தனிமையில் அல்லாஹ்வை அஞ்சுவோம்
ஏக இறைவன் பற்றிய பயம் நமக்கு முழுமையாக இருக்கும் போது, நாம் வாழ்வில் சரியான முறையில் நடந்து கொள்வோம். மார்க்கக் காரியங்கள் மட்டுமல்ல, மற்ற செயல்களிலும் சீரிய வகையில் செயல்படுவோம். ஆகவே தான் குர்ஆனிலும் ஹதீஸ்களிலும் இறையச்சம் குறித்து அதிகமதிகம் கூறப்பட்டுள்ளது.
எல்லாவற்றுக்கும் மேலாக, இறையச்சத்தை வளர்த்துக் கொள்வதற்கு நோன்பு மூலம் ரமலான் மாதம் முழுவதும் நமக்குப் பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த வாய்ப்பை சரியான முறையில் நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் (இறைவனை) அஞ்சுவதற்காக உங்களுக்கு முன் சென்றோர் மீது கடமையாக்கப்பட்டது போல் உங்களுக்கும் குறிப்பிட்ட நாட்களில் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது.
(திருக்குர்ஆன் 2:183)
நோன்பு வைத்திருக்கும் வேளையில் சாப்பிடுவதற்கும், பருகுவதற்கும் வாய்ப்பு கிடைத்தால், மற்றவர்கள் முன்னிலையில் இருக்கும் போது மட்டுமல்ல, தனிமையில் உள்ள போதும் தவிர்த்துக் கொள்கிறோம்; விலகிக் கொள்கிறோம். இவ்வாறு எங்கிருந்தாலும் அல்லாஹ்வை அஞ்சுகிற குணத்தையே சத்திய மார்க்கம் நம்மிடம் எதிர்பார்க்கிறது. இது குறித்து சில முக்கிய கருத்துக்களை இங்கு பகிர்ந்து கொள்வோம்.
முஃமின்களிடம் இருக்கும் முக்கிய பண்பு
இம்மையில் வாழும்போது நம்பிக்கையாளர்கள் எப்படி இருப்பார்கள் என்பது தொடர்பாகப் பல செய்திகள் திருமறையில் சொல்லப்பட்டுள்ளது. அவ்வகையில் அல்லாஹ் கூறும்போது, முஃமின்கள் தனிமையில் இறைவனை பயந்து வாழ்வார்கள் என்று குறிப்பிடுகிறான். இதை மெய்ப்படுத்தும் வகையில் செயல்பட்டு நமது இறையச்சத்தை பரிபூரணப்படுத்திக் கொள்ள வேண்டும்.
அவர்கள் தனிமையில் தமது இறைவனை அஞ்சுவார்கள். யுகமுடிவு நேரம் பற்றியும் அஞ்சுவார்கள்.
திருக்குர்ஆன் (21:49)
சிலர் சமூகத்தின் பார்வையில் இருக்கும் போது, சுத்த தங்கமாய் இருக்கிறார்கள்; மார்க்கக் கடமைகளை செவ்வனே நிறைவேற்றுகிறார்கள்; தீமைகளை விட்டும் தள்ளி நிற்கிறார்கள். ஆனால், தனியாக இருக்கும் சமயங்களில், மார்க்கம் தடுத்த காரியங்களில் சர்வ சாதாரணமாக ஈடுபடுகிறார்கள். தங்களது கடமைகளிலும் பொறுப்புகளிலும் பொடும்போக்குத் தனமாக இருக்கிறார்கள். இத்தகைய அரை குறையான இறையச்சம் முஃமின்களுக்கு அழகல்ல.
அஞ்சுவோருக்கே அறிவுரை பயனளிக்கும்!
நாமெல்லாம் திருமறைக் குர்ஆனை இறைவேதமாக ஏற்றுக் கொண்டிருக்கிறோம். அது இறங்கிய மாதத்தில் நோன்பை நிறைவேற்றுகிறோம். இத்துடன் கடமை முடிந்து விட்டதென ஒதுங்கிவிடக் கூடாது.
திருமறைக்கு ஏற்ப நமது வாழ்வை மாற்றிக் கொள்ள வேண்டும். அதற்கேற்ப சிந்தனைகளையும் செயல்களையும் சீர்படுத்திக் கொள்ள வேண்டும். அதற்கு, தனித்திருக்கும் சமயத்திலும் வல்ல ரஹ்மானை பயந்து வாழும் தன்மை நம்மிடம் இருப்பது அவசியம்.
தனிமையில் இருக்கும் போது தமது இறைவனை அஞ்சி, தொழுகையை நிலைநாட்டியோரையே நீர் எச்சரிக்கை செய்வீர். பரிசுத்தமாக நடப்பவர் தமக்காகவே பரிசுத்தமாகிக் கொள்கிறார். அல்லாஹ்விடமே திரும்புதல் உள்ளது.
திருக்குர்ஆன் 35:18
இந்த அறிவுரையைப் பின்பற்றி அளவற்ற அருளாளனைத் தனிமையில் அஞ்சுவோரைத்தான் நீர் எச்சரிப்பீர். அவருக்கு மன்னிப்பு மற்றும் மரியாதைக்குரிய கூலி பற்றி நற்செய்தி கூறுவீராக!
திருக்குர்ஆன் 36:11
திருக்குர்ஆனின் வசனங்களை பள்ளிவாசல் சுவர்களில் பார்க்கிறோம்; பயான்களில் கேட்கிறோம். இப்படிப் பல வழிகளில் படைத்தவனின் வார்த்தைகளைத் தெரிந்து கொண்டாலும் பலருடைய வாழ்க்கை மார்க்கத்திற்கு எதிராகவே இருக்கிறது.
குர்ஆனையே மனனம் செய்தவர்கள், அதன் போதனைகளை அடுத்தவர்களுக்குச் சொல்பவர்களும் கூட அது தடுத்திருக்கும் காரியங்களைச் செய்கிறார்கள். இதற்கான முக்கிய காரணத்தை முன்கண்ட வசனத்தில் அல்லாஹ் நமக்குத் தெளிவுபடுத்தி விட்டான். அதைக் கவனத்தில் கொண்டு நம்மைப் பண்படுத்திக் கொள்ள வேண்டும்.
Alhamdulillah 3
Alhamdulillah 3