ஷேர் மார்க்கட்டிங் ஹலாலா? ஹராமா?
ஷேர் மார்க்கெட் என்பது என்ன என்பதை முதலில் சுருக்கமாகப் பார்ப்போம்.
உதாரணத்துக்காக ஒரு கம்பெனி நடத்துகிறவர் தன்னிடமுள்ள 100 ரூபாய் மதிப்புள்ள தொழிலில் 30 ரூபாய் அளவிற்கு பிறர் கூட்டு சேர்ந்து கொள்ளலாம் என்று அறிவிப்பார்.
(நூறு ரூபாய் என்று சிறிய தொகையை நாம் உதாரணமாக குறிப்ப்பிட்டுள்ளது புரிந்து கொள்ள எளிதாக இருக்கும் என்பதற்காகவே.)
ஒரு பங்கு என்பது 10 ரூபாய்க்கு மேல் தாண்டக் கூடாது என்பது சட்ட விதிமுறை. இவர் தனது பங்கு எழுபது ரூபாய் என்றும், பிறரிடம் ஷேர் வாங்கியது முப்பது ரூபாய் என்றும் அறிவிக்கிறார். மூன்று பங்குகளை முப்பது ரூபாய் என்று இவர் தீர்மானிக்கிறார். இது முக மதிப்பு எனப்படுகிறது.
ஒரு பங்கை பத்து ரூபாய் என்று அறிவித்தவர் நாட்கள் செல்லச் செல்ல அதிகரிக்கிறார். உதாரணமாக 10 ரூபாய் மதிப்புள்ள ஒரு பங்கின் மதிப்பு 20, 30, 40 என்று ஏறி சில நேரங்களில் 500, 1000 என்ற அளவுக்கு உயர்த்தி விடுவார்.
பத்து ரூபாய் என்ற முக மதிப்பு குறிக்கப்பட்ட பங்கை ஆயிரம் ரூபாய்க்கு விற்பது ஒன்றே இதன் மோசடியை அம்பலமாக்குகிறது.
இதில் மார்க்கம் தடை செய்துள்ள பல அம்சங்கள் அடங்கியுள்ளன.
அவரது நிறுவனத்தின் மொத்த மதிப்பே 100 ரூபாய் தான். ஆனால் 30 ரூபாய் மதிப்புள்ள பங்கை முப்பது ரூபாய்க்கு விற்காமல் 3000 ரூபாய்க்கு விற்றால் அதன் பொருள் என்ன?
முப்பது ரூபாய் மதிப்புள்ள பங்கு 3000 என்றால் மீதமுள்ள எழுபது ரூபாய்க்கான மதிப்பு 7000 ரூபாய் ஆகின்றது. ஆக மொத்தம் பத்தாயிரம் ரூபாய் அவரது கம்பெனியின் இருப்பாகச் சொல்லப்படுகிறது.
ஆனால் அந்தக் கம்பெனியின் இருப்பு நூறு ரூபாய் மட்டுமே. இது எவ்வளவு பெரிய மோசடி என்பதைச் சொல்லாமலே அறியலாம்.
பங்குச் சந்தையில் பத்து ரூபாய் என்று எழுதப்பட்ட பங்கு பத்திரம் 1000 ரூபாய்க்கு விற்கப்படுகிறது அப்பட்டமான பித்தலாட்டம். பத்து ரூபாய் பங்கை ஆயிரம் ரூபாய்க்கு ஏன் வாங்குகிறான்?
அந்தக் கம்பெனியில் பத்து சதவிகிதம் உரிமை கொண்டாட இதை வாங்கவில்லை. நாம் ஆயிரம் ரூபாய்க்கு வாங்கியதை 1100 க்கு வாங்கும் ஏமாளி கிடைப்பான் என்பதுதான் இதன் அடிப்படை. சங்கிலித் தொடராக இப்படி ஏமாற்ற முயும் என்பதால் இதன் விபரீதம் மக்களுக்குப் புரியவில்லை.
அந்தக் கம்பெனியை இழுத்து மூடுகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். ஆயிரம் ரூபாய்க்கு வாங்கிய பங்கைக் கொடுத்தால் ஆயிரம் ரூபாய் தருவார்களா? மாட்டார்கள். அந்தக் கம்பெனியின் இருப்பே நூறுதான் எனும் போது பத்து ரூபாய் முகமதிப்பு என்பதால் பத்து ரூபாயை வாங்கிக் கொண்டு போ என்று என்பார்கள்.
நாம் 10000 முக மதிப்பில் வெளியிடப்பட்ட ஒரு பங்கை வாங்கிய ஒருவரிடமிருந்து சில நாட்கள் கழித்து 5 இலட்சத்திற்கு வாங்குகிறோம் என்று வைத்து கொள்வோம். அந்தக் கம்பெனி நமக்குரிய பங்குக்கு இலாபம் தர வேண்டும். நாம் ஐந்து லட்சத்துக்கு பங்கு வாங்கியதால் ஐந்து இலட்சத்துக்கான இலாபத்தைத் தருவார்களா? மாட்டார்கள். மாறாக முக மதிப்பாகிய பத்தாயிரம் ருபாய்க்கு என்ன இலாபம் வருமோ அதைத்தான் தருவார்கள்.
அடுத்து நாம் கவனிக்க வேண்டிய இன்னொரு விஷயம் உள்ளது. நாம் ஒரு கம்பெனியில் பங்குதாரர் என்றால் அந்தக் கம்பெனியின் தயாரிப்பு கொடுக்கல் வாங்கல் அனைத்திலும் நமக்கும் பொறுப்பு உண்டு.
அந்தக் கம்பெனியில் நாம் சேர்ந்தால் நம்முடைய பங்கு ஹலாலான தொழிலில் இடப்பட்டுள்ளதா? அல்லது ஹராமான தொழிலில் இடப்பட்டுள்ளதா? என்பது தெரியாது. ஆகுமான தொழில் என்று உறுதியாகத் தெரியாத வரை அதில் நாம் முதலீடு செய்வது கூடாது.
ஒரு வியாபாரத்தில் கூட்டு சேர்பவர்கள் அந்த வியாபாரத்தின் மொத்த கணக்கு வழக்குகளைப் பார்ப்பதற்கு உரிமை பெற்றவர்கள். ஆனால் ஷேர் மூலம் கூட்டு சேர்ந்தவர்களுக்கு இந்த உரிமை வழங்கப்படாது. எந்தத் தொழிலில் முதலீடு செய்யப்பட்டது? எவ்வளவு செலவானது,? எவ்வளவு இலாபம் வந்தது? என்ற எந்த விபரத்தையும் இவர்களால் அறிந்து கொள்ள முடியாது.
எனவே முற்றிலும் ஹராமான மக்களை ஏமாற்றும் மோசடி வியாபாரமாகிய பங்குச் சந்தையில் முஸ்லிம்கள் பங்குகளை வாங்கவோ, விற்கவோ கூடாது.
———————-
ஏகத்துவம்