ஜும்ஆ உரையில் மழை வேண்டி பிரார்த்திக்கலாமா?
அப்துந் நாசிர்
நபி(ஸல்) அவர்கள் ஜும்ஆ உரையில் மழைக்காக துஆ செய்திருக்கிறார்கள்.
நபி (ஸல்) அவர்கள் ஜும்ஆ நாளில் உரை நிகழ்த்திக் கொண்டிருந்தபோது ஒருவர் வந்தார். “இறைத்தூதர் அவர்களே! மழை பொய்த்துவிட்டது. எங்களுக்கு மழை பொழியச் செய்யுமாறு அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்’’ என்று கூறினார் நபி (ஸல்) அவர்கள் துஆச் செய்ததும் மழை பொழிந்தது. எங்களால் எங்கள் இல்லங்களுக்குச் செல்ல இயலவில்லை. அடுத்த ஜும்ஆ வரை மழை நீடித்தது.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: புகாரி (1015)
இதே சம்பவம் பின்வரும் ஹதீஸில் விரிவாக இடம் பெற்றுள்ளது.
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஜுமுஆ நாளில் (சொற்பொழிவு மேடைமீது) நின்று உரை நிகழ்த்திக் கொண்டிருந்த போது மேடைக்கு எதிர்த் திசையிலிருந்த வாசல் வழியாக ஒரு மனிதர் (பள்ளிக்குள்) வந்தார். அவர் நின்று கொண்டே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை நோக்கி, ‘‘அல்லாஹ்வின் தூதரே! (பஞ்சத்தால்) கால்நடைகள் அழிந்துவிட்டன; போக்குவரத்து நின்றுவிட்டது. அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள். அவன் எங்களுக்கு மழை பொழியச் செய்வான்’’ என்று கூறினார். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் கைகளை உயர்த்தி, ‘‘இறைவா! எங்களுக்கு மழை பொழியச் செய்வாயாக! இறைவா! எங்களுக்கு மழை பொழியச் செய்வாயாக! இறைவா! எங்களுக்கு மழை பொழியச் செய்வாயாக!’’ என்று பிரார்த்தித்தார்கள்.
அல்லாஹ்வின் மீதாணையாக! வானத்தில் மேகக் கூட்டம் எதையும் நாங்கள் காணவில்லை; தனி மேகத்தையோ (மழைக்கான அறிகுறிகள்) எதையுமோ நாங்கள் காணவில்லை. எங்களுக்கும் (மதீனாவிலுள்ள) சல்உ மலைக்குமிடையே எந்த வீடும் கட்டடமும் இருக்கவில்லை. (வெட்ட வெளியே இருந்தது.) அப்போது அம்மலைக்குப் பின்னாலிருந்து கேடயம் போன்று (வட்டவடிவில்) ஒரு மேகம் தோன்றியது. அது நடுவானில் மையம் கொண்டு சிதறியது. பிறகு மழை பொழிந்தது.
அல்லாஹ்வின் மீதாணையாக! ஆறு நாட்கள் சூரியனையே நாங்கள் பார்க்கவில்லை. அடுத்த ஜுமுஆவில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நின்று உரை நிகழ்த்தும் போது ஒரு மனிதர் அதே வாசல் வழியாக வந்தார். (வந்தவர்) நின்றவாறே நபி (ஸல்) அவர்களை நோக்கி, ‘‘அல்லாஹ்வின் தூதரே! (தொடர்ந்து பெய்த பெருமழையால் எங்கள் கால்நடைச்) செல்வங்கள் அழிந்துவிட்டன; பாதைகள் தடைபட்டு விட்டது. எனவே மழையை நிறுத்துமாறு அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்!’’ என்றார். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் கைகளை உயர்த்தி, ‘‘இறைவா! எங்கள் சுற்றுப்புறங்கள் மீது (இம்மழையைத் திருப்பிவிடுவாயாக!) எங்களுக்குப் பாதகமாக இதை நீ ஆக்கிவிடாதே! இறைவா! குன்றுகள், மலைகள் ஓடைகள் விளை நிலங்கள் ஆகியவற்றின் மீது (இம்மழையைப் பொழியச் செய்வாயாக!)’’ என்று பிரார்த்தித்தார்கள். உடனே (மதீனாவில்) மழை நின்றது. நாங்கள் வெயிலில் நடந்து சென்றோம்.
