பாங்கு சொல்லும் போது இருபுறமும் திரும்ப வேண்டுமா?
இருபுறமும் பிலால் (ரலி) திரும்பியதாக ஹதீஸ் உள்ளது. அந்த ஹதீஸையும், அதன் விளக்கத்தையும் காண்போம்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்காவிலுள்ள அப்தஹ் எனுமிடத்தில் தோலால் ஆன சிவப்பு நிறக் கூடாரமொன்றில் இருக்க, அவர்களிடம் நான் சென்றேன். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உளூச் செய்தார்கள்…. பிறகு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வெளியே வந்தார்கள்… அப்போது பிலால் (ரலி) அவர்கள் பாங்கு சொன்னார்கள். அவர்கள், ஹய்ய அலஸ் ஸலாஹ், ஹய்ய அலல் ஃபலாஹ்’ என்று கூறும் போது இங்கும் அங்குமாக, அதாவது வலப் பக்கமாகவும், இடப் பக்கமாகவும் திரும்பிய போது நான் அவர்களது வாயையே பார்த்துக் கொண்டிருந்தேன்.
அறிவிப்பவர்: அபூஜுஹைஃபா (ரலி)
நூல்: முஸ்லிம் 777
பிலால் (ரலி) அவர்கள் வலப்புறமும், இடப்புறமும் திரும்பியதால் அவ்வாறு திரும்புவது சுன்னத் என்று புரிந்து கொள்வதா? அனுமதிக்கப்பட்டது என்று புரிந்து கொள்வதா? நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பாங்கு சொல்லும் போது வலப்புறமும், இடப்புறமும் திரும்பினார்கள் என்று ஹதீஸ் இருந்தால் அவ்வாறு திரும்புவது சுன்னத் என்று தான் புரிந்து கொள்ள வேண்டும்.
ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முன்னிலையில் ஒருவர் வணக்கத்தை ஒரு முறையில் செய்யும் போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அதை மறுக்காமல் இருந்தால் அது அனுமதிக்கப்பட்டது என்று தான் புரிந்து கொள்ள வேண்டும். ஏனெனில் இரு புறமும் திரும்புமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறி அதனடிப்படையில் பிலால் அவ்வாரூ செய்ததாக எநத அறிவிப்பிலும் நாம் காணவில்லை.
மேலும் பிலால் (ரலி) அவர்கள் எப்போது பாங்கு சொன்னாலும் இவ்வாறு திரும்புவார்கள் என்றும் ஹதீஸில் கூறப்படவில்லை. ஒரு திறந்த வெளியில் பிலால் பாங்கு சொல்லும் போது ஒரு தடவை அவர் இரு புறமும் திரும்பியதைப் பார்த்ததாக அபூஜுஹைஃபா என்ற நபித்தோழர் அறிவிப்பதை மட்டுமே இதற்கு அறிஞர்கள் ஆதாரமாகக் காட்டுகிறார்கள்.
எனவே ஒருவர் பாங்கு சொல்லும் போது வலப்புறமும், இடப்புறமும் திரும்பினால் அது தவறல்ல என்றே இதைப் புரிந்து கொள்ள வேண்டும். ஒலி பெருக்கியில் பாங்கு சொல்லும் போது இரு புறமும் திரும்புவதால் மக்களுக்கு கேட்காது என்றால் திரும்பாமல் இருப்பது தான் மக்கள் தெளிவாகக் கேட்க உதவும் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ளலாம்.