அறியாமல் தீய காரியம் செய்து விட்டு தாமதமின்றி மன்னிப்புக் கேட்போருக்கே அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு உண்டு. அவர்களையே அல்லாஹ் மன்னிப்பான். அல்லாஹ் அறிந்தவனாகவும், ஞானமிக்கவனாகவும் இருக்கிறான்.
[அல்குர்ஆன் 4:17]
அல்லாஹ்வின் மீதாணையாக! நான் ஒரு நாளில் எழுபது தடவைக்கு மேல் அஸ்தஃக்ஃபிருல்லாஹ வ அதூபு இலைஹி’ (பொருள்: நான் அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு கோரி அவன் பக்கமே திரும்புகின்றேன்) என்று கூறுகின்றேன் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டுள்ளேன்.
அறிவிகபவர்: அபூஹுரைரா (ரலி),
நூல் : புகாரி 6307
எனது உள்ளத்தில் கவனக்குறைவு ஏற்படுகின்றது. நிச்சயமாக நான் அல்லாஹ்விடம் ஒரு நாளில் நூறு தடவை பாவமன்னிப்பு தேடுகின்றேன் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அல்அகர் பின் யஸார் (ரலி),
நூல் : முஸ்லிம் 4870
மக்களே! அல்லஹ்விடம் பாவமன்னிப்பு தேடுங்கள். நான் அவனிடம் ஒரு நாளில் நூறு தடவை பாவமன்னிப்பு தேடுகின்றேன் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அல்அகர் பின் யஸார் (ரலி),
நூல் : முஸ்லிம் 4871
உபாதா இப்னு அஸ்ஸாமித்(ரலி) அறிவித்தார்.
நான் (பத்துப் பேருக்கும் குறைவான) ஒரு குழுவினருடன் (சென்று) இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் உறுதிமொழி அளித்தேன். அப்போது நபி(ஸல்) அவர்கள், அல்லாஹ்வுக்கு நீங்கள் எதையும் இணை கற்பிப்பதில்லை; திருடுவதில்லை; குழந்தைகளைக் கொல்வதில்லை; உங்களிடையே அவதூறு கற்பித்து அதைப் பரப்புவதில்லை; எந்த நற்செயலிலும் எனக்கு மாறு செய்வதில்லை என்று நான் உங்களிடம் உறுதிமொழி வாங்குகிறேன்.
உங்களில் (இவற்றை) நிறைவேற்றுகிறவரின் பிரதிபலன் அல்லாஹ்விடம் உள்ளது. மேற்கூறப்பட்ட (குற்றங்களான இ)வற்றில் எதையேனும் ஒருவர் செய்து, (அதற்காக) அவர் இவ்வுலகில் தண்டிக்கப்பட்டால் அதுவே அவருக்குப் பரிகாரமாகவும் அவரைத் தூய்மையாக்கக் கூடியதாகவும் ஆகிவிடும். (அவற்றில் எதையேனும் ஒருவர் செய்து பின்னர்) அல்லாஹ் அதனை (யாருக்கும் தெரியாமல்) மறைத்துவிட்டால் அவர் அல்லாஹ்வின் பொறுப்பில் விடப்படுவார்; அல்லாஹ் நாடினால் அவரைத் தண்டிப்பான்: அவன் நாடினால் அவரை மன்னிப்பான் என்று கூறினார்கள்.
அபூ அப்தில்லாஹ் (புகாரியாகிய நான்) கூறுகிறேன்:
ஸஹீஹுல் புகாரி: 6801