படைத்தவனுக்குப் பிரியமான பாவமன்னிப்புக் கோரல்!
வல்ல இறைவனிடம் வழங்க வேண்டிய ஒப்புதல் வாக்குமூலம்!
நாம் செய்யும் பாவங்களில் இருந்து நாம் மீள நம்மைப் படைத்த இறைவனிடம் பாவமன்னிப்புக் கோருவதுதான் ஒரே வழி. நாம் செய்த பாவங்களை நாம் ஒப்புக்கொண்டு ஒப்புதல் வாக்கு மூலம் வழங்கி படைத்தவனிடம் பாவமன்னிப்புக் கோரினால் அருளவற்ற அருளாளனான இறைவன் நமக்கு மன்னிப்பளித்து அருள் புரிகின்றான்.
சாமானியர்களாக இருக்கும் நம்மில் பலரும், பல பாவங்களைச் செய்துவிட்டு இவற்றையெல்லாம் இறைவன் மன்னிப்பானா என கேள்வி எழுப்பி அந்தப் பாவங்களைத் தொடர்ந்து செய்து வருகின்றோம்.
ஆனால் மனிதர்களிலேயே இறைவனுக்கு மிகவும் பிரியமானவர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நபிமார்களே பாவங்களைச் செய்துள்ளார்கள்; அவர்கள் செய்த பாவங்களில் இருந்து அவர்களைத் தூய்மைப்படுத்தியது அவர்களது பாவமன்னிப்புக் கோரல்தான் என்பதை, படைத்த இறைவன் தனது திருமறையில் சொல்லிக் காட்டுகின்றான்.
இறைவா! நான் இன்ன பாவத்தைச் செய்துவிட்டேன்; எனக்கு நானே அநியாயம் செய்துவிட்டேன்; எனது பாவத்தை நீ மன்னித்துவிடு என்று படைத்த இறைவனிடம் நமது பாவங்கள் குறித்து ஒப்புதல் வாக்குமூலம் வழங்கி, நாம் சரணாகதி அடையும் போது இறைவன் நமது பாவங்களை மன்னிக்கப் போதுமானவனாக இருக்கின்றான்.
இறைவனிடம் மிக நெருக்கமான நபிமார்கள் செய்த பாவங்களும், அவைகளை இறைவன் மன்னித்த நிகழ்வுகளும் நமக்குப் பெரும் படிப்பினையாக இருக்கின்றன.
ஆதம் (அலை) அவர்களின் பாவமன்னிப்புக் கோரல்:
ஆதம் நபியவர்கள் இறைவனால் நேரடியாகப் படைக்கப்பட்டவர்கள்; அவர்களைப் படைத்து இறைவன் சொர்க்கச் சோலையில் விட்டுவிட்டு ஒரேயொரு மரத்தை மட்டும் நெருங்க வேண்டாம் என கட்டளையிட்டான். ஆனால் ஷைத்தானின் தூண்டுதலால் அவர்கள் இறைவனின் கட்டளையை அப்பட்டமாக மீறினார்கள். இறைவனது பார்வையில் இது மிகப்பெரிய வரம்பு மீறலாக இருந்த போதிலும் ஆதம் (அலை) மற்றும் ஹவ்வா (அலை) ஆகிய நமது தாய் தந்தையர் இருவரது பாவத்தை அல்லாஹ் எப்படி மன்னித்தான் தெரியுமா?
என்னிடம் இன்னின்ன வாசகங்களைச் சொல்லி பாவமன்னிப்புக் கேளுங்கள் என்று அல்லாஹ்வே அவர்களுக்கு பாவமன்னிப்புக் கேட்பதற்கான வாசகங்களை கற்றுத்தந்ததாக தனது திருமறையில் சொல்லிக்காட்டுகின்றான்.
(பாவமன்னிப்புக்குரிய) சில வார்த்தைகளை தமது இறைவனிடமிருந்து ஆதம் பெற்றுக் கொண்டார். எனவே அவரை இறைவன் மன்னித்தான்; அவன் மன்னிப்பை ஏற்பவன்; நிகரற்ற அன்புடையோன்.
அல்குர் ஆன் 2:37
தான் கற்றுக்கொடுத்த அந்த வாசகங்கள் என்ன என்பதையும் அல்லாஹ் தெளிவுபடுத்துகின்றான்.
