ஆஷுராவும் அனாச்சாரங்களும்
ஆஷுரா என்பது அஷ்ர – பத்து என்ற வேர்ச் சொல்லிலிருந்து பிறந்த வார்த்தையாகும். பத்தாவது என்பது இதன் பொருள். முஹர்ரம் மாதம் பத்தாவது நாளை இது குறிக்கின்றது. இந்நாள் தான், தன்னைக் கடவுள் என்று கொக்கரித்த, இஸ்ரவேலர் சமுதாயத்தைக் கொடுமைப்படுத்திக் கொண்டிருந்த ஃபிர்அவ்ன் என்ற கொடுங்கோலன் கடலில் மூழ்கடிக்கப்பட்டு, அதே கடலில் மூஸா நபியும் அவர்களது இஸ்ரவேலர் சமுதாயமும் காப்பாற்றப்பட்ட வரலாற்றுப் புகழ் மிக்க நாளாகும்.
இந்தச் சிறப்புமிக்க அதே நாளில் ஹுஸைன் (ரலி) அவர்கள் கர்பலாவில் கொல்லப்பட்ட சோக நிகழ்வு நடந்ததால் மூஸா நபியின் புகழ்மிக்க அந்த வரலாற்று நிகழ்வு மறக்கடிக்கப்பட்டு விட்டது. அந்த முழு நிலவை மூடுமேகமாக இடைமறித்து கர்பலா என்ற காரிருள் மறைத்து விட்டது.
ஃபிர்அவ்ன் என்ற கொடுங்கோலன் கொல்லப்பட்ட அந்த மகிழ்ச்சியான நாளை கர்பலா உள்ளே நுழைந்து கருப்புநாளாக ஆக்கி விட்டது. ஷியாக்களின் ஐந்து விரல் படமும் கைங்கரியமும் சேர்ந்து அந்த உண்மை வரலாற்றைக் கண்ணுக்குத் தெரியாமல் மறைத்துவிட்டது.
கர்பலா என்ற பெயரில் ஒரு கருப்பு தினம், சோக தினமாக அனுஷ்டிக்கப்பட்டாலும் பரவாயில்லை. கந்தூரி நாளாகவும் அனுஷ்டிக்கப் படுகின்றது. ஒருபுறம் சோக தினம் என்று சொல்லிக் கொண்டு மறுபுறம் கோலாகல கொண்டாட்ட தினமாக, கோலாட்ட தினமாக அனுஷ்டிக்கப்படுகின்ற இந்த நாளுக்குரிய நிகழ்ச்சி நிரல் முஹர்ரம் முதல் நாளே துவங்கி விடுகின்றது.
சோகம், சந்தோஷம் என்ற முரண்பட்ட அந்த நிகழ்வு நிரல்கள் முற்றி, முறுகி, முடிவுறுகின்ற உச்சக்கட்ட கிளைமாக்ஸ் தான் பத்தாம் நாள். பத்தாம் நாளில் கொண்டாட்டம், கோலாட்டம், குத்தாட்டம், குலுக்கல் ஆட்டம் மேள தாளங்களுடன் கூடிய சிலம்பாட்டமும் நடக்கின்றது.
இந்நாளில் நல்லது நடக்கும் என்பது பஞ்சா எடுக்கும் பரேலவிய கூட்டம் நம்புகின்றது. அதனால் அந் நாளில் பவனி வருகின்ற பஞ்சாவின் நடு மையத்தில் வீற்றிருக்கும் கைச்சின்னத்தில் பூ எறிந்து பூஜை செய்தால் தனது கோரிக்கை நிறைவேறும் என்று நம்புகிறது.
காரியம் நடக்கும் கர்பலா நாள்
ஆஷுரா தினத்தில் அபிவிருத்தி உண்டா?
இந்த கருத்தில் சில ஹதீஸ்கள் உள்ளன. எனினும் அவை அனத்தும் பலவீனமானவையாக உள்ளன.
