திருநபி திருவிழாவா? கிறிஸ்துமஸ் திருவிழாவா?
M.A. அப்துர்ரஹ்மான்
இந்த உலகத்தில் கோடிக்கணக்கான மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். இறைவன் இந்த உலகத்தைப் படைத்து, அதில் மனிதர்களைப் பரவச் செய்திருக்கின்றான். இறைவன் படைத்த கோடான கோடி மக்களில் ஒரு சில குறிப்பிட்ட சாராரை மாத்திரம் தேர்வு செய்து இஸ்லாம் என்னும் மகத்தான பேரருட்கொடையை வழங்கியிருக்கின்றான்.
இஸ்லாமிய மார்க்கத்தில் முஸ்லிம்களாக வாழ்கின்ற நம்மில் பெரும்பாலானோர் இறைவனும், இறைத்தூதரும் காட்டித் தந்ததன் அடிப்படையில் தங்களுடைய வாழ்க்கையை அமைத்துக் கொள்ளாமல் முன்னோர்கள், கட்டுக்கதைகள், மார்க்கத்திற்குக் கடுகளவும் சம்பந்தமில்லாத பிறமதக் கலாச்சாரங்கள், இதுபோன்ற பல்வேறு விதமான செயல்பாடுகளை இஸ்லாம் என்னும் பெயரால் இஸ்லாமிய மார்க்கத்திலே புகுத்தி விட்டதைப் பார்க்கின்றோம்.
இந்தக் கட்டுக்கதைகள், மூடநம்பிக்கைகளில் ஒன்று தான் ரபியுல் அவ்வல் மாதம் திருநபி பிறந்த நாள் விழா என்ற பெயரால் அதிகமான ஊர்களில் கோலாகலமாகக் கொண்டாடப்படுகின்ற திருவிழா.
இன்று முஸ்லிம்களில் பெரும்பாலானோர் ஒரு சில ஆலிம்களின் தவறான வழிநடத்தலினால், கிறிஸ்தவர்கள் ஈஸா நபியின் பிறந்த நாளை எவ்வாறு கிறிஸ்துமஸ் திருவிழாவாக, கோலாகலமாகக் கொண்டாடுவார்களோ அதுபோன்று நபி (ஸல்) அவர்களின் பிறந்த தினம் என்று கூறிக் கொண்டு, திருநபி திருவிழா அதாவது மீலாதுவிழா ஜகஜோதியாகக் கொண்டாடப்படுகின்றது.
இதன் மூலம் எவ்வித ஆதாரமும் இல்லாமல் கிறிஸ்தவர்கள் கொண்டாடுகின்ற கிருஸ்துமஸ் திருவிழாவுக்கும், ஆதாரமில்லாமல் கொண்டாடுகின்ற மீலாது திருவிழாவுக்கும் எவ்வித வேறுபாடும் இல்லை என்பதை நிரூபித்துக் கொண்டிருப்பதைப் பார்க்கின்றோம்.
கிறிஸ்தவர்களுக்கு ஒப்பானவர்கள்
ரபியுல் அவ்வல் மாதத்திற்கு ஏன் இவ்வளவு சிறப்பு என்றால், இந்த மாதத்தில் தான் நபி (ஸல்) அவர்கள் பிறந்துள்ளார்கள். நபி பிறந்த மாதம் அருள் பொங்கும் மாதம், கண்ணியம் நிறைந்த மாதம், கஷ்டங்களை நீக்கும் மாதம், அகிலத்திற்கு ஒளியூட்டும் மாதம் என்றெல்லாம் கூறி முஸ்லிம்களில் பெரும்பாலானோர் அறியாமையில் மூழ்கிக் கிடக்கின்றார்கள். நல்லமல்கள் செய்கின்றோம் என்ற பெயரால் நரகத்திற்கு அழைத்துச் செல்கின்ற அமல்களைச் செய்து கொண்டிருக்கின்றார்கள்.
ரபியுல் அவ்வல் மாதத்தில் நபி (ஸல்) அவர்கள் பிறந்தது உண்மைதான். ஆனால் இவர்கள் நம்புவது போல் இந்த மாதத்திற்கு என்று தனிச்சிறப்புகள் இருக்கின்றது என்றோ, விழாக் கொண்டாட வேண்டும் என்றோ, பள்ளிவாசல்களில் மவ்லூதுகள் ஓத வேண்டும் என்றோ இறைவனும், இறைத்தூதரும் நமக்குக் காட்டித் தரவில்லை.