“எங்கள் இறைவா! எங்களுக்கே தீங்கு இழைத்து விட்டோம். நீ எங்களை மன்னித்து, அருள் புரியவில்லையானால் நட்டமடைந்தோராவோம்‘’ என்று அவ்விருவரும் கூறினர்.
அல்குர் ஆன் 7:23
நாங்கள் அநியாயம் செய்துவிட்டோம்; எங்களை மன்னித்து அருள்புரியாவிட்டால் நஷ்டவாளிகளாக ஆகிவிடுவோம் என்ற ஒப்புதல் வாக்குமூலத்தை ஆதம் (அலை) அவர்களும், ஹவ்வா (அலை) அவர்களும் சொன்னதால் தான் அவர்களது பாவங்கள் மன்னிக்கப்பட்டதாக அல்லாஹ் சொல்லிக்காட்டுகின்றான்.
நூஹ் (அலை) அவர்களின் பாவமன்னிக்கோரல்:
அதுபோல நூஹ் (அலை) அவர்கள் ஒரு பாவத்தைச் செய்ததாதகவும் அந்தப் பாவத்திலிருந்து அவர்கள் மீண்டது எப்படி என்பதையும் அல்லாஹ் தனது திருமறையில் தெளிவுபடுத்துகின்றான்.
நூஹ் நபியவர்கள் இஸ்லாத்தை ஏற்காத முஷ்ரிக்கான தனது மகனுக்காக அல்லாஹ்விடம் வாதாடினார்கள்; அதை அல்லாஹ் கண்டிக்கின்றான்.
நூஹ், தம் இறைவனை அழைத்தார். “என் மகன் என் குடும்பத்தைச் சேர்ந்தவன். உனது வாக்குறுதியும் உண்மையே. நீயே தீர்ப்பு வழங்குவோரில் மேலானவன்’’ என்றார்.
அல்குர் ஆன் 11:45
இவ்வாறு நூஹ் (அலை) அவர்கள் கூறிய மாத்திரத்திலேயே அதைக் கண்டித்து அல்லாஹ் கீழ்க்கண்டவாறு எச்சரிக்கை விடுக்கின்றான்.
“நூஹே! அவன் உன் குடும்பத்தைச் சேர்ந்தவன் அல்லன். இது நல்ல செயல் அல்ல. உமக்கு அறிவு இல்லதாது பற்றி என்னிடம் கேட்காதீர்! அறியாதவராக நீர் இருக்கக் கூடாது என உமக்கு அறிவுரை கூறுகிறேன்’’ என்று அவன் கூறினான்.
அல்குர் ஆன் 11:46
இறைவனின் இந்த கடுமையான எச்சரிக்கைக்குப் பிறகுதான் தான் செய்த தவறை நூஹ் (அலை) அவர்கள் உணர்கின்றார்கள்.
கீழ்க்கண்டவாறு அல்லாஹ்விடம் அவர்கள் பாவமன்னிப்புக் கோரினார்கள்.
“இறைவா! எனக்கு அறிவு இல்லாதது பற்றி உன்னிடம் கேட்பதை விட்டும் உன்னிடமே நான் பாதுகாப்புத் தேடுகிறேன். நீ என்னை மன்னித்து அருள் புரியாவிட்டால் நட்டமடைந்தவனாகி விடுவேன்’’ என்று அவர் கூறினார்.
அல்குர் ஆன் 11:47
மேற்கண்டவாறு தான் செய்த தவறை ஒப்புக்கொண்டு ஒப்புதல் வாக்கு மூலம் அளித்ததால் இறைவன் நூஹ் (அலை) அவர்களின் பாவத்தை மன்னித்தான்.
மூஸா (அலை) அவர்களின் பாவமன்னிப்புக் கோரல்:
மூஸா (அலை) அவர்கள் கோபத்தில் ஒரு குத்துவிட்டதால் ஒருவன் செத்துவிட்டான்; மூஸா (அலை) அவர்கள் அந்தக் கொலையைச் செய்த பிறகுதான் தான் ஷைத்தானின் வலையில் வீழ்ந்துவிட்டதை நினைத்து வருந்துகின்றார்கள்.