நபி ஸல் அவர்கள் கூறினார்கள்:
ஆஷுரா தினத்தில் யார் தம் குடும்பத்தாரிடம் தாராளமாக நடந்து கொள்கிறாரோ அல்லாஹ் அந்த வருடம் முழுவதும் அவருக்கு தாராளமாக (அருள்) வழங்குகிறான்.
இது அபூஹுரைரா (ரலி) அவர் களின் அறிவிப்பாக ஷுஅபுல் ஈமான் (ஹதீஸ் எண் 3795), ஜுஸ்உ காஸிம் பின் மூஸா (பக்கம் 17) உள்ளிட்ட இன்னும் சில நூற்களில் பதிவாகி உள்ளது.
இதன் அறிவிப்பாளர் தொடரில் ஹஜ்ஜாஜ் பின் நுஸைர் என்பவர் இடம் பெற்றுள்ளார். இவர் பலவீனமானவர் ஆவார். இவர் ஹதீஸ் துறையில் மறுக்கப்பட வேண்டியவர் என்றும் பலவீனமானவர் என்றும் இமாம் அபூஹாதம் குறிப்பிட்டுள்ளார். இவரது ஹதீஸ்கள் செல்லாததாக ஆகி விட்டன என்று அலீ இப்னுல் மதீனீ விமர்சித்துள்ளார்.
தஹ்தீபுத் தஹ்தீப், பாகம் 3, பக்கம் 167
இவர் உறுதியானவர் அல்ல, பலவீனமானவர் என்று நஸாயியும் இப்னு மயீனும் விமர்சித்துள்ளார்கள். (தஹ்தீபுத் தஹ்தீப் 2/183)
மேலும் இவர் பற்றிய விமர்சனம் பார்க்க: தஹ்தீபுல் கமால் 5/461
அடுத்து இந்தச் செய்தியில் இடம் பெறும் முஹம்மத் பின் தக்வான் என்பவரும் பலவீனமானவரே.
இவரை இமாம் புகாரி மற்றும் இமாம் அபூஹாதம் உள்ளிட்டோர் இவரை ஹதீஸ் துறையில் புறக்கணிக்கப்பட வேண்டியவர் என்று விமர்சித் துள்ளார்கள். நஸாயி இவர் உறுதியானவர் அல்ல என்று நஸாயி குறிப்பிட்டுள்ளார்.
தஹ்தீபுல் கமால் 25/182
மேலும் இதில் இடம் பெறும் சுலைமான் பின் அபீ அப்தில்லாஹ் என்பவரது நம்பகத்தன்மையும் அறியப்படவில்லை என்பதால் அபூஹுரைரா அறிவிக்கும் இந்த ஹதீஸ் முற்றிலும் பலவீனமான செய்தியாகும்.
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அறிவிப்பு
மேற்கண்ட அதே செய்தி நபிகள் நாயகத்திடமிருந்து அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிப்பதாக ஷுஅபுல் ஈமான் 3513, அல்லுஅஃபாஉல் கபீர் 1408, பழாயிலு அவ்காத் 244 உள்ளிட்ட இன்னும் பல நூல்களில் பதிவாகி உள்ளது.
இதன் அனைத்து அறிவிப்பு களிலும் ஹைசம் பின் ஷத்தாஹ் என்பவர் இடம் பெற்றுள்ளார். இவர் மீது கடுமையான விமர்சனங்கள் உள்ளன.
மோசமான செய்திகளை இவர் அறிவித்துள்ளார். எனவே இவரை ஆதாரமாகக் கொள்ளக் கூடாது என்று இப்னு ஹிப்பான் விமர்சித்துள்ளார்.
மீஸானுல் இஃதிதால், பாகம் 4, பக்கம் 326
ஹதீஸ் துறையில் மதிப்பில்லாதவர், மறுக்கப்பட வேண்டியவர் என்று இமாம் அஸதீ விமர்சித்துள்ளார். அல்லுஃபாஃஉ வல்மத்ரூகீன் 3/180
எனவே இப்னு மஸ்ஊத் (ரலி) அறிவிக்கும் இந்த அறிவிப்பும் பலவீனமாகிறது.
