திருக்குர்ஆனைக் கற்போம்! கற்பிப்போம்!
மனித சமுதாயம் நேர்வழியில் நடப்பதற்காக ஒவ்வொரு கால கட்டத்திலும் எல்லாம் வல்ல இறைவன் தனது திருத்தூதர்களை அனுப்பி அவர்களுக்கு வேதங்களையும் வழங்கினான்.
இறைத்தூதர்கள் அல்லாஹ்வின் மார்க்கத்தை மக்களுக்கு விளக்கினார்கள். வேதங்களின் கட்டளைகளையும் விளக்கிக் கூறினார்கள், வாழ்ந்தும் காட்டினார்கள்.
ஆனால் வேதம் கொடுக்கப்பட்ட எல்லா சமுதாயமும் இறைத்தூதர்களின் காலத்துக்குப் பின் வேதத்தின் போதனைகளையும், தூதர்களின் விளக்கத்தையும் புறக்கணிக்காமல் இருக்கவில்லை.
வேதமெல்லாம் நமக்கு விளங்காது எனக் கூறி வேதங்களை இழிவு செய்தனர் சிலர்.
வேறு சிலர் வேதங்களுக்குத் தங்கள் மனோ இச்சைப்படி விளக்கம் கொடுத்து உலக ஆதாயத்தைத் தேடிக் கொண்டனர்.
மற்றும் சிலர் வேதத்தில் தங்களுக்குச் சாதகமானதை எடுத்துக் கொண்டு மற்றவற்றை வேதத்திலிருந்து நீக்கினார்கள்.
இன்னும் சிலர் தாங்கள் சுயமாகக் கற்பனை செய்து கொண்டவைகளை வேதத்தில் சேர்த்து இறைவனின் வழிகாட்டுதலையே குழப்பினார்கள்.
எந்தச் சமுதாயத்திலும் இறைவன் வழங்கிய வேதம், இறைவன் வழங்கிய வடிவில் இருக்கவில்லை.
இறைவேதம் எது? மனிதக் கற்பனையில் உதித்தது எது? என்றெல்லாம் கண்டுபிடிக்க முடியாமல் செய்து விட்டனர்.
முஸ்லிம்கள் மட்டும் தான் இறைவன் வழங்கிய வேதத்தை அப்படியே பாதுகாத்து வருகின்றனர். அவர்கள் வேதத்தின் போதனையை முழுமையாகக் கடைப்பிடிக்காவிட்டால் கூட, வேதத்தில் கைச்சரக்கு எதையும் சேர்க்கவில்லை.
தத்தமது மனோ இச்சைப்படி விளக்கம் கூறி வருபவர்கள் முஸ்லிம் சமுதாயத்திலும் உள்ளனர். ஆனாலும், அவர்களும் வேதத்தில் கை வைக்க முடியவில்லை.
பதினான்கு நூற்றாண்டுகளாக எந்த மாற்றமும் இன்றி இறைவனால் வழங்கப்பட்ட வடிவிலேயே திருக்குர்ஆன் இன்றளவும் பாதுகாக்கப்பட்டு வருகிறது. திருக்குர்ஆனுக்கு மட்டுமே இந்தச் சிறப்புள்ளது.
இறைவனால் பாதுகாக்கப்பட்ட திருக்குர்ஆனை ஓதுவதும், கற்பதும், பிறருக்குக் கற்றுக் கொடுப்பதும் மிகச் சிறந்த நற்காரியங்களாகும். திருக்குர்ஆனிலும், நபிமொழிகளிலும் குர்ஆனை ஓதுவதற்கும், மற்றவர்களுக்கு கற்பிப்பதற்கும் ஏராளமான நன்மைகளும், சிறப்புகளும் கூறப்பட்டுள்ளன. அவற்றில் சிலவற்றை இக்கட்டுரையில் நாம் காண்போம்.
தவ்ஹீத்வாதியாக மாற்றும் திருக்குர்ஆன்
ஒருவனுக்கு இவ்வுலகில் கிடைக்கும் பாக்கியங்களிலேயே மிகப்பெரும் பாக்கியம் அவன் ஏகத்துவவாதியாக இருப்பதாகும். ஏனெனில் ஒருவன் இணைவைக்கும் நிலையில் மரணித்து விட்டால் அவன் மறுமையில் நிரந்தர நரகத்திற்கு உரியவனாக மாறி விடுகின்றான்.
