ஒன்றுக்குப் பத்து! ஓரிறையின் பரிசு!
ஆயிரம் ஆண்டுகள் வாழ்கின்ற அளவுக்கு முன்வாழ்ந்த சமுதாய மக்கள் ஆயுள் வழங்கப்பட்டிருந்தனர். இதைப் பின்வரும் வசனத்திலிருந்து தெரிந்து கொள்ளலாம்.
நூஹை அவரது சமுதாயத்திடம் அனுப்பினோம். அவர்களுடன் ஆயிரம் ஆண்டுகளுக்கு ஐம்பது ஆண்டுகள் குறைவாக வசித்தார்.
அல்குர்ஆன் 29:14
ஆனால் நமது இந்தச் சமுதாயமோ அதில் பத்தில் ஒரு பங்கு அளவுக்குரிய ஆயுட்காலத்தை விடவும், அதாவது நூறு வயதிற்கும் குறைவான அளவு வாழ்நாள் தான் அளிக்கப்பட்டிருக்கின்றது.
இந்தக் குறைந்த வாழ்நாளில் ஒரு மனிதன் செய்கின்ற அமல்கள் அவனது மறுமை வாழ்க்கை நன்றாக அமையப் போதுமானதாக இருக்குமா? அதனால் எல்லாம் வல்ல அல்லாஹ் குர்ஆன் அருளப்பட்ட ரமலான் மாதத்தில் லைலத்துல் கத்ர் போன்ற பாக்கியம் பொருந்திய இரவுகளை அளித்து அவர்களுக்கு அளப்பெரும் நன்மைகளையும் அபரிமிதமான பாக்கியங்களையும் வழங்குகின்றான். இதை நமக்கு கத்ர் என்ற அத்தியாயம் தெரிவிக்கின்றது.
மகத்துவமிக்க இரவில் இதை (குர்ஆனை) நாம் அருளினோம். மகத்துவமிக்க இரவு என்றால் என்னவென உமக்கு எப்படித் தெரியும்? மகத்துவமிக்க இரவு ஆயிரம் மாதங்களை விடச் சிறந்தது.
அல்குர்ஆன் 97:1-3
இது அல்லாமல் அன்றாடம் நாம் செய்கின்ற ஒவ்வொரு அமலுக்கும் பத்திலிருந்து 700 மடங்கு வரை நன்மைகளை அள்ளித் தருகின்றான்.
நன்மை செய்தவருக்கு அது போன்ற பத்து மடங்கு உண்டு. தீமை செய்தவர், தீமையின் அளவே தண்டிக்கப்படுவார். அவர்கள் அநீதி இழைக்கப்பட மாட்டார்கள்.
அல்குர்ஆன் 6:160
பத்து மடங்கிலிருந்து பல மடங்காகாக பெருகி 700 மடங்கு வரை செல்கின்றது என்பதை பின்வரும் ஹதீஸ் விளக்குகின்றது.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ் (வானவர்களிடம்) கூறுகின்றான்: என் அடியான் ஒரு தீமையைச் செய்ய நாடினால் அதை அவன் செய்யாத வரை அவனுக்கெதிராக அதைப் பதிவு செய்யாதீர்கள். அதை அவன் செய்து விட்டால் செய்த குற்றத்தை மட்டுமே பதிவு செய்யுங்கள். அதை அவன் எனக்காக விட்டு விட்டால் அதை அவனுக்கு ஒரு நன்மையாகப் பதிவு செய்யுங்கள். அவன் ஒரு நன்மை புரிய எண்ணி, அதைச் செய்யாவிட்டாலும் கூட அவனுக்கு ஒரு நன்மையை எழுதுங்கள். அதை அவன் செய்து விட்டாலோ அதை அவனுக்குப் பத்து நன்மைகளிலிருந்து எழுநூறு நன்மைகளாக எழுதுங்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூற்கள்: புகாரி 7501, முஸ்லிம் 183
நினைத்தாலே நன்மை!
