தும் குறிப்பிடப்பட வேண்டும் என்பதில்லை. அப்படி இல்லாமல் எத்தனையோ வசனங்கள் குர்ஆனில் உள்ளன.
‘தன்னிடமுள்ள கஞ்சத்தனத்திலிருந்து காக்கப்படுவோரே வெற்றி பெற்றோர்’ என்று அல்குர்ஆனின் 59வது அத்தியாயம் 9வது வசனம் குறிப்பிடுகிறது.
மறுமை வெற்றிக்கு, கஞ்சத்தனத்திலிருந்து தவிர்ந்து கொள்வது மட்டும் போதுமா? தொழுகை, நோன்பு போன்றவை தேவையில்லையா? என இவ்வசனத்திலிருந்து கேள்வி எழுப்பலாம்.
எது நன்மை? யார் இறைவனை அஞ்சுவோர் என்பதைப் பற்றிப் பின்வரும் வசனத்தில் அல்லாஹ் குறிப்பிடுகிறான்.
{لَيْسَ الْبِرَّ أَنْ تُوَلُّوا وُجُوهَكُمْ قِبَلَ الْمَشْرِقِ وَالْمَغْرِبِ وَلَكِنَّ الْبِرَّ مَنْ آمَنَ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ وَالْمَلَائِكَةِ وَالْكِتَابِ وَالنَّبِيِّينَ وَآتَى الْمَالَ عَلَى حُبِّهِ ذَوِي الْقُرْبَى وَالْيَتَامَى وَالْمَسَاكِينَ وَابْنَ السَّبِيلِ وَالسَّائِلِينَ وَفِي الرِّقَابِ وَأَقَامَ الصَّلَاةَ وَآتَى الزَّكَاةَ وَالْمُوفُونَ بِعَهْدِهِمْ إِذَا عَاهَدُوا وَالصَّابِرِينَ فِي الْبَأْسَاءِ وَالضَّرَّاءِ وَحِينَ الْبَأْسِ أُولَئِكَ الَّذِينَ صَدَقُوا وَأُولَئِكَ هُمُ الْمُتَّقُونَ (177)} [البقرة: 177]
உங்கள் முகங்களை கிழக்கு நோக்கியோ, மேற்கு நோக்கியோ திருப்புவது நன்மையன்று. மாறாக அல்லாஹ்வையும், இறுதி நாளையும், வானவர்களையும், வேதங் களையும், நபிமார்களையும் நம்புவோரும் உறவினர்களுக்கும், அனாதைகளுக்கும், ஏழை களுக்கும், நாடோடிகளுக்கும், யாசிப்போருக்கும், அடிமைகளை விடுதலை செய்வதற்கும் (மன) விருப்பத்துடன் செல்வத்தை வழங்குவோரும், தொழுகையை நிலைநாட்டுவோரும், ஜகாத்தை வழங்குவோரும், வாக்களித்தால் தமது வாக்கை நிறைவேற்றுவோரும், வறுமை, நோய், மற்றும் போர்க்களத்தில் சகித்துக் கொள்வோருமே நன்மை செய்பவர்கள். அவர்களே உண்மை கூறியவர்கள். அவர்களே (இறைவனை) அஞ்சுபவர்கள்.
அல்குர்ஆன் 2:177
இந்த வசனத்தில் விதியை நம்புதல் இல்லை. ஹஜ் செய்வது பற்றியும் இல்லை. ஆதலால் அவை நன்மை இல்லையா? என்று கேள்வி எழுப்பலாம்.
ஒரு வசனத்திலேயே அனைத்தும் குறிப்பிடப் பட வேண்டும் அப்படி இல்லை என்றால் அவை அர்த்தமற்றவை (?) என்ற இவர்களின் அளவீட்டின் படி இந்த வசனங்கள் எல்லாம் அர்த்தமற்றவை என்பார்களா? (அல்லாஹ் காப்பானாக)
இப்படி நிறைய வசனங்களைக் குறிப்பிட்டு கேள்வி எழுப்பலாம்.
எனவே இது போன்ற அர்த்தமற்ற கேள்விகள் கேட்பது வசனத்தின் நேரடிப் பொருளை விட்டு மாறுவதற்கு ஒரு போதும் உதவாது.