நூல்: புகாரி (1013)
மேற்கண்ட ஹதீஸ்களில் நபி (ஸல்) அவர்கள் ஜும்ஆ உரை ஆற்றிக்கொண்டிருக்கும் போது ஒரு கிராமவாசி கோரிக்கை வைத்த காரணத்தினால் நபி (ஸல்) அவர்கள் ஜும்ஆ உரையின் இடையிலேயே மழைக்காக பிரார்த்தனை செய்துள்ளார்கள் என்பதை அறிந்து கொள்ள முடிகிறது.
இதிலிருந்து மழைப் பஞ்சம் ஏற்படும் கால கட்டங்களில் ஜும்ஆவின் முதல் உரையிலோ அல்லது இரண்டாவது உரையிலோ ஏதாவது ஒரு பகுதியில் மழைக்காக நாம் பிரார்த்தனை செய்யலாம் என்பதை மேற்கண்ட நபிமொழியிலிருந்து தெளிவாக விளங்கிக் கொள்ளலலாம்.
இமாமுடன் சேர்ந்து மக்களும் கைகளை உயர்த்திப் பிரார்த்தித்தல்
ஜும்ஆவில் உரையாற்றும் இமாம் கைகளை உயர்த்தி பிரார்த்தனை செய்யும் போது மக்களும் தங்களுடைய கைகளை உயர்த்தி அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்ய வேண்டும். இதனைப் பின்வரும் நபிமொழியிலிருந்து அறிந்து கொள்ளலாம்.
ஒரு ஜுமுஆ நாளில் கிராமவாசி ஒருவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, ‘‘அல்லாஹ்வின் தூதரே! (கடும் வறட்சியினால்) கால் நடைகள் அழிந்துவிட்டன; குடும்பமும் அழிந்துவிட்டது; மக்களும் அழிந்தனர்’’ என்றார். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பிரார்த்திப்பதற்காக தமது கைகளை உயர்த்தினார்கள். மக்களும் அவர்களுடன் சேர்ந்து தம் கைகளை உயர்த்திப் பிரார்த்தித்தனர். நாங்கள் பள்ளியைவிட்டு வெளியேறவில்லை. எங்களுக்கு மழைபெய்தது. மறு ஜுமுஆ வரும் வரை எங்களுக்கு மழை நீடித்தது. அதே மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, அல்லாஹ்வின் தூதரே! பயணிகள் முடங்கிவிட்டனர்; பாதைகள் அடைபட்டுவிட்டன என்று கூறினார்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: புகாரி (1029)
மழைத் தொழுகையில் புறங்கைகள் வானத்தை நோக்கியும் உள்ளங்கைகள் பூமியை நோக்கியும் இருக்குமாறு பிரார்த்திப்பதைப் போன்றே ஜும்ஆவில் மழைவேண்டிப் பிரார்த்திக்கும் போதும் செய்ய வெண்டும். இதற்கு பின்வரும் ஹதீஸ் ஆதாரமாகும்.
‘‘அல்லாஹ்வின் தூதரே! செல்வம் அழிந்துவிட்டது, அல்லாஹ்வின் தூதரே ! எங்களுக்கு மழைப் பஞ்சம் ஏற்பட்டுவிட்டது. எங்களுக்காக (இறைவனிடம்) மழை வேண்டிப் பிரார்த்தியுங்கள்’’ என மக்கள் நபி (ஸல்) அவர்களிடம் வேண்டினர். நபி (ஸல்) அவர்கள் ஜும்ஆ நாளிலே சொற்பழிவு மேடையின் மீது நின்றவர்களாக மழைவேண்டிப் பிரார்த்தித்தார்கள். நபி (ஸல்) அவர்கள் தமது நெஞ்சிற்கு நேராக கைகளை விரித்து தமது உள்ளங்கைகள் பூமியை நோக்கி இருக்குமாறு வைத்து ( பிரார்த்தித்தார்கள் என அறிவிப்பாளர்களில் ஒருவரான) ஹம்மாத் அவர்கள் வர்ணித்துள்ளார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: அஹ்மத் (13894)
ஜும்ஆவின் மழை வேண்டிப் பிரார்த்திக்கும் போது ஓத வேண்டிய துஆக்கள்.