ஆஷுரா நாளில் நல்லது நடக்கும் என்று வரும் இந்த ஹதீஸ் கர்பலா நாளை மையமாகக் கொண்டதல்ல. அது உண்மையான ஆஷுரா நாளை, அதாவது மூஸா (அலை) காப்பாற்றப்பட்ட நாளை மையமாகக் கொண்டு வருகின்ற செய்தியாகும்.
இதேபோன்று ஆஷுரா நாளில் குளித்தவருக்கு நோய் ஏற்படாது, கண்ணில் சுருமா தீட்டியவருக்குக் கண்வலி வராது என்ற இட்டுக் கட்டப்பட்ட ஹதீஸ்களும் உள்ளன. இவை அனைத்துமே பலவீனமான ஹதீஸ்களாக இருந்தாலும் அவை உண்மையான ஆஷுராவை மையமாகக் கொண்டவை தான்.
பூ மிதித்தல் தீ கொளுத்துதல்
ஆஷூரா தினத்திற்காக ஒரு துண்டுப் பிரசுரத்தில் பூ மிதித்தல், பெயர் தான் பூ மிதித்தல். ஆனால் உண்மையில் அது தீ மிதித்தல் ஆகும். கோயில் கொடைகளில் தீ மிதித்தல் திருவிழா நடைபெறுவது போன்று இந்தப் பஞ்சாவிலும் நடைபெறுகின்றது.
நவராத்திரி என்ற பெயரில் தீபமேற்றுதல் போன்ற தீக்கொளுத்தும் சமாச்சாரங்கள் பஞ்சா தினத்திலும் அரங்கேறுகின்றன. பஞ்சாவில் சிலம்பாட்டம் ஆடுவோர் மண்ணெண்ணையை வாயில் ஊற்றிக் கொண்டு தீ ஊதுதல், தீ வளையங்களைச் சுற்றுதல் போன்ற சாகசங்களைச் செய்வார்கள்.
சப்பர அணிவகுப்பு
ஆஷுரா பத்தாம் நாளில் பஞ்சா அணிவகுப்பு நடைபெறும். இந்துக்களின் கோயில் திருவிழாவில் நடப்பதைப் போன்று அலங்கரிக்கப் பட்ட சப்பரத்தை, தெருத்தெருவாக இழுத்துச் செல்வது தான் இங்கு பஞ்சா ஊர்வலமாக நடைபெறுகின்றது.
கொலு வைத்தல்
இந்துக்கள் கொலு வைப்பதைப் போல் பஞ்சாவும் பந்தாவாக தனது ஆலயத்தில் அலுவலகத்தில் பரேலவிச பக்தர்கள் பத்து நாள் தரிசனத்திற்காக திறந்து கொலுவாகக் காட்சியளிக்கும்.
தடைக்குள்ளாகும் மாமிசம் – மனைவி
இந்துக்கள் சில நாட்களில் கறி மீன் சாப்பிட மாட்டார்கள். முஹர்ரம் பத்து நாட்களில் பரேலவிச பூசாரிகள் புத்திசாலித்தனமாக மீனை மட்டும் தடுத்துக் கொண்டார்கள். ஆனால் எல்லாம் வல்ல அல்லாஹ்வோ கடல் உணவுகள் அனைத்தையும் ஹலாலாக்கி இருக்கின்றான்.
உங்களுக்கும், ஏனைய பயணிகளுக்கும் பயன்படும் பொருட்டு கடலில் வேட்டையாடுவதும், அதன் உணவும் உங்களுக்கு அனுமதிக்கப் பட்டுள்ளது.
(அல்குர்ஆன்:5:96.)
இவர்களுக்கு எப்படி இந்தப் பத்து நாட்களும் மீனைத் தடை செய்யும் அதிகாரம் வந்தது?