இன்னொன்றையும் சிந்திக்க வேண்டும்.
அறியப்பட்ட நாட்கள் என்பது குர்பானி தொடர்புடையது எனச் சொல்வதால் ஹஜ்ஜுக்கான அழைப்பு அர்த்தமற்றதாக்கப்படுகின்றது என்று இவர்கள் சொல்கிறார்கள்.
இவர்கள் செய்யும் பொருளில் ஹஜ்ஜுக்கான அழைப்பு முழுமையாகின்றதா? என்றால் அப்போதும் இல்லை என்பது தான்.
குறிப்பிட்ட நாட்களில் அல்லாஹ்வின் பெயரைக் கூறுவதற்காக என்று பொருள் செய்தாலும் அப்போதும் கல்லெறிதல் பற்றி, அரபா, மினா – முஸ்தலிபாவில் தங்குவது பற்றி எதுவும் இல்லை.
இவையாவும் அல்லாஹ்வின் பெயரை நினைவு கூறுவதில் வரும் என்பார்களேயானால் அது போல வசனத்தின் துவக்கத்தில் ‘அவர்கள் தங்களுடைய பயன்களை அடைவதற்காக’ என்பதிலும் இவை உள்ளடங்கும் தானே.
பயன்கள் என்பது இம்மை – மறுமை என இருவுலக பயன்களையும் குறிக்கும் என்ற அடிப்படையில் இதில் ஹஜ்ஜின் கிரியைகள் அனைத்தும் உள்ளடங்கி விடுமே.
ஒரு இடத்திலே அனைத்தையும் சொல்ல வேண்டும் என்ற அளவீடு குர்ஆனின் பார்வையில் சரியான அளவீடல்ல என்ற பதிலே இந்த வாதத்திற்கு போதுமான பதிலாகும்.
எனவே குர்பானிக்கு அறியப்பட்ட நாட்கள் என்று பொருள் செய்து வசனத்தின் அர்த்தத்தை அர்த்தமற்றதாக்குகிறார்கள் என்பது ஒருவகையான உளறலேயாகும்.
பிறை 13க்குப் பிறகு தான் இஹ்ராம் களைய வேண்டுமா?
தங்களது அதிமேதாவித்தனத்தை வெளிப் படுத்தும் விதமாக அடுத்த ஒரு கேள்வியை இப்படி முன்வைக்கின்றார்கள்.
அல்குர்ஆன் 22:27வது வசனத்தில் ஹஜ்ஜைப் பற்றி அறிவிப்பு செய்யுமாறு கூறப்படுகிறது. அதையொட்டி அவர்கள் ஹஜ்ஜுக்காக வருவார்கள் என்கிறது.
29வது வசனத்தில் அழுக்குகளைக் களையட்டும், தவாஃப் செய்யட்டும் என்று குறிப்பிடப்படுகிறது.
ثُمَّ لْيَقْضُوا تَفَثَهُمْ وَلْيُوفُوا نُذُورَهُمْ وَلْيَطَّوَّفُوا بِالْبَيْتِ الْعَتِيقِ
பின்னர் அவர்கள் தம்மிடம் உள்ள அழுக்குகளை நீக்கட்டும்! தமது நேர்ச்சைகளை நிறைவேற்றட்டும்! பழமையான அந்த ஆலயத்தை தவாஃப் செய்யட்டும். (29வது வசனம்)
இதில் 28வது வசனம் குர்பானிக்குரிய நாட்களைப் பற்றிப் குறிக்கின்றது என்று வைத்துக் கொண்டால் பிறை 13 வரையிலும் குர்பானி கொடுக்கலாம் என்ற நிலைப்பாட்டின் படி அதற்குப் பிறகுதான் இஹ்ராம் களைய வேண்டுமா? தவாஃப் செய்ய வேண்டுமா?
ஒருவர் பிறை 12 – 13ல் தான் பலியிடுகிறார் என்றால் பிறை 13க்குப் பிறகு நகம் – முடி களைதல், தவாப் உள்ளிட்டவை செய்யலாமா?
இது தான் அந்த கேள்வி.
ஹஜ்ஜின் கிரியைகள் குறிப்பிட்ட சிலவற்றில் வரிசை முறை குறித்து அலட்டிக் கொள்ள வேண்டியதில்லை.
