பிறக்கின்ற ஒவ்வொரு ஆன்மாவும் மரணிக்கக் கூடியதே
மறுமை வாழ்வு என்பது இவ்வுலகில் மனிதன் செய்த செயல்களுக்கு ஏற்ப கூலி வழங்கப்பட்டு நன்மை புரிந்தோர் சுவனத்திலும் தீமை புரிந்தோர் நரகத்திலும் பிரவேசித்து நிரந்தரமாக வாழ்கின்ற வாழ்க்கையாகும்.
இத்தகைய மறுமை வாழ்வை நம்புபவர்களே மூஃமின்கள் ஆவார்கள்.
பிறக்கின்ற ஒவ்வொரு ஆன்மாவும் மரணிக்கக் கூடியதே என்பதை ஒப்புக்கொள்ளும் மனிதன், அந்த மரணம் எப்போதும் வரலாம் என்றும் அதற்குள் நன்மைகளை விரைவாகப் புரிய வேண்டும் என்றுமில்லாமல் மரண சிந்தனையற்று பாராமுகமாக இருப்பதினால் இஸ்லாம் மரணத்தை அதிகமாக நினைவூட்டுகிறது.
ஒவ்வொருவரும் மரணத்தைச் சுவைக்கக் கூடியவர். பின்னர் நம்மிடமே திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்!
அல்குர்ஆன் 29:57
எந்த மனிதரும் தான் எப்போது? எங்கே? எப்படி மரணிப்பார் என்பதை அறிந்து கொள்ள முடியாது. அது இறைவனுக்கு மட்டுமே தெரிந்த மறைவான ஞானம்.
யுக முடிவு நேரம் பற்றிய அறிவு அல்லாஹ்விடமே உள்ளது. அவன் மழையை இறக்குகிறான். கருவறைகளில் உள்ளதை அவன் அறிகிறான். தான், நாளை சம்பாதிக்கவுள்ளதை எவரும் அறிய மாட்டார். தாம், எங்கே மரணிப்போம் என்பதையும் எந்த உயிரினமும் அறியாது. அல்லாஹ் நன்கறிந்தவன்; நுட்பமானவன்.
அல்குர்ஆன் 31:34
எந்த மனிதனும் தன்னை மரணத்திலிருந்து பாதுகாத்துக் கொள்ள முடியாது.
“நீங்கள் எங்கே இருந்த போதும் மரணம் உங்களை அடையும். உறுதியான கோட்டைகளில் நீங்கள் இருந்தாலும் சரியே.
அல்குர்ஆன் 4:78
இத்தகைய மரணம் வருவதற்கு முன்னால் ஒவ்வொரு மனிதனும் தன் மறுமை வாழ்வை செம்மையாக்கிக் கொள்வதற்காக இறைவன் சொன்ன நன்மையான காரியங்களைச் செய்து முடித்துவிட வேண்டும்.
அவ்வாறில்லாமல் நல்ல செயல்களையும், இறைவனுக்குச் செய்ய வேண்டிய கடமைகளையும் செய்யாமல் அலட்சியமாக இருந்தால் அது மறுமையில் மிகப்பெரும் கைசேதத்தை ஏற்படுத்தும்.
“உங்களுக்கு மரணம் வருவதற்கு முன் நாம் உங்களுக்கு வழங்கியவற்றிலிருந்து (நல்வழியில்) செலவிடுங்கள்! “இறைவா! குறைந்த காலம் வரை எனக்கு நீ அவகாசம் அளித்திருக்கக் கூடாதா? தர்மம் செய்து நல்லவனாக ஆகியிருப்பேனே’’ என்று அப்போது (மனிதன்) கூறுவான். எந்த உயிருக்கும் அதற்குரிய தவணை வந்து விட்டால் அல்லாஹ் அவகாசம் அளிக்க மாட்டான். நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன்”
அல்குர்ஆன் 63:10, 11
முடிவில் அவர்களில் யாருக்கேனும் மரணம் வரும் போது “என் இறைவா! நான் விட்டு வந்ததில் நல்லறம் செய்வதற்காக என்னைத் திருப்பி அனுப்புங்கள்!’’ என்று கூறுவான். அவ்வாறில்லை! இது (வாய்) வார்த்தை தான். அவன் அதைக் கூறுகிறான். அவர்கள் உயிர்ப்பிக்கப்படும் நாள் வரை அவர்களுக்குப் பின்னால் திரை உள்ளது.
அல்குர்ஆன் 23:99, 100
“எங்கள் இறைவா! எங்களை வெளியே அனுப்பு! நாங்கள் செய்து வந்தது போலன்றி நல்லறங்களைச் செய்கிறோம்‘’ என்று அங்கே அவர்கள் கதறுவார்கள். “படிப்பினை பெறும் அளவு உங்களுக்கு நாம் வாழ்நாளை அளித் திருக்கவில்லையா? எச்சரிக்கை செய்பவர் உங்களிடம் வரவில்லையா? எனவே அனு பவியுங்கள்! அநீதி இழைத்தோருக்கு எந்த உதவியாளரும் இல்லை’’ (என்று கூறப்படும்)
அல்குர்ஆன் 35:37
தொழுகை உள்ளிட்ட வணக்கங்களையும் நாம் செய்த பாவங்களுக்காக இறைவனிடம் பாவமன்னிப்பு தேடுதல் போன்ற அனைத்து நன்மையான காரியங்களையும் மரணத்திற்கு முன்பாக நாம் நிறைவேற்றிவிட வேண்டும். இல்லையேல் அது மறுமையில் நஷ்டத்தை ஏற்படுத்திவிடும் என்பதை மேற்படி வசனங்கள் எடுத்துரைக்கின்றன.
அதே போன்று மரணத்திற்கு முன்னால் சக மனிதனுக்கு நிறைவேற்ற வேண்டிய சில கடமைகள் இருக்கின்றன. அதை விட்டும் நம்மில் பலர் அலட்சியமாக இருக்கிறோம்.