ஜும்ஆவில் மழை வேண்டிப் பிரார்த்தித்தல் என்பது நீண்ட நேரம் செய்ய வேண்டிய ஒன்றல்ல. ‘‘அல்லாஹும் மஸ்கினா” என்ற வார்த்தையை மூன்று தடவை இமாம் புறங்கைகள் உயர்த்திய நிலையில் கூற வேண்டும். மக்களும் அவ்வாறே உரத்த சப்தமில்லாமல் இதே துஆவை மூன்று தடவை கூறவேண்டும். அவ்வளவுதான். நபியவர்கள் இவ்வாறுதான் செய்துள்ளார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் கைகளை உயர்த்தி,
اَللّهُمَّ اسْقِنَا اَللّهُمَّ اسْقِنَا اَللّهُمَّ اسْقِنَا
(அல்லாஹும் மஸ்கினா, அல்லாஹும் மஸ்கினா, அல்லாஹும் மஸ்கினா)
இறைவா! எங்களுக்கு மழை பொழியச் செய்வாயாக! இறைவா! எங்களுக்கு மழை பொழியச் செய்வாயாக! இறைவா! எங்களுக்கு மழை பொழியச் செய்வாயாக! என்று (மூன்று தடவை) பிரார்த்தித்தார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: புகாரி (1013)
அது போன்று ‘‘அல்லாஹும்ம அகிஸ்னா” என்று மூன்று தடவை பிராத்தித்துள்ளார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் கைகளை உயர்த்தி,
اَللّهُمَّ أَغِثْنَا اَللّهُمَّ أَغِثْنَا اَللّهُمَّ أَغِثْنَا
(அல்லாஹும்ம அகிஸ்னா, அல்லாஹும்ம அகிஸ்னா, அல்லாஹும்ம அகிஸ்னா)
இறைவா! எங்களுக்கு மழை பொழியச் செய்வாயாக! இறைவா! எங்களுக்கு மழை பொழியச் செய்வாயாக! இறைவா! எங்களுக்கு மழை பொழியச் செய்வாயாக! என்று பிரார்த்தித்தார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: புகாரி (1014)
மேற்கண்ட நபிமொழிகளின் அடிப்படையில் ஜும்ஆவிலும் மழைவேண்டிப் பிரார்த்தனை செய்யலாம். மழைத் தொழுகையில் செய்வதைப் போன்று மேலாடையை மாற்றிப் போட வேண்டியதில்லை. ஏனெனில் நபியவர்கள் ஜும்ஆவில் மழை வேண்டிப் பிரார்த்திக்கும் போது அவ்வாறு செய்ததாக ஆதாரம் இல்லை.
மழை பாதிப்பிலிருந்து விடுபடப் பிரார்த்தித்தல்
மேலும் அதிக மழை பொழிந்து மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் போதும் இதே போன்று ஜும்ஆவில் மழை நிற்பதற்காகப் பிரார்த்தனை செய்யலாம்.
மழை நிற்பதற்காக நபியவர்கள் பின்வரும் பிரார்த்தனையைச் செய்துள்ளார்கள்.
اللَّهُمَّ حَوَالَيْنَا وَلاَ عَلَيْنَا، اللَّهُمَّ عَلَى الآكَامِ وَالْجِبَالِ وَالآجَامِ وَالظِّرَابِ وَالأَوْدِيَةِ وَمَنَابِتِ الشَّجَرِ
அல்லாஹும்ம ஹவாலைனா வலா அலைனா அல்லாஹும்ம அலல் ஆகாமி வல் ஜிபாலி வல் ஆஜாமி வல்லிராபி வல் அவ்தியத்தி வமனாபிதிஸ் ஸஜரி
இறைவா! எங்கள் சுற்றுப்புறங்கள் மீது (இம்மழையைத் திருப்பிவிடுவாயாக!) எங்களுக்குப் பாதகமாக இதை நீ ஆக்கிவிடாதே! இறைவா! குன்றுகள், மலைகள், ஓடைகள், விளை நிலங்கள் ஆகியவற்றின் மீது (இம்மழையைப் பொழியச் செய்வாயாக!) என்று பிரார்த்தித்தார்கள்
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: புகாரி (1013)