ஷைத்தானின் தூண்டுதலிருந்து நாம் எவ்வாறு தப்பிப்பது?
தீய எண்ணங்களை ஏற்படுத்துவதைத் தான் ஷைத்தானால் செய்ய முடியும் என்று கூறும் திருக்குர்ஆன் அவனுடைய அந்தத் தீங்கிலிருந்து எவ்வாறு காத்துக் கொள்வது என்ற வழியையும் கற்றுத் தருகிறது.
ஷைத்தானுடைய வழியில் சென்று விடாமல் தனக்குப் பாதுகாப்பைத் தருமாறு அல்லாஹ்விடம் துஆ செய்வது தான் அந்த வழியாகும்.
இந்த துஆ ஷைத்தானின் சூழ்ச்சியை முறியடிக்கும் மாபெரும் கருவியாகும்.
என் இறைவா! ஷைத்தான்களின் தூண்டுதல்களை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன் என்றும் கூறுவீராக!
அல்குர்ஆன் (23 : 97)
(முஹம்மதே!) மனிதர்களின் அரசனும், மனிதர்களின் கடவுளுமான மனிதர்களின் இறைவனிடம், மறைந்து கொண்டு தீய எண்ணங்களைப் போடுபவனின் தீங்கை விட்டும் பாதுகாப்புத் தேடுகிறேன் என்று கூறுவீராக! அவன் மனிதர்களின் உள்ளங்களில் தீய எண்ணங்களைப் போடுகிறான். ஜின்களிலும், மனிதர்களிலும் இத்தகையோர் உள்ளனர்.
அல்குர்ஆன் 114வது அத்தியாயம்
ஷைத்தானின் தாக்கம் உமக்கு ஏற்பட்டால் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுவீராக! அவன் செவியுறுபவன்; அறிந்தவன்.
அல்குர்ஆன் 7:200
குர்ஆனை ஓதும் போது விரட்டப்பட்ட ஷைத்தானை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடிக் கொள்!
அல்குர்ஆன் 16:98
அவர் (இம்ரானின் மனைவி) ஈன்றெடுத்த போது, என் இறைவா! பெண் குழந்தையாக ஈன்றெடுத்து விட்டேனே எனக் கூறினார். அவர் எதை ஈன்றெடுத்தார் என்பதை அல்லாஹ் நன்கறிவான். ஆண், பெண்ணைப் போன்றவன் அல்ல. நான் இவளுக்கு மர்யம் என்று பெயரிட்டேன். விரட்டப்பட்ட ஷைத்தானை விட்டும் இவருக்கும், இவரது வழித் தோன்றல்களுக்கும் உன் பாதுகாப்பை வேண்டுகிறேன் எனவும் அவர் கூறினார்.
அல்குர்ஆன் 3:36
ஷைத்தானின் தூண்டுதல் ஏற்பட்டால் என்னிடம் வாருங்கள் நான் ஷைத்தானை விரட்டுகிறேன் என்று நபி (ஸல்) அவர்கள் தமது தோழர்களுக்குக் கூறவில்லை. மாறாக தீய எண்ணங்கள் ஏற்பட்டால் அல்லாஹ்விடம் ஷைத்தானிடமிருந்து பாதுகாப்புத் தேடுமாறு தான் கற்றுக் கொடுத்தார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எதை கற்றுக் கொடுத்தார்களோ அதில் தான் நமக்கு வெற்றி இருக்கிறது. எனவே ஷைத்தானை விரட்டுகிறோம் என்று கூறுபவர்களின் மாயவலையில் யாரும் விழுந்து விட வேண்டாம்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒருவரிடம் (அவர் மனத்திற்குள்) ஷைத்தான் வந்து, இதைப் படைத்தவர் யார்? இதைப் படைத்தவர் யார்? என்று கேட்டுக் கொண்டே வந்து, இறுதியில், உன் இறைவனைப் படைத்தவர் யார்? என்று கேட்கின்றான். இந்தக் (கேள்வி கேட்கும்) கட்டத்தை அவன் அடையும் போது அவர் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடட்டும். (இத்தகைய சிந்தனையி-ருந்து) விலகிக் கொள்ளட்டும்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 3276
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒருவர் தமக்கு விருப்பமான கனவைக் கண்டால், அது அல்லாஹ்விடமிருந்தே வந்தது (என்று தெரிந்து), அதற்காக அவர் அல்லாஹ்வைப் போற்றட்டும்.
அதை (விருப்பமானவர்களிடம்) தெரிவிக்கட்டும். அதற்கு மாறாகத் தமக்கு விருப்பமில்லாத கனவு கண்டால், அது ஷைத்தானிடம் இருந்தே வந்தது. அதன் தீங்கிலிருந்து (அல்லாஹ்விடம்) பாதுகாப்புக் கோரட்டும்.
அறிவிப்பவர்: அபூசயீத் அல்குத்ரீ (ரலி)
நூல்: புகாரி 6985
இறைநம்பிக்கை, இறையச்சம், நற்குணங்கள் ஆகியவற்றை வளர்த்துக் கொண்டால் ஷைத்தான் நம்மை வழிகெடுக்க முடியாது.
எனது அடியார்களில் உன்னைப் பின்பற்றிய வழிகேடர்களைத் தவிர மற்றவர்கள் மீது உனக்கு எந்த அதிகாரமும் இல்லை.
அல்குர்ஆன் 15:42
நம்பிக்கை கொண்டோர் மீதும், தமது இறைவனையே சார்ந்திருப்போர் மீதும் அவனுக்கு (ஷைத்தானுக்கு) அதிகாரம் இல்லை.
அல்குர்ஆன் 16:99
(இறைவனை) அஞ்சுவோருக்கு ஷைத்தானின் தாக்கம் ஏற்பட்டால் உடனே சுதாரித்துக் கொள்வார்கள்! அப்போது அவர்கள் விழித்துக் கொள்வார்கள்.
அல்குர்ஆன் 7:201
———————-
ஏகத்துவம்