ஸஹர் நேர பாங்கும் நபிவழியே

ஸஹருக்கு தனி பாங்கு உண்டா

ஆம். உண்டு.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நீங்கள் சஹர் உணவு உண்பதிலிருந்து பிலாலின் பாங்கு உங்களைத் தடுத்துவிட வேண்டாம். ஏனெனில் அவர் இரவிலேயே பாங்கு சொல்வது உங்களில் (இரவுத்) தொழுகையில் ஈடுபட்டுக் கொண்டிருப்போர் திரும்பி வருவதற்காகவும், உங்களில் தூங்கிக் கொண்டிருப்போரை உணர்த்துவதற்காகவும் தான். ஃபஜ்ர் அல்லது சுப்ஹு நேரம் வந்து விட்டது என்பதை அறிவிப்பதற்காக அல்ல.

அறிவிப்பவர்:*அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)
நூல்: புகாரி 621

மக்கள் உறக்கத்திலிருந்து விழித்து ஸஹர் செய்ய வேண்டியுள்ளதால், ஸஹர் செய்வதற்காக மக்களை எழுப்பிவிடக்கூடிய ஏற்பாடு நபி (ஸல்) அவர்களால் செய்யப்பட்டிருந்தது.

பிலால் (ரலி), அப்துல்லாஹ் பின் உம்மி மக்தூம் (ரலி) ஆகிய இரண்டு முஅத்தீன்கள் இதற்காக நியமிக்கப்பட்டிருந்தனர். இருவரது குரலும் மக்களுக்கு நன்கு பரிச்சியமாகி இருந்தது. ரமழான் மாதத்தில் ஸஹருக்கு ஒரு பாங்கும், சுப்ஹ் தொழுகைக்கு ஒரு பாங்கும் என இரண்டு பாங்குகள் சொல்ல நபி (ஸல்) அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார்கள்.

பிலால் இரவில் அதான் (பாங்கு) சொல்வார். இப்னு உம்மி மக்தூம் அதான் (பாங்கு) சொல்லும் வரை நீங்கள் உண்ணுங்கள் பருகுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி),
நூல்: புகாரி 5299

மேற்கண்ட நபிகளாரின் வழிகாட்டுதல் அடிப்படையில் நாமும் ஸஹர் நேரத்தை அறிவிப்புச் செய்ய பாங்கு சொல்ல வேண்டும். அல்லாஹ்வுடைய மகத்தான கிருபையைக் கொண்டு தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மர்கஸ்களில் இந்த நபி வழி பேணப்படுகின்றது. இந்த நபி மொழியை அறியாதவர்களுக்கு இந்த செய்தியை கொண்டு சேர்த்து அவர்களும் அல்லாஹ்வுடைய தூதருடைய வழிகாட்டுதலை பின்பற்ற நம்மால் இயன்ற முயற்சிகளை செய்ய வேண்டும்.

இரண்டு பாங்குகளுக்கும் இடையே எவ்வளவு இடைவெளி இருக்கும் என்பதை விளக்கும் போது, அவர் பாங்கு சொல்லி விட்டு இறங்குவார்; இவர் பாங்கு சொல்வதற்காகச் செல்வார் என்று ஆயிஷா (ரலி), இப்னு உமர் (ரலி) ஆகியோர் விளக்கமளித்ததாக இடம் பெற்றுள்ளது.

புகாரி 1919

ஸஹருக்கும், சுப்ஹுக்கும் இடையில் ஐம்பது வசனங்கள் ஓதும் அளவுக்கு இடைவெளி இருக்கும் என்று அனஸ் (ரலி) அறிவிக்கின்றார்கள்.

(புகாரி 1921)

ஐம்பது வசனங்கள் ஓதும் நேரம் என்பது சாதாரணமாக நிறுத்தி நிதானமாக ஓதினால் இருபது நிமிடத்திலிருந்து அரை மணி நேரம் வரை தேவைப்படும். எனவே இரண்டு பாங்குக்கும் இடையில் அரை மணி நேரம் இடைவெளி விடலாம்.

சுபுஹுக்குச் சிறிது நேரம் இருக்கும் போது ஒரு பாங்கு சொல்லி மக்களை விழித்தெழச் செய்யும் வழக்கம் பெரும்பாலும் எங்குமே இன்று நடைமுறையில் இல்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் இருந்த இந்த சுன்னத்துக்கு உயிர் கொடுக்க வேண்டும்.

முதல் பாங்கு ஸஹருக்கு எனவும், இரண்டாவது பாங்கு சுபுஹுக்கு எனவும் மக்களுக்குத் தெளிவாக விளக்கிவிட்டு இதை நடைமுறைப்படுத்த வேண்டும்.


ஏகத்துவம்

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *