லுஹாத் தொழுகை
———————————
முற்பகலில் லுஹா என்ற தொழுகை உள்ளது என்பதை அனைவரும் அறிந்து வைத்திருக்கிறோம்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் லுஹாத் தொழுகையை நிறைவேற்றியதற்கும் ஆர்வமூட்டியதற்கும் அதிகமான ஆதாரங்கள் உள்ளன.
ஆனால் சில நபித்தோழர்களுக்கு இதைப் பற்றிய தகவல் கிடைக்கவில்லை.
எனது தோழர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எனக்கு மூன்று விஷயங்களை வலியுறுத்திக் கூறினார்கள். நான் மரணிக்கும் வரை அவற்றை விட மாட்டேன். அவைகளாவன :
ஒவ்வொரு மாதமும் மூன்று நாட்கள் நோன்பு நோற்பது;
லுஹா தொழுவது;
வித்ரு தொழுத பின்னர் உறங்குவது என்று அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள்.
நூல் : புகாரி 1178, 1981
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்கா வெற்றி கொள்ளப்பட்ட தினத்தில் எனது வீட்டுக்கு வந்து குளித்து விட்டு எட்டு ரக்அத்கள் தொழுதனர். அந்த நேரம் லுஹா நேரமாக இருந்தது என்று
அபூ தாலிபின் மகள் உம்மு ஹானி (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நூல் : புகாரி 357, 3171, 6158
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தாமும் தொழுது மற்றவருக்கும் வலியுறுத்திய ஒரு தொழுகையை சில நபித் தோழர்கள் அறிந்திருக்கவில்லலை
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு போதும் லுஹா தொழுகை தொழுததில்லை என்று ஆயிஷா (ரலி) கூறுகிறார்கள்.
நூல் : புகாரி 1128, 1177
நீங்கள் லுஹா தொழுவதுண்டா? என்று இப்னு உமர் (ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கவர்கள் இல்லை என்றனர். உமர் தொழுதிருக்கிறாரா? என்று கேட்டேன். அதற்கும் இல்லை என்றார்கள். அபூபக்ர் தொழுதிருக்கிறாரா? என்று கேட்டேன். அதற்கும் இல்லை என்றார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழுதிருக்கிறார்களா? என்று கேட்டேன்.
அதற்கவர் அவர்கள் தொழுததாக நான் நினைக்கவில்லை என்றார்கள். இதை முவர்ரிக் என்பார் அறிவிக்கிறார்.
நூல் : புகாரி 1175
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வணக்கம் தொடர்பான செய்தி அவர்களின் மனைவிக்கும் தெரியாமல் இருந்துள்ளது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை அப்படியே பின்பற்றுவதில் தனித்து விளங்கிய இப்னு உமர் (ரலி) அவர்களுக்கும் தெரியாமல் இருந்துள்ளது.
———————-
ஏகத்துவம்