ஒருவனை நிரந்தர நரகத்தில் இருந்து காப்பாற்றுவது ஏகத்துவக் கொள்கை மட்டுமே! இதற்கு ஏராளமான திருமறை வசனங்களும், நபிமொழிகளும் சான்றாக உள்ளன. இத்தகைய மிகப் பெரும் பாக்கியமான ஏகத்துவம் என்ற நற்பாக்கியம் திருக்குர்ஆனைக் கற்பதின் மூலமும் கற்றுக் கொடுப்பதின் மூலமும் கிடைக்கின்றது.
“வேதத்தை நீங்கள் கற்றுக் கொடுப்போராக இருப்பதாலும், அதை வாசித்துக் கொண்டிருப்பதாலும் இறைவனுக்குரியோராக ஆகி விடுங்கள்!’’ (என்றே நபி கூறுவார்.)
அல்குர்ஆன் 3:79
திருக்குர்ஆனைக் கற்பது மற்றும் கற்றுக் கொடுப்பதின் முக்கியத்துவத்தை மேற்கண்ட இறைவசனத்தின் மூலம் நாம் மிகத் தெளிவாக விளங்கிக் கொள்ள முடிகிறது.
மிகச் சிறந்தவர்களாக மாற்றும் திருக்குர்ஆன்
திருக்குர்ஆனைக் கற்பதும், கற்பிப்பதும் நம்மை மிகச் சிறந்த முஃமின்களாக மாற்றுகிறது.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: குர்ஆனைத் தாமும் கற்று, பிறருக்கும் அதனைக் கற்பித்தவரே உங்களில் சிறந்தவர்.
அறிவிப்பவர்: உஸ்மான் (ரலி)
நூல்: புகாரி 5027, 5028
அந்தஸ்துகளை உயர்த்தும் அற்புத வேதம்
ஒரு சமுதாய மக்கள் எந்த அளவிற்கு திருக்குர்ஆனின் சட்டங்களை விளங்கி, அதன் அடிப்படையில் தங்கள் வாழ்வை அமைத்துக் கொள்கிறார்களோ அந்த அளவிற்கு அவர்களின் சமூகம் உயர்ந்து காணப்படும். திருக்குர்ஆனின் வாழ்வியலைப் புறக்கணித்த சமூகத்தின் நிலை தரம் தாழ்ந்ததாகவே இருக்கும். இதனை நபி (ஸல்) அவர்கள் நமக்குத் தெளிவுபடுத்தியுள்ளார்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் இந்த வேதத்தின் மூலம் சிலரை உயர்த்துகிறான்; (வேதத்தைப் புறக்கணிக்கும்) வேறு சிலரைத் தாழ்த்துகிறான்’’
அறிவிப்பவர்: உமர் (ரலி)
நூல்: முஸ்லிம் 1487
குர்ஆனைக் கற்பதற்குப் பொறாமைப்படலாம்
பொறாமை என்பது ஒரு தீய குணமாகும். எந்த ஒருவர் மீதும் பொறாமை கொள்வது கூடாது. பொறாமைக்காரன் பொறாமை கொள்ளும் போது ஏற்படும் தீங்கிலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடவேண்டும் என திருக்குர்ஆன் நமக்கு கற்றுத் தருகிறது. ஆனால் இஸ்லாம் இரண்டு விஷயங்களுக்கு இதிலிருந்து விதிவிலக்கு அளிக்கிறது. இதோ நபி (ஸல்) அவர்கள் கூறுவதைப் பாருங்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இரண்டு விஷயங்களைத் தவிர வேறெதற்காகவும் பொறாமை கொள்ளக் கூடாது.
1. ஒரு மனிதருக்கு அல்லாஹ் குர்ஆனைக் கற்றுத் தந்தான். அவர் அதனை இரவு, பகல் எல்லா நேரங்களிலும் ஓதிவருகிறார். இதைக் கேள்விப்பட்டு அவருடைய அண்டை வீட்டுக்காரர், இன்னாருக்கு வழங்கப்பட்டது போல் எனக்கும் வழங்கப்பட்டிருந்தால் நானும் அவர் செயல்படுவது (ஓதுவது) போல் செயல்பட்டிருப்பேனே (ஓதியிருப்பேனே)! என்று கூறுகின்றார்.