நன்மையைச் செய்ய நினைத்தாலே ஒரு நன்மை! செய்து விட்டால் பத்து நன்மைகள். அதே சமயம் தீமையைச் செய்ய நினத்து விட்டாலே ஒரு தீமை பதிவாவதில்லை. தீமையைச் செய்தால் மட்டுமே தீமை, அதுவும் ஒரு தீமை மட்டுமே என்று பதிவாவது அல்லாஹ்வின் மற்றொரு மிகப் பெரும் அருட்கொடையாகும். நாளை மறுமையில் தீமைகள் தூக்கலாகி தீமையின் தட்டு கனத்து விடக்கூடாது என்பதற்காகத் தான் அல்லாஹ்வின் இந்த ஏற்பாடு.
இங்கே நாம் ஒரு தப்புக் கணக்கு போட்டு விடக்கூடாது. நன்மையுடன் ஒப்பிடுகையில் பதிவேட்டில் தீமைகள் குறைவாகத் தான் பதியப்படுகின்றது. அதனால் தீமைகளைக் கொஞ்சம் கூடுதலாகச் செய்தால் என்ன? என்பது தான் அந்த தப்புக் கணக்காகும். ஒரு நாளில் நாம் செய்கின்ற நனமை தீமைகளை கணக்குப் போட்டு பார்த்தோம் என்றால், அதுவும் நவீன சாதனங்களான டீவி, மொபைல், இன்டர்நெட் போன்றவை நிறைந்த இந்த உலகத்தில், இந்தக் காலத்தில் தீமைகள் தான் நம்மிடம் மிகைத்து நிற்பதைப் பார்க்கலாம். அந்த அளவுக்குத் தீமைகள் நம்முடைய தலைக்கு மேல் போகக் கூடிய வெள்ளமாக நம்மை சூழ்ந்து நிற்கின்றன.
இதுபோன்ற சூழ்நிலையில் அல்லாஹ்வின் ஒன்றுக்குப் பத்து என்ற பரிசு இல்லை என்றால் நம்முடைய தீமைத் தட்டு கனத்து, நாம் நரகத்தில் வீழ்பவர்களாகி விடுவோம். அல்லாஹ் நம்மைக் காப்பாற்ற வேண்டும்.
நாளை மறுமையில் நம்முடைய நன்மை தீமையை நிறுக்கின்ற தராசில் நன்மைத் தட்டை கனக்கச் செய்து, தீமைத் தட்டை கீழிறங்கச் செய்து, நம்மை சுவனத்தில் நுழையச் செய்யும் பாக்கியத்தை அல்லாஹ் வழங்க வேண்டும்.
இப்படி அல்லாஹ் அளிக்கக் கூடிய ஒன்றுக்கு பத்து என்று வருகின்ற அந்த நன்மைகளின் பட்டியலை பார்ப்போம்.
மூன்று எழுத்துக்கள் முப்பது நன்மைகள்
அல்லாஹ்வுடைய வேதத்திலிருந்து ஓர் எழுத்தை ஓதுபவருக்கு அது போன்ற பத்து நன்மைகள் கிடைக்கின்றன. (அல்பகரா அத்தியாயத்தின் துவக்கத்தில் குறியீடின்றி ஓரெழுத்தைப் போன்று இடம் பெறுகின்ற) அலிஃப் லாம் மீமை ஓர் எழுத்து என்று கூறமாட்டேன். மாறாக, அலிஃப் ஓர் எழுத்து; லாம் ஓர் எழுத்து; மீம் ஓர் எழுத்து (மொத்தம் மூன்று எழுத்துக்கள்) ஆகும்
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்வூத்(ரலி)
நூல்: திர்மிதி 2835
ஸலவாத்து ஒன்று! சன்மானம் பத்து!
