குர்ஆனைப் பார்ப்பது வணக்கமா?
اللآلي المصنوعة – (1 / 317)
وقال أنبأنا القاضي سوار بن أحمد حدثنا علي بن أحمد النوفلي حدثنا محمد بن زكريا بن دينار حدثنا العباس بن بكار حدثنا عباد بن كثير عن ابن الزبير عن جابر مرفوعا النظر في المصحف عبادة ونظر الولد إلى الوالدين عبادة والنظر إلى علي بن أبي طالب عبادة
குர்ஆனைப் பார்ப்பது வணக்கமாகும். பெற்றோர்களை பிள்ளைகள் பார்ப்பதும் வணக்கமாகும். அலீ (ரலி) அவர்களைப் பார்ப்பதும் வணக்கமாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)
நூல்: அல்லஆலில் மஸ்னுஆ,
பாகம்: 1, பக்கம்: 317.
திருக்குர்ஆனை ஓதாமல் ஒருவர் அதைப் பார்த்துக் கொண்டே இருந்தால் அவர் இறைவணக்கத்தில் ஈடுபட்டவர் என்றும்,
பெற்றோர்களுக்குப் பணிவிடை செய்யா விட்டாலும் அவர்களைப் பார்ப்பதே வணக்கத்தில் ஈடுபட்ட நன்மையைத் தரும் என்றும்
நபித்தோழர் அலீ (ரலி) அவர்களைப் பார்ப்பது கூட நன்மையைப் பெற்றுத் தரும் வணக்கம் என்று இந்தச் செய்தி குறிப்பிடுகிறது.
இந்த செய்தி ஆதாரப்பூர்வமானதா என்பதைப் பார்ப்போம்.
இச்செய்தியில் இடம்பெறும் ஐந்தாவது அறிவிப்பாளர் முஹம்மத் பின் ஸக்கரிய்யா பின் தீனார் அல்கிலாபீ என்பவர் நபிகளார் மீது இட்டுக்கட்டிச் சொல்பவர் என்று குற்றம் சுமத்தப்பட்டவர்.
الضعفاء والمتروكون للدارقطني – (1 / 35)
(483) محمد بن زكريا الغلابي بصري يضع.
பஸராவைச் சார்ந்த முஹம்மத் பின் ஸக்கரிய்யா அல்கிலாபீ என்பவர் இட்டுக்கட்டிச் சொல்பவர் என்று தாரக்குத்னீ அவர்கள் கூறுகிறார்கள்.
நூல்: அல்லுஅஃபாவு வல்மத்ரூகீன்,
பாகம்: 1, பக்கம்: 35.
ميزان الاعتدال – (3 / 550)
وقال ابن مندة: تكلم فيه.
இவரை ஹதீஸ்கலை அறிஞர்கள் விமர்சனம் செய்துள்ளனர் என்று இப்னு முன்தா அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.
நூல்: மீஸானுல் இஃதிதால்,
பாகம்: 3, பக்கம்: 550.
7537 – محمد بن زكريا الغلابى البصري الاخباري، أبو جعفر.عن عبدالله ابن رجاء الغدانى، وأبي الوليد، والطبقة.وعنه أبو القاسم الطبراني، وطائفة.وهو ضعيف،
முஹம்மத் பின் ஸக்கரிய்யா அல்கிலாபீ என்பவர் பலவீனமானவராவார் என்று தஹபீ அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.
நூல்: மீஸானுல் இஃதிதால்,
பாகம்: 3, பக்கம்: 550.
الموضوعات لابن الجوزي – (3 / 278)
وذلك من الغلابى فإنه كان غاليا في التشيع.
(நபிகளார் மீது இட்டுகட்டப்பட்ட செய்தியை குறிப்பிட்டுவிட்டு) இது கிலாபீயின் செய்திகளில் உள்ளதாகும். இவர் ஷியாக் கொள்கையைச் சார்ந்தவரும் அதில் வரம்புமீறி நடப்பவருமாவார் என்று இப்னுல் ஜவ்ஸி அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.
நூல்: அல்மவ்ளூஆத்,
பாகம்: 3, பக்கம்: 278.
எனவே இந்தச் செய்தி ஆதாரப்பூர்வமான செய்தி கிடையாது.
திருக்குர்ஆனை ஓதுவதால் நன்மை உண்டு என்பதற்கு ஆதாரப்பூர்வமான செய்திகள் உண்டு.
ஆனால் பார்த்தாலே நன்மை உண்டு என்பதற்கு ஆதாரப்பூர்வமான நபிமொழிகள் கிடையாது.
பெற்றோர்களுக்குப் பணிவிடை செய்வதன் மூலம் நன்மையை அடைய முடியும் என்பதற்குத் திருக்குர்ஆன் வசனங்களும், ஆதாரப்பூர்வமான நபிமொழிகளும் அதிகம் உண்டு. ஆனால் பெற்றோர்களைப் பார்ப்பதே நன்மை என்ற கருத்தில் ஆதாரப்பூர்வமான செய்திகள் இல்லை.
ஷியாக்கள், அலீ (ரலி) அவர்கள் தொடர்பாக ஏராளமான பொய்யான செய்திகளை நபிகளார் பெயரில் இட்டுக்கட்டிச் சொல்லியுள்ளார்கள். அதில் உள்ளதுதான் அலீ (ரலி) அவர்களைப் பார்ப்பதும் வணக்கமாகும் என்ற செய்தி.
நபிகளாருக்கு மிகவும் விருப்பமான நபித்தோழரான அபூபக்ர் (ரலி) அவர்களைப் பற்றிக் கூட இவ்வாறு நபிகளார் சொல்லவில்லை.
மொத்தத்தில் இந்தச் செய்தியில் கூறப்பட்ட அனைத்துக் கருத்துக்களும் ஆதாரமற்ற, நபிகளார் மீது இட்டுக்கட்டப்பட்ட பொய்யான செய்திகளாகும்.