அல்லாஹ்வை அஞ்சுவோருக்கு அர்ஷின் நிழல்
ஒவ்வொரு நொடியும் அல்லாஹ் கண்காணித்துக் கொண்டிருக்கிறான் என்பதை நினைவில் நிறுத்தி பரிசுத்தமாக வாழ்வோரை அல்லாஹ் மறுமையில் அடையாளம் காட்டுவான். முதல் மனிதர் முதல் கடைசி மனிதர் வரை அனைவரும் சங்கமித்திருக்கும் மஹ்ஷர் மைதானத்தில் இவர்களை கண்ணியப்படுத்துவான். அதன்படி, அல்லாஹ்வின் அர்ஷுடைய நிழலில் நிற்கும் மகத்தான பாக்கியம் கிடைக்கும்.
‘அல்லாஹ்வின் நிழலைத் தவிர வேறு நிழல் இல்லாத நாளான மறுமை நாளில் அல்லாஹ் தம் நிழலை ஏழு பேர்களுக்கு அளிக்கிறான். அவர்கள்;
நீதியை நிலை நாட்டும் தலைவர்,
அல்லாஹ்வின் வணக்க வழிபாட்டில் ஊறிய இளைஞர்,
பள்ளி வாசல்களுடன் தம் உள்ளத்தைத் தொடர்பு படுத்திய ஒருவர்,
அல்லாஹ்விற்காகவே இணைந்து அல்லாஹ்விற்காகவே பிரிகிற இரண்டு நண்பர்கள்,
உயர் அந்தஸ்திலுள்ள அழகான ஒரு பெண் தவறான வழிக்குத் தம்மை அழைக்கிறபோது, ‘நான் அல்லாஹ்வை அஞ்சுகிறேன்’ என்று சொல்லும் மனிதர்,
தம் வலக்கரம் செய்யும் தர்மத்தை இடக்கரம் அறியாதவாறு இரகசியமாகச் செய்பவர்,
தனிமையில் இருந்து அல்லாஹ்வை நினைத்துக் கண்ணீர் சிந்துபவர்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 660
மக்களிடம் மதிப்புடையவர்களாக இருக்க வேண்டுமென வெளிப்படையில் பாசாங்கு காட்டாமல், அல்லாஹ்விடம் நற்பெயர் பெரும் வண்ணம் எப்போதும் நல்லவர்களாகத் திகழ வேண்டும். அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் அழகிய முறையில் கட்டுப்பட்டு வாழவேண்டும். அப்போதுதான் நமக்கும் மறுமையில் உயர்வு கிடைக்கும்.
(இறைவனை) அஞ்சியோருக்கு சொர்க்கம் தொலைவின்றி நெருக்கத்தில் கொண்டு வரப்படும். திருந்தி, பேணி நடந்து, மறைவில் அளவற்ற அருளாளனுக்கு அஞ்சி, தூய உள்ளத்துடன் வந்த ஒவ்வொருவருக்கும் வாக்களிக்கப்பட்டது இதுவே.
திருக்குர்ஆன் 50:31-33