இது அப்பட்டமாக அல்லாஹ்வின் அதிகாரத்தில் கை வைக்கின்ற அநியாயமும் அக்கிரமும் நிறைந்த செயலாகும். சம்சாரத்தையும் சேர்த்தே தடை செய்கிறார்கள். அதாவது, முஹர்ரம் பத்து நாட்களும் மனைவியுடன் தாம்பத்தியத்தில் ஈடுபடுவதையும் தடை செய்கிறார்கள். இவ்வாறு தடை செய்கின்ற அதிகாரம் அல்லாஹ் ஒருவனுக்கு மட்டும் தான் உள்ளது.
நோன்பு, ஹஜ் போன்ற வணக்கங் களில் அல்லாஹ் தாம்பத்தியத்தைத் தடை செய்கிறான்.
நோன்பின் இரவில் உங்கள் மனைவியரிடம் கூடுவது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.
(அல்குர்ஆன்:2:187.)
ஹஜ்ஜை (தன்மீது) விதியாக்கிக் கொண்டவர் ஹஜ்ஜின்போது உடலுறவு கொள்வதோ, குற்றம் செய்வதோ, விதண்டாவாதம் புரிவதோ கூடாது.
(அல்குர்ஆன்:2:197.)
அல்லாஹ் தடை செய்வதற்கு நிகராக இந்தப் பரேலவிகளும் தாம்பத்தியத்தைத் தடை செய்கிறார்கள்.
அல்லாஹ் அனுமதியளிக்காததை மார்க்கமாக ஆக்கும் தெய்வங்கள் அவர்களுக்கு உள்ளனரா? தீர்ப்பு பற்றிய கட்டளை இல்லாதிருந்தால் அவர்களுக்கிடையே முடிவு செய்யப்பட்டிருக்கும். அநீதி இழைத்தோருக்குத் துன்புறுத்தும் வேதனை இருக்கிறது.
(அல்குர்ஆன்:42:21.)
தனக்கு நிகரானவர்கள் யாரும் இருக்கிறார்களா? என்று இந்த வசனத்தில் அல்லாஹ் சவால் விடுகின்றான். இந்த ஷியா சாட்ஜாத்துகளோ, நாங்கள் இருக்கிறோம் என்று அல்லாஹ்வுடன் சண்டையிடக்களம் கண்டிருக்கின்றனர். பஞ்சாவின் போது தங்களுக்கு ஆண் பிள்ளை வேண்டும் என்ற தேட்டம் உள்ளவர்கள் ஆண் உறுப்பைப் போன்று கொளுக்கட்டை செய்து வினியோகிப்பதையும், விளம்புவதையும் பார்க்கிறோம். வெள்ளியில் ஆண்குறி போன்று செய்து அதை பஞ்சாவுக்குக் காணிக்கையாக்கும் நடைமுறையும் உள்ளது.
எல்லாம் வல்ல அல்லாஹ் மார்க்கத்தில் ஆபாசம் அறவே இல்லை என்று கூறுகின்றான்.
அவர்கள் வெட்கக்கேடான காரியத்தைச் செய்யும்போது “எங்கள் முன்னோர்களை இப்படித்தான் கண்டோம். அல்லாஹ்வே இதை எங்களுக்குக் கட்டளையிட்டான்” என்று கூறுகின்றனர். “அல்லாஹ் வெட்கக்கேடானதை ஏவ மாட்டான். நீங்கள் அறியாதவற்றை அல்லாஹ் வின் மீது இட்டுக்கட்டிக் கூறுகிறீர்களா?” என்று கேட்பீராக!
(அல்குர்ஆன்:7:28.)