கல்லெறிதல், பலியிடுதல், தலைமுடியை மழித்தல், தவாப் செய்தல் உள்ளிட்டவற்றில் வரிசை முறை மாறிவிட்டிருந்தாலும் அது குற்றமாகாது.
இதை நபி (ஸல்) அவர்கள் மிகத் தெளிவாகவே விளக்கி விட்டார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பலியிட்டு விட்டு, தலை முடியை மழித்துக் கொண்டார்கள். மக்கள் பலியிடும் வரை பலியிடும் தினத்தில் மினாவிலேயே இருந்தார்கள். அன்றைய தினம் ஏதாவது ஒரு செயலைச் செய்வதற்கு முன்பாக செய்து விட்ட மற்றொரு செயலைப் பற்றி அவர்கள் வினவிய போதெல்லாம் அவர்கள், “குற்றமில்லை, குற்றமில்லை” என்று பதிலளித்துக் கொண்டிருந்தார்கள்.
அவ்வாறிருக்கையில் அவர்களிடம் ஒருவர் வந்து, “நான் பலியிடுவதற்கு முன்பு தலையை மழித்து விட்டேனே?” என்று கேட்டார். “குற்றமில்லை” என்று பதிலளித்தார்கள்.
வேறொருவர் வந்து “நான் கல்லெறிவதற்கு முன்பு தவாஃப் செய்து விட்டேன்” என்று வினவினார். “குற்றமில்லை” என்று பதிலளித்தார்கள்.
“நான் பலியிடுவதற்கு முன்பு தவாஃப் செய்து விட்டேன்” என்று வினவினார். “நீ இப்போது பலியிடு, குற்றமில்லை” என்று கூறினார்கள்.
பிறகு வேறொருவர் வந்து, “கல்லெறிவதற்கு முன்னர் பலியிட்டு விட்டேன்” என்று வினவினார். “(இப்போது) கல்லெறி, குற்றமில்லை” என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி), முஸ்லிம் 2138
நபிகளார் இந்தக் காரியங்களில் வரிசை முறையில் செய்திருந்தாலும் மக்களுக்கு இப்படியொரு சலுகையை வழங்கியிருக்கிறார்கள்.
எனவே பத்தாம் நாளிலேயே குர்பானி கொடுத்து விடுபவர் அதன் பிறகு அதற்கடுத்த கிரியைகளை நிறைவேற்றுவார்.
அதுவன்றி ஒருவர் 12ம் நாளில் குர்பானி கொடுப்பதாக இருந்தாலும் அவர் பத்தாம் நாளுக்குப் பிறகு, பலியிடுவதற்கு முன்பே நகம், முடி போன்றவற்றைக் களைவதில் எந்த தவறுமில்லை. அது குற்றமாகாது.
இவற்றைப் பத்தாம் நாளில் நிறைவேற்றி விட்டு அதன் பிறகு கூட அவர் பலியிட்டுக் கொள்ளலாம். ஹஜ்ஜில் உள்ளோருக்கு அப்படியான சலுகை வழங்கப்பட்டுள்ளது என்பது ஹதீஸில் தெளிவாகவே குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே அதற்குப் பிறகு இதைச் செய்யலாமா? இதற்குப் பிறகு அதைச் செய்யலாமா? என்று கேள்வி எழுப்பி விட்டால் வசனத்தின் கருத்து தவறு என்றாகி விடாது.
யவ்முன் நஹ்ர் என்று வருவதால்…
ஹஜ்ஜுப் பெருநாள் தினத்தன்று மட்டுமே குர்பானி கொடுக்க வேண்டும் என்போர் பின்வரும் வாதம் ஒன்றை வைக்கின்றார்கள்.
துல்ஹஜ் பிறை பத்தாம் நாளை நபி (ஸல்) அவர்கள் யவ்முன் நஹ்ர் – அறுத்து பலியிடுவதற்குரிய நாள் என்று குறிப்பிடுகிறார்கள்.
பெருநாள் அல்லாத மற்ற நாட்களில் குர்பானி கொடுக்கலாம் என்றிருந்தால் யவ்முன் நஹ்ர் என்று ஒருமையாக வருமா?