தொழுகை அறிவிப்பாளரின் அறிவிப்பை நீங்கள் செவியுற்றால் அவர் கூறுவதைப் போன்றே நீங்களும் கூறுங்கள். பின்பு என்மீது ஸலவாத் சொல்லுங்கள். ஏனெனில், என் மீது யார் ஒருமுறை ஸலவாத் சொல்கிறாரோ அதன் காரணத்தால் அவருக்குப் பத்து முறை அல்லாஹ் அருள் புரிகின்றான். பின்பு எனக்காக அல்லாஹ்விடம் வஸீலாவைக் கேளுங்கள். வஸீலா என்பது சொர்க்கத்திலுள்ள (உயர்) பதவியாகும்; அல்லாஹ்வின் அடியார்களில் ஒருவருக்குத் தான் அது கிடைக்கும். அந்த ஒருவர் நானாகவே இருக்க விரும்புகிறேன். எனவே, எனக்காக அந்தப் பதவியை (அல்லாஹ்விடம்) கேட்பவருக்கு (மறுமை நாளில்) எனது பரிந்துரை அவசியம் கிடைக்கும்.
இதை அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நூல்: முஸ்லிம் 577
சொல்வது ஒன்று! சுருட்டுவது பத்து!
நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அமர்ந்திருந்தோம். அப்போது அவர்கள், ‘‘உங்களில் ஒருவர் நாள் ஒன்றுக்கு ஆயிரம் நன்மைகளை சம்பாதிப்பதற்கு இயலாமல் ஆவாரா?’’ என்று கேட்டார்கள். அவர்களுடன் அமர்ந்திருந்தவர்களில் ஒருவர், ‘‘எப்படி (ஒரு நாளில்) ஆயிரம் நன்மைகளை சம்பாதிப்பது?’’ என்று கேட்டார். அதற்கு, ‘‘நூறு தடவை அவர் தஸ்பீஹ் செய்ய வேண்டும். அப்படி தஸ்பீஹ் செய்தால், அவருக்கு ஆயிரம் நன்மைகள் பதிவு செய்யப்படுகின்றன. அல்லது அவரை விட்டும் ஆயிரம் பாவங்கள் அழிக்கப்படுகின்றன’’ என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.
நூல்: முஸ்லிம் 4866
தொழுவது ஐந்து! பெறுவது ஐம்பது!
மிஃராஜ் இரவின் போது நபி (ஸல்) அவர்களுக்கு ஐம்பது வேளை தொழுகை விதிக்கப்பட்டுத் திரும்ப வருகின்றார்கள். அப்போது மூஸா நபி அவர்கள் நபியவர்களைத் திரும்ப அனுப்பி குறைக்குமாறு கோரிக்கை வைக்கின்றார்கள். அதை ஏற்று நபி (ஸல்) அவர்கள் இறைவனிடம் சென்று குறைத்து வருகின்றார்கள். கடைசியில் அது ஐந்தாகின்ற வரை அலைகின்றார்கள். அதைப் பின்வரும் ஹதீஸ் விவரிக்கின்றது.