அல்லாஹ்வின் கூற்றுக்கு மாற்றமாக, பரேலவிகள் இஸ்லாத்தில் ஆபாசம் இருப்பது போன்ற தோற்றத்தை உருவாக்குகின்றனர். கன்னியரும் காளையரும் பஞ்சா ஊர்வலத்தில் சங்கமிக்கின்றனர்; சந்திக்கின்றனர். பஞ்சாவைப் பார்க்கிறார்களோ இல்லையோ அங்கு வந்திருக்கும் பாவைகளைப் பார்வை களால் மாறி மாறிச் சந்திக்கின்றனர். பெரிய அளவுக்கு விபச்சாரம் எதுவும் இங்கு நடக்கவில்லை என்றாலும் நபி (ஸல்) அவர்கள் கூறியபடி கண்களால் செய்யப்படுகின்ற விபச்சாரத்தைச் செய்கின்றனர்.
இப்படிப் பல்வேறு வகைகளில் ஆஷுரா தினத்தில் நடத்தப்படுகின்ற பஞ்சா ஊர்வலம் பிற மதக் கலாச்சாரத்துடன் முழுமையாக ஒப்பாகின்றது.
யார் பிற சமுதாயத்திற்கு ஒப்பாக நடக்கின்றாரோ அவர் அந்தச் சமுதாயத்தையே சேர்ந்தவராவார்” என நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்: அபூதாவூத்-3512
இந்த ஹதீஸின் அடிப்படையில் இந்தப் பஞ்சா கலாச்சாரம் ஒழிக்கப்பட வேண்டும். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பிற மதக் கலாச்சாரத்தை ஓர் எள்ளளவு, எள் முனையளவு ஒப்பாகி இருந்தால் கூட அதை மறுத்து விடுவார்கள்.
தாத்து அன்வாத்
இதற்கு “தாத்து அன்வாத்’ சிறந்த எடுத்துக்காட்டாகும்.
நாங்கள் புதிதாக இஸ்லாத்திற்கு வந்தவர்களாக இருக்க, நபி (ஸல்) அவர்களுடன் ஹுனைன் யுத்தத்திற்குச் சென்றோம். அங்கு இணை வைப்பவர்களுக்கென்று ஒரு இலந்தை மரம் இருந்தது. அங்கு அவர்கள் (பரகத்தை) நாடி தங்களின் போர்க்கருவிகளைத் தொங்கவிட்டு அங்கு தங்கி (இஃதிகாஃப்) இருப்பார்கள். “தாத்து அன்வாத்‘ என்று அதற்குச் சொல்லப்படும்.
நாங்கள் அந்த மரத்தின் பக்கம் சென்ற போது நபி (ஸல்) அவர்களிடத்தில் “அல்லாஹ்வின் தூதரே! அவர்களுக்கு “தாத்து அன்வாத்து‘ என்று இருப்பதைப் போன்று எங்களுக்கும் ஏற்படுத்துங்கள்” என்று கூறினோம். அதற்கு நபி (ஸல்) அவர்கள் “சுப்ஹானல்லாஹ்! அல்லாஹு அக்பர்! இவையெல்லாம் (அறியாமைக் காலத்தவரின்) முன்னோர்களின் செயல் ஆகும்” என்று சொல்லி, “என் உயிர் யார் கைவசம் இருக்கிறதோ அவன் மீது ஆணையாக! நீங்கள் நபி மூஸா (அலை) அவர்களிடத்தில் பனூ இஸ்ரவேலர்கள் கேட்டதைப் போல் கேட்கிறீர்கள்.