மற்ற நாட்களுக்கு எல்லாம் இல்லாமல் பெருநாள் தினத்திற்கு மட்டும் யவ்முன் நஹ்ர் என்று நபி (ஸல்) அவர்களால் பெயர் குறிப்பிடப்படுகிறது என்றால் அந்த ஒரு நாளில் மட்டும் தான் குர்பானி கொடுக்க வேண்டும் என்பது இதிலிருந்து புரிகிறது.
இதுதான் அவர்களின் மயிர்க்கூச்செரியச் செய்கின்ற வாதம்.
துல்ஹஜ் பிறை 10 யவ்முன் நஹ்ர் என்று அழைக்கப்படுவதால் பெருநாள் மட்டும் தான் குர்பானி கொடுக்க வேண்டும் என்கிறார்கள்.
இவர்கள் குறிப்பிடும் அந்தச் செய்தியைப் படித்து விட்டாலே இவர்களின் இந்த வாதம் எவ்வளவு அபத்தமானது என்பதை அறிந்து கொள்ளலாம்.
இதோ அவர்கள் குறிப்பிடும் ஹதீஸ்:
صحيح البخاري ـ حسب ترقيم فتح الباري (1/ 26(
67 حَدَّثَنَا مُسَدَّدٌ قَالَ : حَدَّثَنَا بِشْرٌ قَالَ : حَدَّثَنَا ابْنُ عَوْنٍ ، عَنِ ابْنِ سِيرِينَ ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي بَكْرَةَ ، عَنْ أَبِيهِ ذَكَرَ النَّبِيَّ صلى الله عليه وسلم قَعَدَ عَلَى بَعِيرِهِ وَأَمْسَكَ إِنْسَانٌ بِخِطَامِهِ ، أَوْ بِزِمَامِهِ- قَالَ أَيُّ يَوْمٍ هَذَا فَسَكَتْنَا حَتَّى ظَنَنَّا أَنَّهُ سَيُسَمِّيهِ سِوَى اسْمِهِ قَالَ أَلَيْسَ يَوْمَ النَّحْرِ قُلْنَا بَلَى قَالَ فَأَىُّ شَهْرٍ هَذَا فَسَكَتْنَا حَتَّى ظَنَنَّا أَنَّهُ سَيُسَمِّيهِ بِغَيْرِ اسْمِهِ فَقَالَ أَلَيْسَ بِذِي الْحِجَّةِ قُلْنَا بَلَى قَالَ فَإِنَّ دِمَاءَكُمْ وَأَمْوَالَكُمْ وَأَعْرَاضَكُمْ بَيْنَكُمْ حَرَامٌ كَحُرْمَةِ يَوْمِكُمْ هَذَا فِي شَهْرِكُمْ هَذَا فِي بَلَدِكُمْ هَذَا لِيُبَلِّغِ الشَّاهِدُ الْغَائِبَ فَإِنَّ الشَّاهِدَ عَسَى أَنْ يُبَلِّغَ مَنْ هُوَ أَوْعَى لَهُ مِنْهُ.
‘இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஓர் ஒட்டகத்தின் மீது அமர்ந்திருந்தார்கள். ஒருவர் அதன் கடிவாளத்தைப் பிடித்துக் கொண்டிருந்தார். அப்போது அவர்கள், ‘இது எந்த நாள்?’ என்று கேட்டார்கள். அந்த நாளுக்கு இன்னும் ஒரு பெயர் சூட்டுவார்களோ என்று கருதி நாங்கள் மௌனமாக இருந்தோம். ‘இது நஹ்ருடைய (துல்ஹஜ் மாதம் பத்தாம்) நாள் அல்லவா?’ என்றார்கள். அதற்கு ‘ஆம்’ என்றோம். அடுத்து இது ‘எந்த மாதம்?’ என்றார்கள். அந்த மாதத்துக்கு இன்னும் ஒரு பெயர் சூட்டுவார்களோ என்று கருதி நாங்கள் மௌனமாக இருந்தோம். ‘இது துல்ஹஜ் மாதமல்லவா?’ என்றார்கள். நாங்கள் ‘ஆம்!’ என்றோம். அடுத்து ‘(புனிதமான) இந்த ஊரில், இந்த மாதத்தில், இன்றைய தினம் எவ்வளவு புனிதமானதோ, அதுபோன்று, உங்களின் உயிர்களும், உடைமைகளும் புனிதம் வாய்ந்தவையாகும்’ என்று கூறிவிட்டு ‘இங்கே வருகை தந்திருப்பவர் வராதவருக்கு இச்செய்தியைக் கூறி விடவேண்டும்; ஏனெனில், வருகை தந்திருப்பவர் அவரை விட நன்கு புரிந்து கொள்ளும் ஒருவருக்கு அச்செய்தியை எடுத்துச் சொல்லி விடக் கூடும்’ என்றார்கள்.