ஆனால் இன்றைக்கு சர்வசாதாரணமாக, கிறிஸ்தவர்கள் கிறிஸ்துமஸ் திருவிழாவுக்காக தங்களுடைய ஆலயங்களை அலங்கரிப்பது போல், அவர்களை விட வெகு விமரிசையாக ரபியுல் அவ்வல் மாதம் வந்து விட்டால் மீலாதுவிழா என்ற பெயரால் பள்ளிவாசல்களை அலங்கரிப்பதைப் பார்க்கின்றோம். அப்பட்டமாக பிறமதக் கலாச்சாரங்களைப் பின்பற்றி இறைவனின் கட்டளையை மீறுவதைப் பார்க்கின்றோம்.
யார் பிறமதக் கலாச்சாரத்தைக் காப்பி அடித்து அப்படியே பின்பற்றுகின்றார்களோ அவர்கள் அந்த மதத்தைச் சார்ந்தவர்களே! என்று நபி (ஸல்) அவர்கள் கடுமையான முறையில் எச்சரிக்கை விடுக்கின்றார்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யார் பிறமதக் கலாச்சாரத்தைப் பின்பற்று கின்றார்களோ அவர்கள் அவர்களைச் சார்ந்தவர்கள்.
நூல்: அபூதாவூத் 4033
இன்னும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது மரணத்தை நெருங்கிய இறுதிக் கட்டத்தில், மக்கள் எச்சரிக்கை உணர்வோடும், மிகுந்த கவனத்தோடும் இருக்க வேண்டும் என்று அறிவுரை பகர்ந்த செய்தி வரம்பு மீறி புகழ்வதைப் பற்றித் தான்.
கிறிஸ்தவர்கள் தங்களுக்கு தூதராக அனுப்பப் பட்ட ஈஸா (அலை) அவர்களை வரம்புமீறிப் புகழ்ந்து கடவுளின் அந்தஸ்திற்குக் கொண்டுபோய் சேர்த்தார்களோ அதுபோன்று என்னையும் வரம்பு மீறிப் புகழ்ந்து அழிந்து போய்விடாதீர்கள் என்று எச்சரித்துள்ளார்கள்.
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள், “கிறிஸ்தவர்கள் மர்யமின் மைந்தர் ஈசாவை (அளவுக்கு மீறிப் புகழ்ந்து கடவுள் நிலைக்கு) உயர்த்தி விட்டதைப் போல் நீங்கள் என்னை உயர்த்தி விடாதீர்கள். ஏனெனில், நான் அல்லாஹ்வின் அடியான் தான். (அப்படி ஏதாவது என்னைப் பற்றிச் சொல்வதாயிருந்தால்) ‘அல்லாஹ்வின் அடியார்’ என்றும் ‘அல்லாஹ்வின் தூதர்’ என்றும் சொல்லுங்கள் என்று கூறினார்கள்’’ என மிம்பரின் (உரை மேடை) மீதிருந்தபடி உமர் (ரலி) அவர்கள் சொல்ல நான் கேட்டிருக்கிறேன்.
நூல்: புகாரி 3445
ஆனால் இன்றைக்கு மவ்லூது என்ற பெயரால் நபிகள் நாயகத்தைப் புகழ்கின்றோம் என்று கூறிக்கொண்டு, நபி (ஸல்) அவர்கள் தன்னை எப்படிப் புகழ வேண்டும் என்று கற்றுத் தந்தார்களோ அப்படிப்பட்ட வரம்புகளையெல்லாம் மீறி, இறைவனின் ஆற்றலை நபி (ஸல்) அவர்களுக்கு வழங்கி, வரம்பு மீறிப் புகழ்ந்து நாங்கள் கிறிஸ்தவர்களுக்கு ஒப்பானவர்கள் தான் என்பதை நிரூபித்துக் கொண்டிருக்கின்றார்கள்.
நபியை நேசிக்கின்றார்களா?
ரபியுல் அவ்வல் மாதத்தில் மீலாதுவிழா ஏன் கொண்டாடுகின்றீர்கள்? என்று கேட்டால் நாங்கள் நபியைப் புகழத்தான் செய்கின்றோம். புகழ்வது தவறா? நேசிப்பது தவறா? என்று கேட்டுத் தங்களுடைய அறியாமையை வெளிப்படுத்துகின்றார்கள்.