- இன்னொரு மனிதருக்கு அல்லாஹ் செல்வத்தை வழங்கினான். அவர் அதனை நல்வழியில் செலவிட்டு வருகிறார். (இதைக் காணும்) ஒரு மனிதர், இன்னாருக்கு வழங்கப்பட்டது போல் எனக்கும் (செல்வம்) வழங்கப்பட்டிருக்குமானால் அவர் (தர்மம்) செய்தது போல் நானும் செய்திருப்பேனே என்று கூறுகின்றார்.
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 5026
ஒருவருக்கு இறைவன் செய்த அருள் அழிய வேண்டும் என்று நினைப்பது தான் பொறாமை ஆகும். ஆனால் மேற்கண்ட நபிமொழியில் பொறாமை என்பது அதன் நேரடிக் கருத்தில் கூறப்படவில்லை. மாறாக ஒருவருக்கு இறைவன் செய்த அருளைக் கண்டு, அது போன்று நமக்கும் இறைவன் அருள் செய்ய வேண்டுமே என்ற நல்லெண்ணத்தைத் தான் நபி (ஸல்) அவர்கள் பொறாமை என்ற வார்த்தையால் குறிப்பிட்டுள்ளார்கள்.
திருக்குர்ஆனை ஓதுபவர்களைப் பார்த்து பொறாமைப்பட வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள் என்று சொன்னால் திருக்குர்ஆனை ஓதுவதினால் கிடைக்கும் மிகப் பெரும் நன்மையை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.
குர்ஆனை கற்றவருக்கும், கல்லாதவருக்கும் உள்ள வித்தியாசம்
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: குர்ஆனை ஓதுகின்ற இறைநம்பிக்கையாளரின் நிலையானது நாரத்தைப் பழத்தின் நிலையைப் போன்றதாகும். அதன் வாசனையும் நன்று; சுவையும் நன்று. (மற்ற நற்செயல்கள் புரிந்து கொண்டு) குர்ஆன் ஓதாமலிருக்கும் இறை நம்பிக்கையாளரின் நிலையானது, பேரீச்சம் பழத்தின் நிலையைப் போன்றதாகும். அதற்கு வாசனை கிடையாது. (ஆனால்) அதன் சுவை நன்று. நயவஞ்சகனாகவும் இருந்துகொண்டு குர்ஆனையும் ஓதிவருகின்றவரின் நிலையானது, துளசிச் செடியின் நிலையை ஒத்திருக்கின்றது. அதன் வாசனை நன்று; சுவையோ கசப்பு. நயவஞ்சகனாகவும் இருந்துகொண்டு குர்ஆனையும் ஓதாமலிருப்பவரின் நிலையானது, குமட்டிக் காயின் நிலையை ஒத்திருக்கிறது. அதற்கு வாசனையும் கிடையாது; சுவையோ கசப்பு.
அறிவிப்பவர்: அபூ மூஸா அல்அஷ்அரி (ரலி)
நூற்கள்: புகாரி 5059, முஸ்லிம் 1461
குர்ஆனைப் படிப்பது இலாபம் தரும் வியாபாரம்
அல்லாஹ்வின் வேதத்தைப் படித்து தொழுகையை நிலைநாட்டி நாம் அவர்களுக்கு வழங்கியதிலிருந்து இரகசியமாகவும், வெளிப்படையாகவும் (நல்வழியில்) செலவிடுவோர் நட்டமில்லாத ஒரு வியாபாரத்தை எதிர்பார்க்கின்றனர். ஏனெனில் அவர்களின் கூலிகளை அவன் முழுமையாக அளிப்பான். தனது அருட்கொடைகளில் அவர்களுக்கு இன்னும் அதிகமாகவும் அளிப்பான். அவன் மன்னிப்பவன்; நன்றி செலுத்துபவன்.