இவ்வாறு அபூ பக்ரா (ரலி) அறிவித்தார்.
இந்தச் செய்தியில் துல்ஹஜ் மாதத்தை புனித மாதம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.
துல்ஹஜ் மாதம் ‘புனித மாதம்’ என்று அழைக்கப்படுவதால் வேறு எந்தப் புனித மாதங்களும் இல்லை என்று வாதிட்டால் அது சரியா?
துல்ஹஜ் மாதம் புனித மாதம் என்று அழைக்கப்பட்டாலும் வேறு புனித மாதங்களும் உண்டு என்று தானே புரிந்து கொள்கிறோம்.
துல்கஃதா, முஹர்ரம், ரஜப் ஆகிய மாதங்களும் புனிதமானவையே!
அல்லாஹ்விடம் மாதங்களின் எண்ணிக்கையானது, வானங்களையும் பூமியையும் அவன் படைத்த நாளில் அல்லாஹ்வின் பதிவேட்டில் உள்ளபடி பன்னிரண்டு மாதங்கள். அவற்றில் நான்கு புனிதமானவை. இதுவே நேரான மார்க்கம். புனித மாதங்களில் உங்களுக்கு நீங்களே அநியாயம் செய்து கொள்ளாதீர்கள்! இணைவைப்பாளர்கள் ஒட்டுமொத்தமாக உங்களுடன் போரிடுவதைப் போன்று நீங்களும் ஒட்டுமொத்தமாக அவர்களுடன் போரிடுங்கள்! “இறையச்சமுடையோருடன் அல்லாஹ் இருக்கிறான்” என்பதை அறிந்து கொள்ளுங்கள்!
அல்குர்ஆன் 9:36
துல்ஹஜ்ஜைப் புனித மாதம் என்று அழைப்பதால் வேறு எந்த மாதங்களும் புனிதமில்லை என்று புரிந்து கொள்ள மாட்டோம்.
அதுபோலவே துல்ஹஜ் பிறை 10ஆம் நாள் யவ்முன் நஹ்ர் என்று அழைக்கப்பட்டாலும் அது மட்டுமே அறுப்பதற்குரிய நாளல்ல. அதுவல்லாத பிற நாட்களும் குர்பானிக்குரிய நாட்களாக உள்ளது என்று புரிந்து கொள்கிறோம்.
அறியப்பட்ட நாட்கள் என்று திருக்குர்ஆன் பன்மையாகக் கூறியதன் அடிப்படையில் குர்பானிக்குரிய நாட்கள் ஒரு நாள் மட்டும் அல்ல என்ற இந்த புரிதலே சரியானதாகும்.
துல்ஹஜ் பிறை பத்தாம் நாளிலிருந்து தான் குர்பானி துவங்குகின்றது என்பதால் அந்த நாள் மட்டும் விசேஷமாக யவ்முன் நஹ்ர் என்று அழைக்கப்படலாம்.
அதனால் மற்ற நாட்கள் அறுப்பதற்குரிய நாட்கள் அல்ல என்றாகி விடாது.
இவற்றைச் சரியாக விளங்காமல் யவ்முன் நஹ்ர் என்று குறிப்பிடப்படுவதால் பெருநாள் தினத்தில் மட்டும் தான் குர்பானி கொடுக்க வேண்டும் என்று பிதற்றுவது அறிவீனமாகும்.
இப்றாஹிம் நபியின் வழிமுறை?
இன்னொரு அரிய வகை (?) வாதம் ஒன்றையும் முன்வைக்கின்றார்கள்.
இப்ராஹீம் நபியைப் பின்பற்றியே குர்பானி கொடுப்பது வழிமுறையாக்கப்பட்டுள்ளது என்று திருக்குர்ஆன் வசனங்கள் கூறுகின்றன. ‘இப்றாஹீம் நபியவர்கள் எந்த நாளில் குர்பானி கொடுத்தார்களோ அந்த நாள், ஏதோ ஒரு நாளாகத்தான் இருக்க முடியும். எனவே ஒரு நாளில் தான் குர்பானி கொடுக்க வேண்டும்’ என்று கூறுகின்றனர்.
உண்மையில் இது ஒரு வினோதமான வாதமாகும்.
இறைவனுக்காக எதையும் அர்ப்பணிக்கவும், இறைக்கட்டளையை ஏற்றுச் செயல்படுத்தவும் முன்வந்த இப்றாஹீம் நபியின் செயலைப் பின்பற்றியுமே குர்பானி கொடுக்கப்படுகிறது. இது தவிர இப்ராஹீம் நபி எதை, எப்படி, எப்போது அறுத்தார்களோ அதை, அப்போது, அப்படியே பின்பற்ற வேண்டும் என்று நமக்கு நபியவர்களால் வழிகாட்டப்படவில்லை.
இப்ராஹீம் நபியின் அர்ப்பணிப்பைப் பின்பற்ற வேண்டும். ஆனால் இப்ராஹீம் நபியின் அறுப்பு முறையைப் பின்பற்ற வேண்டும் என்பதில்லை.
இப்ராஹீம் நபி எந்த நாளில் அறுத்தார்கள்?
துல்ஹஜ் பத்தாம் நாளில் தான் அறுத்தார்கள் என்பதற்கு என்ன ஆதாரம் உள்ளது?
இப்ராஹீம் நபி அறுத்தார்கள் என்றால் எந்தப் பிராணியை அறுத்தார்கள்? ஆட்டையா? மாட்டையா? ஒட்டகத்தையா?
இவற்றுக்கெல்லாம் இவர்களால் பதில் சொல்ல முடியாது.
இவர்களின் வாதப்படி ஏழு நபர்கள் கூட்டு சேர்ந்து குர்பானி கொடுக்க முடியுமா?
இப்றாஹீம் நபியவர்கள் தனியொருவராகவே குர்பானி கொடுத்தார்கள். ஆகவே கூட்டுக் குர்பானி இப்ராஹீம் நபியின் வழிமுறைக்கு எதிரானது எனலாமா?
இப்றாஹீம் நபியவர்கள் ஒட்டகம், மாடு, ஆடு ஆகியவற்றில் ஏதேனும் ஒரு பிராணியையைத் தானே அறுத்திருப்பார்கள்.
மற்ற இரு பிராணிகளைக் குர்பானி கொடுப்பது இப்றாஹீம் நபியின் வழிமுறைக்கு மாற்றமானது என வாதிட்டால் அது அறிவுடையவர்களின் வாதமா?
பெரிய பிராணியை அறுத்தார்கள் என்கிறது திருக்குர்ஆன். அதனால் சிறியதை அறுப்பது இப்ராஹீம் நபி வழிமுறைக்கு எதிரானது என்பார்களா?
இப்படிப் பல கேள்விகளை அடுக்கி கொண்டே போகலாம்.
எனவே இப்றாஹீம் நபியவர்கள் ஒரு நாளில் தான் அறுத்திருப்பார்கள் என்பதால் பெருநாள் அல்லாத மற்ற நாட்களில் குர்பானி கொடுப்பது சரியல்ல என்பது முற்றிலும் பிழையான, அறிவற்ற வாதமாகும். இது ஒருபோதும் அறிவார்ந்த வாதமாகாது.
அதிலும் கூட இப்றாஹீம் நபியவர்கள் துல்ஹஜ் பிறை 10ல் தான் அறுத்தார்கள் என்பதற்கு நேரடிச் சான்று எதுவுமில்லை என்பதும் இதில் கவனிக்கத்தக்கதாகும்.
எனவே ஹஜ் பெருநாள் ஒரு நாளில் மட்டும் தான் குர்பானி கொடுக்க வேண்டும் என்பதற்கு இவர்களிடம் வேறு எந்த ஆதாரமும் இல்லை.