நபியை எவ்வாறு புகழ வேண்டுமோ, நேசிக்க வேண்டுமோ அந்த அடிப்படையில் இறைவனும், இறைத்தூதரும் காட்டித் தந்தவாறு நம்முடைய நேசத்தையும், புகழையும் அமைத்துக் கொள்ள வேண்டுமே தவிர, நம்முடைய மனோ இச்சைக்குக் கட்டுப்பட்டு மனம் போன போக்கிலே செயல்படுவது நம்மை நரகநெருப்பிலே கொண்டுபோய் விழச் செய்யும் என்பதில் மிகுந்த எச்சரிக்கையோடு வாழ்வதற்குக் கடமைப்பட்டிருக்கின்றோம்.
நபி (ஸல்) அவர்களை எவ்வாறு நேசிக்க வேண்டும் என்பதைப் பற்றி இறைவனும், இறைத்தூதரும் நமக்கு அற்புதமான முறையில் கற்றுத் தந்திருக்கின்றார்கள்.
அல்லாஹ் தனது திருமறையில் கூறுகின்றான்:
‘‘நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்” என்று கூறுவீராக!
அல்குர்ஆன் 3:31
அல்லாஹ்வையும், இறுதி நாளையும் (நம்பக் கூடிய சமுதாயத்தினர், அல்லாஹ்வையும், அவனது தூதரையும் பகைப்போரை தமது பெற்றோராக இருந்தாலும், பிள்ளைகளாக இருந்தாலும், சகோதரர்களாக இருந்தாலும், தமது குடும்பத்தினராக இருந்தாலும் அவர்களை நேசிப்பதை நீர் காண மாட்டீர். அவர்களின் உள்ளங்களில் அல்லாஹ் நம்பிக்கையைப் பதித்து விட்டான். தனது ரூஹு மூலம் அவர்களைப் பலப்படுத்தியுள்ளான். அவர்களை சொர்க்கச் சோலைகளில் நுழையச் செய்கிறான். அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் நிரந்தரமாக இருப்பார்கள். அவர்களை அல்லாஹ் பொருந்திக் கொண்டான். அவர்களும் அல்லாஹ்வைப் பொருந்திக் கொண்டனர். அவர்களே அல்லாஹ்வின் கூட்டத்தினர். கவனத்தில் கொள்க! அல்லாஹ்வின் கூட்டத்தினரே வெற்றி பெறுபவர்கள்.
அல்குர்ஆன் 58:22
இதுபோன்ற ஏராளமான அறிவுரைகளின் மூலம் இறைத்தூதரை நேசிக்கும் வழிமுறையை அல்லாஹ் கற்றுத் தந்திருக்கின்றான்.
அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
‘‘உங்களில் ஒருவருக்கு அவருடைய தந்தை, அவருடைய பிள்ளை, ஏனைய மக்கள் அனைவரையும் விட நான் நேசத்திற்குரியவனாக ஆகாதவரை அவர் (உண்மையான) இறை நம்பிக்கை (ஈமான்) கொண்டவர் ஆகமாட்டார்’’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல்: புகாரி 15
ஆனால் இன்றைக்குக் கண்ணியப்படுத்துகிறோம் என்ற பெயரால் நபி (ஸல்) அவர்களை இழிவுபடுத்தி, அவர்களின் கண்ணியத்தைக் குழிதோண்டி புதைப்பதைப் பார்க்கின்றோம்.
கேடுகெட்டக் கவிதைகள்
நபி (ஸல்) அவர்களைப் புகழ்கின்றோம் என்று சொல்லிக்கொண்டு கேடுகெட்ட, கேவலமான, அருவருக்கத்தக்க கவிதை வரிகளை மவ்லூது என்ற பெயரால் கடுகளவு கூட இறையச்சம் இல்லாமல் அல்லாஹ்வின் பள்ளிவாசல்களில் வைத்து கும்மாளமடிப்பதைப் பார்க்கின்றோம்.