திருக்குர்ஆன் 35:29, 30
ஓவ்வொரு எழுத்திற்கும் பத்து நன்மைகள்
அல்லாஹ் எந்த ஓசை வடிவத்தில் இறக்கினானோ அந்த ஓசை வடிவத்தில் திருக்குர்ஆனை ஓதும் போது ஒவ்வொரு எழுத்திற்கும் பத்து நன்மைகளை இறைவன் நமக்கு வாரி வழங்குகிறான்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யார் அல்லாஹ்வின் வேதத்திலிருந்து ஒரு எழுத்தைப் படிக்கிறாரோ அதற்காக அவருக்கு ஒரு நன்மை கிடைக்கிறது. ஒரு நன்மை என்பது அது போன்று பத்து மடங்காகும். ‘‘அலிஃப் லாம் மீம்” என்பது ஒரு எழுத்து என்று நான் கூற மாட்டேன். மாறாக. ‘அலிஃப்’ ஒரு எழுத்து ‘லாம்’ ஒரு எழுத்து, ‘மீம்’ ஒரு எழுத்து ஆகும்.
அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் (ரலி)
நூல்: திர்மிதி 2835
மறுமையில் பரிந்துரைக்கும் திருக்குர்ஆன்
திருக்குர்ஆனை ஓதுவது மறுமையிலும் மிகப் பெரும் பாக்கியங்களை அள்ளித் தருகிறது. திருக்குர்ஆனை ஓதியவர்களுக்காக அது மறுமை நாளில் அல்லாஹ்விடம் பரிந்துரை செய்யும், அவர்களுக்காக இறைவனிடம் வாதாடும்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: குர்ஆனை ஓதிவாருங்கள். ஏனெனில், ஓதி வருபவர்களுக்கு அது மறுமையில் வந்து (இறைவனிடம்) பரிந்துரை செய்யும். இரு மலர்களான “அல்பகரா’ மற்றும் “ஆலு இம்ரான்’ ஆகிய இரு அத்தியாயங்களையும் ஓதிவாருங்கள். ஏனெனில், அவை மறுமை நாளில் நிழல் தரும் மேகங்களைப் போன்றோ அல்லது அணி அணியாகப் பறக்கும் பறவைக் கூட்டங்களைப் போன்றோ வந்து தம்மோடு தொடர்புள்ளவர்களுக்காக (இறைவனிடம்) வாதாடும். “அல்பகரா’ அத்தியாயத்தை ஓதி வாருங்கள். அதைப் பற்றிப் பிடிப்பது பரக்கத் (மறைமுக அருள்) ஆகும். அதைக் கை விடுவது இழப்பைத் தரும். (அதன் படி நடப்பது) வீணர்களுக்கு இயலாது.
அறிவிப்பவர்: அபூ உமாமா அல்பாஹிலி(ரலி)
நூல்: முஸ்லிம் 1470
திறமைசாலிக்கும், சிரமப்படுவோருக்கும் கிடைக்கும் நற்கூலிகள்
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
குர்ஆனை நன்கு மனனமிட்டுத் தங்குதடையின்றி ஓதுகின்றவர் கடமை தவறாத கண்ணியமிக்க தூதர்(களான வானவர்)களுடன் இருப்பார். குர்ஆனை (மனனம் செய்திராவிட்டாலும் அதைச்) சிரமத்துடன் திக்கித் திணறி ஓதி வருகின்றவருக்கு இரு மடங்கு நன்மைகள் உண்டு.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: முஸ்லிம் 1462
இறைவனின் வார்த்தைகளை ஓதக் கூடியவர்களுக்கு மறுமையில் கிடைக்கும் நற்கூலியை மேற்கண்ட நபிமொழி மிகத் தெளிவாக எடுத்துரைக்கிறது. பெரும் நன்மைகளை அள்ளிக் கொடுக்கும் திருக்குர்ஆனை ஓதுவதற்கும் பொருளுணர்ந்து படிப்பதற்கும் நாம் அதிகமதிகம் முயற்சி செய்ய வேண்டும்.
