வரம்பு மீறிய தாயிஃப் நகர மக்களை மன்னித்து விட்ட நபிகளார்
(ஒருமுறை) நான் நபி (ஸல்) அவர்களிடம், “(தாங்கள் காயமடைந்த) உஹுதுப் போரின் காலகட்டத்தை விடக் கொடுமையான காலகட்டம் எதையேனும் தாங்கள் சந்தித்ததுண்டா?’’ என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “நான் உன் சமுதாயத்தாரால் நிறையத் துன்பங்களைச் சந்தித்துவிட்டேன். அவர்களால் நான் சந்தித்த துன்பங்களிலேயே மிகக் கடுமையானது “அகபா (தாயிஃப்) உடைய நாளன்று சந்தித்த துன்பமேயாகும்.
ஏனெனில், அன்று நான் என்னை ஏற்றுக் கொள்ளும்படி (தாயிஃப் நகரத் தலைவரான கினானா) இப்னு அப்தி யாலீல் பின் அப்தி குலால் என்பவருக்கு எடுத்துரைத்தேன். அவர் நான் விரும்பியபடி எனக்கு பதிலளிக்கவில்லை. ஆகவே, நான் கவலையுடன் எதிர்ப்பட்ட திசையில் நடந்தேன். “கர்னுஸ் ஸஆலிப்’ என்னுமிடத்தை நான் அடையும்வரை நான் சுய உணர்வுக்கு வரவில்லை.
அங்கு வந்து சேர்ந்தவுடன் என் தலையை உயர்த்தினேன். அப்போது (அங்கே வானத்தில்) ஒரு மேகம் என் மீது நிழலிட்டுக் கொண்டிருந்தது. நான் கூர்ந்து கவனித்தபோது அதில் ஜிப்ரீல் (அலை) அவர்கள் இருந்தார்கள். அவர்கள் என்னை அழைத்து, “உங்கள் சமுதாயத்தார் உங்களிடம் சொன்னதையும் அவர்கள் உங்களுக்கு அளித்த பதிலையும் அல்லாஹ் கேட்டான். அவர்களை நீங்கள் விரும்பியபடி தண்டிப்பதற்கு ஆணையிடுவதற்காக மலைகளுக்கான வானவரை அல்லாஹ் உங்களிடம் அனுப்பியுள்ளான்’’ என்று கூறினார்கள்.
உடனே, மலைகளை நிர்வகிக்கும் வானவர் என்னை அழைத்து எனக்கு சலாம் சொல்லி, பிறகு, “முஹம்மதே! நீங்கள் விரும்பியபடி கட்டளையிடலாம். (இந்த நகரத்தின் இரு மருங்கிலுமுள்ள) இந்த இரு மலைகளையும் அவர்கள் மீது நான் புரட்டிப்போட்டு விட வேண்டுமென்று நீங்கள் விரும்பினாலும் (சரி, உங்கள் கட்டளைப்படி செயல்பட நான் தயாராக உள்ளேன்)’’ என்று கூறினார்.
உடனே, “(வேண்டாம்;) ஆயினும், இந்த (நகரத்து) மக்களின் சந்ததிகளில் அல்லாஹ்வுக்கு எதையும் இணை கற்பிக்காமல் அவனை மட்டுமே வணங்குபவர்களை அல்லாஹ் உருவாக்குவான் என்று நான் நம்புகிறேன் (ஆகவே, அவர்களை தண்டிக்க வேண்டாம்)’’ என்று சொன்னேன்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: புகாரி-3231
சத்தியத்தைச் சொன்ன நபியிடம் தாயிஃப் நகர மக்கள் வரம்பு மீறினார்கள். கடுமையான துன்பங்களைக் கட்டவிழ்த்து விட்டார்கள். தூதரையே இழிவுபடுத்திய குற்றத்திற்காக அவர்களைத் தண்டிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தும் நபிகளார் மறுத்து விடுகிறார்கள்.
இன்று நிலைமை தலைகீழாக இருக்கிறது. நபியை நேசிப்பதாகச் சொல்லும் பித்அத்வாதிகள், தங்களிடமுள்ள நபிவழிக்கு முரணான காரியங்களைப் பற்றி எவரேனும் பேசினால் கொதிக்கிறார்கள். தங்களிடம் ஏமாறாத வண்ணம் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் தவ்ஹீத் சகோதரர்களுக்கு எதிராகப் பிரச்சனைகளைக் கிளப்பி விடுகிறார்கள். இனியாவது இவர்கள் இத்தகைய பழிதீர்க்கும் குணத்தை விட்டொழித்து, மார்க்கப்படி தங்களைத் திருத்திக் கொள்ள வேண்டும்.
வரம்பு மீறிய தாயிஃப் நகர மக்களை மன்னித்து விட்ட நபிகளார்