அவர்கள் இறைவனிடம் கேட்ட பாவமன்னிக்குரிய வாசகங்கள் இதுதான்:
“என் இறைவா! எனக்கே நான் தீங்கு இழைத்து விட்டேன். எனவே என்னை மன்னிப்பாயாக!’’ என்றார். அவன் அவரை மன்னித்தான். அவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.
“என் இறைவா! நீ எனக்கு அருள் புரிந்ததால் குற்றவாளிகளுக்கு உதவுபவனாக இனிமேல் இருக்க மாட்டேன்’’ என்றார்.
அல்குர்ஆன் 28:16, 17
எனக்கு நானே அநியாயம் செய்துவிட்டேன்; என்னை மன்னித்துவிடு என்ற ஒப்புதல் வாக்குமூலத்தை வழங்கியதால் தான் மூஸா (அலை) அவர்களுக்கு மன்னிப்பு கிடைத்தது.
யூனுஸ் (அலை) அவர்களின் பாவமன்னிப்புக் கோரல்:
யூனுஸ் (அலை) அவர்கள் இறைவனிடம் கோபித்துக் கொண்டு சென்றார்கள். இறைவனின் பார்வையில் இது மிகப்பெரும் தவறு. ‘யூனுஸ் நபியைப் போல நீ ஆகிவிடாதே’ என அல்லாஹ்வுடைய தூதரை அல்லாஹ் எச்சரிக்கும் அளவிற்கு அந்தப் பாவம் இருந்த நிலையிலும் கூட அல்லாஹ் அவர்களை மன்னித்து அருள்புரிந்தான்.
யூனுஸ் (அலை) அவர்களை அல்லாஹ் மன்னிக்க காரணமான அந்த பிரார்த்தனை என்ன தெரியுமா?
மீனுடையவர் (யூனுஸ்) கோபித்துக் கொண்டு சென்றார். “அவர் மீது நாம் சக்தி பெற மாட்டோம்’’ என்று நினைத்தார். “உன்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை. நீ தூயவன். நான் அநீதி இழைத்தோரில் ஆகி விட்டேன்’’ என்று இருள்களிலிருந்து அவர் அழைத்தார்.
அவரது பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டோம். கவலையிலிருந்து அவரைக் காப்பாற்றினோம். இவ்வாறே நம்பிக்கை கொண்டோரைக் காப்பாற்றுவோம்.
அல்குர் ஆன் 21:87, 88
மேற்கண்ட ஒப்புதல் வாக்குமூலத்தை யூனுஸ் (அலை) அவர்கள் இறைவனிடம் வழங்கியதால் தான் அவர்களை அல்லாஹ் மன்னித்து அருள்புரிந்தான்.
ஒருவன் தான் செய்த பாவத்தை உணர்ந்து அதை அப்படியே ஒப்புக்கொண்டு, படைத்த இறைவனிடம் அதைச் சொல்லி, பாவமன்னிப்புக் கோருவதுதான் அவன் அந்தப் பாவத்திலிருந்து மீள வழி.
இறைவனின் அருள் பெற்ற நபிமார்களாக இருந்தாலும் கூட அவர்களும் தாங்கள் செய்த பாவத்தை ஒப்புக்கொண்டு, படைத்த இறைவனிடம் ஒப்புதல் வாக்குமூலம் வழங்கி பாவமன்னிப்புக் கோரினால் தான் பாவங்களை இறைவன் மன்னிப்பான்.
அதனால் தான் முன் பின் பாவங்கள் மன்னிக்கப்பட்ட உத்தம நபி (ஸல்) அவர்களும் கூட ஒருநாளைக்கு நூற்றுக்கும் அதிகமான தடவை பாவமன்னிப்புக் கோரியுள்ளார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மக்களே! அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோருங்கள். ஏனெனில், நான் ஒவ்வொரு நாளும் அவனிடம் நூறுமுறை பாவ மன்னிப்புக் கோருகிறேன்.
இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நூல்: முஸ்லிம் 5235
இதுபோன்று தினமும் நாமும் நமது பாவங்களுக்காக அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரி நமது பாவங்கள் குறித்து இறைவனிடம் ஒப்புதல் வாக்குமூலம் வழங்கி மன்றாட வேண்டும்.