‘அல்லாஹ் என்னுடைய உம்மத்தின் மீது ஐம்பது நேரத் தொழுகையைக் கடமையாக்கினான். (அதை ஏற்று) திரும்பி வந்து கொண்டிருந்தபோது, மூஸா (அலை) அவர்களின் பக்கமாகச் நான் சென்றபோது ‘உங்கள் சமுதாயத்திற்கு அல்லாஹ் எதைக் கடமையாக்கினான்?’ என அவர்கள் கேட்டார்கள். ஐம்பது நேரத் தொழுகையைக் கடமையாக்கினான் என்றேன். ‘நீங்கள் உங்களுடைய இறைவனிடம் திரும்பச் செல்லுங்கள். உங்கள் சமூகம் அதற்கு சக்தி பெறாது’ என மூஸா(அலை) கூறினார்கள். நான் திரும்பச் சென்றபோது அதில் கொஞ்சத்தை அல்லாஹ் குறைத்தான். (அதை ஏற்றுக் கொண்டு) நான் மூஸா(அலை) அவர்களிடம் வந்து கொஞ்சம் குறைத்துள்ளான் என்றேன். ‘நீங்கள் உங்களுடைய இறைவனிடம் திரும்பச் செல்லுங்கள். உங்கள் சமூகம் அதற்கு(ம்) சக்தி பெறாது’ என்றார்கள். நான் திரும்பிச் சென்றேன். அதில் (இன்னும்) கொஞ்சம் குறைத்தான். நான் மூஸா(அலை) அவர்களிடம் வந்தேன். (இன்னும் கொஞ்சம் குறைத்தான் என்றேன்). ‘நீங்கள் உங்களுடைய இறைவனிடம் திரும்பச் செல்லுங்கள். உங்களின் சமூகம் அதற்கு சக்தி பெறாது’ என்றார்கள். நாம் திரும்பச் சென்றபோது ‘ஐந்து நேரத் தொழுகையைக் கடமையாக்குகிறேன். அது ஐம்பதிற்குச் சமம்; என்னுடைய சொல்லில் எந்த மாற்றமும் ஏற்படுவதில்லை’ என்று அல்லாஹ் கூறினான்.
நூல்: புகாரி 349
அல்லாஹ், ‘சொல் என்னிடம் மாற்றப்படுவதில்லை; அதை நான் உங்களின் மீது ‘லவ்ஹுல் மஹ்ஃபூல்’ எனும் பாதுகாக்கப்பெற்ற பதிவேட்டில் கடமையாக ஆக்கிவிட்டேன். மேலும், ஒரு நற்செயலுக்குப் பத்து நன்மைகள் உண்டு. எனவே, அவை உங்களுக்கு ஐந்து நேரத் தொழுகைகளாக இருப்பினும், பாதுகாக்கப் பெற்ற பதிவேட்டில் அவை ஐம்பது நேரத் தொழுகைகள் (உடைய நன்மைக்கு நிகர்) ஆகும்’ என்று சொன்னான்.
நூல்: புகாரி 7517
இந்த ஹதீஸின் படி, இன்று நாம் தொழுகின்ற தொழுகைகள் ஒன்றுக்கு பத்து என்ற வீதக் கணக்கில் பின்னப்பட்டிருப்பதை நாம் காண முடிகின்றது.
50 நேரத் தொழுகைகளை 5 நேரத் தொழுகைகளாக ஆக்குவதற்கு மூஸா நபியவர்கள் பெரிய காரணமாக அமைந்திருக்கின்றார்கள். அதனால் தான் அல்லாஹ் திருக்குர்ஆனில் அவர்களது சந்திப்பைப் பற்றி சிலாகித்தும் சிறப்பித்தும் சொல்கின்றான்.
மூஸாவுக்கு வேதத்தை வழங்கினோம். (முஹம்மதே!) அவரைச் சந்தித்ததில் நீர் சந்தேகம் கொள்ளாதீர்.
அல்குர்ஆன் 32:23
ஆஷூரா நோன்பு தொடர்பாகக் கூறும்போது, மூஸா நபிக்கு நான் அதிகம் உரிமை படைத்தவன் என்று நபி (ஸல்) அவர்கள் பொருத்தமாகவே குறிப்பிடுகின்றார்கள்.
இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் மதீனா வந்தபோது யூதர்கள் ஆஷூரா நாளில் நோன்பு நோற்றதைக் கண்டார்கள். ‘இது என்ன நாள்?’ என்று கேட்டார்கள். யூதர்கள் ‘இது நல்ல நாள், இஸ்ரவேலர்களை அவர்களின் எதிரிகளிடமிருந்து அல்லாஹ் காப்பாற்றிய நாள்; இதற்காக மூஸா(அலை) அவர்கள் நோன்பு நோற்றார்கள்’ என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘உங்களைவிட மூஸாவுக்கு அதிக உரிமை படைத்தவன் நான்’ என்று கூறிவிட்டுத் தாமும் நோன்பு நோற்று, நோன்பு நோற்குமாறு (மக்களுக்குக்) கட்டளையும் இட்டார்கள்.