நபி (ஸல்) அவர்களை அளவு கடந்து, வரம்பு மீறிப் புகழ்வதினால் நபி (ஸல்) அவர்களுக்கு இறைவனின் ஆற்றலைக் கொடுத்து இணை வைப்பின் உச்சத்திற்கே சென்று விடுகின்றார்கள். நபி (ஸல்) அவர்கள் கஷ்டத்தைப் போக்குவார்கள்; மறைவான ஞானம் நபி (ஸல்) அவர்களுக்கு உண்டு; பாவத்தை மன்னிப்பார்கள் என்றெல்லாம் கூறி இதுபோன்ற ஏராளமான இணைவைப்பு வரிகளை மவ்லூது என்ற பெயரால் ஓதி வருகின்றார்கள்.
இன்னும் ஒருபடி மேலாக, அல்லாஹ்வின் பள்ளி வாசல்களில் வைத்து இறைவன் அல்லாதவர்களை வரம்பு மீறிப் புகழ்ந்து அவர்களுக்கு அல்லாஹ்வின் ஆற்றலை வழங்குவதைப் பார்க்கின்றோம். இறைவனின் ஆலயங்களில் இறைவனை மட்டுமே அழைக்க வேண்டும் என்று அல்லாஹ் கடுமையாக எச்சரிக்கை செய்திருக்க இறைவனின் கட்டளையைப் பேணாமல் அறியாமையை வெளிப்படுத்துவதைப் பார்க்கின்றோம்.
பள்ளிவாசல்கள் அல்லாஹ்வுக்கே உரியன. எனவே அல்லாஹ்வுடன் வேறு எவரையும் அழைக்காதீர்கள்!
அல்குர்ஆன் 72:18
மவ்லூது எனும் கேடுகெட்ட கலாச்சாரத்தை இஸ்லாமியர்களிடத்தில் புகுத்தியது ஹிஜ்ரி 4ஆம் நூற்றாண்டுக்குப் பிறகுதான்.
மவ்லூது வரிகளின் அர்த்தம் தெரிந்த எவரும் அதை நெருப்பிலிட்டுப் பொசுக்காமல் விட மாட்டார் என்று சொல்லும் அளவுக்கு அப்பட்டமாக இறைவனுக்கு இணைவைக்கின்ற மந்திரங்கள் மவ்லூது நெடுகிலும் கொட்டிக் கிடப்பதைப் பார்க்கின்றோம்.
அவற்றில் ஒரு சில…
நரக நெருப்பின் ஜுவாலையினாலும், அதன் கடும் வெப்பத்தினாலும் கரிந்து போகாமல் எங்களைக் காப்பாற்றுவது நீங்களே ஆவீர்!
எனை நடுங்கச் செய்துவிடும் ஏதேனும் பேரிடர்கள் எனைத் தீண்டும் வேளையிலே இன்னுதவி கேட்டவனாய் அனைத்துலகத் தலைவர்களுக்கெல்லாம் அருந்தலைவர் ஆனவரே! இணையில்லா என்னிணைப்பே! என்றுரைப்பேன் நிச்சயமாய்.
வழிகாட்டப்பட்டவரும், வாட்டும் நரக நெருப்பி லிருந்து மக்களைக் காப்பாற்றுவோருமான நபி (ஸல்) மீது அல்லாஹ்வின் ஸலவாத் உண்டாகுக.
நிச்சயமாக நான் இழிவான ஒரு சிற்றடிமையாவேன். என் குற்றங்களிலிருந்து என்னை நீக்கிவிடக் கோருகிறேன். பொறுப்புகளைப் பேணுகிற பூமான் நபியின் குழுவில் இறங்கியவர் வீணாகி விடமாட்டார்.
எனக்கு காரணங்கள் (உபாயங்கள்) நெருக்கடியாகி விட்டன. எனவே நபியே! தங்களின் இந்த வாசலுக்கு நான் வந்து விட்டேன். தங்களின் வாசலின் இந்தப் படிகளை முத்தமிடுகிறேன். நேசர்கள் உடையவும், நல்லவர்களான தலைவர்கள் உடையவும், பொருத்தத்தைத் தேடுகின்றேன்.
என் வறுமை, என் கைசேதம் ஆகிய கைகளை நான் விரித்து விட்டேன். ஆகவே யான் தங்களின் மிகுதியான அருட்கொடை மற்றும் கொடைத்தன்மையை எதிர்பார்க்கிறேன்.
கருணை மிகும் மாநபியே! காலமெல்லாம் நித்தியமாய் திருப்தியெனும் விழிகளினால் தேம்புமெனைப் பார்த்தருள்வீர்.