இதற்காகப் பிரத்தியேகமாக அல்லாஹ்வுடைய தூதர் (ஸல்) அவர்கள் தினமும் காலையிலும் மாலையிலும் பாவமன்னிப்புக்கோரி படைத்த இறைவனிடம் வழங்க வேண்டிய ஒப்புதல் வாக்குமூலத்தை, பாவமன்னிப்புக் கோரலை நமக்குக் கற்றுத் தந்துள்ளார்கள்.
யார் இந்தப் பிரார்த்தனையை நம்பிக்கையோடும் தூய்மையான எண்ணத்தோடும் பகலில் கூறிவிட்டு அதே நாளில் மாலை நேரத்திற்கு முன்பாக இறந்து விடுகின்றாரோ அவர் சொர்க்கவாசிகளில் ஒருவராக இருப்பார். யார் இதை நம்பிக்கையோடும் தூய்மையான எண்ணத்தோடும் இரவில் கூறிவிட்டுக் காலை நேரத்திற்கு முன்பே இறந்துவிடுகின்றாரோ அவரும் சொர்க்கவாசிகளில் ஒருவராக இருப்பார் என்றும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நன்மராயம் கூறியுள்ளார்கள்.
பாவமன்னிப்பு கோருவதில் தலையாய துஆ
கீழ்க்காணும் துஆவை ஒருவன் பகலில் ஓதிவிட்டு அன்றே மரணித்தால் அவன் சொர்க்கவாசியாவான். இரவில் ஓதி விட்டு இரவிலேயே மரணித்து விட்டால் அவனும் சொர்க்கவாசியாவான் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.
اَللّهُمَّ أَنْتَ رَبّي لاَ إِلَهَ إِلاَّ أَنْتَ خَلَقْتَنِيْ وَأَنَا عَبْدُكَ وَأَنَا عَلَى عَهْدِكَ وَوَعْدِكَ مَا اسْتَطَعْتُ أَعُوْذُ بِكَ مِنْ شَرِّ مَا صَنَعْتُ أَبُوْءُ لَكَ بِنِعْمَتِكَ عَلَيَّ وَأَبُوْءُ لَكَ بِذَنْبِيْ فَاغْفِرْ لِيْ فَإِنَّهُ لاَ يَغْفِرُ الذُّنُوبَ إِلاَّ أَنْتَ
அல்லாஹும்ம அன்(த்)த ரப்பீ[B] லாயிலாஹ இல்லா அன்(த்)த கலக்(த்)தனீ வஅன அப்[B]து(க்)க வஅன அலா அஹ்தி(க்)க வவஃதி(க்)க மஸ்ததஃ(த்)து அவூது பி[B](க்)க மின்ஷர்ரி மாஸனஃ(த்)து அபூ[B]வு ல(க்)க பி[B]னிஃமதி(க்)க அலய்ய, வஅபூ[B]வு ல(க்)க பிB]தன்பீ[B] ப[F]க்பி[F]ர்லீ ப[F]இன்னஹு லா யஃக்பி[F]ருத் துனூப[B] இல்லா அன்(த்)த.
இதன் பொருள் :
இறைவா! நீயே என் எஜமான். உன்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை. என்னை நீயே படைத்தாய். நான் உனது அடிமை. உனது உடன்படிக்கையின்படியும் வாக்குறுதியின் படியும் என்னால் இயன்ற வரை நடப்பேன். நான் செய்த தீமையை விட்டு உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். நீ எனக்குச் செய்த அருளோடும் நான் செய்த பாவத்தோடும் உன்னிடம் மீள்கிறேன். எனவே என்னை மன்னிப்பாயாக! உன்னைத் தவிர யாரும் பாவங்களை மன்னிக்க முடியாது.
அறிவிப்பவர்: ஷத்தாத் பின் அவ்ஸ் (ரலி)
நூல்: புகாரி 6306
இந்த ஒப்புதல் வாக்குமூலத்தை அனுதினமும் நாம் கூறி, வல்ல இறைவனுக்குப் பிரியமானவர்களாக நாம் மாற வேண்டும். அல்லாஹ் அருள் செய்ய வேண்டும்.