பள்ளியில் குர்ஆன் வகுப்பு
திருக்குர்ஆனைக் கற்றுக் கொடுக்கும் வகுப்புகளை எந்த இடத்திலும் நடத்திக் கொள்ளலாம். அதிலும் குறிப்பாக, பள்ளிவாசலில் மக்கள் ஒன்று கூடி குர்ஆனைக் கற்றுக் கொள்வது மிகவும் சிறந்ததாகும். இதனைப் பின்வரும் நபிமொழியிலிருந்து நாம் அறிந்து கொள்ளலாம்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மக்கள் இறையில்லங்களில் ஒன்றில் ஒன்றுகூடி, அல்லாஹ்வின் வேதத்தை ஓதிக் கொண்டும் அதை ஒருவருக்கொருவர் படித்துக் கொடுத்துக் கொண்டும் இருந்தால், அவர்கள் மீது அமைதி இறங்குகிறது. அவர்களை இறையருள் போர்த்திக் கொள்கிறது. அவர்களை வானவர்கள் சூழ்ந்து கொள்கின்றனர். மேலும் இறைவன், அவர்களைக் குறித்துத் தம்மிடம் இருப்போரிடம் (பெருமையுடன்) நினைவு கூருகிறான்
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம் 5231
ஃபஜ்ருக்குப் பின் குர்ஆன் வகுப்பு
குறிப்பாக சுபுஹு தொழுகைக்குப் பிறகு பள்ளிவாசலுக்குச் சென்று குறைந்த பட்சம் ஓரிரு வசனங்களையோ, அதன் விளக்கத்தையோ கற்றுக் கொள்வது மிகவும் சிறந்த நற்காரியமாகும். அதற்கு நபியவர்கள் வழிகாட்டியுள்ளார்கள்.
நாங்கள் (மஸ்ஜிதுந் நபவீ பள்ளிவாசலின்) திண்ணையில் இருந்தபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் புறப்பட்டு வந்தார்கள். அப்போது “உங்களில் எவர் ஒவ்வொரு நாள் காலையிலும் ‘புத்ஹான்’ அல்லது ‘அகீக்’ (சந்தைக்குச்) சென்று பாவம் புரியாமலும், உறவைத் துண்டிக்காமலும் பருத்த திமில்கள் கொண்ட இரு ஒட்டகங்களுடன் திரும்பி வருவதை விரும்புவார்?’’ என்று கேட்டார்கள். “நாங்கள் (அனைவருமே) அதை விரும்புவோம்’’ என்று நாங்கள் பதிலளித்தோம். அதற்கு அவர்கள், “உங்களில் ஒருவர் காலையில் பள்ளிவாசலுக்குப் புறப்பட்டுச் சென்று அல்லாஹ்வின் வேதத்திலிருந்து இரு வசனங்களைக் ‘கற்றுக் கொள்வது’ அல்லது ‘ஓதுவது’ இரு ஒட்டகங்களை விடச் சிறந்ததாகும். மூன்று வசனங்கள் மூன்று ஒட்டகங்களை விடவும், நான்கு வசனங்கள் நான்கு ஒட்டகங்களை விடவும் சிறந்ததாகும். இவ்வாறு எத்தனை வசனங்கள் ஓதுகின்றாரோ அந்த அளவு ஒட்டகங்களை விடச் சிறந்ததாக அமையும்’’ என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: உக்பா பின் ஆமிர் (ரலி)
நூல்: முஸ்லிம் 1469
குர்ஆன் வகுப்பு என்பது மக்களுக்கு வேதத்தைக் கற்றுக் கொடுக்கும் சபையாக இருப்பதால் அதனை மக்களுக்கு வசதிப்பட்ட எந்த நேரத்திலும், அனுமதிக்கப்பட்ட எந்த இடத்திலும் நடத்திக் கொள்ளலாம். அதிலும் குறிப்பாக, பள்ளியில் நடத்துவது சிறந்ததாகும். சுபுஹு தொழுகைக்குப் பிறகு நடத்திக் கொள்வதும் சிறந்ததாகும்.
கணக்கிலடங்காத நன்மைகளையும், பாக்கியங் களையும், அந்தஸ்துகளையும் அள்ளித் தரும் திருக்குர்ஆனை நாமும் கற்போம், மற்றவர்களுக்கும் கற்பிப்போம். அதன் அடிப்படையில் வாழ்ந்து மரணித்து மறுமையில் ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் என்ற உயர்ந்த சொர்க்கத்தை அடைவோமாக!