நூல்: புகாரி 2004
ஒவ்வொரு வணக்கத்திற்கும் ஒன்றுக்குப் பத்து என்ற வீதத்தில் அல்லாஹ் நன்மைகளை வழங்குகின்றான். ஆனால் ஜமாஅத் தொழுகை போன்றதற்கு 27 நன்மைகளை வழங்குகின்றான். அதை பின்வரும் ஹதீஸ் தெரிவிக்கின்றது.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
‘தனியாகத் தொழுவதை விட ஜமாஅத்தாகத் தொழுவது இருபத்தேழு மடங்கு சிறந்ததாகும்.’
என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
நூல்: புகாரி 645
இப்படியே உயர்ந்து அது 700 மடங்கு வரை சென்று விடுகின்றது.
கொடுப்பது ஒன்று! கிடைப்பது எழுநூறு!
சில வணக்கத்திற்கு அல்லாஹ் 700 மடங்கு நன்மைகளை வழங்குகின்றான். அதில் தர்மம் இடம் பெறுகின்றது. எல்லாம் வல்ல திருக்குர்ஆனில் குறிப்பிடுகின்றான்.
தமது செல்வங்களை அல்லாஹ்வின் பாதையில் செலவிடுவோருக்கு உதாரணம் ஒரு தானியம். அது ஏழு கதிர்களை முளைக்கச் செய்கிறது. ஒவ்வொரு கதிரிலும் நூறு தானியங்கள் உள்ளன. தான் நாடியோருக்கு அல்லாஹ் இன்னும் பன்மடங்காகக் கொடுக்கிறான். அல்லாஹ் தாராளமானவன்; அறிந்தவன்.
அல்குர்ஆன் 2:261
இதற்குப் பொருத்தமாக நபி (ஸல்) அவர்களின் ஹதீஸ் அழகாக இதை விவரிக்கின்றது.
அபூமஸ்ஊத் அல்அன்சாரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் கடிவாளமிடப்பட்ட ஒட்டகமொன்றைக் கொண்டுவந்து, “இது அல்லாஹ்வின் பாதையில் (தர்மமாகும்)” என்று சொன்னார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “உமக்கு மறுமை நாளில் இதற்குப் பகரமாக எழுநூறு ஒட்டகங்கள் கிடைக்கும். அவற்றில் ஒவ்வொன்றும் கடிவாளமிடப்பட்டதாக இருக்கும்’’ என்று கூறினார்கள்.
நூல் முஸ்லிம் 3845
நோன்புக்கும் அதே மாண்பு!
நாம் நோற்கின்ற நோன்பிற்குப் பத்து மடங்கு நன்மைகள் பதிவு செய்யப்படுகின்றன.
அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் என்னிடம் வந்து, ‘‘நீர் இரவெல்லாம் நின்று வணங்குவதாகவும் பகலெல்லாம் நோன்பு நோற்பதாகவும் எனக்குத் தெரிவிக்கப்பட்டதே! (அது உண்மைதானா?)’’ என்று கேட்டார்கள். நான், ‘ஆம்’ என்று பதிலளித்தேன்.