(அதாவது) பனூ இஸ்ராயீல்கள் நபி மூஸா (அலை) அவர்களிடத்தில், “மூஸாவே! அவர்களுக்குப் பல கடவுள்கள் இருப்பதைப் போல் எங்களுக்கும் கடவுளை ஏற்படுத்துங்கள்‘ என்று கேட்க, அதற்கு மூஸா (அலை) அவர்கள், “நீங்கள் ஒன்றுமறியாத விபரமற்றவர்கள்‘ என்று பதிலளித்தார்கள். இதைப் போலவே, நீங்களும் கூறியுள்ளீர்கள். நிச்சயமாக, நீங்கள் உங்களுக்கு முன்னவர்களின் வழிமுறையைப் படிப்படியாகப் பின்பற்றுவீர்கள்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூவாக்கிதுல்லைசி (ரலி)
நூல்: திர்மிதீ (2106), அஹ்மத் (20892)
ஆயுதங்களைத் தொங்க விடுவதைத் தான் நபித்தோழர்கள் வேண்டுகிறார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் இஸ்ரவேல் சமுதாயம் மூஸா நபியிடம் சிலைகளைக் கேட்ட நிகழ்வுடன் ஒப்பிடுகின்றார்கள்.
இஸ்ராயீலின் மக்களைக் கடல் கடந்து செல்ல வைத்தோம். அப்போது தமது சிலைகளுக்கு வழிபாடு நடத்திக் கொண்டிருந்த கூட்டத்திடம் அவர்கள் வந்தனர். “மூஸாவே! அவர்களுக்கு இருக்கும் கடவுள்கள் போல் எங்களுக்கும் கடவுளை எற்படுத்தித் தருவீராக!” என்று கேட்டனர். “நீங்கள் அறிவு கெட்ட கூட்டமாகவே இருக்கின்றீர்கள்” என்று அவர் கூறினார்.
“அவர்கள் எதில் இருக்கிறார்களோ, அது அழியும். அவர்கள் செய்து வந்தவையும் வீணானது.”
(அல்குர்ஆன்:7:138, 139.)
இதில் நபி (ஸல்) அவர்கள் எந்த அளவுக்குக் கடுமையான பார்வை பார்க்கின்றார்கள் என்பதைத் தெரிய முடிகின்றது. அந்த அடிப்படையில் இந்தப் பஞ்சா ஒழிக்கப்பட வேண்டும்.
அடுத்து, முஹர்ரம் ஊர்வலம், விநாயகர் ஊர்வலத்தைப் போன்று கலவரங்களை உருவாக்கி விடுகின்றது. (23.10.2015) அன்று கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகேயுள்ள கெலமங்கலத்தில் நடைபெற்ற பஞ்சா ஊர்வலத்தில் கல்வீச்சு சம்பவங்கள் நடந்துள்ளன. விநாயகர் ஊர்வலத்தில் நடப்பது போன்று கலவரங்கள் நடப்பதாலும் இந்தப் பஞ்சா ஊர்வலம் ஒழிக்கப்பட வேண்டிய ஒன்றாக இருக்கின்றது.
இந்தியாவில் உள்ள சூழ்நிலை கலவர மேகமாகவே உள்ளது. ஒரு சிறு பொறியும் பெருந்தீயாக மாறும் அபாயம் உள்ளது. இந்துத்துவா சக்திகள் சந்து முனை இடை வெளியில் கந்தகப் பொடி தூவி, கலவரத்தீயை மூட்டுவதற்கு அனுதினமும் ஆயத்தமாக இருக்கின்றர். எனவே இதுபோன்ற தேவையற்ற ஊர்வலங்கள் கண்டிப்பாகத் தவிர்க்கப்பட வேண்டும்.
பஞ்சா முடிந்ததும் அதை ஆற்றில் கொண்டு போய்க் கரைப்பதைப் பார்க்கிறோம். அதுபோல் விநாயகர் சிலைகளையும் ஆற்றில் கொண்டு போய் கரைப்பார்கள். அனேக, அதிகமான அனாச்சாரங்கள் இந்து மதத்திலிருந்து முஸ்லிம்கள் காப்பியடித்ததாக இருக்கும். ஆனால் விநாயகர் ஊர்வலமோ பஞ்சா ஊர்வலத்திலிருந்து காப்பியடிக்கப்பட்ட அனாச்சாரமாகும். எது எப்படியோ இரண்டுமே ஒழிக்கப்பட வேண்டிய கலாச்சாரங்கள்; அனாச்சாரங்கள்.