உறங்கும் போது மரண நினைவு
இது அல்லாமல், இஸ்லாமிய மார்க்கம் ஒருவர் தனது அன்றாட வாழ்க்கையில் உறங்கும் போதும், எழுந்திருக்கின்ற போதும் மரணத்தைப் பற்றி நினைக்கச் செய்கின்றது. ஒருவர் உறங்கும் போது
اللَّهُمَّ بِاسْمِكَ أَمُوتُ وَأَحْيَا
அல்லாஹ்வே! உனது பெயரால் நான் மரணிக்கின்றேன் (தூங்குகின்றேன்); உனது பெயரால் உயிர் பெறுகின்றேன் (விழிக்கின்றேன்) என்றும், காலையில் விழிக்கின்ற போது…
الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَحْيَانَا بَعْدَ مَا أَمَاتَنَا وَإِلَيْهِ النُّشُورُ
எங்களை மரணிக்கச் செய்த பின் உயிர்ப்பித்த அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். மேலும் அவனிடமே (நமது) திரும்பிச் செல்லுதல் உள்ளது.
‘உறங்குகின்றேன்’ என்பதற்கு ‘‘அனாமு” என்ற வார்த்தை அரபியில் உள்ளது ஆனால் அதற்குப் பதிலாக நபி (ஸல்) அவர்கள் ‘‘அமூது” நான் மரணிக்கின்றேன் என்ற வார்த்தையைப் பயன்படுத்துகின்றார்கள். இரவில் தூங்கி விட்டுக் காலையில் எழுவதற்கு உனக்கு எந்த உத்தரவாதமும் இல்லை. அதனால் பாவங்களிலிருந்து விலகிக் கொள் என்ற எச்சரிக்கையை இந்தப் பிரார்த்தனை மனிதனுக்கு தருகின்ற அதே வேளையில் தூங்கி எழுவதற்குள் உனது உயிர் பிரிந்தாலும் பிரிந்து விடும் என்ற மரணத்தைப் பற்றிய நினைவூட்டல் இதில் அடங்கியிருக்கின்றது.