தர்ஹாக்கள் – சாபத்திற்குரிய தலங்கள்
உம்மு ஹபீபா அவர்களும் உம்மு சலமா அவர்களும் (அபிசீனிய ஹிஜ்ரத்தின் போது) அபிசீனியாவில் தாங்கள் பார்த்த உருவப் படங்கள் கொண்ட ஒரு கிறிஸ்தவ ஆலயத்தைக் குறித்து (என்னிடம்) பேசினார்கள். மேலும் அவ்விருவரும், நபி (ஸல்) அவர்களிடம் அதைப் பற்றிக் கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “(அவர்கள் எத்தகையவர்கள் என்றால்) அவர்களிடையே நல்ல மனிதர் ஒருவர் வாழ்ந்து இறந்துவிடும் போது அவரது சமாதியின் மீது வணக்கத்தலம் ஒன்றைக் கட்டி அதில் (அவருடைய) அந்த உருவங்களை வரைவார்கள். அவர்கள் தாம் மறுமை நாளில் அல்லாஹ்விடம் மக்களிலேயே மிக மோசமானவர்கள்” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: புகாரி 427
கப்ருகள் அருகில் தொழத் தடை
நீங்கள் கப்ருகள் மீது அமராதீர்கள். கப்ருகளை நோக்கித் தொழாதீர்கள் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூமர்ஸத் அல்ஃகனவீ
நூல்: முஸ்லிம் 1613
கப்ருகளைக் கட்டாதீர்
கப்ரு பூசப்படுவதையும் அதன் மீது அமர்வதையும் அதைக் கட்டுவதையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)
நூல்: முஸ்லிம் 1610
கப்ருகள் பூசப்படுவதையும், அதன் மீது எழுதப்படுவதையும், அதன் மீது கட்டடம் எழுப்புவதையும் அதை மிதிப்பதையும் நபி (ஸல்) அவர்கள் தடை செய்துள்ளார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)
நூல்: திர்மிதீ 972
தரைமட்டமாக்கப்பட வேண்டிய தர்ஹாக்கள்
அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்கள் என்னிடம், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எந்த அலுவலுக்காக என்னை அனுப்பினார்களோ அந்த அலுவலுக்காக உம்மை நான் அனுப்புகிறேன். (அந்த அலுவல் என்னவென்றால்) எந்த உருவச் சிலைகளையும் நீர் அழிக்காமல் விட்டு விடாதீர்; (தரையை விட) உயர்ந்துள்ள எந்தக் கப்றையும் தரை மட்டமாக்காமல் விடாதீர்!” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபுல்ஹய்யாஜ் அல்அசதீ
நூல்: முஸ்லிம் 1609
எங்களை அன்று அதிர்ச்சியில் உறைய வைத்த ஹதீஸ்கள் இவை தான்! இவை அன்றைய தினம் எங்களுக்குத் தெரியாதவை. அந்த அளவுக்கு ஹதீஸ்கள் மறைக்கப்பட்டு இருந்தன. இந்த ஹதீஸ்களை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்து இதன் படி மக்களை இன்று செயல்பட வைத்திருக்கின்றோம், அல்ஹம்துலில்லாஹ்!
கப்ருகள், விண்ணைத் தொடும் மினாராக்களுடன் கட்டப்பட்ட தர்ஹாக்கள் தகர்க்கப்படவும், தரை மட்டமாக்கப்படவும் வேண்டிய பணியை மட்டும் நம்மால் செய்ய முடியவில்லை. காரணம், இது ஆட்சியாளர்களால் செய்யப்பட வேண்டியதாகும். எல்லோரும் மொத்தமாக ஏகத்துவத்தில் இணைந்த சகோதரர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள கப்ருகளைத் தரை மட்டமாக்கிய வரலாறும் உண்டு.
ஆனால் அதே சமயம் தர்ஹாக்களே கதி என்று குடியிருந்தவர்கள் எல்லாம் தவ்ஹீதே கதி என்றாகி விட்டனர். குறிப்பாகப் பெண்களிடம் இத்தகைய மாற்றம் ஏற்பட்டது அல்லாஹ்வின் மகத்தான கருணையாகும்.
பெண்கள் தான் அதிகமாக தர்ஹா வழிபாட்டில் மூழ்கிக் கிடந்தவர்கள். அவர்கள் இன்று தவ்ஹீதைத் தங்கள் உள்ளங்களில் ஏந்திக் கொண்டு தவ்ஹீதுக் கூட்டங்களில் தேனீக்கள் போன்று மொய்க்கும் காட்சி தமிழகம் காணாத வரலாற்றுப் புரட்சியாகும்.