நபி(ஸல்) அவர்கள், ‘‘அவ்வாறு செய்யாதீர்! (சிறிது நேரம்) தொழுவீராக! (சிறிது நேரம்) உறங்குவீராக! (சில நாள்கள்) நோன்பு நோற்பீராக! (சில நாள்கள் நோன்பை விட்டுவிடுவீராக! ஏனெனில், உம்முடைய உடலுக்குச் செய்ய வேண்டிய கடமையும் உமக்கு உண்டு; உம்முடைய கண்ணிற்குச் செய்ய வேண்டிய கடமையும் உமக்கு உண்டு; உம் விருந்தினருக்குச் செய்ய வேண்டிய கடமையும் உமக்கு உண்டு; உம் துணைவிக்குச் செய்ய வேண்டிய கடமையும் உமக்கு உண்டு. உம்முடைய வயது நீளக்கூடும். (அப்போது உம்மால் தொடர் நோன்பும் தொடர் வழிபாடும் சாத்தியப்படாமல் போகலாம். எனவே) ஒவ்வொரு மாதமும் (ஏதேனும்) மூன்று நாள்கள் நோன்பு நோற்பது உமக்குப் போதுமானதாகும். ஏனெனில், ஒவ்வொரு நற்செயலுக்கும் பிரதியாக அது போன்ற பத்து மடங்கு (நற்பலன்)கள் உண்டு. (இதன்படி மாதத்தில் மூன்று நாள்கள் நோன்பு நோற்பது மாதம் முழுவதும் நோற்றதற்குச் சமமாகும்.) எனவே, இது காலமெல்லாம் நோற்றதாக அமையும்’’ என்று கூறினார்கள்.
நூல்: புகாரி 6134
யார் ரமலானில் நோன்பு நோற்று, பிறகு அதைத் தொடர்ந்து ஷவ்வாலில் 6 நோன்பு நோற்கின்றாரோ அவர் (ஆண்டு) காலம் முழுவதும் நோன்பு நோற்றவரைப் போலாவார்.
அறிவிப்பவர்: அபூ அய்யூப் அல் அன்சாரி(ரலி)
நூல்: முஸ்லிம் 2815
அதாவது, ரமளானில் முப்பது நாட்கள் நோன்பு நோற்பதற்கு 300 நாட்களுக்கான நன்மையும், ஷவ்வாலில் ஆறு நாட்கள் நோற்றதற்கு 60 நாட்கள் நோற்ற நன்மையும் ஆக மொத்தம் ஆண்டு முழுவதும் நோன்பு நோற்ற நன்மை கிடைக்கின்றது என்பதை இந்த ஹதீஸில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குறிப்பிடுகின்றார்கள்.
இந்த ஹதீஸ்கள் நோன்பிலும் ஒன்றுக்குப் பத்து வீதம் என்ற கணக்கில் நன்மைகள் வழங்கப்படுவதை எடுத்துக் காட்டுகின்றன.
இறைச் சந்திப்பின் போது எல்லையற்ற நன்மைகள்
எல்லா வணக்கங்களுக்கும் வழங்கப்படுவது போன்று நோன்புக்கும் பொதுக் கோட்டா அடிப்படையில் ஒன்றுக்கு பத்து என்ற வீதத்தில் கூலி வழங்கப்படுகின்றது என்பதை மேலே இடம்பெற்றிருக்கின்ற ஹதீஸ்கள் தெரிவிக்கின்றன. ஆனால் நோன்புக்குக் கணக்கு வழக்கில்லாத வகையில், எவ்வளவு என்று மதீப்பீடு செய்ய முடியாத விதத்தில் அல்லாஹ் எல்லையற்ற நன்மைகளையும் மறுமையில் அவனைச் சந்திக்கும் போது வழங்கவிருக்கின்றான். அதை பின்வரும் ஹதீஸ் தெளிவுபடுத்துகின்றது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஆதமின் மகனுடைய (மனிதனுடைய) ஒவ்வொரு நற்செயலுக்கும் ஒன்றுக்குப் பத்து முதல் எழுநூறு மடங்குகள் வரை நன்மைகள் வழங்கப்படுகின்றன; அல்லாஹ் கூறுகின்றான்: நோன்பைத் தவிர. ஏனெனில், நோன்பு எனக்கு உரியதாகும். அதற்கு நானே நற்பலன் வழங்குகிறேன். அவன் எனக்காகவே தனது உணர்வையும் உணவையும் கைவிடுகிறான் (என அல்லாஹ் கூறுகின்றான்). நோன்பாளிக்கு இரண்டு மகிழ்ச்சிகள் உள்ளன. அவர் நோன்பைத் துறக்கும்போது ஒரு மகிழ்ச்சியும், தம் இறைவனைச் சந்திக்கும் போது மற்றொரு மகிழ்ச்சியும் (அடைகிறார்). நோன்பாளியின் வாயிலிருந்து வரும் வாடை, அல்லாஹ்விடம் கஸ்தூரியின் மணத்தைவிட நறுமணமிக்கதாகும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நூல்: முஸ்லிம் 2119
ஒன்றுக்குப் பத்து என்ற இந்தக் கணக்கு மறுமையிலும் தொடர்கின்றது. அதை இப்போது பின்வரும் ஹதீஸ் வாயிலாகப் பார்ப்போம்.
அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.
நபி (ஸல்) அவர்கள் (சொர்க்கவாசிகள் மற்றும் நரகவாசிகளின் நிலை குறித்துப் பின்வருமாறு) கூறினார்கள்: நரகவாசிகளில் இறுதியாக நரகத்திலிருந்து வெளியேறுபவர் யார் என்பதையும், சொர்க்கவாசிகளில் இறுதியாகச் சொர்க்கத்தில் நுழைபவர் யார் என்பதையும் நான் நன்கறிவேன். நரகத்திலிருந்து தவழ்ந்தபடி வெளியேறுகிற ஒரு மனிதரே அவர். அவரிடம் அல்லாஹ் ‘நீ போய் சொர்க்கத்தில் நுழைந்துகொள்’ என்பான்.
அவர் சொர்க்கத்திற்குச் செல்வார். அது நிரம்பியிருப்பதைப் போன்று அவருக்குத் தோன்றும். உடனே அவர் திரும்பி வந்து ‘என் இறைவா! அது நிரம்பியிருக்கக் கண்டேன்’ என்று கூறுவார்.
அதற்கு அல்லாஹ் ‘நீ சென்று சொர்க்கத்தில் நுழைந்துகொள்’ என்று (மீண்டும்) சொல்வான். அவர் சொர்க்கத்திற்குச் செல்வார். அது நிரம்பியிருப்பதைப் போன்று அவருக்குத் தோன்றும். எனவே, அவர் திரும்பி வந்து ‘என் இறைவா! அது நிரம்பியிருக்கக் கண்டேன்’ என்று கூறுவார்.
அதற்கு அவன் ‘நீ சென்று சொர்க்கத்தில் நுழைந்து கொள். ஏனெனில், ‘உலகம் மற்றும் அதைப் போன்ற பத்து மடங்கு’ அல்லது ‘உலகத்தைப் போன்று பத்து மடங்கு’ (இடம் சொர்க்கத்தில்) உனக்கு உண்டு’ என்று சொல்வான்.
அதற்கு அவர் ‘அரசனாகிய நீ என்னைப் பரிகாசம் செய்கிறாயா?’ அல்லது ‘என்னை நகைக்கிறாயா?’ என்று கேட்பார்.
(இதைக் கூறியபோது) இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தம் கடைவாய்ப் பற்கள் தெரிய சிரித்ததைப் பார்த்தேன்.
நூல்: புகாரி 6571
ஒன்றுக்குப் பத்து என்ற அருட்கொடை இம்மையுடன் நிற்கவில்லை. மறுமை வரை தொடர்கின்றது.
அல்குர்ஆன் அளிக்கின்ற இந்த அரிய பரிசுகளுக்கான நன்மைகளை ஆயுள் முடியும் வரை செய்து நாளை மறுமையில் நமது நன்மை தட்டுக்களை கனக்கச் செய்வோமாக!