இதுபோன்ற ஏராளமான வாசகங்கள் நபி (ஸல்) அவர்களின் கண்ணியத்தைக் குலைத்து, இறைவனின் தகுதிகளை நபி (ஸல்) அவர்களுக்குக் கொடுத்து, நரகத்தின் நெருப்புக் கங்கை தங்களின் நாவுகளினால் மொழிந்து கொண்டிருக்கின்றார்கள்.
திருக்குர்ஆன் மூலம் பாடம் நடத்த வந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் குணத்திற்கு நேர் எதிராக இந்த மவ்லூது வரிகள் இருக்கின்றன. அற்பக் காசுக்கு ஆசைப்பட்டு மார்க்கத்தைக் குழிதோண்டி புதைக்கின்ற வேலை மதகுருமார்கள் தலைமையில் நடைபெற்றுக் கொண்டிருப்பதைப் பார்க்கின்றோம்.
அல்லாஹ்வின் எச்சரிக்கை
ரபியுல் அவ்வல் மாதத்தில் ஒவ்வொரு ஊர்களில் உள்ள பள்ளிவாசல்களிலும் மக்களிடத்தில் வரிப்பணம் வசூல் செய்து ஊர் முழுக்க விருந்து போடுகின்றார்கள். பல ஆயிரங்கள் செலவு செய்து பள்ளிவாசல்களை அலங்காரம் செய்து, பூமாலை போடுவது, விளக்குகளால் அலங்கரிப்பது, வீண் செலவுகள் செய்வது இதுபோன்ற பல்வேறு பாவமான காரியங்களில் ஈடுபட்டு வருகின்றார்கள்.
இந்த உலகத்தில் வாழ்கின்ற முஸ்லிம்கள் கட்டாயமாக அல்லாஹ்வுக்கும், இறைத்தூதருக்கும் கட்டுப்பட்டு நடக்க வேண்டும்.
நபி (ஸல்) அவர்கள் காட்டித்தராத, புதிதாக ஒரு செயலை மார்க்கத்தில் உண்டாக்கினால் அதுவும் கொடுஞ்செயலாகும் என்று இஸ்லாம் நமக்கு வழிகாட்டித் தருகின்றது.
‘‘அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப் படுங்கள்! நீங்கள் புறக்கணித்தால் (தன்னை) மறுப்போரை அல்லாஹ் விரும்ப மாட்டான்’’ எனக் கூறுவீராக!
அல்குர்ஆன் 3:32
அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுங்கள்! இத்தூதருக்கும் (முஹம்மதுக்கும்) கட்டுப்படுங்கள்! எச்சரிக்கையோடு இருந்து கொள்ளுங்கள்! நீங்கள் புறக்கணித்தால் தெளிவாக எடுத்துச் சொல்வதே நமது தூதரின் கடமை என்பதை அறிந்து கொள்ளுங்கள்!
அல்குர்ஆன் 5:92
நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் செவிமடுத்துக் கொண்டே அவரைப் புறக்கணிக்காதீர்கள்!
அல்குர்ஆன் 8:20
நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுங்கள்! இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! உங்கள் செயல்களைப் பாழாக்கி விடாதீர்கள்!
அல்குர்ஆன் 47:33
மேலும், நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ் அல்லாதவர்களுக்கு அறுத்துப் பலியிடுபவனையும் அல்லாஹ் சபித்து விட்டான். பித்அத் செய்பவனையும், மார்க்கத்தில் புதிதாக ஒன்றை ஏற்படுத்துபவனுக்கு அடைக்கலம் அளிப்பவனையும் அல்லாஹ் சபித்து விட்டான்.
நூல்: முஸ்லிம் 3657
மார்க்கத்தில் புதிதாக வணக்கங்களை ஏற்படுத்துபவர்களை அல்லாஹ் சபிக்கின்றான். மவ்லூது என்பது மார்க்கத்தில் புதிதாக ஏற்படுத்தப்பட்ட ஒன்று. அல்லாஹ்வும், அல்லாஹ்வின் தூதரும் மவ்லூதை நமக்குக் கற்றுத் தரவில்லை.
மீலாது – மவ்லூதுக்கும், இஸ்லாத்துக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்பதை விளங்கி யூதர்களின் சதிவலைகளிலிருந்து விலகி வாழ்வோமாக!